Sunday, April 29, 2018

97-மானம்


                      97-மானம்

961-இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
   குன்ற வருப விடல்.

இன்றியமையாத செயல்களாக இருப்பினும் அவற்றால் தன் பெருமைக்கு இழுக்கு வரும் எனில் அவற்றை தவிர்த்திடல் வேண்டும்.இது தேவை.

962-சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
   பேராண்மை வேண்டு பவர்.

மானம் பெரிதென நினைப்பவர் ,புகழ் வரவேண்டும் என்பதற்காக மானம் இழக்கும் காரியங்களை செய்யமாட்டார்,இது தேவை.

963-பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
   சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பெரும் பணம் இருந்தாலும் ஒருவனுக்கு அடக்கம் வேண்டும்,அந்நிலை மாறினாலும் மானத்தோடு வாழவேண்டும்.இது தேவை .

964-தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
   நிலையின் இழிந்தக் கடை.

மானம் இழந்த நிலையில் ஒருவர் வாழ நினைப்பது,தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்கு சமமாவர்.இது தேவை.

965-குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்.

குன்றை போல் வலிமை உடையவராக இருப்பினும் ஒரு குன்றி மணி அளவு குற்றச் செயலை செய்தால் அவர் குன்றிப்போய் விடுவார்.இது தேவை.

966-புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
   றிகழ்வார்பின் சென்று நிலை.

இகழ்வாரை பணிந்து பின் தொடர்வதால் மானம் போகுமே ஒழிய சொர்கத்திலா இடம் கிடைக்கும்?இது தேவை.
 
967-ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
   கெட்டான் எனப்படுதல் நன்று.

மதிக்காதவனை பின் தொடர்ந்து வாழ்வதை விட மடிந்துபோவதே மேல்.இது தேவை.

968-மருந்தோமற் றூணோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
   பீடழிய வந்த இடத்து.

உயிரைவிட மேலானது மானம்,மனிதற்கு சாகா உயிர்வாழ மருந்தே கிடையாது! மானம் போனபின் வாழ்தல் என்பது இழிவான செயல்.இது தேவை.

 969-மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.

மயிர் நீங்கிப் போனால் கவரிமா வாழாது என்பர்.அது போல மானம் போனால் உயிர் நீங்குவர்.இது தான் இந்த குறளின் நேரடி பொருள்.இங்கே கவரிமா என்பதை கவரிமான் வகை எனவும்,மானம் வரின் என்பதை மானம்போனால் என பொருள் கொள்ள வேண்டும் என பரிமேலழகர் உரைக்கிறார்.எது எப்படி இருந்தும் ,கவரிமான் அக்ரிணை வகை உயர்திணையான மனிதருக்கு ஒப்பிடுவது மெய்ப்பியல் தன்மைக்கு மாறுபட்டது.எனவே இந்த அதிகாரத்தில் மானமே பெரிது என வலியுறுத்தும் விதமாக குறட்கள் அமைந்துள்ளதால் இந்த குறளை எதிர் மறையாக எடுத்துக்கொள்வது குறளுக்கு சிறப்பெய்தாது.எனவே இது மாணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டது.

970-இளிவரின் வாழாத மானம் உடையார்
   ஒளிதொழு தேத்தும் உலகு.

மானம் போய் விட்டதே என  உயிர் நீத்த மனிதர்களை இவ்வுலகம் எக்காலமும் போற்றும்.இது தேவை.

மானம்அதிகாரத்தின் 969-ம் குறளைத்தவிர ஒன்பது குறட்களும் பயனுள்ளவை

No comments: