Saturday, April 21, 2018

71-குறிப்பறிதல்


                        71-குறிப்பறிதல்

701-கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
   மாறாநீர் வையக் கணி.

உலக மக்களுக்கே அணிசேர்ப்பவன் யாரெனில்,ஒருவர் முகத்தைப் பார்த்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை கூறுபவர்.இது தேவை.

702-ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
   தெய்வத்தோ டொப்பக் கொளல்.

இதுவரை ஒரு மனிதன் என்ன நினைக்கிறான் என்பதை மற்றொரு மனிதனால் உணர முடியாது,முடியவில்லை!
தெய்வம் உள்ளது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை.ஒரு மனிதனின் உள் எண்ணங்களை கடவுளால் மட்டுமே உணரமுடியும் எனும் நம்பிக்கை பின்னாளில் மூடநம்பிக்கை ஆக மாறிவிட்டது.அதாவது கடவுளை நேரடியாக காண முடியாது-முடியும்  என்பதற்கு ஆதாரம் இல்லை.எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டது.இது தேவையற்றது.

703-குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
   யாது கொடுத்துங் கொளல்.

முக குறிப்பை உணரும் ஆற்றலுடையவரை எந்த பொறுப்பு கொடுத்தாவது,துணை கொள்ள வேண்டும்.இது தேவை.
                           
704-குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
   உறுப்போ ரணையரால் வேறு.

ஒரே தோற்றமுடைய மனிதர்கள் இருந்தாலும் அவரவர் எண்ணங்கள் மாறுபடும்.ஒருவர் எண்ணங்களை மற்றவர் உணர முடியாதவரும்,உணரக் கூடியவரும் அறிவினால் வேறுபட்டவர்களே!.இது தேவை.

705-குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
   என்ன பயத்தவோ கண்.

ஒருவர் முக குறிப்பு, உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தும் என்பதை உணரமுடியாதவர் கண்கள் இருந்தென்ன ,இல்லாவிட்டால் என்ன?இது தேவை

706-அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
   கடுத்தது காட்டும் முகம்.

கண்ணாடி எதிர் பொருளை காட்டவல்லது,அதுபோல் ஒருவர் மனதில் உள்ளதை அவரது முகம் காட்டிவிடும்.இது தேவை.

707-முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
   காயினும் தான்முந் தூறும்.

ஒருவன் உள்ளத்தில் உள்ளதை அவன் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அவன் முகத்தைப்போல் அறிவு மிக்கது ஏதுமில்லை.இது தேவை.

   708-முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
    உற்ற துணர்ச்சிப் பெறின்.

முகம் நோக்கி இருந்தாலே போதும் அவர் அகத்தில் உள்ளதை உள்ளபடியே நோக்கும் அறிவே சிறந்தது.இது தேவை .

709-பகைமையும் கேண்மையும்கண்ணுரைக்கும் கண்ணின்
   வகைமை உணர்வார்ப் பெறின்.

ஒருவரின் கண்பார்வையிலேயே மற்றவர், அவரின் உள்ளத்தில் உள்ளது நட்பா அல்லது பகையா என்பதை கூறிவிடுவர்.இது தேவை

710-நுண்ணியம் என்பர் அளக்குங்கோல் காணுங்காற்
   கண்ணல்ல தில்லை பிற.

நுண்ணறிவு கொண்டோர் பிறர் உள்ளத்தில் உள்ளதை அறிய கண்ணே அளவுகோலாக பயன்படுத்துவர்.இது தேவை.

குறிப்பறிதல்அதிகாரத்தின் குறள் எண் 702-ஐ தவிர மற்ற 9 குறட்களும் பயனுள்ளவை.




No comments: