Saturday, March 17, 2018

28-கூடா ஒழுக்கம்



                         28-கூடா ஒழுக்கம்

271-வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
     ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சக வேடதாரிகளைப் பார்த்து பஞ்ச பூதங்கள் (நீர்,தீ,நிலம்,காற்று,வெளி) தமக்குள் சிரித்துக்கொள்ளும்.
பஞ்ச பூதங்கள் என்பது அஃரிணைகள்,இவைகள்  நகைப்பதை நாம் காணமுடியாது,அகக்கண்களால் கூட காண முடியாது,எனவே இது உருப்பொருள் தத்துவத்திற்கு மாறானது.இது மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.

272-வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
      தான்அறி குற்றப் படின்.

ஒருவன் தான் செய்யும் குற்ற செயல்களை தொடர்ந்து செய்வானானல்,அவன் வானுயர் தவம் செய்திருந்தாலும் என்ன பயனும் இல்லை-இது தேவை

273-வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
     புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

மனதை அடக்க முடியாதவர் துறவுக் கோலம் பூணுவது பசு ஒன்று புலித்தோலை போர்த்திக்கொண்டு புல்லை மேய்வது போலாகும்.

மனிதர்களின் குண மாற்றங்களுக்கு மிருகங்களின் செயல்பாடுகளை ஒப்பிடுவது ஒரு நல்ல மாற்றத்தை மனிதர்ளிடையே ஏற்படுத்தும்.ஆனால் எந்த மிருகமும் தன் அடிப்படை குணங்களை மாற்றிக்கொள்ளாது.இங்கே புலித்தோல் போர்த்திய பசு என்பது மனிதனின் கற்பனைக்கு உட்பட்டது.இது உருப்பொருள் தத்துவத்திற்கு மாறுபட்டது .எனவே இது மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது .
                            
274-தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைத்து
      வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்கள் செய்வதற்கும்,வேடன் ஒருவன் புதரில் மறைந்து கொண்டு பறவைகளை கண்ணி வைத்து பிடிப்பதற்கும் வேறுபாடு இல்லை.இது தேவை.

275-பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றன்
      றேதம் பலவுந் தரும்.

ஆசைகளையும் ,பந்தங்களையும் துறந்து விட்டோம் என பொய்யாக சொல்லி உலகை ஏமாற்றுவோருக்கு, எத்தகைய தவறு செய்துவிட்டோம் என வருந்த வேண்டிய துன்பம் வந்து சேரும். இது தேவை.

276-நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
      வாய்வாரின் வன்கணா ரில்

மனதார பற்றுகளை துறக்காமல்,துறந்தவரைப்போல் நாடகமாடும் வஞ்சகர்களை விட இரக்கமற்றவர்கள் யாருமில்லை.இது தேவை.

277-புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
      மூக்கிற் கரியா ருடைத்து.

குன்றி மணி புறத்தோற்றம் சிவப்பாக உள்ளது போல் சில மனிதர்கள் இருந்தாலும் குன்றி மணியின் முனை கருப்பாக உள்ளது போல் சில கருத்த மனம் படைத்தாவர்களும் உலகில் உள்ளனர்.இது தேவை.

 278-மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
      மறைந்தொழுகு மாந்தர் பலர்.

நீருக்குள்  ஒருவர் தன்னை மறைத்துக் கொள்வது போல், பெரிய மனிதர் எனும் போர்வைக்குள் தன்னை மறைத்துக்கொண்டு மனதளவில் மாசுடையோர் பலர் உலாவுகின்றனர்.உண்மை ,இது தேவை.

279-கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
      வினைபடு பாலாற் கொளல்.

மனிதன் தோற்றத்தை வைத்து நாம் முடிவெடுக்க கூடாது.நேராக செல்லும் அம்பு எதிரியை அழிக்கும், வளைந்து நிற்கும் யாழின் கொம்பு மனிதர்களுக்கு மனதை ஈர்க்கும்,அதுபோல மனிதர்களின் செய்ல்கள் மூலமே பண்புகளை உணரமுடியும்.இது தேவை.
                              
280-மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
      பழித்த தொழித்து விடின்.

மனிதன் நடிக்க வேண்டாம்,உலக மக்கள் வெறுக்கும் செயல்களை ஒதுக்கினால் போதும்.தலையை மயிர் வளர்த்தோ அல்லது மொட்டையடித்தோ துறவி என உலகுக்கு காட்ட வேண்டாம்.இது தேவை.

இந்த, கூடா ஒழுக்கத்தின் பத்து குறட்பாக்களில்,271 மற்றும் 273 ஆகிய குறட்கள் மனிதனுக்கு நற்குணங்களை பயிற்றுவிக்கும் பொருட்டு அஃகிரிணைகளான பஞ்ச பூதங்களையும், விலங்கினங்களையும் ஒப்பிடுவது உருப்பொருள் தத்துவத்திற்கு  மாறானது.எனவே இரண்டு குறட்கள் தவிர மற்ற எட்டு குறட்களும் மாணவர்கள் கற்க தகுதி வாய்ந்தது.  

No comments: