Friday, March 16, 2018

25-அருளுடைமை



                       25- அருளுடைமை

241-அருட்செல்வஞ்செல்வத்துள்செல்வம் பொருட்செல்வம்
      பூரியார் கண்ணு முள.

இங்கே அருள்என்பதை மனிதன் மனிதன் மீது கொள்ளும் கருணை எனப் பொருள் கொண்டால்,ஒரு மனிதன் எவ்வளவு செல்வம் சேர்த்திருந்தாலும், அச்செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது. இது தேவை .

242-நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
      தேரினும் அஃதே துணை.

மனிதன் வாழ எத்தனை வழிகள் இருந்தாலும் ,கருணை உடைமையே வாழ்க்கைக்கு துணையாய் விளங்கும் நல்வழி.இது தேவை.

243-அருள்சோர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
      இன்னா உலகம் புகல்.

கருணை உள்ளம் படைத்தவர்,அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.இது தேவை.

244-மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
      தன்னுயி ரஞ்சும் வினை. 

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதை கடமையாக கொண்டவர்கள்,தன்னுயிர் காப்பதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.இது தேவை.
                             
245-அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
      மல்லன்மா ஞாலங் கரி.

கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு இவ்வுலகில் துன்பம் இல்லை.இதற்கு காற்று உலாவும் வளமிக்க பூமியே சான்று. இது  தேவை.

246-பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
       அல்லவை செய்தொழுகு வார்.

கருணையின்றி தீமைகளை செய்து வாழ்பவர்கள் பொருளற்றவர்களாகவும்,கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.இது தேவை.

247-அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
      கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருளில்லா தவர்களுக்கு இல்லற வாழ்க்கை சுகமளிக்காது.அதுபோல கருணை உள்ளம் இல்லாதவர்களுக்கு அவ்வுலகம் அதாவது மேலுலகம் இல்லை எனப்படுகிறது,

அதாவது சிந்தனையற்றவனிடம் அளவற்ற பொருள் சேர்ந்தால் அவனிடம் இருக்கும் பொருளைப் பெற மேலுலகம் ஒன்று இருப்பதாக அவனை நம்ப வைத்து அதை வறியவர்களுக்கு கொடுக்கச் செய்வதின் மூலம் அவனிடம் உள்ள பொருளை பெற வேண்டி இவ்வாறு பாடப்பட்டுள்ளது.   மேலுலகம் என்பது மெய்ப்பியல் தன்மைக்கு மாறானது எனவே ..இது தேவை இல்லை

 248-பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
      அற்றார்மற் றாதல் அரிது.
                               
பொருளிழந்தவர்கள் மீண்டும் பொருளை தேடிப் பெறலாம்,ஆனால் கருணை இழந்தவர்கள் மீண்டும் அதைப் பெற முடியாது.இது தேவை.

249-தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
      அருளாதான் செய்யும் அறம்.

அறிவுத் தெளிவில்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளை கண்டறிய முடியாது,அதுபோலத்தான் கருணை இல்லாதவன் செய்யும் அறச் செயலும் இருக்கும்.இது தேவை.

250-வலியார்முன் தன்னை நினைக்கதான்   தன்னின்
      மெலியார்மேற் செல்லு மிடத்து.

தன்னைவிட மெலிந்தவர்களை துன்புறுத்த நினைக்கும் போது ,தன்னைவிட வலியார் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருக்கும் என்பதை  மறந்து விடக்கூடாது.(வல்லவனுக்கு வல்லவன் உண்டு)இது தேவை.
  
இந்த அருளுடைமைஅதிகாரத்தின் 247-ம் தவிர மற்ற 9 குறட்களும் மாணவர்கள் கற்க தகுதி வாய்ந்தவை.அருளுடைமை என்பதை மனிதநேயம் என பொருள் கொண்டால் இவையனைத்தும் சிறந்த குறட்கள் தான்.

                 

No comments: