Tuesday, March 27, 2018

41-கல்லாமை


                       41- கல்லாமை

401-அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
   நூலின்றிக் கோட்டி கொளல்.

அறிவாற்றல் இல்லாதவன் அவையில் பேச நினைப்பது,எல்லைக்கோடுகள் வரையாமல் சொக்கட்டான் அட நினைப்பது போல.இது தேவை.

402-கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
   இல்லாதான் பெண்காமுற் றற்று.

படிப்பறிவில்லாதவனின்  சொல் கேட்க விருப்பம் கொள்வது  என்பது, முலையில்லா பெண் மீது காதல் கொள்வது போன்றதாகும்.இது தேவை.

403-கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
   சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவர்கள் முன் எதுவும் பேசாமல் கற்றுக் கொண்டால், கல்வி கற்காதவர்கள் கூட நல்லவரே.இது தேவை.

404-கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
   கொள்ளார் அறிவுடை யார்.

படிப்பறிவு அற்றவன் அறிவாளி போல் பேசினால் கூட,கல்வியில் சிறந்தோன் என அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.இது தேவை.

405-கல்லா ஒருவன் தகைமை தலைப்ப
   சொல்லாடச் சோர்வு படும்.

படித்தவர்களைப்போல் நடிக்கும் வேடதாரிகள்,கற்று அறிந்த மேதைகளிடம் பேசும்போது வேடம் கலைந்துவிடும்.இது தேவை.
                          
406-உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
   களரனையர் கல்லா தவர்.

கல்லாதவன் களர் நிலத்திற்கு ஒப்பாவான்,அவன் நடை பிணத்தைப் போன்றவன்.இது தேவை.

407-நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
   மண்மான் புனைப்பாவை யற்று.

கல்வியறிவற்றவர்களின் அழகான தோற்றம் என்பது,கண்ணை கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவர். இது தேவை.

408-நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
     கல்லார்கண் பட்ட  திரு.

கல்லாதவன் இடம் உள்ள செல்வம் ,நல்லவர்களை வாட்டும் வறுமையை விட அதிக துன்பத்தை தரும்.இது தேவை.

409-மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
   கற்றா ரனைத்திலர் பாடு.

சிறந்த கல்வி கற்றாலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும் வேற்றுமையை போக்கிவிடும்.இது தேவை .
                          
410-விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
   கற்றாரோ டேனை யவர்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேற்றுமையே உள்ளது போல் கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் உள்ள வேற்றுமை ஆகும்.இது தேவை .

கல்லாமை அதிகாரத்தின் பத்து குறட்களும் படித்த மாந்தர்களுக்கும் படிக்கதவர்களுக்கும் உள்ள வேற்றுமையை வரையறுத்துக் கூறுகிறது.இவை யனைத்தும் மாணவர்கள் கற்க தகுதி வாய்ந்தவை.
கல்லாதவர்களுக்கும்,கற்றறரிவு கொண்டவர்களுக்கும் உள்ள வேற்றுமையை, கல்லாமை அதிகாரத்தின் பத்துக் குறட்களும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 
                 ******************************************************
இன்றய மின்னணு நாட்களில், படிக்காதவன் பின்பற்றும் சம்பரதாயம் சடங்குகளில் அறிவியல் தன்மை இருக்கும் என படித்த பொறியியல் பட்டதாரிகளும்,மருத்துவ பட்டம் பெற்றவர்களும், அறிவியல் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் விரதம் இருந்து உடலை வருத்தி,உள்ளத்தை வருத்தி மன வியாதிக்கு ஆளாகி ஆண்டு தோறும்,மாதங்கள் தோறும்,வாரங்கள் தோறும்,தினமும்(சோமவார விரதம்,மக்களவார விரதம்,குருவாரவிரதம்,வெள்ளிக்கிழமை விரதம்,சனி பிரதோஷம்,இது தவிர மாதந்தோறும் வரும் நட்சத்திர விரதங்களான சதுர்த்தி,பஞ்சமி,சஷ்ட்டி,பூசம்,பிரதோஷம் நாட்களில் விரதம் இருந்து உடல் பலத்தை இழந்து சீரழிகின்றனர்.

சக்கரை வியாதியும் மன அழுத்த ரத்தக் கொதிப்பும் வந்து தீரா வியாதிகளால் அவதிப்படும்போது கூட தங்களை மாற்றிக்கொள்ள விரும்பாத சுய அறிவற்ற மக்கள், ஆரோக்கியமான வாழ்விற்கு அர்த்தமற்ற சடங்குகளை ஒழித்தாலே போதும் என உணரும் காலம் எப்போ?
                          *********************

Sunday, March 25, 2018

40-கல்வி


                             40-கல்வி

391-கற்க கசடற கற்பவை கற்றபின்
   நிற்க அதற்கு தக.

ஐயங்கள் தீர கற்க வேண்டும்,படித்தவனுக்கு அழகு, படித்தபடி வாழ்க்கையில் ஒழுக வேண்டும்.இது தேவை.

392-எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
   கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

ஒரு மனிதனுக்கு எண்ணும் எழுத்தும்,அதாவது கணக்கு பாடமும்,படிக்க தெரிந்த அறிவும் இரண்டு கண்களைப் போன்றதாகும்.இது தேவை .

393-கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு
   புண்ணுடையர் கல்லா தவர்.

கல்லாதவர்களுக்கு உள்ள இரண்டு கண்களிருந்தும் அவைகள் முகத்தில் அமைந்துள்ள புண்களாகும்,அதே நேரத்தில் கற்றவர்களுக்கு கண்களில்லா விட்டாலும் அவர்கள் அகக்கண்களைப் பெற்றவர்களுக்கு ஒப்பாவர்.இது தேவை.

394-உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
   அனைத்தே புலவர் தொழில்.

மகிழ்ச்சியுடன் பழகுவதும் ,பிரிந்திட நேரும் போதும்   பிரிகிறோமே என வருந்துவதும் கற்றோரின் சிறப்பாகும்.இது தேவை .

395-உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
   கடையரே கல்ல தவர்.
                               
செல்வந்தர் முன் வறியவர்கள் பணிந்து நிற்பது போல்,கற்றவர்முன் கற்றவரே பணிந்து நிற்பதே கற்றோரின் சிறப்பு.இது தேவை.

396-தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
   கற்றனைத் தூறும் அறிவு.

மணலைத்தோண்ட தோண்ட நீர் ஊற்று பெருகும், அதுபோல கற்றோர் படிக்க படிக்க தன் அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்.இது தேவை.

397-யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
   சாந்துணையுங் கல்லாத வாறு.

ஊரில் யாரிடமும் எதற்கும் போய் நிற்காமல் சிறப்பாக வாழும்போது ,ஒருவன் சாகும் வரை கல்லாமல் வாழ்வது ஏனோ?இது தேவை.

398-ஒருமைக் கண் தான்கற்ற கல்வி ஒருவற்
   கெழுமையும் ஏமாம் புடைத்து.

ஒருவன் தான் கற்ற கல்வியானது,தன் வாரிசுகளுக்கும் கல்வியறிவு தொடரும்.இது தான் உண்மை.
 எழு பிறப்பும் தொடரும் என்பதாக பொருள் கொண்டால் மெய்ப்பித்தல் தத்துவத்திற்கு முரணாக அமையும்.எனவே ஒருவன் கற்ற கல்வி தலைமுறை தலை முறைக்கும் தொடரும், தன் வாரிசுகளால் போற்றப்படும் என்பதே உண்மை.இது தேவை.

 399-தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
   காமுறுவர் கற்றறிந் தார்.

தாம் கற்றதை உலகினர்  இன்புறுவதைக் கண்டு மேலும் மேலும் கற்பதை விரும்புவர் கற்றோர் .இது தேவை.

400-கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
   மாடல்ல மற்றை யவை.

ஒருவருக்கு பெற்ற செல்வங்களுள்  கல்வியே சிறந்த செல்வம்,மற்ற எதுவும் சிறந்த செல்வம் இல்லை.இது தேவை.

கல்வி அதிகாரத்தின் பத்து குறட்களும் கல்வியறிவு பெறுவதின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றன, எனவே இவையனைத்தும் மாணவர்கள் கற்க தகுதியானவை.
                  ************************************************
யாகம்,வேள்வி ,ஹோமம்,அஷ்ட்ட பந்தனம்,கும்பபஷேகம்-இதெல்லாம் என்ன?

சுய சிந்தனையற்ற வெய்யிலாளிகளின் உழைப்பை சுரண்ட அய்யோக்கியர்கள் காட்டும்  வேடிக்கைதானே?

உணவுப்பொருளை உற்பத்தி செய்ய திராணி யற்றவர்களுக்கு இந்த யாகம்,வேள்வி ....செய்ய என்ன யோக்கியதை உள்ளது?
இதற்கு தமிழ் புலவர்கள் மெனக் கெடுகின்றனர்!
உழைப்பாளிகளை திசை திருப்பியவர்களே தமிழ் புலவர்கள் தான்,ஆம் புராணங்களை பாடிய,புலவர்கள் தான்!
அதில் புனிதம் உள்ளன என இன்றும் நம்பி காவடி எடுக்கும் தமிழர் சீரழிவுக்கு காரணமே புலவர்கள் தான்!
                 *************************************

Friday, March 23, 2018

39-இறைமாட்சி


                       39-இறைமாட்சி

381-படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
   உடையான் அரசரு ளேறு.

படை(வீரம்)குடிமக்கள்,கூழ்(உணவு), அமைச்சு (அறிவு), நட்பு(நல்ல உறவு).அரண்(பாதுகாப்பு) இந்த ஆறும் அமைந்தது தான் அரசருக்கு அழகு.இது தேவை.

382-அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
   எஞ்சாமை வேந்தற் கியல்பு.

துணிவு,வள்ளல் தன்மை,சிந்தனை மற்றும் ஊக்கம் இவை நான்கும் குறைவு படாமல் இருப்பதே அரசனுக்குறிய தகுதிகளாகும்.இது தேவை.

383-தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
   நீங்கா நிலனாள் பவற்கு.

விழிப்புணர்வு,கல்வியறிவு,துணிவான முடிவு இந்த மூன்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியது ஒரு அரசனுக்குறிய தகுதியாகும்.இது தேவை.

384-அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
   மான முடைய தரசு.

அறன் தவறாமலும்,குற்றம் புரியாமலும்,வீரத்துடன் ஆட்சி நடத்துபவனே சிறந்த அரசன்.இது தேவை.

     385-இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
      வகுத்தலும் வல்ல தரசு.

திட்டமிடல்,நிதி பெருக்குதல்,பெருக்கிய நிதியை காத்தல் போன்ற இயல்புகளைப் பெற்றது சிறந்த அரசு.இது தேவை.

386-காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
   மீக்கூறும் மன்னன் நிலம்.

எளிய தோற்றமுடையவனாகவும் ,கடுமையான சொற்களை  பயன் படுத்தாத அரசரைத்தான் உலகம் புகழும்.இது தேவை.

387-இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு.

இன்சொல்லும்,பிறருக்கு வழங்கி குடிமக்களை காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு   இவ்வுலகம் வசப்படும்.இது தேவை.

388-முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
   கிறையென்று வைக்கப் படும்

நீதி நெறி தவறாமல் மக்களை காப்பாற்றும் அரசன் மக்கள் தலைவனாக(இறைவனாக) போற்றப்படுவான்.இது தேவை.

389-செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

காது பொறுக்க முடியாத கடுஞ்சொல் கேளாத  அரசாளும் பண்பாளனை மக்கள் மதிப்பார்கள்.இது தேவை.
                          
390-கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
      உடையானாம் வேந்தர்க் கொளி.
                                                         கொடை,அருள்,செங்கோல்முறை, குடிமக்களை கருணையுடன் காத்தல் ஆகிய நான்கும் அரசர்க்கு புகழ் சேர்ப்பதாகும்.இது தேவை.

இறைமாட்சிஅதிகாரத்தின் பத்துக்குறட்களும் ஒரு அரசன் என்பவன் எத்தகைய குணம் கொண்டவனாக இருக்க வேண்டும் என வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களில் இருந்து தமிழர் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்கின்றோம்.
              *****************************************
மரவுரி தரித்த தமிழன்,
மண்ணை பிசைந்த தமிழன்,
பண்டமாற்று தமிழன்,
சிற்றாடை தரித்த தமிழன்,
மாடுவிரட்டும்(ஜல்லிக்கட்டு) தமிழன்.
கட்டடக் கலை(கோயில் கட்டிய) தமிழன்.
இன்று ட்ராக்டர் விவசாயம்
கணினி ஆய்வில் தலை தூக்கும் தமிழன் என மாறிவரும் தமிழன்,இன்னும் பழைமையில் புனிதம் உளதென மாடுபிடி விளையாட்டில் அடம் பிடிப்பதேன்?
3000-ம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லவா?
நவீனப்படுத்துங்கள் ,தமிழனை!அறிவில் ,அறிவியல் தமிழனாக மாற்றுங்கள்,மாறுங்கள்!
                         **************************************

38-ஊழ்


                              38- ஊழ்

371-ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
   போகூழால் தோன்று மடி.

மனிதனுக்கு வரும் செல்வமும்,அவனைவிட்டு செல்வம் விலகுவதும் எல்லாம் விதிப்படியே(ஊழினால் வந்த/வரும் வினை)இந்த குறள் மனிதர்களிடையே முயற்சி இன்மையை உருவாக்கும்.எல்லாம் விதிப்படி எனில் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?யார் பிழைக்க இந்த கடவுள் உருவாக்கப்பட்டது?மாணவர்கள் சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்துள்ள இக்குறள் தேவை.

372-பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
   ஆகலூ ழுற்றக் கடை.

மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் விதியே காரணம்.இது மெய்ப்பித்தல் கொள்கைக்கு முரணானது.மாணவர்கள் கற்க தகுதியற்றது!
                           
373-நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
   உண்மை யறிவே மிகும்.

எவ்வளவுதான் நுண்ணறிவு வளர்க்க வேண்டி நூல்பல கற்றாலும்,அவருக்கு உள்ள உண்மையறிவே மிஞ்சும்.இது உண்மை .

374-இருவே றுலகத் தியற்கை திருவேறு
   தெள்ளிய ராதலும் வேறு.

அறிவுடையவர்களும்,திருவுடையவர்களும் வெவ்வேறு நிலை கொண்ட உலகம் இது.இது உண்மை,தேவை.

 375-நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
    நல்லவாஞ் செல்லவஞ் செயற்கு.
                              
நாம் பணத்தை பெறுக்க எடுக்கும் முயற்சியில் லாபம் உண்டாகும் நட்டமும் உண்டாகும் .இது இயல்பாய்  வருவது.இது உண்மை.

376-பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
   சொரியினும் போகா தம.

ஒருவர் தன்னிடம் உள்ள செல்வத்தை வலிய காத்தாலும்,தம்மை விட்டு போவதை அவரால் தடுக்க முடியாது,அதே சமயம் தனக்கு இருப்பதே போது மென்றாலும் செல்வம் வலிய வந்து சேரும்.எல்லாம் இயற்கையே .இது உண்மை.

377-வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
   தொகுத்தார்க்குத் துய்த்த லரிது.

கோடி கோடியாக பொருள் சேர்த்தாலும் அவற்றை தாம் விரும்பியபடி அனுபவிக்க முடியாது,எல்லாம் இயற்கையே.!இது உண்மை
                                
378-துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
   ஊட்டா கழியு மெனின்.

துன்பங்களை அனுபவிக்கவே ஏழைகள் தோன்றுகின்றனர்.இல்லையேல் அவர்கள் துறவியாக போயிருப்பர். (ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பம் நடத்த நினைக்கும் போது துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி)இது தேவை

 379-நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
      அல்லற் படுவ தெவன்.

நல்லது வரும்போது மகிழ்ச்சியடையும் ஒருவர்,அல்லது நிகழும்போது மனம் கலங்குவது ஏன்?இது .தேவை.(தீதும் நன்றும் பிறர் தர வாரா)

380-ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
   சூழினும் தான்முந் தூறும்.

மதி யூகம் மூலம் விதியை ஓரளவே வெல்ல முடியும்.விதியை வெல்ல வேறு வழி தேடினாலும் அங்கேயும் விதி முந்தும். இது உண்மை.

ஊழ் அதிகாரத்தின் பத்து குறட்களும் மெய்ப்பித்தல் தன்மைக்கு உட்படுத்த முடியாது,இருப்பினும் மனிதனின் மதி யூகத்தால் புது புது வழியை கண்டாலும் நினைத்தபடி எதுவும் நடப்பதில்லை.இது நடைமுறை சாத்தியமே ஆனாலும் குறள் எண் 372 முற்றிலும் மெய்பிக்க முடியாது, அந்த ஒரு குறள் மட்டும் தவிர்க்கலாம்.

மற்ற 9-குறட்களும் மன அமைதிக்கு வழி வகுக்கும்.