Monday, April 23, 2012

33-ஐ.நா. அவையின் மறுமுகம்


                            33-ஐ.நா.அவையின் மறுமுகம்
                                
இலங்கையில் நடந்த தமிழின அழித்தொழிக்கும் முயற்சியில் ராசபக்சே அரசுடன் ரகசிய ராணுவ ஒப்பந்தம் போட்டு இந்திய அண்டை நாட்டில் இந்தியா ஆட்டம் போட்டது. உலகத்தின் மிகப்பெரிய  மனிதாபிமான நாடு என சொல்லிக்கொள்வதில் நமக்கெல்லாம் பெருமையாக இருந்தது.

மனிதாபிமானம் என்பது மனித நாகரீகத்தின் உச்ச வெளிப்பாடு.இதனை வெளிப்படுத்தும் விதத்தில் தான் உலக தலைவர்கள் ஒன்றுகூடும்போது நடந்துகொள்கின்றனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் பெரும்பாலான உலகத்தலைவர்கள் மனதில் உள் நாட்டில் தங்களை விமர்சிப்பவர்களை எப்படி அழித்தொழிப்பது எனும்  மிருக குணத்தை உள்ளடக்கிக் கொண்டுதான் மனிதாபிமானம் போற்றுவதாக கபட நாடகம் போடுகின்றனர்.
ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்களின் விமர்சனங்களை மதிப்பளிக்க தவறிய தலைவர்களால்தான் தீவிர வாதம் வளர்கிறது. தீவிரவாதம் புரட்சியாக மாறுகிறது. கடைசீயில் நம்மிடம்தான் இளிச்சவாய் ராணுவம் இருக்கின்றதே நாம் யாருக்கு பயப்படவேண்டும் என்று சுட்டுத்தள்ளி மக்களை பயமுறுத்தி நாட்டில் மயான அமைதி ஏற்படுத்திவிடலாம் என மனப்பால் குடித்து ராசபக்சே போன்றவர்கள் கொக்கரிக்கின்றனர்.

கடந்த கால உலக நாடுகளின் வரலாறு படித்தவர்கள் இதை நன்கு அறிவர்.ஒவ்வொரு நாட்டுக்கும் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இறையாண்மை என்றால் என்ன? அமைச்சர் பதவியேற்பின் போது  ரகசிய காப்புப்பிரமாணம் எடுத்துக்கொண்டார் என்கின்றனர், அப்படி என்றால் என்ன?

இந்த இரண்டு வார்த்தைகளுமே மனிதாபிமானத்துக்கு எதிரானது. ஆட்சியாளர்களுக்கு அதிகார போதை ஏற்றுவது.மக்கள் உரிமைகள் பறிக்கப்படும் அல்லது பாதிப்பு ஏற்படுத்தும் வார்த்தைகள்.

மக்கள் உரிமைகள் என்றால் என்ன? தன் இன மக்கள் தங்களில் ஒருவரையே தலைவராக தேர்தெடுக்கும் உரிமை.இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது. இலங்கையில் மட்டும் ‘இறையாண்மையை பாதுகாக்கிறேன்’ என சொல்லிக்கொண்டு இந்தியா உதவியுடன்   அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது.   உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த  மக்களை பீரங்கிக்கொண்டு தாக்கி மனித மாமிச மலைகளை உருவாக்கி அதன்மீது நின்றுகொண்டு வெற்றிக்கொடி நாட்டினர்.பிற நாட்டுத்தலைவர்கள் இந்த கொடூர நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தனர். அவர்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் .ஒரு நாட்டு இறையாண்மையில் இன்னொரு நாடு தலையிட முடியாதே!  

ராணுவத்தை ஏவி விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நடிக்கும் ராசபக்சே, தமிழினத்தின் சாபத்திற்கு ஆளாகட்டும். நாதியற்ற தமிழினம் வேறு என்ன செய்ய முடியும்?

மிச்சமுள்ள தமிழர்கள் மனித உரிமை ஆணையத்தை நாடி எச்சமுள்ள தமிழர்களை வாழவைக்க பன்னாட்டு அவையில் அமெரிக்க உதவியுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்ததில் பிறநாட்டு தமிழன் என்கிற முறையில் நாமெல்லாம் சற்று ஆறுதல் அடைய முடிகிறது.

இதில் கம்யூனிச நாடுகளான ரஷ்யா,சீனா,வடகொரியா மற்றும் க்யூபா இந்த தீர்மானத்தை எதிப்பதால், கம்யூனிச நாடுகள் மனித உரிமை பாதுகாப்பதில் எதிரானது போல் நமக்கு தோன்றுகிறது.

மத உணர்வுகளை தூண்டி மக்கள் சிந்தனையை மழுங்கடித்து அந்த மயக்கத்திலேயே மக்களை ஆளும் அமெரிக்கா, இங்கிலாந்து ,பிரான்சு உள்ளிட்ட ஐரோப்ப நாடுகள், கம்யூனிச கொள்கையான மக்கள் விழிப்புணர்வு கொள்கைகள் கொண்ட நாடுகளை எதிர்க்கின்றன. அதனால் ஐ.நா அவையில் சிறுபான்மை இனமான கம்யூனிச இனம் ஒதுங்கி நிற்கின்றன.
உலகில் மாறுபட்ட கொள்கைகளை  கொண்டமக்கள் பகைமை உணர்வு கொள்வதில் வியப்பில்லை .          
ஆனால் நாகரீக உலக நாட்டுத் தலைவர்கள்தான்  மனித நேயத்தை பாதுகாக்க அல்லது வளர்த்திட பாடுபட வேண்டும்.
உலகத்தில் உள்ள மதவழிக்கொள்கைகள் யாவுமே மனிதன் அறவழிகளை மேற்கொள்ள வலியுறுத்துகின்றன.

அறவழியில் தலையாயது மனித நேயம்.கும்பல் குணத்தால் தனிமனித உரிமையை பாதுகாக்க முடியாது.ஆனால் ஐ.நா சபையும் மனித உரிமை ஆணையமும் தனிமனித உரிமையை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டிலும் போராட வேண்டியுள்ளது ஐ.நா அவையில் வல்லரசுகளுக்கு வழங்கியுள்ள சிறப்பு ரத்து அதிகாரத்தை ரத்துசெய்தால் ஐ.நா அவையை வலிமையுள்ளதாக மாற்றலாம். இல்லையெனில் உலகில் எந்த நாட்டிலும் மனித தன்மை வாய்ந்த ஆட்சியை நிலைநாட்ட முடியாது.

ஒரு நாட்டில் ஒரே மதமுள்ள பல மொழி மற்றும் பல சாதிகளை இணைத்து அமைதியான ஆட்சி செய்யமுடியும் .நம்ம நாடே இதற்கு சாட்சி. அதே நேரத்தில் ஒரு நாட்டில் இரு மொழிபேசும்  அல்லது இரு மதம்  கொண்டஇருவேறு இன மக்களிடையே ஒற்றுமை ஏற்படாது, அமைதியும் ஏற்படாது ஏற்படுத்தமுடியாது அதற்கு சாட்சி இலங்கை. ஹிட்லரைப்போல் துப்பாக்கி முனையில் அமைதி ஏற்படுத்த நினைக்கும் சிங்கள அரசின் அடக்குமுறை அராஜக ஆட்சிக்கு ஐ.நா அவையும் துணைபோகும் ஐ.நா அவையின் மறுமுகத்தை மக்கள் காணட்டும்.


No comments: