Monday, December 23, 2019

இ.பி-36


            161-பகையாளியாகிய பங்காளிகள்

2008-ல் என் வாழ்க்கையில் உருவான புயலை இங்கு விவரிப்பது என் மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என நினைக்கின்றேன்.
அந்த புயல் உருவாக மூல காரணங்கள் என்ன என சற்று விரிவாக காண்போம்.1982-ல் வேலையற்று இருந்த என் தம்பிக்கு என் மூத்த அக்காவின் இரண்டாவது மகளை உறவு தொடர வேண்டும் எனும் நோக்கில் மணமுடித்து வைத்தேன்.அவன் விவசாயம் பார்க்க 4 ஆண்டுகள் மூலதனமாக உரம் போட பண உதவி செய்தேன். 1989-ல் என்னைத்தேடி என் பெரிய அண்ணா வந்தார்.வந்தவர்,
அய்யா,நம்ம ஊரில் ஒரு ஏக்கர் நெல்விளையும் நிலம் விலைக்கு வருகிறது,நம்முடைய பங்காளி நமக்கே விற்க வேண்டும் என்கிறார்.நமக்கு தாங்கலில் நிலமில்லையே நீ வாங்கிப்போட்டால் உனக்கும் ஆண்டு முழுக்க அரிசிக்கு பஞ்சமிருக்காது,நாங்களும் அதை வைத்து காலம் தள்ள முடியும்,நீ என்ன சொல்ற?’

சரிண்ணா..!’, ‘என்ன விலை?,எப்போ ரிஜிஸ்ட்ரேஷன்? போன்ற விவரங்களை கேட்டுக்கொண்டு வாண்ணா
(என்னிடம் உள்ள பணத்துக்கு ஏற்றற்போல் வாங்கி அதை பதிவு செய்யும் அளவுக்கு வசதி இருந்தது).
அடுத்த வாரம் வந்தார். நிலத்தை என் மனைவி மீது பதிவு செய்தேன், அப்போது அண்ணன், ‘தம்பி, பயிர் செய்யட்டும்டா,வருடத்திற்கு 5 மூட்டை நெல் உனக்கு தந்துவிடுவதாக கூறுகிறான்,நீ என்ன சொல்ற?’
சரிண்ண..
நிலம் வாங்கிய அந்த ஆண்டு 50 கிலோ அரிசியை பேருந்தில் போட்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
எனக்கு அவன் அந்த அரிசி மூட்டையை தூக்கமுடியாமல் தூக்கி வந்ததை பார்த்தது,மட்டுமல்ல அரிசி தயாரிப்பும் சரியல்லை,எனவே அந்த 5 மூட்டை நெல்லுக்கான பணத்தை எனக்கு கொடுத்துவிடு நான் அரிசி வாங்கிக் கொள்கிறேன் என்றேன்.
அவனும், ‘சரிண்ணா.என்றான்.

அப்போது,அவனுடைய மூன்று குழந்தைகளில் ஒருவன் என் வீட்டில் தங்கி LkG.UKG..படித்துக் கொண்டிருக்கின்றான். தன் குழந்தையை மாதம் ஒருமுறைகூட வந்து பார்க்க பெற்றோர் என்கிற முறையில் யாரும் வந்து பார்ப்பது இல்லை,
ஒரு பெண்  குழந்தையை அவன் மாமியார் (என் அக்கா)வீட்டில் விட்டுவிட்டு,கைக் குழந்தையை கவனிக்காமல் கணவன் மனைவி இருவரும்  சண்டை போட்டுக் கொண்டு இருப்பதாக எனக்கு தகவல் வந்தது.என் தம்பி வீட்டுக்கு வருவதில்லை என்பதும்,ஒருவர் மற்றொருவரை நம்பாமல் நடத்தையில் சந்தேகம் கொண்டனர்.
எனக்கு இது ஒரு பெரிய தலைவலி பிரச்சினையாக இருந்தது.இதற்கு என்ன வழி எனில், குழந்தைகளை அவர்கள் பெற்றோர் கவனிப்பில் விட்டால்தான் சரிவரும் என எனக்குத் தோன்றியது.
நான் அக்காவுக்கு போன் செய்து அங்கே வளரும் பெண் குழந்தையை அதன் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கச் சொன்னேன்,அவர்களும் அப்படியே செய்தார்கள்,நானும் குழந்தைக்கு ஆண்டு விடுமுறை வந்ததும்,என்னிடம் இருக்கும்,குழந்தையை அழைத்துப் போகச் சொன்னேன். அப்போது ,அவன்

ஏண்ணா,குழந்தையை அனுப்பரீங்க, நான்தான் படிக்கவில்லை, நீங்க படிச்சிருக்கீங்க, உங்க பிள்ளைகளோடு என் பையன் வளர்ந்தா நாலு எழுத்து கத்துப்பான்.
‘அது முக்கியம் இல்லை,ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர்களிடம் வளர்ந்தால் மட்டுமே பெற்றோர்களுக்கு அந்த குழந்தை பயன்படும்.அந்த குழந்தையும் தன்னை பெற்றவர்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வளர்த்தார்கள்,என நினைத்து பிற்காலத்தில் அவன் பெரியவனானதும் தன் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான். அப்படி இல்லாமல்,உன் குழந்தையை நான் வளர்த்தால்,அவன் வளர்ந்து ஆளானதும்,உன் பேச்சையும் கேட்க மாட்டான்,என் பேச்சையும் கேட்க மாட்டான்,குழந்தையும் யாருக்கும் பயனில்லாமல் போவான்,இது என் அனுபவத்தில் உண்ர்ந்தது.என்றேன். அவனும் சரி என குழந்தையை அழைத்துச் சென்றான்.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நிலத்தில் ஏதும் விளையவில்லை அண்ணா,என சொல்லி வந்தான்.நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சரிடா,மழை பொழிந்து நல்லா விளைஞ்சா,தா..டா..என்று போய்விடுவேன்.இப்படியாக 10 வருடங்களாக ஆனது.

162-அண்ணன் பிள்ளையை வளர்க்கிறதை, தென்னம் பிளைளையை வளர்க்கலாம்

இதற்கிடையே, என் அண்ணனின் ஒரே மகனை, பிரதி உபகாரமாக நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை.பள்ளி இறுதி படிப்ப‍ல் அதிக மதிப்பெண் பெறவில்லை.மேலே படிக்கவும் அவன் விரும்ப வில்லை.அவனை திருவள்ளூருக்கு அழைத்து வந்து திருப்பெரும்பூதூர் அருகே இயங்கும் ITI ,தொழில் கூடத்தில் FITTER ஆக சேர்த்தேன்.
மூன்று ஆண்டு படிப்பு அது.தினமும் விடியற்காலை,தன் மூத்தார் மகனுக்கு சாப்பாடு கட்டி கொடுப்பாள்,என் மனைவி,படிப்பை முடித்து எங்கேயாவது தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கை எனக்கு இருந்தது.அதே போன்று கும்மிடிப்பூண்டியில் அவனுக்கு வேலை கிடைத்தது.25 வயது ஆனது,அதற்கு முன் (என்னுடைய அண்ணா),அவனுடைய அப்பா இறந்து 1993ல் இறந்து விட்டார்.அதற்கு முன் அவருடைய மூன்று பெண் குழந்தைகளும் கல்யாண வயதில் அண்ணன் வழி காட்டுதலில்,திருமணம் செய்து முடித்தேன்.

என் அண்ணன் இறந்த பின்,அவருடைய ஒரே பையனை அழைத்து, ‘சொந்தமா வீடு கட்டிக்கொள்,ஒரு பெண்ணைப் பார்த்து நான் கல்யாணம் செய்து வைக்கின்றேன்.என்றேன் ,அவனும், ‘சரிப்பாஎன்றான்.
நான் ரூ5 ஆயிரம் கொடுத்தேன். கிராமத்தில் இப்போது இருக்கும் என் வீட்டின் எதிரே கடகால் போட்டுக் கொடுத்தேன்.வாசல் எதிரும் புதிருமாக இருக்கட்டும் என்றேன், ‘சரி என்றான்.
திருமணம் ஆனது,அடுத்த மாதமே எதிர் நோக்கி இருந்த வாசலை அடைத்து,கிழக்கு நோக்கி வைத்து விட்டான்.
நான்..., ஏண்டா இப்படி செஞ்சே?,வீட்டின் அன்யோன்யம் கெட்டுப் போய்விடுமே? என்றேன்அவன் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.நான்,
ஆண்டுக்கு ஒரு முறை அதாவது என் தாய்த்தந்தையரின் நினைவு நாள் அனுசரிக்கும் நாளான,ஒவ்வொரு ஆண்டும் (டிசம்பர் 5அல்லது 6 தேதி) கார்த்திகை 20 ந்தேதி க்கு முன் நாள் சென்று விடுவோம்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக

சித்தப்பா,நானும் ஒரு நாலு வருடங்கள் பயிர் செய்ய வேண்டும் அந்த தாங்கல் நிலத்தை சித்தப்பாவிடம் இருந்து வாங்கிக் கொடு,’ என்றான். நான், ‘அவன் பயிர் செய்யரானேடா,அவனிடம் இருந்து எப்படி வாங்கறது,? நீ வேண்டுமானால்,ஒரு ஏக்கர் நிலம் பார் உனக்கு வாங்கித் தருகின்றேன்.என்றேன்.
கார்த்திகை 20 தேதி நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 3 மணி அளவில் புறப்பட தயாரானேன்.
என்னருகே வந்த என் அண்ணன் மகன், ‘என்னப்பா நான் கேட்டது?,எனக்குஅந்த நிலத்தை வாங்கித் தாப்பா!,இப்ப யாரும் நிலம் விற்பது போல் தெரியவில்லை,..’என  அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது,
இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் தம்பி, ‘அவன் தான் பயிர் செய்யட்டும்,அதில பயிர் செஞ்சி அவன் தான் வாரிக் கட்டிக்கட்டும் என்றான்.
நான் தம்பி முகம் பார்த்து, ‘ஏண்டா இப்படி சொல்ற?’
பின்ன என்னா?, அவன் வேணும்னு கேட்கிறான், அவன்தான் பயிர் செய்யட்டும்
சரி யார் பயிர் செஞ்சாலும்  ஒன்னும் தர போறதில்லை, நீதான் பயிர் செய்.’ என்று சொல்லிவிட்டு கிளம்ப தயாரானேன்.
அப்படில்லாம் இல்லப்பா,நான் வருடத்திற்கு 5 மூட்டை நெல்லுக்குண்டான பணத்தை தந்து விடுகிறேன்.என்றான்.சொன்னது போல் அடுத்த ஆண்டு ரூ2500 கொண்டு வந்து கொடுத்தான்.
        
             163  -பட்டிணி போட்ட பங்காளிகள்

அடுத்த ஆண்டு வழக்கம் போல் நான் கார்த்திகை 20 தேதி முன்தினம்  சென்றுவிட்டேன். கிராமத்திற்கு செல்லுமுன் அவசர பயன்பாட்டிற்கு ஒரு ரொட்டிவாங்கிச் செல்வது வழக்கம்.அவ்வாறே ரொட்டி வாங்கிக் கொண்டோம்.
அன்று இரவு,யாராவது நம்மை சாப்பிடக் கூப்பிடுவார்கள் என காத்திருந்தோம்.ஒவ்வொரு ஆண்டும் என் தம்பி மனைவி அல்லது என் அண்ணன் மகன்,அல்லது அண்ணன் மகள் என யாராவது சாப்பிட அழைப்பார்கள்.அதை நம்பித்தான் அன்று இரவு காத்திருந்தோம்.
இரவு 9 மணிவரை யாரும் வர வில்லை.நான் என் மனைவியை அழைத்து, ‘கீழே போய் பார்துவிட்டு வா,என்ன செய்யராங்க? ஒருத்தரும் வர வில்லையே!
சரிங்க,’ என கீழே போனவள்,அங்கே என் தம்பி வீடு கதவு சாத்தப் பட்டிருந்ததைப் பார்த்து,என் அண்ணன் மகன் வீட்டிற்குள் நுழைந்தாள்,அவன் அப்போது தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான். அப்போது, ‘என்ன சித்தி?’ என்றிருக்கின்றான். ஒன்றுமில்லைடா என சொல்லிவிட்டு, ‘தண்ணி கொண்டுபோக வந்தேண்டாகுடிக்க தண்ணி கொண்டு மேலே வந்தவள், பொல பொல வென கண்ணீர் விட்டு அழுதாள்.

என்னாச்சு ?,ஏன் அழறே?’
இனிமே சொந்தமெல்லாம் அவ்வளவு தாங்க,இனி இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை,நாம் வரும்போதே இங்கே சமைச்சி சாப்பிடற மாதிரி,வாங்கி வந்துடனும்என்றவளை நோக்கி, ‘ஏன்?’ என்றேன்.
நான் போகிறேன்.., ரகு சாப்பிட்டுக் கொண்டிருந்தான், என்ன சித்தி.. சாப்ட்டிங்களா..? இல்லையா? என ஒரு வார்த்தைக் கூட கேட்காமல்..,அவன் பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான்.., என்னைப் பார்த்தவனை பார்த்து..,தண்ணி கொண்டுபோக வந்தேண்டா... என வந்துவிட்டேன்என்றாள்.
சரி, நாம ரொட்டி வாங்கியிருக்கோம்லே,அதை சாப்பிட்டு இரவை கழிப்போம்.என்றேன்.
அடுத்த ஆண்டு முதல் அங்கே கிராமத்தில் தனி குடித்தனத்துக்கு உண்டான சாமான் சட்டிகளை வாங்கி வைத்து விட்டோம்.இன்றளவும் இது தான் நிலைமை.
         
           164-மின்சார இணைப்பை துண்டித்தனர்

வீட்டில் இன்னொரு சம்பவம்.
கள்ளூரில்,1980-ல் நான் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பை மின் துறை அலுவலரிடம் போராடிப் பெற்றேன்.அதிலிருந்து என் வீட்டின் பின்புறம் என் தம்பி,ஒரு ஓலை வீடு கட்டி என் வீட்டிலிருந்து மின் இணைப்பை பயன் படுத்தி வந்தான்.என் அண்ணன் மகனும் அவன் வீட்டுக்கு என் இணைப்பிலிருந்து மின் சாரம் எடுத்து தொலைக் காட்சி,மின் விசிரி போன்ற சாதனங்களை அனுபவித்தனர்.
5 வருடங்களாக போட்டி போட்டுக் கொண்டு யாரும் மின் கட்டணம் செலுத்த வில்லை.எனக்கு யாரும் இதை சொல்லவில்லை.
ஒரு நாள், இந்த தகவலை எடுத்துக்கொண்டு, என் வீட்டுக்கு வந்த தம்பி மனைவி,
மாமா,வீட்டு மின் இணைப்புக்கு உண்டான பணத்தை கட்ட வில்லை எனில்,மின் இணைப்பை துண்டித்து விடுவதாக,மின் துறை ஆட்கள் சொல்லி விட்டனர்.’ என என்னிடம் வந்து சொன்னாள்.
இதை நீங்கத்தான் பங்கு போட்டு கட்ட வேண்டும் என்றேன்.
அவன் தர மாட்டேன் என்கிறான்.மொத்தமா நாங்கள் எப்படி கட்ட முடியும்?’ என சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.
நானும் எப்படியாவது மின் கட்டணம் கட்டி விடுவார்கள் என்றிருந்தேன். ஆனால் மின் இணைப்பை துண்டிப்பு செய்துவிட்டனர். அவரவர்கள் தங்களுக்கு சொந்தமாக மின் இணைப்பை வாங்கிக் கொண்டனர்.

நான் மீண்டும் மின் இணைப்பை பெற பொன்னேரி மின் துறை அதிகாரிகளை நாடினேன்.அதற்கு அவர்கள்,
பழைய பாக்கியை அபராத தொகையுடன் கட்டினால்,மட்டுமே மின் இணைப்பு தருவோம் என்றனர்.சரி,என்று அவர்கள் சொன்ன ரூ 10 ஆயிரத்தை தண்டத் தொகையாக கட்டினேன்.
(பங்காளிகளை பகையாளிகளாக மாற்றி வாழ மட்டுமே பழகிப்போன சுய சிந்தனை யற்ற சாதிகள், எங்கள் சாதிகள்.மூட வைராக்கியமும்,முட்டாள் தனமும் மட்டுமே இவர்கள் வாழ்க்கையின் மூலதனங்கள். முரட்டுத்தனமும், கோவம் மட்டுமே சுயமா சம்பாதிக்காத சொத்துக்கள்.)
                                 
இப்பொழுது,2008 ம் ஆண்டு வீட்டில் புயல் வீசிய காலத்துக்கு  போவோம்.2008 பிப்ருவரியில் பெரிய மகனுக்கு திருமணம் நடந்தது.என் தம்பியை அழைக்க என் மனைவி,மகன்கள் சென்றார்கள்.திருமணத்திற்கு வருவதாக சொன்னார்கள்,ஆனால் வரவில்லை.2008ல் திருமணம் முடிந்ததும்,கள்ளூரிலிருந்து என் பால்யகால நண்பன் போன் செய்து, ‘விஷயம் தெரியுமா?’ என்றான்.
சொன்னாத்தானே தெரியும்என்றேன்.
கழனியில் உள்ள நிலத்தை உன் தம்பி யாருக்கோ விற்றுவிட்டான்,அது உனக்கு தெரியுமா?’ என்றான்.
அதெப்படி முடியும்? எனக்குத் தெரியாமல்?’
உனக்குத் தகவல் சொல்லணும்ணு தோணிச்சி, சொல்லிட்டேன்என்றான்.

நான் கிராமத்தில் இருக்கும் சின்ன அண்ணனுக்கு போன் செய்து,
என்னண்ணா,தம்பி கழணி நிலத்தை விற்று விட்டானாமே,அப்படியா?’ என்று கேட்டேன்.அது எனக்குத் தெரியாது,ஏதோ அவன் பாகத்தை பிரித்து வித்து பெண்ணுக்கு கல்யாண செலவுக்கு எடுத்துக்கிட்டான் போல,அவன் பங்குதானே அவன் வித்துக்கினான்,போயேன்என்றார்.எனக்கு எதிராக இருவருமே ஒன்றாக செயல் பட்டுள்ளார்கள் என புரிந்து கொண்டேன்.
என் மனம் அமைதி அடைய வில்லை.என் அப்பாவின் பேரில் உள்ள 108 சென்ட் கொண்ட பூர்வீக சொத்து அது.அதனுடைய வாரிசுகள் என்னையும் சேர்த்து,6 பேர் உயிரோடு இருக்கின்றோம்,குடும்ப உறுப்பினர்களை ஒன்று கூட்டி,கலந்து பேசிதானே யாருக்கு என்ன? எவ்வளவு? சென்ட் என பிரித்து விற்றிருக்க வேண்டும்
கேள்வி பட்டவுடன்,நான் ஆரணி பத்திரபதிவு அலுவலகம் சென்றேன்.
              
          165-பட்டாவை ரத்து செய்தேன்

அங்கே ரூ.20க்கான பணம் கட்டி, பத்திர பிரமாணம் மூலம் என் அப்பாவின் மூல பத்திரங்களை நகலெடுத்தேன்,
அதில் என் அப்பாவின் பேரில் தற்போது,72(+10) சென்ட் நிலம் மட்டுமே உள்ளது.ஆனால் VAO வைத்திருக்கும் A பதிவேட்டில் 98+10 =108 சென்ட் நிலம் உள்ளது.இது எப்படி? என வி.ஏ.ஓ.வை கேட்டேன்.அவர்,
சார்,இப்பொழுதெல்லம் தாலுக்கா அலுவலகம் கணிணி மூலம் பதிவேட்டை பராமரிக்கின்றது. எங்களுக்கு அதிகாரம் இல்லை,என்னை கேட்டால், உங்க அப்பாவின்”A” அடங்கலில் 108 சென்ட் உள்ளதை சொல்வேன்.அவ்வளவுதான். நீங்கள், வாட்டாட்சியர் அலுவலகம் தான் செல்ல வேண்டும்.’ என சொல்லி விட்டார்.
நான் கும்மிபூண்டி வட்டாட்சியரை அணுகினேன்.இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது 

சார்,நீங்கள் RDO,பொன்னேரியை அணுக வேண்டும்,என்றனர்.
பொன்னேரி கோட்டாட்சியரை அணுகினேன்.அவர், ‘நீங்கள்,ஒரு மனு எழுதி கொடுத்து விட்டு போங்கள்,நாங்கள் ஆவன செய்கிறோம்.என்றனர். அவ்வாறே நான் மனு எழுதி கொடுத்தேன்.அதற்கு உண்டான ஒப்புகை சீட்டு கேட்டேன்,அப்படி எல்லாம் தர முடியாது என்றனர்.
வீட்டுக்கு வந்த நான்,20 நாட்கள் கழித்து RTI மூலமாக ஒரு மனு எழுதி அதை பதிவு அஞ்சலில் அனுப்பினேன்.அதன் பின் ஒருமாதம் கழித்து நினைவூட்டுக் கடிதம் அனுப்பினேன்.பதிலில்லை. பின்பு அதே அலுவலகத்தில் இயங்கும் மேல் முறையீட்டு அலுவலருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு பதிவு அஞ்சல் அனுப்பினேன்.ஒரு மாதமாகியும் பதிலில்லை.பின்பு நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன்.பதிலில்லை.

ஒரு மாதம் கழித்து மாநில தகவல் ஆணையத்திற்கு ஒரு பதிவு அஞ்சல் அனுப்பினேன்.பதிலில்லை.ஒரு மாதம் கழித்து மேல் முறையீடு பதிவு அஞ்சல் அனுப்பினேன்.
இப்பொழுது தான் பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் இருந்து தொலைபேசி தகவல் வந்தது.
நான் பொன்னேரி போனேன்.நேர்முக உதவியாளரை சந்தித்தேன்.அவர் சொன்னார்,

அய்யா, எங்கள் அலுவலர்கள் தவறு இழைத்து விட்டனர். உங்கள் கோரிக்கை நியாயமானது. உங்களுடைய அப்பாவின் சொத்தை பாகம் பிரித்து பட்டா போட்டுத்தர எங்களுக்கு அதிகாரமில்லை. முறையாக விசாரணை வைத்து செயல்பட்டிருக்க வேண்டும்.அப்படி செய்ய வில்லை.எனவே கும்மிடிபூண்டி வட்டாட்சியர் உங்கள் தம்பி மகனுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து ஆணை இடுகிறோம்.இதை செய்து கொடுத்தால் உங்களுக்கு போதுமா?’ என்றார்.
போதும் சார்என்றேன். 
2007 டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் கிராமத்தில்தான் இருக்கின்றேன். என்னிடம் என் தம்பி,
ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், ‘பெண்ணுக்கு கல்யாணம் செய்யணும், காசு இல்லை,என்ன செய்யலாம்என ஆலோசனை செய்திருந்தால் நான் பண உதவி செய்வதோ அல்லது நிலத்தை முறையாக பங்கிட்டு விற்பனை செய்வதோ எதாவது செய்திருக்கலாம்.
அதை விடுத்து, அதிகாரிகளின் குறுக்கு புத்தியைப் பயன்படுத்தி 15 நாட்களில் நிலத்தை பிரித்து,பட்டாவை தன் பிள்ளை மீது மாற்றி அடுத்த சில நாட்களில் ஆரணியில் உள்ள ஒரு பெண்ணின் மீது மறு பட்டா மாற்றம் செய்து விற்கப்பட்டுள்ளது.இதற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிகாரிகளுக்கு லஞ்சமாக தரப்பட்டுள்ளது.

பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சொன்னது போல் 15 நாட்களில் எனக்கு பதிவு அஞ்சலில் பழைய நிலைக்கு பட்டா மாற்றம் செய்து வழங்கப்பட்டது.
இதற்கிடையே என் சின்ன அண்ணா, தன் பங்குக்கு ஒரு 26 சென்டை விற்று விட்டார்.அதை இப்போது பட்டா மாற்றம் செய்வதில் சிக்கல் வந்து விட்டது.
அவரிடம் நிலம் வாங்கியவர்,என் ஒப்புதலை கேட்கின்றார்.என்னிடம் வந்த என் அண்ணாவிடம், ‘நான், ஒப்புதல் தருகிறேன்,ஆனல் தம்பியிடம் என் பங்கை வாங்கித் தாருங்கள்.என்றேன்.எனக்காக ஒதுக்கப்பட்ட என் பங்கு நிலம் தரிசாக இருந்தது.காரணம் என் பங்கு நிலத்தை என் பெரிய அண்ணா இருக்கும் வரை பயிர் செய்து கொண்டிருந்தார்.அவரிடம் எந்த விளை பொருளையும் நான் கேட்டதில்லை. 

1993-ல் என் பெரிய அண்ணா இறந்து விட்டார்.அதன் பிறகு அந்த நிலம் தரிசாக இருந்தது. எங்கள் பக்கத்து வீட்டுப்பையன் ஒரு நாள் என்னிடம் வந்து, ‘சித்தப்பா,நான் உங்கள் பங்கு நிலத்தை பயிர் செய்கிறேன்,
வருடத்திற்கு ரூ.500.00 தருகிறேன், என்றான். நானும், ‘சரி செய் என சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அடுத்த நாள் இந்த பையன் ஏர்கட்டி உழப்போனவனை விரட்டி விட்டான்,
என் வீட்டு நிலத்தை பயிர் செய்ய,நீ, எங்கப்பனுக்கு மகனாக பிறந்தாயா?’ என கேள்வி கேட்டு அவனை  விரட்டி விட்டான்.
என் தம்பி என்ன செய்திருக்க வேண்டும் ?,என் பங்கு நிலத்தை நான் யாருக்கு ஒதுக்கினேனோ அவனிடம் இருந்து நிலத்தை பெற என் அனுமதி கேட்டிருக்க வேண்டும்,ஆனால் அடாவடியாக அவனை விரட்டியது மட்டமல்ல,அந்நிலத்தை அவனே உழுது பயிர் வைத்தான்.
இதுவரை அந்த நிலத்திலிருந்து விளைந்த அரிசி இதோ, என ஒரு 10 கிலோ அரிசியைக்கூட என் கண்ணில் காட்டவில்லை, அதைப்பற்றிய கவலையும் அவனுக்கு இல்லை. அவனுக்கு மட்டுமா கவலையில்லை, என் அண்ணன் மகனுக்கும் கவலையில்லை.
              **************

2010 என நினைக்கின்றேன்,என் அண்ணன் மகனை கேட்கும் போதெல்லாம் நான் பயிர் செய்யலப்பா,என்னால முடியல என்றான், ‘சரி முடியலை இல்ல,நான் யாருக்காவது விட்டுட்ட்டுமா?’
வேண்டாம்பா,நானே பயிர் செய்கிறேன் என்றான்,ஆனால் அந்த வருடம் அவன் எதுவும் சொல்லவில்லை.பயிர் செய்தனா இல்லயா அல்லது பயிர் செஞ்சம்பா, குழந்தைகள் படிப்புக்கு செலவாகிவிட்டது என சொல்வான் என்றிருந்தேன்,ஆனால் அப்படி அவன் சொல்ல வில்லை!
ஒரு நாள் என் சின்ன அக்காவிடம் இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, ‘அவன் தான் பயிர் செய்யவில்லயே! அவனை ஏன் கேட்கிறே?,அந்த நிலத்தை வேறு யாரோ பயிர் செய்யறாங்களாமே!என்றார்

எனக்கு குழப்பமாகிவிட்டது.அன்று மாலை நான் என் அண்ணன் மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.ஆனால் எடுக்க வில்லை.தொடர்ந்து 10 அழைப்பு விடுத்தேன் அதன் பிறகு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண் எடுத்தாள். அவள் அப்போது,
சார் யாரோ ஒரு அதிகாரி வந்து இருக்காரு அவரிடம் பேசிக்கொண்டிருக்கார்.சில நிமிடங்கள் கழித்து பண்ணச் சொன்னார்.என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.
   
 30 நிமிடங்கள் கழித்து,மீண்டும் போன் செய்தேன்.
அப்போது அவனுடைய மனைவி போன் எடுத்தாள், ‘சும்மா எதுக்கு போன் செய்றீங்க?,அவர் வேலையா இருக்கார்.
இல்லம்மா,நிலத்தை யாருக்கு விட்டான் என தெரிந்து கொள்ளத்தான் போட்டேன்.என்றேன்.அதற்கு அவள்,
அவரு யாருக்கோ விட்டாரு இப்ப என்ன ரொம்ப அவசியமா?’ என சொல்லிவிட்டு, மேலும் தொடர்ந்தாள், ‘கழனி நிலத்தை விற்பதற்கு அடவான்சு வாங்கனீங்க எங்களுக்கு கொடுத்தீங்களா?’ என்றாள்,
நிலத்தை விற்கவே இல்லையே,மொத்த பணமும் வந்த பிறகு அட்வான்சை கழித்துக் கொண்டால் போகுது,இதற்கு ஏன் இப்படி பேசற?’ என சொல்லி விட்டு,

சரி உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு,பையனிடம் கொடுஎன்றேன், அதற்கு அவள், ‘அவர் இப்ப பேச மாட்டார்.என சொல்லி போனை வைத்துவிட்டாள்.
அதிலிருந்து நிகழ்ச்சிகளில் எங்கு பார்த்தாலும் ரகு,பார்க்காமல் போல் போய்விடுவான்.
இதுவரை எனக்கும் அவனுக்கும் பேச்சே இல்லை.
அடுத்த நாள் நான் கள்ளூருக்கு போனேன்.கிராமத்தில் பக்கத்து வீட்டு பையனை பார்க்க நேர்ந்தது.அப்போது.  
ரகு பயிர் செய்திருந்த என் நிலத்தை,இப்போ யாரப்பா பயிர் செய்யறது?,உனக்குத் தெரியுமா?  என கேட்டேன்.அவன்,
தெரியும்பா, முருகப்ப நாயகர் பேரன் செய்யறான்பா
சரி,என சொல்லிவிட்டு,முருகப்ப நாயகர் பேரனைத்தேடி போனேன்,அவன், ‘சித்தப்பா,உங்க நிலமாப்பா அது?,ரகு அவனுடைய நிலம் என சொல்லியிருந்தானே?’
அப்படியா?’ என ஆச்சரியப்பட்டு, ‘சரி, இப்பவே அவனுக்கு போன் போட்டு உன் சத்தேகத்தை தீர்த்துக்கோ
அவன் ரகுவிற்கு போன் போட்டான். அவன், ‘சரிப்பா உங்க நிலம் என்று தான் சொல்கிறான்.
சரி எப்படி விட்டான்?,போகத்திற்கு எவ்வளவு நெல் என சொன்னான்?’

‘3 மூட்டை நெல் தருவதாக சொன்னேம்பா 
சரி அதற்குண்டான காசை கொடுத்துவிடு. 
சரிப்பா,அடுத்த வாரம் வீட்டுக்கு வந்து கொடுத்திடறேன்.
சொன்னபடி,வீட்டுக்கு வந்து 3 மூட்டைகளுக்கு உண்டான காசை தந்துவிட்டான்.
இப்போ, இவன் குணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாள் எங்கள் கிராமத்தின் நிலத்தரகர், ‘தாங்கலில் உள்ள நிலத்தை விற்பதாக அறிந்து கொண்டேன், என்னண்ணா சொல்றீங்க?’ என கேட்டார்.
ஆமா நல்ல விலைக்கு வந்தா கொடுத்துவிடுவதாக உள்ளேன்.என்றேன்.
என்னிடம் வந்து பேசாமலே,யாரோ ஒரு சிலர், ஒரு நாள் என் நிலத்தை வாங்குவதாக சொல்லி,தாங்கல்,நிலத்தில் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைப்பதை என் நிலத்தை பயிர் செய்யும் அவன் பார்த்து விட்டான்.
உடனே அவன் எனக்கு போன் செய்து, ‘நிலத்தை யாருக்காவது வித்துட்டீங்களா?’ என்று கேட்டான்,நான்

நிலத்தை விலைக்கு கேட்டார்கள்,தருவதாக சொன்னேன்,யாரும் என்னிடம் வரவில்லை
அவன், ‘நிலத்திலே கற்பூரம்,தேங்காய் எல்லாம் உடைத்தார்கள்,உடைத்தவர்கள் நாங்கள் இந்நிலத்தை வாங்கி விட்டோம்என்றார்கள்.
விலையே பேசவில்லையே, அப்புறம் நிலம் எப்படி சொந்தமாகும்?’
நிலத்தை கொடுப்பதாக இருந்தால் எனக்கு கொடுத்திடுங்கப்பா,நான் வாங்கிக் கொள்கிறேன்.என்றான்.
சரி வாக்கிக் கொள், தற்போது உழுபவனுக்கு கொடுப்பது தானே நல்லதுஎன்றேன்.
அவனும் விலை கேட்டான்.சொன்னேன்.இப்போதைய மார்க்கட் விலையில வாங்கிக் கொள்வதாக கூறினான்.நானும் சரி என்றேன்.
வந்தவன், ‘இப்ப ஒரு லட்சம் வாக்கிக் கொள்ளுங்கள் அப்பா ,மீதம் பதிவு செய்யும் போது கொடுக்கிறேன்.
அது சரி வராது,மொத்தமா கொடுத்து பதிவு பண்ணிக்கோ
மொத்தமா கொடுக்க வசதி இல்லப்பா
வசதி இல்லாத ஆளு எதுக்குப்பா நிலத்தை, வாங்க வர்ரவங்களை கெடுத்தே?’அதுக்கு பின் ஊரில் உள்ளவர்களிடம் எங்கள் நிலத்தை வாங்கி விட்டதாக அவன் பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான்.

இவனிடம் தொடர்ந்து நம்ம நிலத்தை பயிரிடச் சொன்னா,கடைசீயில் நமக்கு நிலமே இல்லாம பண்ணிடுவான் என தோன்றியது.எனவே அவனிடம்,அந்த நிலத்தை எங்கள் சம்பந்தி வாங்கிக் கொண்டார் என சொல்லி அவனிடமிருந்து நிலத்தை மீட்டேன்.
இப்பொழுது பக்கத்து வீட்டாருக்கே பயிரிட சொல்லிவிட்டேன்.நாம் போனால் நமக்காக அக்கறைப்பட்டு ஒரு தேநீர் போடும் அந்த பக்கத்து வீட்டுக்காரரை விட ஒரு சொந்தக்காரர் கிராமத்தில் இல்லை!.
                 *********
 

No comments: