Saturday, December 14, 2019

இ.பி-27


                     113-காஞ்சிபுரம் பணி மாற்றம்
மீண்டும் பணியில் சேர்ந்து, காஞ்சிபுரம் மண்டல அலுவலக ஆய்வகத்தில் பணி புரிந்தேன்.
         
            114-மீண்டும் பொன்னேரி பணி மாற்றம்

சில நாட்களில் என்னை பொன்னேரி கிடங்கிற்கு மாற்றினார்கள். திருவள்ளூரில் இருந்து காலை 7 மணி அளவில் பொன்னேரிக்கு தொடர்வண்டி மூலம்,பேசின் பிரிட்ஜ் வழியாக சென்று அதே வழியில் மீண்டும் வீடு வந்து நேர இரவு மணி 8 அல்லது 9 ஆகிவிடும். சத்துணவு இயக்க நாட்களில்,காலை 8 மணிக்கே கிடங்கை திறந்தால் தான் மாலைக்குள் இயக்கத்தை முடிக்க முடியும்.எனவே என் கீழ் பணி புரியும் நம்பிக்கையான உதவியாளர்களின் உதவியோடு கிடங்கை திறந்து எடை போட்டு ஏற்ற நான் அனுமதி அளித்திருந்தேன்.

ஒரு நாள் நான் திருவள்ளூரிலிருந்து,சென்னை வழியாக வழக்கம் போல் பொன்னேரி கிடங்கிற்கு காலை 9.30க்கு எல்லாம் வந்து விட்டேன்.
என்னோடு விழிப்பு பணிக் குழுவினர் வந்தனர்.கிடங்கில் எடை போட்டு வைத்திருந்த அரிசி,பருப்பு போன்ற மூட்டைகளை லாரியில் ஏற்றி புறப்பட தாயர் நிலையில் இருந்த நிலையில்,ஒரு சில மூட்டைகளை இறக்கி எடைபோட்டு பார்த்ததில்,300 முதல் 500 கிராம் எடை குறைவாக காணப்பட்டன.

 இதற்கு(எடை குறைவிற்கு) நீங்கள் தான் பொறுப்பு இந்த அறிக்கையில் கையெழுத்திடுங்கள்என்றனர்.என்னுடைய விவாதம் எடுபடாது என நினைத்து கையெழுத்திட்டேன். அடுத்த சில நாட்களில் என்னை பணி நீக்கம் செய்து தலைமை அலுவலக அறிவுரைபடி மண்டல அலுவலகம் உத்தரவிட்டது.
மறுநாள் என் விளக்கத்தை எழுதிக் கொண்டு தலைமை அலுவலகத்தில் அதே திரு டி.ஆர் சீனிவாசன்.ஐஏஎஸ் அவர்களை சந்தித்தேன்.அவர் என் விளக்கத்தை வாங்கி படித்து,
இதற்காகவா பணி நீக்கம் செய்தார்கள்?’ என ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு என் முன்னே,உடனே அவருக்கு கீழே பணிபுரியும் அப்போதைய (JMD (joint managing director) செல்வி.கிரிஜாவைத்தியநாதன் ஐஏஸ் (தற்போதைய தமிழ் நாடு தலைமைச் செயலாளர்)  அவர்களை விசாரித்து கேட்டறிந்தார்.
என்னைப் பார்த்த CMD, ‘நீங்க போங்க நான் நடவடிக்கை எடுக்கிறேன்என்றார்.
             
            115-மீண்டும் காஞ்சிபுரம் பணி மாற்றம்

அடுத்த ஒரிரு நாட்களில் என்னை பணியில் சேர்க்கும்படி தலைமை அலுவலக உத்தரவு மண்டல மேலாளருக்கு வந்தது.மீண்டும் காஞ்சிபுரம் மண்டல அலுவலக ஆய்வகத்தில் பணியமர்த்தப்பட்டேன்.
                 
             116-மும்பைக்கு பணி மாற்றம்

1989-இறுதி வாக்கில் என்னை மாகாராட்டிர மாநில மும்பைக்கு அனுப்பினார்கள்.சத்துணவுக்கு தரம் பார்த்து பருப்பு வாங்கவேண்டும் என்பது ஆணை. எனக்கு மேலதிகாரியாக திரு கிருட்ணமூர்த்தி எனும் அதிகாரி எனக்கு முன்னே அங்கே முகாமிட்டிருந்தார்.
நான் மும்பை சென்றதும் VT யிலிருந்து அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்,அப்போது அவர், ‘நீங்கள்,அங்கேயே ஒரு லாட்ஜில் தங்கிக் கொள்ளுங்கள்,உங்களை ஒரு முகவர்,வந்து ஜலகோவன்அழைத்துச் செல்வார்’, என்றார். ஜலகொவன், மும்பையிலிருந்து வடகிழக்கே 400 கி.மீ.அடுத்த நாள் என்னை அந்த ஊருக்கு அழைத்துச் செல்ல அந்த முகவர் வந்தார்.இரவு 8 மணி நேர பயணத்திற்குப்பின் என்னை ஒரு பருப்பு ஆலை முகவரின் வீட்டின் மேல் மாடியில் தங்க வைத்தார்.

அங்கே நான் கண்ட காட்சிகள் என் மனதில் ஆச்சரியம்  ஊட்டியது.அந்த பருப்பு ஆலை முகவர்,ஒரு ஜவுளி ஆலை அதிபர்.அவருடைய தம்பியை அழைத்து ஒரு வேலை சொன்னார்.உடனே அவர் தன் அண்ணனின் காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற குனிந்தார்.அவரும் தம்பியை வாழ்த்தி அனுப்பினார்.அந்த தம்பி வேலையை முடித்து மாலை வீடு திரும்பினார், உள்ளே வந்ததும், அலுவலகத்தில் அமர்ந்திருந்த அண்ணனின் காலை தொட குனிகிறார், அதற்கும் அண்ணன் ஆசிர்வாதம் செய்கிறார்,பின் நடந்தவற்றை விவரிக்கின்றார்.இருவர் முகத்திலும் என்னே ஒரு புன் சிரிப்பு?.அதுவல்லவா காலச்சாரம்! மாமியார் பஞ்சணையில் அமர்கிறார், அவருடைய மருமகள் தரையில் அமர்ந்து கொண்டு மாமியார் காலை அழுத்தி விடுகிறார்.
மாமியார், மருமகளிடம் தன் காலை அழுத்தச் சொல்லவில்லை...மருமகளே தன்னிச்சையாக காலை அழுத்தி விடும் பணியை மனமுவந்து செய்கிறார்.குடும்பம் என்றால் அப்படிதான் இருக்க வேண்டும் என்பது என் கருத்தும்கூட.

இங்கே தமிழனுக்கு காலச்சாரம் பராமரிக்க வேண்டும் என காளை மாட்டை அடக்கும் போட்டி வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்.அண்ணன் அடித்தால்,தம்பி, ‘நான் ஏன் அவனுக்கு அடங்க வேண்டும்? நானும் பத்து மாசம்,அவனும் பத்து மாசம் ஒரே தாய் வயிற்றில் இருந்தோம். அண்ணனுக்கு நான் ஏன் அடங்க வேண்டும்?என தத்துவம் போசுகின்றனர். படிப்பறிவற்ற/படித்த பெற்றோரும் பிள்ளைகள் ஒருவருக்கு மற்றொருவர் எப்படி அடங்கி நடக்க வேண்டும் என சொல்லி வளர்க்க தெரியவில்லை! பிள்ளைகளை பெற்று போட்டா தானா வளரும்,என தத்துவம் பேசி பிள்ளைகளை வீண்டிக்கின்றனர்

சீரழிந்து போனது தமிழன் கலாச்சாரம்.!    
அடுத்த நாள் மாலை பருப்பு ஏற்ற, வேகன்களின் தரத்தை பார்வையிட,நான் கூட்ஸ் தொடர்வண்டி நிலையம் செல்ல வேண்டும்.அந்த நிலையம் ஜலகோவனிருந்து 30 கிமீ.தொலைவில் உள்ளது. மார்கழி பனி,ஒரு ஸ்கூட்டரில் என்னை அமர வைத்து ஒருவர்,அந்த 30 கிமீஅழைத்துச் சென்றார்,குளிரில் என் உடல் நடுங்கிப்போனது.
வேகன்களை பார்வை இட்டுவிட்டு திரும்பும் முன் ஒரு மப்ளர் வாங்கி காதை சுற்றி மூடிக் கொண்டேன்.20 நாட்கள் அங்கே வேலை.வேலை முடிந்ததும் நான் திருவள்ளூருக்கு திரும்பினேன்.காஞ்சிபுரம் அலுவலகம் சென்று பணியில் சேர்ந்தேன்.
         
           117-மீண்டும் திம்மாவரம் பணி மாற்றம்

எனக்கு மூக்கு தண்டு அழுகிப்போய் மூச்சுவிட கஷ்ட்டமாகிவிட்டது.மூச்சு விட முடியவில்லை, அவ்வளவுதான் வாழ்க்கையே முடிந்து விட்டது என நினைத்துக் கொண்டேன்.
எனது மனைவியின் அக்கா செங்கல்பட்டில் வசிக்கின்றார்,அவர் நோய்கள் பல கண்டவர்.உடனே எனது மனைவி அவரை தொடர்பு கொண்டு,
என்ன செய்யலாம்,அக்கா? பயமாக உள்ளது!’ என்றாள்.அவர்கள் பேருந்து பிடித்து திருவள்ளூருக்கு வந்து என்னைப் பார்த்தார். உடனே சென்னையில் உள்ள தேவகி மருத்துவமனைக்கு செல்லலாம், அங்கே டாக்டர்.காமேசுவரன் உள்ளார்.
அவர் காது,மூக்கு, தொண்டை நிபுணர்.அவர் சரி செய்துவிடுவார். வாங்க போகலாம்.என்றார்.
உடனடியாக நாங்கள் மூவரும் அந்த தேவகி மருத்துவ மனைக்கு சென்றோம்.என்னை பரிசோதித்த அந்த மருத்துவர், உடனே

மூக்கு அடைபட்டுள்ளது ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்தால் குணமாக்கிவிடலாம்என்றார் .கடும் பனிக்காற்றில்(ஜலகோவன் ஸ்கூட்டர் பயணம்) பயணம் செய்ததால், மூக்கின் குருத்தெலும்பு பாதிக்கப்பட்டு அழுகி விட்டது.அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார்கள்.நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்,அறுவை சிகிச்சை செய்தும் ஒரு வாரமாகியும் எனக்கு மூச்சு விடும் பிரச்சினை இருந்தது.
ஒரு வாரம் கழித்து என்னை தேவகி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.நான் பேசுவதற்குள் மருத்துவர், என் மூக்கிலிருந்து ஒரு பெரிய பஞ்சு துணியை எடுத்தார்,சில நொடிகளில் எனக்கு பழைய படி மூச்சு விட முடிந்தது. எனக்கு ஒரு பெரிய நிம்மதி பெரு மூச்சு வந்தது.
மருத்துவ விடுமுறை கழித்து மீண்டும் பணியில் சேர்ந்தேன்.    என்னை மீண்டும் திம்மாவரம் நவீன  அரிசி ஆலைக்கு பணியில் அமர்த்தி உத்ரவிட்டனர்.
திருவள்ளூரில் இருந்து பேருந்து மூலம் செங்கல்பட்டு வழியாக அரிசி ஆலைக்கு சென்று வந்தேன்,சில நாட்கள் வாலாஜாபாத் வழியாகவும் திம்மாவரம் செல்வேன்.
                    ************

1990 கார்த்திகை 20 தேதியில் நவீன அரிசி ஆலையில்,எனக்கு ஒரு தொலை பேசி தகவல் வந்தது, ‘கிராமத்தில் உங்க அப்பா இறந்து விட்டார்
சேதி கேட்டு எனக்கு அதிர்ச்சி இல்லை.காரணம் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டு நானும் மனைவி குழந்தைகளோடு ஒரு வாரத்திற்கு முன் தான் கிராமத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்தேன்.(அவருக்கு வயது 93 இருக்கும், ஒரு தோராய கணக்குத்தான். ஒல்லியான உடல் வாகு,ஓடி ஓடி உழைத்து ஓடாய் போன உடம்பு.உண்மையில் அவர் பிழைப்பு ஓடுவது தான்.
              
           118-வெய்யிலாளி-நிழலாளி கூட்டு

எப்படி? என்றால், நாம் உடுத்தும் துணி(பஞ்சாடை)  எப்படி உருவகிறது என நினைத்தால் அல்லது நான் விவரித்தால் சற்று விளங்கும்.
வெய்யிலாளிகளும் நிழலாளிகளும் இணைந்து உருவாவது தான் நாம் உடுத்தும் ஆடை.(ஆனால் விவசாயத்தில் முழுக்க முழுக்க வெய்யிலாளியின் உழைப்பே,இதில் நிழலாளிகளுக்கு வேலையே இல்லை.)
அதவது வெய்யிலாளி உழைப்பாளிகளின் உழைப்பை நிழிலில் இருந்து உண்டு அனுபவிப்பது,நிழலாளிகளின் வேலை!இந்த ஆடை தயாரிக்க, விவசாயி பஞ்சு தோட்டத்தில்(வெய்யிலில்) பாடு பட வேண்டும். வெடித்த பஞ்சை பறித்து ஆலையில் சேர்க்கும் வரை வெய்யிலாளி உழைப்புதான்.
ஆலையில் நூலாக்கி அதை இரு பகுதிகளாக பிரிக்கின்றனர்.நூலின் ஒரு பகுதி கைத்தறிக்கு செல்கிறது(மனித உழைப்பு) மற்றொரு பகுதி விசைத்தறிக்கு செல்கிறது.
விசைத்தறி கண்டுபிடித்து 400 ஆண்டுகள் தான் ஆகிறது.இதை கண்டு பிடித்தவன் தமிழன் அல்ல.இந்தியனும் அல்ல.

சரி ,இப்ப கைத்தறிக்கு வருவோம்.கைத்தறிக்கு வேண்டிய புடவை,வேட்டி போன்ற துணிகளை தயாரிக்க,பஞ்சாலையிலிருந்து வரும் நூலை சன்னப்படுத்த வேண்டும்.(400 ஆண்டுகளுக்கு முன் நிலத்திலிருந்து வந்த அந்த பஞ்சை நூலாக்க நம் மனிதன் ராட்டை கொண்டு  தயாரித்தான்.)
மேலாடைக்கு வழி இல்லாமல் நூலாடை தாயாரிக்க        ஓடியவர்.இந்த சன்னப்டுத்தும் வேலை என்பதில் தான் எங்கள் நைனா(அப்பா)தன் 13 வயதிலிருந்து சுமார் 80 வயது வரை ஓடி ஓடி உழைத்தார்.சுமார் 60-70 ஆண்டுகள் உழைத்தார்.

இவர் எப்படி ஓடினார் என்பதை நான் நேரில் பார்த்த காட்சியை விவரிக்கின்றேன். நான் உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல ஆரணிக்கு செல்ல வேண்டும்.
அப்போது நான் மதிய உணவு சாப்பிட எங்க அப்பா வேலை செய்யும் இடத்தில் உணவை வைத்து விட்டு நான் பள்ளிக்கு செல்வேன்.அப்போது காலை,மதியம் மற்றும் மாலை எங்க அப்பா எப்படி வேலை செய்தார் என்பதை நான் கவனிப்பது வழக்கம்,அதை இங்கு சொல்லியாக வேண்டும்.
விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எங்க அம்மா ஒரு தூக்கில் மதிய உணவிற்காக கூழை கரைத்து எங்க அப்பாவிடம் ஒப்படைத்து விடுவார்.இடுப்பில் 8 முழ வேட்டி,தோளில் ஓரு துண்டு. சட்டை போட மாட்டார். எதாவது விசேஷங்களுக்கோ அல்லது சென்னை செல்வதாக இருந்தாலோ மேல் சட்டை அணிவார்.

 ஒரு கையில் தூக்குச்சட்டியில் கூழை தூக்கிக் கொண்டு வாயில் சுருட்டு அல்லது பீடி புகைத்துக் கொண்டே ஆரணிக்கு, தான் வேலை செய்யும் பாவடிக்கு காலை 6 அல்லது 6.30க்கு சென்று விடுவார்.இவரோடு எங்கள் கிராமத்திலிருந்து,5 அல்லது 6 பேர் தினமும் பாவுவேலைக்கு செல்வார்கள்.
இவர்களுக்கு மாதம் ஒரு நாள் வரும் அமாவாசை மட்டுமே விடுமுறை நாள்.மேலும் பொங்கல்,தீபாவளி,தமிழ் வருடப்பிறப்பு போன்ற வருடத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே கூலி இல்லா விடுமுறை நாட்களாகும்.மற்ற நாட்களில் கூட விடுமுறை எடுக்கலாம், ஆனால் கூலி கிடைக்காது.
மேலே சொன்ன அமாவாசைப் போன்ற  நாட்களில் பாவடி இயங்காது எனவே அன்றைக்கும் கூலி இல்லை.பணி செய்யும் இடம் என்பது தலைக்கு மேலே தென்னங்கீற்று வேய்ந்த நிழல் தடம்.பாதி சூரிய ஒளியும் தென்ன ஓலை நிழலும் கலந்த ஒரு பாவுத் தடம்
இந்த பாவு தடத்தில் காலை 7 மணியிலிருந்து மாலை சூரிய அஸ்த்தமனம் வரை அதாவது 12 மணி நேரம் வேலை.

ஒரு நாளைக்கு 15 முதல் 20 பாவு நூல் அறுப்பார்கள்.ஒரு பாவடி நீளம்,40 அடி,60 அடி என நீளம் கொண்டதாக இருக்கும்.40 அடி என்றால் 20தும் 60 அடி என்றால் 15 ம் செய்து முடிப்பார்கள்.
ஒரு பாவடிக்கு வலிமையான இரண்டு பேர் வேண்டும்,உதவியாள் என ஒரு சிறுவனோ,அல்லது வயதுப் பெண்மணியோ இருக்க வேண்டும்.40 அடியோ 60 அடியோ அந்த நூலின் இரு முனைகளையும்  6 அடி நீள உருளைக் கட்டைகளைக் கொண்டு இணைக்க வேண்டும்.அந்த உருளைக்கட்டைகளை Xவடிவ கொம்புகளோடு Yவடிவ கயிற்றால் தரையில் இறுக்கி கட்ட வேண்டும்.இப்பொழுது பார்ப்பதற்கு 40 அடி அல்லது 60 அடி நீள படுக்கைப் போன்று காட்சி அளிக்கும்.இந்த 60 அடி நீள நூல் இழைகளை 6 அங்குலத்திற்கு ஒன்றாக  குறுக்கு வாட்டில் 6 அடி நீள மூங்கில் பத்தைகளை நுழைப்பார்கள்.அதாவது 60 அடி நீள பாவுக்கு 120 மூங்கில் பத்தைகள் தேவைப்படும். இப்பொழுது இழுத்து கட்டப்பட்ட பாவின் மேல் கீழ் இருபக்கங்களையும் இரு ஆண்கள் குச்சியை அழுத்தியபடி ஓடுவார்கள்.ஒரு கையில் நூல் துக்குவை பக்கத்தில் உள்ள கஞ்சி பானையில் துவைத்து மறு கையால் பாவு மேல் படும் வகையில் ஒரு தேய்ப்பானை(brush) கொண்டு தீட்டுவார்கள்.இப்போது கஞ்சி பரவலாக, இழுத்து கட்டப்பட்ட பாவின் மேல் படறும்.  
இது போன்று பாவின் மேல்,கீழ் என மாற்றி மாற்றி திருப்பி கட்டி கஞ்சி அடிக்க வேண்டும்.இப்பொழுது இந்த கஞ்சி உலரும் முன் ,6 அடி நீள சுமார் 25 கிலோ கொண்ட இரண்டடி சுற்றளவு கொண்ட குச்சியை ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அழுத்தியவாறு இருவரும் ஓட வேண்டும்,வேகமாக ஓட வேண்டும்.

(குச்சி தயாரிக்கும் முறை-துடைப்பகுச்சியின்  அடிவேர்களை சேகரித்து காயவைத்து அதை 6 அடி நீள பலகையில் நெருக்கமாக வைத்து பலகைக்  கொண்டு வரிசைப் படுத்துவார்கள்.இது போன்று மூன்று அடுக்கு வைத்து அதன் மீது இன்னொரு பலகை வைத்து அழுத்தி இருபக்கமும் நான்கு கழிகளை வைத்து இறுக்கி கட்டுவார்கள்.இதற்கு குச்சி என்று பெயர்.
இதன் எடை 20 லிருந்து 30 கிலோ இருக்கும்.இதை இருவரில் யாராவது ஒருவர்  தோளில் தூக்கிக் கொண்டு மறுமுனைக்கு செல்ல வேண்டும் அவருக்கு இணையாக இன்னொருவர் அவரிடம் பகிர்ந்து கொண்டு அந்த குச்சியை பாவுமீது அழுத்தியவாறு இழுத்துக்கொண்டு இருவரும் ஒரு 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள்  வரை ஓட வேண்டும்.60(20 மீட்டர்) அடிகளை 30 நொடிக்குள் கடக்க வேண்டும் ஒரு நிமிடத்திற்கு 40 மீட்டர்கள்,ஓட வேண்டும்.அப்படியானால் 45 நிமிடங்களை கடக்க அந்த இருவரும் தனித்தனியாக (40*45=) 1800 மீட்டர் ஓட வேண்டும் அதாவது 1.8 கிலோ மீட்டர் ஓட வேண்டும்.15 பாவுகளை முடிக்க,1.8*15=27கிலோ மீட்டர்.

இப்பொழுது சொல்லுங்கள், எங்கப்பா தன் வாழ் நாளில் எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடியிருப்பார்?
வருடத்தில் அவருக்கு 12 அமாவாசைகள் விடுமுறை, மற்றும் பொங்கல்,வருடப்பிறப்பு தீபாவளி என மொத்தம் 15 நாட்கள் கழித்தால் ஆண்டுக்கு ,365-15=350*27=9450 கிலோ மீட்டர்கள் ஓடியிருக்க வேண்டும்!.
13 வயதில் எங்க அப்பா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாவடியில் வேலை பார்த்தார்,25 வயதில் எங்க அம்மாவை சென்னையில் வேலை செய்வதாக சொல்லி திருமணம் செய்து கொண்டார்.(திருமணம்  ஆன ஆண்டு அநேகமாக 1930 என்று இருக்கும்)
60 ஆண்டுகள் ஓடி இருப்பார்,அதாவது 5 லட்சத்து 67 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியிருப்பார்.உலகத்தின் மிகப்பெரிய மராத்தன் ரன்னர் எங்கப்பா!,
 ஆமாம்,எங்க அப்பா போல எத்னையோ வெயியிலாளிகள் இது போன்று ஓடி இருப்பார்கள்!.இன்றும் ஓடுகின்றனர்!.

இன்று நாற்காலி மீது அமர்ந்து கொண்டு வேலை பார்க்கும்  இளைஞர்கள்,60 ஆண்டு காலம் நாற்காலி மீது அமர முடியுமா? அப்பா,`1990-டிசம்பர் 6ந் தேதி மறைந்தார்,அப்போது அவருக்கு 93 வயதிருக்கும் என்பது தோராய கணக்கு.இளவயதில் எங்க அப்பா விடுமுறை நாட்களில் கள் குடிக்க நண்பர்களோடு,கோழி கறியை வறுத்துக் கொண்டு ஆந்திராவில் உள்ள சத்யவேடுவுக்கு சென்று விடுவாராம்.இரவு நேரம் வீடு திரும்பும் முன் பாட்டுப்பாடி கொண்டு வருவாராம். தொலைவிலிருந்து இவருடைய அமர்க்களத்தை அறிந்து கொண்டு எங்கம்மா, ஆக்கிவைத்த சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து மூடிவிட்டு படுத்து விடுவாராம்.தூங்குவது போல் நடிப்பாராம்.வேண்டுமென்றே அன்றைய தினம் இரவு கீரை கடைந்து வைத்திருப்பாராம்.
எங்கப்பாவுக்கு நல்ல பசி நேரத்தில் இந்த சோற்றை பிழிந்து கீரை அல்லது ரசம் ஊற்றி சாப்பிட்டு எங்கம்மாவை வாய்க்கு ருசியா ஆக்கி வைக்கவில்லை என்று வாய்க்கு வந்தபடி திட்டி படுத்துவிடுவாராம்.
குடிப்பவர்களின் கொட்டத்தை அடக்க எங்கம்மா தெரிந்துவைத்திருக்கும் ஒரு, ‘தொழில் நுட்பம்இது..காரமா சமையல் செஞ்சி வச்சிருந்தா வாய்க்கு ருசியா சாப்பிட்டு, போதை தலைக்கேரி ஆண்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தரிகெட்டு ஆடுவார்கள்.இதை தெரிந்து கொண்டுதான் உப்பு சப்பு இல்லா உணவை எங்கம்மா தயாரித்து வைப்பார்களாம் எங்க அம்மா சொல்லித்தான் எங்களுக்கு தெரியும்,
எனக்கு நினைவு தெரிந்து எங்க அப்பா குடித்தது இல்லை.ஆனால் பீடி,சுருட்டு,மற்றும் பொடி போடும் பழக்கமுடையவர்.இரண்டு இலக்க,மற்றும் மூன்று இலக்க எண்களை கூட்டுவது,பெருக்கல்,மற்றும் கழித்தல் கணக்கை மன கணக்காக நொடியில் சொல்லிவிடுவார். பஞ்சாங்கம் பார்க்காமலே,இன்று என்ன நட்சத்திரம்?, நாளை என்ன நட்சத்திரம்?,இன்று எத்தனை மணிக்கு ராகுகாலம், எமகண்டம்,வாரசூலை அதன் பரிகாரம் அத்துணையும் அறிந்தவர்.எங்க அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு சொல்லாடல், ‘மதி முக்கா மந்திரம் கால்’.என்பார்.மழை எப்போ ஆரம்பிக்கும்?,

விதைப்பாடுஎப்போ எந்த நாளில் துவங்கினால் நல்ல விளைச்சல் கிடைக்கும் எனும் மனக்கணக்கில் கில்லாடி’. மொத்தத்தில் எங்க அப்பா ஒரு நடமாடும் , ‘பஞ்சாங்கம்’.
ஒரு புருஷன் எப்படி பெண்டாட்டியை வச்சிக்கனும் தெரியுமா?என்பார். கேட்டுவிட்டு அவரே சொல்வார், ‘நாலு பேர் மத்தியில் பெண்டாட்டியை புகழக்கூடாது,ஆனா நாலு சுவற்றுக்குள் அவளை ராணி மாதிரி நடத்தனும்என்பார்.பெண்களிடம் மட்டும் குடும்பம் நடத்தும் பொறுப்பை தரக்கூடாது என்பார்

எப்பொழுதும் எங்கள் வீட்டில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும், விடியற் காலையில், குழந்தைகள் அழும் போதெல்லாம் இனிமையான குரலில் தாலாட்டு பாடுவார்,அந்த தாலாட்டைக் கேட்டு நாங்களும் தூங்கிவிடுவோம்.1957-லிருந்து எங்க அப்பா இறக்கும் வரை அவருடைய 4 பெண் வயிற்று பேரன்,பேத்திகள்,நான்கு  பிள்ளைகளின் வயிற்று பேரன் பேத்திகள் என அவர் மூச்சு இருந்த 1990 வரை குழந்தைகளை தாலாட்டுப்பாடி தூங்க வைப்பார். 

எங்க அம்மா மறைவிற்குப் பிறகு எனக்கும் தம்பிக்கும் திருமணம் ஆனதால் எங்கள் குழந்தைகளுக்கு  பாட்டியின் அரவணைப்பு கிடைக்க வில்லை,என்பதுதான் சோகம். எங்கப்பா பார்ப்பனர்களின் பாதுகாவலர்,அதுக்கு உதரணம் இதோ....வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் எப்பொழுதும் ஒரு குடையை கையில் எடுத்துக் கொள்வார்.ஒரு நாள் நானும் எங்க அப்பாவும் ஆரணிக்கு வெய்யிலை தவிர்க்க குடைபிடித்துக் கொண்டு போகிறோம்,எங்களை மீறி எங்கள் புரோகிதர் வேகமாக கடந்து போகிறார்,உடனே எங்க அப்பா, ‘சாமி..!,வெய்யில்ல போறீங்க, இந்தா குடை பிடித்துகொண்டு போங்க,நான் ஆரணியில் வந்து வாங்கிக் கொள்கிறேன்என்றார்.எங்க அப்பா போன்ற சத்ரியர்கள், பார்ப்பன பாதுகாவலர்களாக தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல மொழிகளில் இருந்திருக்கின்றார்கள், இன்றும் இருக்கின்றனர்.
                                 ****

1990-ல் டிசம்பரில் பஜாஜ் எம் 80 யை விற்று விட்டேன்,கடன் போட்டு 5 ஆண்டுகாளாகிவிட்டால் இன்னொரு இரு சக்ர வாகனம் வாங்கலாம். அப்போது பஜாஜ் எம் 80 யை விற்று விட்டு, பஜாஜ் கப் எனும் ஸ்கூட்டரை வாங்கினேன்.
                         119-தர ஆய்வாளர்
பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் கழித்து எனக்கு தர ஆய்வாளராக பதவி உயர்வு தரப்பட்டது.தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-ல் துவக்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து 1975 முடிய, என் வயது ஒத்த ஊழியர்கள் பணிக்கு வந்ததால் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்கள்,அல்லது என்னைவிட இளையவர்கள்.செல்வாக்குள்ள சமுகத்தை சார்ந்த பிள்ளைகள் என்னைவிட இளவயதிலே  எனக்கு முன்பே பணிக்கு வந்து விட்டதால்,
மேலதிகாரிகளாக ஏராளமான பேர் வந்துவிட்டனர். மேலும் பணிக்காலத்தில் மேலதிகாரிகளுக்கு ஒத்துப் போகின்றவர்கள் விரைவில் பதவி உயர்வு பெற்று விடுவர்.என்னைப் போன்ற இணங்கிப்போகாத/போகத் தெரியாத இளைஞர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் வீணாகிப்போனதும் உண்டு.பணிக்கு சேர்ந்து 4 ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்றவர்களும் உண்டு.
1991 ஜனவரியின் முடிவில் எனக்கு, தர ஆய்வாளராக பணி உயர்வு பெற்று, சென்னைக்கு மாற்றலானேன். என்னை,திருவான்மியூர் கிடங்கு தர ஆய்வாளராக பணி செய்ய ஆணை வழங்கப்பட்டது.

வாழக்கையில் பல பாடங்களை இந்த பதவி உயர்வு எனக்கு கற்றுத்தந்தது.கிடங்கில்,தரக்கட்டுபாடு தொடர்பான பணி மட்டுமே எனக்கு ஒதுக்கப்பட்டதால் பணிச்சுமை குறைவாக இருந்தது.ஒரு நாள்,சென்னையின் அதிகாரமிக்க அரவை முகவரின் அரிசி லோடு வந்தது.தரம் குறைவாக இருந்ததால் reject செய்துவிட்டேன்.ஆனால் அந்த லாரி மறுநாளும் எடுக்கப்படாமல் கிடங்கு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போகப்பட்டது. சென்னை முதுநிலை மண்டலமேலாளர்,மேலாளர் (தரக்கட்டுப்பாடு) திரு பி.பி.தேவராஜ், (மலையாளி) (என்னை 1977 லிருந்தே தெரியும்) அவர்களை கூப்பிட்டு விசாரித்துள்ளார். அவர் என்னை என்ன ஏது என விசாரிக்காமலே முது நிலை மண்டல மேலாளரிடம் கீழ்கண்டவாறு விவரித்துள்ளார்

சார்,எனக்கு திருவேங்கடத்தைப் பற்றி தெரியும்,அரவை முகவர் சொல்வது போல் அரிசியை இறக்க அதிக பணம் அவர் கேட்ருந்தால் இந்த முகவரும் பணம் தரக்கூடியவர்தான், எனவே தரம் சரியில்லை என தர ஆய்வாளர் திருப்பியது சரிதான்என தெரிவித்துள்ளார்.
நான் பணியில் சேர்ந்த காலத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற நாள் வரை எதற்காகவும் நான் தரத்தை யாருக்காவும் விட்டுக் கொடுத்ததே இல்லை. திருவான்மியூர் கிடங்கில் எனக்கு சமமாக ஒரு கிடங்கு கண்காணிப்பாளர் இருப்பார்.கிடங்கு நிர்வாகத்தை கவனிப்பவர்.
                   *********
நான் பணியில் சேர்ந்த சில நாட்களில் என் எதிர் இருக்கையில், ‘விமலா எனும் கர்நாடக பாப்பாத்தி, உதவியாளராக  பணியில் வந்து சேர்ந்தாள்.அவளுக்கு வயது 42.அதற்கு முன் திரு சற்குணன் எனும் உதவியாளர் பணியில் இருந்தார்.அவருக்கு வயது 30.
நான் பணியில் இருக்கும் போது பிரபலமான சினிமா பாடல்களை பாடிக் கொண்டிருப்பது என் வழக்கம்.பெரும்பாலும் தத்துவ பாடலாகவே இருக்கும்.
ஒருநாள் அந்த விமலாவிடம் பேச்சு கொடுத்தேன். என்னம்மா,வருகைக்கதிவேட்டில் இன்னமும் செல்வி என குறிப்பிடப்பட்டுள்ளதே,ஏன்? என்ன வயசுமா?
அப்போது அவள் சொன்னாள், ‘சார்,எனக்கு 42 வயசு ஆகுது,என் தங்கைக்கு கல்யாணம் ஆகிவிட்டது.நான் கர்நாடக பிராமிணப் பெண்.என்னை யார் சார் கல்யாணம் செய்வாங்க?’
சரிம்மா நான் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சிப்பியா?’
நீங்களா பார்த்து யாரை கல்யாணம் செஞ்சிக்க சொல்றீங்களோ அவங்களை நான் பண்ணிக்கிறேன் சார்!

சற்குணம் எனும் கிறித்துவ இளைஞன்,கிடங்கு உதவியாளராக பணியிலிருந்தார், கல்யாணம் ஆகவில்லை, அவரை அழைத்தேன்.
உனக்கு என்ன வயசு?’
’30 சார்
 உனக்கு கல்யாணம், ஆயிடுச்சா?’
இல்லை, சார்!
நான் பெண் பார்க்கிறேன் கல்யாணம் செஞ்சிப்பியா?’
செஞ்சிக்கிறேன் சார்
நான் கிடங்கு கண்காணிப்பாளரை பார்த்து, ‘சார், இந்த ஞாயிறு turn duty ஆக சற்குணத்தையும் விமலாவையும் போடுங்கஎன்றேன்.அவரும், ‘நீங்க சொன்னா, சரி சார்என இருவரையும் turn duty போட்டார்.அடுத்த நாள்,
நான் சற்குணத்தை பார்த்து கேட்டேன், ‘என்னப்பா, விமாலா கிட்ட பேசினியா?’
‘இல்லை சார்’
‘உன்ன எதுக்கு விமலாவோட duty போட்டேன்?’மேலும் நான், ‘உனக்கும் 30 வயசாகுது,அவளுக்கும் 42 வயசாகுது,இனிமே உங்களுக்கு யார் கல்யாணம் செஞ்சி வைப்பாங்க?’
 ‘சார்,வயசு வித்தியாசம் நிறைய இருக்குதே சார்?’
‘இருந்துட்டு போகட்டுமே...............!’
இரு மனம் இணைய அன்பு மட்டும் இருந்தால் போதுமே!
                
             120-விமலாவுக்கு கல்யாணம்

‘நீ,நினைச்சா அந்த பொண்ணுக்கு வாழ்க்கை தரலாம்’
இப்படியே நான்கு வாரம் ஆகிவிட்டது.ஒரு நாள் சற்குணமும்,விமலாவும் ‘சார்,நாங்கள் கல்யாணம் செஞ்சிக்கிறோம், திருப்போரூர் கோயிலில் ,நீங்கள் வந்து வாழ்த்துங்கள்’ என்றனர்.
அவ்வாறே திருமணம் நடந்தது.கிடங்கு மற்றும் மண்டல அலுவலக ஊழியர்கள் வந்து வாழ்த்தினர்.
நான் சற்குணத்தை 15 ஆண்டுகள் கழித்து பார்த்தேன், ‘என்னப்பா நல்லா இருக்கியா?’
‘உங்க புண்ணியத்துல நல்லா இருக்கிறேன் சார்’
குழந்தை எதாவது...?”
இல்லைசார்என உதட்டை பிதுக்கினார்.
அப்ப வேற கல்யாணம் செஞ்சிக்கறதுதானேமேலும் நான்,
 ‘சரி, விமலாவ என்ன பண்ணுவ?’
‘சார்,அவங்கள எப்படிசார் விட முடியும்? என்னை விட்டா அவங்களுக்கு யார் சார் இருக்காங்க?’என என்னையே மடக்கி கேள்வி கேட்டார்.
என் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி,இவர்களை வாழ வைத்தோமே! இன்றும் இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக அறிந்தேன்.
                   *********
அடுத்து அதே திருவான்மியூர் கிடங்கில் நான் செய்த இன்னொரு நல்ல காரியம்.

No comments: