148-அமைச்சரை எதிர்தேன்
2000-ம் ஆண்டு என நினைக்கின்றேன்.நான் மண்டல ஆய்வகத்தில்
பணியில் இருந்தேன்.அப்போது தமிழ் நாட்டின் உணவு அமைச்சர் திரு மோகன். இருந்தார்.
‘தமிழக
உணவுப்பொருள் விநியோகத்தில் எடை குறைவாக போட்டு பொது மக்களை அதிகாரிகள்
ஏமாற்றுகிறார்கள்’ என்பது பரவலான குற்றச்சாட்டு. இப்பொழுதும் தான்! என்னை
அமைச்சர் வரும் நாளன்று ஊத்துக்கோட்டை கிடங்கில் இருந்துக் கொண்டு அமைச்சர்
வருகையை சமாளிக்க வேண்டும் என்பது ஆணை.
அமைச்சர் தன் அதிகார பரிவாரங்களுடன் வந்தார்.(மாவட்ட ஆட்சியர், தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்,
உணவுத்துறை
மாவட்ட,வட்ட அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்
உள்ளடங்கிய குழு)
நான் கிடங்கில் நிற்கின்றேன்.கிடங்கு அதிகாரிகளை
அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
என்னைப் பார்த்த அமைச்சார், ‘நீ
யார்?’ என்றார்.
‘நான்
மண்டல அலுவலக தர ஆய்வாளர்’
அமைச்சருக்கு,
ஏற்னவே சமச்சீர் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில மூட்டைகளை எடையில் வைத்து
காட்டப்பட்டது.எடை சரியாக இருந்தது. அமைச்சரின் கூட வந்திருந்த கூட்டுறவு துறை
அதிகாரிக்கு அதில் திருப்தி இல்லை. எந்த நோக்கத்திற்காக அமைச்சரை அழைத்து
வந்தார்களோ அது நிறைவேறாமல் போய்விடுமோ எனும் ஆதங்கம் கொண்டவராக அந்த அதிகாரி
இருந்தார்.
தன் பேண்ட் பையில் ஒரு எடைக் கல்லை கொண்டு
வந்திருந்தார்.அதை வைத்து எடை தராசை சோதனை செய்ய வேண்டி அந்த எடைக்கல்லை தராசில்
வைத்தார்.அப்போது நான்,
‘அதெப்படி..?,
எங்கள் கிடங்கில் நாங்கள் பயன்படுத்தும் எடைக் கற்களையும் எடை மரத்தையும் மட்டுமே
சோதனைக்கு உட்படுத்த வேண்டும், அதில் குறை கண்டால்
அதற்கான தண்டனையை நாங்கள் ஏற்கிறோம்.’ என்றேன்.மேலும்
நான்,
‘இதுபோன்ற
செயல்பாடுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என்றேன்.
இதைக்கேட்ட அமைச்சருக்கு கோவத்தின் உச்சிக்கே
போய்விட்டார். ‘இவன் யார்? எனக்கே
பாடம் எடுக்கின்றான்.!’
உடனே மாவட்ட ஆட்சியர், ‘
இங்கு யார் மண்டல மேலாளர்?
இவனை ஏன் பேச
விட்டீங்க?’ எங்கள் மண்டல மேலாளர் வாயைத் திறக்க வில்லை.அமைச்சரும்
அவரோடு வந்த அதிகாரிகளும் கிடங்கை விட்டு வெளியேறிவிட்டனர்.நான் மண்டல அலுவலகம் சென்று
விட்டேன். அன்று மாலை என்னுடைய அதிகாரியான மண்டல மேலாளர்,
‘இருய்யா,தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு உத்தரவு
வருகின்றது அதை வாங்கிக்கொண்டு செல்’
நான் யூகம் செய்து விட்டேன்,அது ‘தற்காலிக
பணி நீக்க உத்தரவாகத்தான் இருக்கும்’
என்று. இரவு மணி 9 ஆகிவிட்டது.அதிகாரி என்னை வீட்டுக்கு போகச்சொல்லி
விட்டார்.அடுத்த நாள் எனக்கு தொழிற்சங்க பொதுச் செயலாளர்,திரு.அ.கு.ஏழுமலை தொலை
பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
என்ன நடந்தது என தெரிந்து கொண்டார்.அவர் சொன்னார்,
‘நீங்கள் சரியாகத்தான் அமைச்சரிடம் நடந்து கொண்டீர்கள்.உங்களை நமது விழிப்பு பணி
அலுவலர் விட்டுக் கொடுக்க வில்லை.எங்கள் தர ஆய்வாளரின் நிலைப்பாடு
சரியானதுதான்.வெளிப்புற எடைக்கலை கொண்டு கிடங்கில் உள்ள எடை மரத்தை சோதனை செய்தால்
எப்படி சரியான எடையை காட்டும்? என அமைச்சரிடம் வாதாடி உள்ளார்.
‘நாங்கள் அவரை suspend செய்ய வேண்டிய அவசியமே இல்லை.’ என அமைச்சரிடம் உறுதிபடக்கூறினார். நாங்களும்
சங்கத்தின் மூலம் அமைச்சரை சந்தித்து , ‘அந்த தர ஆய்வாளர் நமது சங்கத்தின்
பொறுப்பாளர் அவரை பணி நீக்கம் செய்வதை
தவிர்க்க வேண்டும்’ என சொன்னோம்.
அதற்கு அந்த அமைச்சர், ‘அங்க எல்லாமே சரியாத்தான்யா
இருக்கு, நான் ஏதோ செய்தேன். எல்லாரும் பேசாம இருக்கும் போது இவன் மட்டும் ஏன்யா வாயைத்
திறந்தான்?. எனக்கு அசிங்கமா போச்சு’ மேலும் அந்த அமைச்சர். ‘சரி,
உங்க அதிகாரிகளே அவருக்குத்தான் சப்போர்ட்டா இருக்காங்க,நான் மட்டும் என்ன செய்ய
முடியும்?’ என்று சொன்னதாக என்னிடம் தெரிவித்தார்.
என் பிறவி குணம் ‘அநீதியை
கண்டு கோபமடைவது’,
நான் என்ன செய்ய முடியும்?
149-சொந்தமாக ஆட்டோ
2000- ம் ஆண்டில்,எங்கள் வீட்டு எதிரே சற்று தள்ளி ஒரு குடும்பம் வாடகைக்கு
வந்தது.கணவன்-மனைவி இளவயது இணையர்.அவர்களுக்கு
ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள்.நன்றாக வாழ்ந்த குடும்பம்.குடும்ப
பிரச்சினையில் தனிக்குடித்தனம் வந்து விட்டார்கள்.
சாப்பாட்டுக்கே கஷ்ட்டம்.என்
மனைவியிடம் அந்த பெண்,தன் கஷ்டங்களை சொல்லும் போது அதை காதில் வாங்கி என்னிடம் அவர்கள் படும் கஷ்ட்டங்களை
சொல்வாள்.நான்,
‘இதற்கு
நாம் என்ன செய்ய முடியும்?’
‘அவர்
ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார்,அவருக்கு ஒரு ‘ஆட்டோ’ இருந்தால்
ஒட்டி பிழைத்துக் கொள்வார்’
என அந்தம்மா சொன்னாங்க’
‘அவருக்கு
நாம் எதை நம்பி ஆட்டோ வாங்கித் தருவதாம்?’ மேலும்
நான்.
‘ஆட்டோவை
நம்ம பேருக்கு வாங்குவோம்,அவர் வாடகைக்கு ஒட்டி பிழைத்துக் கொள்ளட்டும், நமக்கு
ஒரு நாளைக்கு ரூ
100 தந்து விடட்டும். பையனை
கல்லூரியில் சேர்த்துட்டோம் அவனுக்கு ‘பீஸ்’ கட்ட
நமக்கும் காசு தேவைப்படுதில்ல?’
‘இதுகூட
நல்ல யோசனைதான்,நான் அவர்களிடம் சொல்லிப் பார்க்கிறேன்.’ என்றாள்.அவர்களும்
சரி என்று சொல்லிவிட்டு,
‘பட்டாபிராமில் ஒரு
சேட் ஆட்டோ விற்று விடுவதாக சொல்கிறார், அதை
வாங்கிக் கொள்ளலாம்’
அந்த பெண்ணின் கணவர்
சொன்னார்,என்றாள்.சரி,நமக்கு
அவசரத் தேவைக்கும் பயன்படும்,அவரும் பிழைத்தது
போல் இருக்கும் எனும் எண்ணத்தில்,அந்த ஆட்டோவை போய்
பார்த்தோம்,அவர் அதன் விலை ரூ 30 ஆயிரம்
என்றார்.
சரி என ஒப்புக்கொண்டு 30 ஆயிரம்
கட்டி ஆட்டோவை கொண்டு வந்து வீட்டில் நிறுத்தினோம்.ஒரு 10 நாள்
ஓட்டி இருப்பார்,ஒரு பைசா கூட தரவில்லை.அதன்
பிறகு அவ்வளவுதான் அந்த ஆட்டோவை அவர் ஓட்டவே இல்லை.
நான் என் மனைவியைக் கேட்டேன், ‘என்ன
ஆட்டோ அவர் தொடவே இல்லை?ஓட்டியதற்கும் காசு தரவில்லை, ஏன்
ஆட்டோவை எடுக்கவில்லை என்பதற்கும் அவர் எதுவும் சொல்லாமல் இருக்கின்றார்.?
என் மனைவி அவர்களை கேட்டு வந்து என்னிடம் கூறினாள், ‘ஏங்க,அவங்க
சொந்தமா ஆட்டோ வாங்கிட்டாங்களாம்!’
எனக்கு தேவையா இந்த ஆட்டோ? இப்ப
என்ன பண்றது? உன் பேச்சை கேட்டு நான் செஞ்சேன் பாரு,எனக்கு
வேணும்!
இரண்டு நாள் கழித்து அவர் வந்து, ‘நான்
ஆட்டோ ஓட்டறதுக்கு ஒரு ஆளை அனுப்பறேங்க,அவர்
உங்களுக்கு ஆட்டோவை காலையில் எடுத்துக் கொண்டு போய் மாலை ஆட்டோவை வீட்டில் விடும்போது
உங்களுக்கு ரூ 100 தந்துவிடுவார்.’என்றார்.
‘சரி’ என்றேன்.ஒரு 3 மாதம்
அது போன்று ஆட்டோ ஓடியது.ஆட்டோ ஓட்டி,வாரக்
கடைசியில்,
‘சார்,ஆட்டோவில்
இது போச்சி,அது
போச்சி,அது தேய்ந்து விட்டது,இது
தேய்ந்து விட்டது.
,ஸ்பேர் வாங்கி மாட்டணும்,ஒரு
ரூ.500 தந்தால் ஆட்டோ ஓடும்’ என்பார்.இது
என்ன ‘ஆனையை கட்டி தீனி போடுவது’ போல்
உள்ளதே.இதனால் நமக்கு என்ன லாபம்,?இதை
விற்றுவிடுவது தான் நல்லது.என தீர்மானித்தேன்.
ஆட்டோ வாங்கித் தந்தவரை அழைத்து, ‘இதை
விற்று பணத்தை கொடுத்து விடுங்கள்’ என்றேன்.அவரும்
சரி என சொல்லிவிட்டு,எவனுக்கோ விற்று ரூ.30 ஆயிரம்
கொண்டு வந்து கொடுத்தார்.
இதில் என் அனுபவ உண்மையை சொல்ல வேண்டும்.ஆட்டோ
வாங்கி வீட்டில் பயனில்லாமல் நின்று கொண்டிருக்கும்.அப்போது
அந்த எதிர்வீட்டு முதலியார் பிள்ளை பிழைத்துப் போகட்டும் என வாங்கி வந்த ஆட்டோவை மருத்துவ
மனைக்கு ஓட்டிச் செல்ல அவரை அழைப்போம்.அவர்
என்ன சொல்வார் தெரியுமா?
‘நான்
வெளியே இருக்கேன் சார் என்னால் இப்போ வர முடியாது!’
இதன் அர்த்தம் என்ன தெரியுமா? நாம
போய் இந்தாளுக்கு ஆட்டோ ஓட்டுவதா?நாம் வாழ்ந்த வாழ்க்கை
என்ன? நமது அந்தஸ்த்து என்ன...?....!
இந்த உண்மையை என் மனைவியிடம் சொன்னேன். ஆனால்
என் மனைவியோ அப்படி எல்லாம் இருக்காதுங்க...! அவங்க நல்லவங்க,எனக்கு அந்தம்மா உதவி எல்லாம் செஞ்சிருக்காங்க! மனைவிக்கு
நல்ல குணம் அமைந்திருந்தால் கணவருக்கும் அதே குணம் இருக்கும் என நம்புவது
முட்டாள்த் தனம்! அந்தம்மா உனக்கு வீட்டு வேலைக்கு ஒத்தாசையா இருந்திருப்பாங்க,
அது அக்கம்பக்கம் இருக்கும் பெண்களின் இயல்பு. ஆனால்
அவசர உதவிக்கு நிழலாளி முதலியார் வர்கம் கணக்கு போட்டு பார்ப்பதில் கில்லாடிகள்.ஒருநாள்
அல்லது இரண்டு நாள் ஒரு மனுசனுக்கு அவசரவேலை இருக்கும்.ஆனால்
நீ இதுவரை நான்கு முறை கூப்பிட்டு உள்ளாய் ஒரு முறைகூட வீட்டுக்கு வந்து ,
‘எனக்கு
வேறு வேலை உள்ளது சார்,நான் மாற்று ஏற்பாடாக வேறு ஓட்டுநரை ஏற்பாடு செய்கிறேன்’ என சொல்ல மனமில்லையே, ஏன்?’ இவர்களுக்கெல்லாம்
நாம் 30 ஆயிரம் கொடுத்து நஷ்ட்டப்பட்டிருக்க வேண்டுமா? ‘இனமறிந்து
உதவி செய்’ என ஏன் சொன்னாங்க?
150-மீண்டும்
பணி நீக்கம்
2002 என நினைக்கின்றேன்.நான் ஊத்துக்கோட்டை கிடங்கு
பொறுப்பாளராக பணி புரிகிறேன்.அந்நேரத்தில் திருவள்ளூர் கிடங்கிற்கு தலைமை
அலுவலகத்திலிருந்து ஒரு தொழிலாளர் நலத் துறை அலுவலர் வந்தார்.அப்போது கிடங்கு தர
ஆய்வாளராக திரு.முனித்தின ரெட்டி இருந்தார்.
அந்நேரத்தில் அந்த அலுவலருக்கு ‘டீ’ வாங்கிவர ஒரு பையனை
ரெட்டி அனுப்பினார்.அப்போது அந்த பையனை கவனித்த அந்த அலுவலர்,
‘இவன் யார்?இவ்வளவு சின்னப் பையனை ஏன் வேலை
வாங்குகின்றீர்கள்?’ என வினவி உள்ளார்.அதற்கு திரு ரெட்டி. ‘சும்மா டீ காபி
வாங்கிவர வைத்துள்ளோம் சார்’
‘இவனுக்கு சம்பளம் தருகின்றீர்களா?’
‘ஆமா,சார்’ ‘அப்படியானால் குழந்தை தொழிலாளர் தடுப்புச்
சட்டத்தின் கீழ் நீங்கள் தண்டணைக்குரியவர்’
அப்போது திரு.ரெட்டி, ‘சார்,இவனை நான் வேலைக்கு
வைக்கவில்லை சார்.’
வேறு யார்?
அந்த பையனை நேரடியாக கேட்ட அந்த அதிகாரியிடம், ‘என்னை
திருவேங்கடம்,சார் வேலைக்கு வைத்தார் சார்’ என்றான்.
‘அப்படியானால் அதுபோன்று எழுதிக்கொடு’
அந்த பையன் தனக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் என
கணக்குப்போட்டு எழுதி கொடுத்தான்.அடுத்த வாரமே என்னை , ‘பணி நீக்கம்’ செய்து ஆணை
வந்து விட்டது.
அந்தப்பையனின் அம்மா
எங்கள் வீட்டுக்கு பால் ஊற்றுபவர்.அப்போது என் மனைவியிடம், ‘அய்யா கிட்ட
சொல்லி பையனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்ய சொல்லுமா’ என்றிருக்கின்றார்.என்
மனைவியோ, ‘பாவம் அந்தம்மா கஷ்ட்டப்படுது.குடோனில் பெறுக்கிற வேலை இருந்தா போட்டுக்
குடுங்களேன்’ என்றாள்.
நானும், ‘சரி அனுப்பச்சொல்,பார்க்கலாம்’ என்றேன்.
என் மனைவியிடம் இப்போ பார்த்தியா, ‘என்னை பணி நீக்கம்
செய்துவிட்டார்கள்’ என தெரிவித்தேன்.
‘அய்யோ பாவம் பார்க்கப்போய் நமக்கு இது போல் வந்து விட்டதே!’ மனைவி
புலம்பினாள்.வேறு என்ன செய்ய?
151-மீண்டும் திருவள்ளூர் கிடங்கு
அதன் பிறகு நான் மேலாண்மை இயக்குநரிடம் முறையிட்டேன்.சில
நாட்களில் மீண்டும் பணி நியமன ஆணை வந்து மீண்டும் திருவள்ளூர் கிடங்கிற்கே மாற்றப்பட்டேன். ****************
2003-ல் கல்லூரியை விட்டு வெளியேறி மகன் வேலை
தேடினான்.படிக்கும் போதே யாரோ ஒருவன், ‘நான்
மலேசியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்திய படித்த இளைஞர்களை வேலையமர்த்தும்
பணியை செய்கின்றேன்.எனக்கு ரூபாய் 50 ஆயிரம் கொடுங்கள்,தம்பி
படிப்பை முடித்து விட்டார்,இன்னும் ஒரு மாத்ததில் பணியில் அமர்துகிறேன்,அதற்குள்
‘பாஸ்போர்ட்’ ஏற்பாடு
செய்யுங்கள்.என்றான்.சரி என எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது.6 மாதம்
ஆகிவிட்டது.அவன் ஒரு ஏமாற்று பேர்வழி என தெரிந்து விட்டது.
அந்த ஆசாமி திருச்சியை தலைமை இடமாக கொண்டு இந்திய இளைஞர்களை
மலேசியாவுக்கு அனுப்பும் தொழிலை செய்து வருகின்றான்.அந்நேரத்தில்
அவனால் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை.
அவன் இருப்பிடம் தெரிந்து அவன் அலுவலகம் தேடிச் சென்றேன்.அங்கே
ஒரு பெண் இருக்கையில் இருந்தாள்.என்னிடம் விவரம் பெற்று,அவள்
சொன்னாள்,
‘உங்களுக்கு
பணத்தை திருப்பி தர முதலாளியிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்.’என்றாள்.அடுத்த
வாரம் வீட்டுக்கு
20 ஆயிரம் காலோலை வந்தது. அதன்
பிறகு மீதிப்பணம் கேட்டு பல முறை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் சரியாக பதிலளிக்க
வில்லை.
மீண்டும் திருச்சி சென்றேன்.அந்த
அலுவலகமே இல்லை.சில நாட்கள் கழித்து 15 ஆயிரத்திற்கு
காசோலை வந்தது, அவ்வளவுதான். நானும்
தொடரவில்லை. அவனும் கவலை படவில்லை.மீதி 15 ஆயிரம்
போனது தான். இதற்கிடையே மகன் வினோத் குரோம்பேட்டையில் இருக்கும் அண்ணா
பல்கலை கழகத்தின் வானூர்தியிலில்,MS படிக்க ஆரம்பித்தான்.
படிக்கும் போதே பெங்களூரில் அமைந்துள்ள மத்திய அரசின் நிறுவனமான ADA –விடமிருந்து நேர்முக
கடிதம் வந்தது.நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தான்.MS படிப்பு
பாதியில் நின்றது.3
ஆண்டுகள் அங்கே குறைந்த
சம்பளத்தில் பணி புரிந்தும் பதவி உயர்வுக்கு
வழி இல்லை.
அங்கிருந்து HAL க்கு மாறினான்.பின் தனியார் நிறுவனமான capgemini எனும் தனியார் நிறுவனத்திற்கு மாறினான்.
***********
2005-ம் ஆண்டு என நினைவு.திருவள்ளூர் கிடங்கில் பணி
புரிந்த திரு தண்டபாணி எனும் உதவியாளருக்கு உடலெல்லாம் தடிதடியாக வீங்கி
விட்டது.அவருக்கு சொந்த ஊர் திருக்கோயிலூர்.குடும்பம் அங்குதான் உள்ளது.இவர் இங்கே
தனிநபராக தங்கி இருந்தார். காஞ்சிபுரம் புற்று நோய் மருத்துவ மனையில் அவருக்கு
புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுவிட்டது.இதற்காக இவருக்கு 2 அல்லது 3 லட்சம்
செலவாகும் என கணக்கிடப்பட்டது.அலுவலகத்தில் ஒரு லட்சம் வரை அனுமதி கிடைக்கும் என
சொல்லப்பட்டது.
அப்போதெல்லாம் கிடங்கு பணியிலிருப்பவர்கள் அலுவலக
ஊழியர்களுக்கும் ,மண்டல மேலாளருக்கும் மொத்தமாக ரூ 5 ஆயிரம் தரவேண்டும். இது
எழுதப்படாத சட்டம்.அப்போது நான் சொன்னேன். ‘அதுபோன்ற
பணத்தை கிடங்குகளிலிருந்து வசூலித்து திரு தண்டபாணி மருத்துவ செலவுக்கு பயன்
படுத்தலாம்,’ கிடங்கு ஊழியர்கள் எனது கோரிக்கையை
ஏற்றுக்கொண்டனர்.ஆனால் மண்டல அலுவலக ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.என்னால்
முடிந்த உதவியான ரூ.5ஆயிரத்தை நான் கிடங்கில் இருந்த சில மாதங்கள் வரை கொடுத்து
வந்தேன்.அதன் பிறகு அவர் வீட்டில் எதோ விற்று தன் உடல் நலத்தை கவனித்துக்கொண்டார்.
**************
No comments:
Post a Comment