Sunday, December 22, 2019

இ.பி-35



           157-உலாவி/கணிணி மய்யம் துவக்கம்
2006-ல் என் இளைய மகன் browsing centre துவங்க வேண்டும் என்றான் அதற்கு அவனுடைய கல்லூரி கால நண்பர் திரு.ரவி க்கு சொந்தமான கட்டிடம் பேருந்து நிலையம் அருகே பூட்டி கிடக்கிறது.மாதம் ரூ.ஆயிரம் கொடுத்து நடத்திக்கொள் என்று சொல்வதாக என்னிடம் கூறினான்.
சரி,அதற்குண்டான 8 கேபின்,மற்றும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கவேண்டும் என்றான் .அந்த அறையை ஏசி செய்ய வேண்டும் என்றான்.ஒரு கம்ப்யூட்டர் ரூ.20 ஆயிரம்,8*20=160,000, ஏசி 25 ஆயிரம்,8 கேபின்,8*5=40 ஆயிரம் மொத்தம் ரூ.2 லட்சம்,sify க்கு 1லட்சத்து 25 ஆயிரம் ஆக மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஆகிவிட்டது.
ஆனால் மாத வருவாய் என்ன வந்தது என எனக்குத் தெரியாது.அவனும் சொல்வதில்லை,நான் கேட்டாலும் மையம் இயங்க எதாவது பொருள் வாங்கியதாக சொல்வான்.

இதற்கிடையே வசந்த் MCA படிக்க வேண்டும் என முடிவானது. இதற்காக நேர்முகத் தேர்வுக்கு கோயம்பத்தூர் செல்ல வேண்டியிருந்தது.சென்னை வைஷ்ணவா கல்லூரியில் இடம் கிடைத்தது.
மூன்றாண்டுகள் படிப்பு முடியும் தருவாயில் அடுத்து வேலை வாய்ப்பு தேட வேண்டியதாகிவிட்டது. காரணம்,browsing centre ல் அவன் நினைத்த அளவுக்கு வருவாய் கிடைக்க வில்லை.
இதற்காக தனியாக ஒரு இணையதள நிறுவனம் துவங்கினால் அதன் மூலம் ஓரளவுக்கு வருவாய் ஈட்டலாம் என கணக்கு போட்டான்.அதற்காக வேலூரில் தலைமை இடமாக கொண்டு இயங்கும் TCDS  எனும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு திருவள்ளூரில் ஒரு கிளை நிறுவப்பட்டது.அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு data entry operator போன்ற வேலை வாய்ப்பை உருவாக்கலாம் என நினைத்து தனியாக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பயிற்சி அளிக்கப்பட்டது.சில மாதங்களே இது நீடித்தது.

இதற்கிடையே மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் TATA நிறுவனம், தன்னுடைய நிறுவனத்திற்கு பயிற்சியாளர்களை பயிற்றுவிக்க ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என 30 பேருக்கு பயிற்சியளிக்கப் பட்டது.அதற்கு ஊதியமாக ரூ 30 ஆயிரத்தை வாங்க 6 மாதங்கள் ஆகிவிட்டது.அதோடு அந்த பயிற்சி நிறுவனம் மூடப்பட்டது.
இதற்கிடையே சத்யம் கம்ப்யூட்டர்சின் துணை நிறுவமானமான sify தன் செயல்பாட்டை சுறுக்கிக் கொண்டது.இளைய மகனின் மென்பொருள் நிறுவனம் நிறுவும் தேடல் தொடர்கிறது.
அப்போது,திருவள்ளூர் மண்டல அலுவலகத்தில் data entry operator பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும் நேரம்.சென்னை நண்பர் திரு மாறனை தொடர்பு கொண்டு அந்நிறுவனத்தில் இளைய மகனை பணியில் அமர்த்த முயன்றேன்.பணியும் கிடைத்தது.மகனுக்கு கிடங்குகள் அனைத்திலும் உள்ள அன்றாட வியாபார நிகழ்ச்சிகளை தொகுத்து மத்திய அலுவலகத்திற்கு data அனுப்பும் பணி.
இங்குதான் எங்கள் மண்டல அலுவலக கார் ஓட்டுநர் தன் மறைமுக வேலையில் ஈடுபட்டார்.
அலுவலக தட்டச்சு பெண் ஊழியரின் மகனை அந்த d.e.o பதவிக்கு அமர்த்த முயன்றார்.நான் தொழிற் சங்கத்தில் இருப்பதால் மகன் மூலமாக அரசு கிடங்கு ரகசியங்கள் போய்விடும்,இதனால் பின்னாளில் பல பிரச்சினைகளை நிர்வாகம் சந்திக்க  நேரிடும் என அதிகாரிகளிடம் சொல்லி அதிகாரிகள் மனதை மாற்றி மண்டல அலுவலக பணியிலிருந்த மகனை  திருவள்ளூர் கிடங்குப் பணிக்கு மாற்றிவிட்டனர்.

இப்பொழுது கிடங்கு மேஸ்த்திரிக்கு பிரச்சினையாகிவிடும் என பயந்து கிடங்கிலிருந்தே நீக்கி விட்டனர். மனம் உடைந்த மகன் வேறு வேலை தேடிக்கொள்வதே நலம் என சுயமாக ஒரு நிறுவனத்தை நாமே நிறுவினால் என்ன? என யோசித்து பல இடங்களில் பயிற்சி மேற் கொண்டான்.
இதற்காக தனியாக ஒரு broad band நிறுவனம் துவங்க தனியாக பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை நுங்கம்பாக்கம், மற்றும் குஜராத்தில் உள்ள சூரத்தில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி மேற்கொண்டான்.
2006-ல்  திருவள்ளூர் மண்டல மேலாளராக ஒரு நாயுடு வந்தார்.துணைமேலாளரும் ஒரு நாயுடு.அந்த ஆண்டு இறுதி வாக்கில்  எனது பள்ளிக்கால நண்பன் திரு தசரதராமன் தர ஆய்வாளராக திருவள்ளூர் மண்டலத்திற்கு பணி மாற்றாலாகி வந்தார்.
நான் மண்டல ஆய்வக பொறுப்பாளராக இருந்தேன்.அவரை கிடங்கு பொறுப்பாளராக மாற்றி உத்தரவிட வேண்டும்,அல்லது என்னை மாற்ற வேண்டும்.ஆனால் என்னை மாற்ற முடியாது காரணம் எனக்கு ஓய்வு பெற சில மாதங்களே உள்ளதால் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
திரு தசரதராமன் தன் இன அதிகாரிகளிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி என்னை மட்டம் தட்டும் வேலையில் ஈடுபட்டார்.

ஒரு நாள் ஆய்வகத்தில் தான் கொண்டு வந்த மதிய சாப்பாட்டை வைத்து விட்டு மண்டல மேலாளர் அறையில் இருந்து விட்டார்.என்னை அவசரமாக பொன்னேரி செல்ல வேண்டும்,
அங்கே நிற்கும் லாரியில் கோணி கட்டுகளை ஏற்கும் பணியை பார்வையிட வேண்டும் என உத்தரவு. உண்மையில் வேலையற்று இருக்கும் திரு தசரதராமனை பணித்திருக்க வேண்டும்,ஆனால் மண்டல மேலாளர், ‘நீங்க இருங்க அவனை அனுப்பலாம்’ என சொல்லி என்னை அனுப்பினார்கள்.
நான் அவசர கதியில் பேருந்தை பிடித்து பொன்னேரி சென்று விட்டேன்,செல்லும் போது ஆய்வகத்தில் யாரும் இல்லாதாதால் ஆய்வகத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டேன்.இது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால்,மண்டல மேலாளரிடம் திரு தசரதராமன், ‘பாருங்க சார்,நான் சாப்பாட்டை ஆய்வகத்தில் வைத்ததை பார்த்தும் ஆய்வகத்தை பூட்டி வேண்டுமென்றே சாவியை எடுத்துச் சென்று விட்டான்,என் சாப்பாடு உள்ளே இருக்கிறது.நான் எப்படி சாப்பிடுவது?’
மண்டல மேலாளர் என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, ‘ஏன் அப்படி செய்தீர்கள்?,சாவியை அலுவலகத்தில் தானே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்?’

‘நான் ஞாபக மறதியில் வந்து விட்டேன் சார், sorry”
மாலை நான் அலுவலகம் வந்ததும், ‘நீ வேண்டுமென்றே என் சாப்பாட்டை உள்ளே வைத்து பூட்டி விட்டாய்,எப்படிடா உனக்கு இந்த கெட்டுபோன புத்தி?’
‘நீ சாப்பாடு வைத்ததை நான் கவனிக்கலடா’
‘இல்லை,நீ வேண்டுமென்றே தான் செய்தாய்?
‘அவசர அலுவல் வேலை என்றார்கள்,எனக்காக லாரி காத்திருக்கின்றது என்றார்கள்,நீ எங்கிருக்கின்றாய் என்று எனக்கு தெரியவில்லை, அதனால் நான் அவசர கதியில் சென்று விட்டேன்,சரி இப்ப என்ன ?ஒரு நாள் ஓட்டலில் தான் சாப்பிட்டு சரி பண்ணி இருப்பே இதற்கு போய் ஏன் இப்படி கோவப்படுகிறாய்?’
‘போடா நாயே!’
‘டேய் ஆபிஸ் டா,பார்த்து பேசு,நாலுபேர் பாக்கறாங்க’
‘உனக்கு என்னடா மரியாதை வேண்டி இருக்கு?’
‘உனக்கு மட்டும் மரியாதை என்னடா வேண்டி இருக்கு,?
‘டேய் செருப்பால அடிப்பேன்’

நான் அசந்து விட்டேன்,இவனுக்கு என்ன ஆயிற்று ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?என எனக்குள் வினவிக்கொண்டேன்.
‘நீ செருப்பாலடிச்சா,நானும் தான் செருப்பால அடிப்பேன், அப்ப....செருப்பால அடிச்சிக்கலாமா?’
அதற்குள் அலுவலக நண்பர்கள் வந்து, ‘நீங்க நண்பர்கள் தானே ?ஏங்க இப்படி பேசிக்கிறீங்க? பேசாம போங்க’ என்று விலகி விட்டனர்.
அதன் பிறகு இன்று வரை நான் அவனைப் பார்த்தாலும் பார்க்காமல் சென்று விடுவேன், எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு அவனுக்கு  அழைப்பு கொடுப்பதை தவிர்தேன், ‘அழைப்பு கொடுத்தால் வருவாண்டா,ஏண்டா அவனை அழைக்கல’ என்பார்கள். நட்பு என்பது கண்ணாடி போன்றது,உடைந்தால் ஒட்டாது,உறவும்தான்!
                     
                 158-பணி ஓய்வு          

 2007 ஜூலை 31ல் எனக்கு பணி ஓய்வு நாள்.நான் யாருக்கும் சொல்லவில்லை.எனது சங்கத் தலைவரான திரு அகு ஏழுமலை அவர்களுக்கும் சொல்ல வில்லை,திருவள்ளூர் மண்டலத்தில் உள்ள அலுவலக நண்பர்கள் சேர்ந்து வழியனுப்பி வைத்தார்கள்.பணி ஓய்வு பெற்றதை,அன்று மாலைதான் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தெரிவித்தேன்.சங்கத் தலைவருக்கு என்
பணி ஓய்வு சேதியை ஏன் சொல்லவில்லை,என்பதை இங்கு பதிவிடுகிறேன்.
எனக்கு முன் சங்கத்தலைவர்கள் பணி ஓய்வு பெரும்போது தன் சக நண்பர்களுக்கு செய்த உதவிகள்,மற்றும் நண்பர்கள் செய்த உதவிகள்,பணியில் இருந்த காலத்தில் பட்ட கஷ்ட்டங்கள் ஆகிய அனுபவங்களை ஒரு கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வார்கள்.இது வழக்கம்.
ஒரு நாள் அகு ஏழுமலை அவருடைய நெருங்கிய சங்க நண்பர், பணி ஓய்வின் போது சில சம்பவங்களை சுட்டிக்காட்டி எழுதியிருந்தார்.எதோ ஒரு வகையில் அவர் மனதை அது பாதித்ததை அகு. ஏழுமலை என்னோடு பகிர்ந்து கொண்டார்.
நான் கூட தனி மனிதனாக அலுவலக நண்பர்களுக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் பொருந்தும் சில,சேவைகளை செய்ய ,தனிப்பட்ட முறையில் நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதி அது நிறைவேறியதும் உண்டு.அதாவது நான் 1995-ல் அஇஅதிமுக தொழிற் சங்கத்தில் உறுப்பினராக இணையும் முன்.

1-உதாரணமாக,1978-ல் திருவள்ளூரில் பணியிலிருந்த போது மண்டல மேலாளருக்கு கடிதம் எழுதினேன். ‘நிறுவனத்தில் பணி செய்யும் உழியர்களுக்கு தற்செயலாக உடலில் ஏற்படும் காயங்களுக்கு first aid box தயார் நிலையில் இருக்க வேண்டும்.’ அந்த கடிதம் தலைமை அலுவலகம் அனுப்பப்பட்டு பின் மாநிலம் முழுவதும் உள்ள கிடங்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு first aid box வழங்கப்பட்டது.

2-1984-ல்,திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் பணி புரிந்த காலத்தில்,ஆலை ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த dust allowance
அப்போதைய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வருகையின் போது,அவரிடம் நிர்வாக அலுவலக பணியாளருக்கும் dust allowance வழங்கப்பட வேண்டும் எனும் நான் வைத்த எழுத்து பூர்வமான கோரிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள 42 நவீன அரிசி ஆலை நிரவாகப்பிரிவு ஊழியர்களுக்கும் அமுல் படுத்த உத்தரவிடப்பட்டது.

3-1992-ல் கிடங்கில் பணி புரியும் 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற தினசரி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய சங்கத் தலைவர்களை ஈடுபடுத்தி (.என்.டி.யு.சி&அஇஅதிமுக தொழிற்சங்கம்) நான் எடுத்த முயற்சியினால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஊழியர்கள் பயனடைந்தனர்.
இந்த மூன்றும் என் தனிப்பட்ட சிறப்பு பணி என்றே கருதுகின்றேன். நான் பணி ஒய்வின்போது இதை சுட்டிகாட்டி கடிதம் எழுதினால் சிங்க நிகர் சங்கத்தலைவர் சினம் கொள்வார் என கருதி அவ்வாறு செய்ய எனக்கு மனமில்லை. எளிமையான முறையில் திருவள்ளூர் மண்டல அலுவலக நண்பர்கள் என்னை பாராட்டி வழியனுப்பிய நிகழ்ச்சிக்கு உடன் பட்டேன்..
                
           159-ஏழாம் அறிவு இயக்கம்              

நான் பணி ஒய்வு பெற்ற பின்(2007-ஜூலை) என் மனதில் உலாவந்த, அரசு பணியில் வெய்யிலாளி இன ஊழியர்கள் படும் இன்னல்களை  ஆய்வு  மேற்கொண்டேன். முதலில் என் எண்ணங்களை எழுத்து வடிவத்தில் கொண்டுவர வேண்டும்.
நான் எழுதும் போது எனக்கு எழுத்து வடிவம் சரியாக எழுத வராது.அது எனக்கு ஒரு மனக் குறையாகவே இருந்தது.ஒரு நாள் நான் ‘எனக்கிருக்கும் கை எழுத்தாற்றல் இன்மையே என் இயலாமை’ என்பதை என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்கு கண்ணில் நீர் வந்துவிட்டது.இதை கவனித்த என் மகன்(வினோத்),
அப்பா நான் உங்களுக்கு தமிழில் blogger install பண்ணித் தருகிறேன்,நீங்கள் தமிழில் தட்டச்சு கற்றுக் கொள்ளுங்கள்,உங்கள் எண்ணங்களை இணையத்தில் ஏற்றலாம்.என்றான்.எனக்கு இது சரியெனப்பட்டது. சரி ,செய்து கொடு,நான் தட்டச்சு பழகிக் கொள்கிறேன்.என்றேன்.அடுத்த ஓரிரு நாட்களில் www.thiru-rationalism.blogspot.in எனும் வலைதளத்தை உருவாக்கித் தந்த என் மகன், ‘தினமும் உங்கள் எண்ணங்களை blogger-ல்,post செய்யுங்களப்பா!என்றான். இது நடந்தது,2008-செப்டம்பர்.இதன் விளைவாக நான் தொடர்ந்து எழுதியதை படித்த வலைதள நண்பர்கள் விரும்பியதை தொடர்ந்து புத்தகம் வெளியிடும் எண்ணம் வந்தது..
                             ***
                 160-தலைமகனுக்கு கல்யாணம்

தலை மகனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்.இதற்காக சென்னை ‘நண்பர்கள் நல மன்றம்’ எனும் திருமண தகவல் அமைப்பில் பதிவு செய்தோம்.பல இடங்களில் பெண் வீட்டார் தொடர்பு கொண்டனர்.ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. எல்லாம் மெய்ப்பியல் தன்மை யற்ற ஜோசியம்,ஜாதகம் போன்றவை ஒரு ஏமாற்று வேலை என்பதை நம்மக்கள் உணர முடியாததால்தான்.
2007- இறுதி வாக்கில் வேளச்சேரியில் என் சின்ன அக்காவுக்கு தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் இருப்பதாக என் அக்கா தெரிவித்தார்கள்.மேலும் என் அக்கா, ‘அந்த பெண்ணின் பெற்றோர், ஒரு படித்த குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசைபடுகின்றனர்’,என்றார்.
அடுத்த நாள் நானும் மனைவியும் வேளச்சேரிக்கு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றோம்.பெண்ணின் அப்பா white&white ல் இருந்தார்.இது ஒரு நாகரிகமான குடும்பமாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பெரும்பாலும் என் இன மக்கள் வெய்யிலாளி இனத்தை சார்ந்தவர்கள் என்பதால்,ஆடை உடுத்துவதில் அக்கறை இருக்காது.தங்களை அழுகுபடுத்திக் கொள்வதில் கூட அக்கறைப்பட மாட்டார்கள். பெண்ணை கூட்டிவரச் சொன்னோம்.பெண் ஒரு BCom பட்டதாரி என்றார்கள். பெண்ணை எனக்கு பிடித்திருந்தது.

இதுவரை நாங்கள் ஒரு நான்கு அல்லது ஐந்து பெண்களைப் பார்த்திருப்போம்,எல்லா பெண்களும் பணியில் இருப்பதாகவும்,கல்யாணத்திற்காக பணியை விட விருப்பமில்லை என தெரிவித்த காரணத்தால் அந்த  பெண்களை நாங்கள் விரும்ப வில்லை.இந்த பெண் வேலையில் இல்லை,வேலைக்கு போகவும் விருப்பமில்லை என தெரிவித்தனர்.நாங்கள் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்தோம்.
ஆனால் பெண்ணின் அப்பாவுக்கு பொறுமை இல்லை, அடுத்தடுத்து நடக்க வேண்டியது என்ன? நாங்கள் வந்து வீடுவாசல் பார்க்கட்டுமா? என வேகப்படுத்தினார்.
 ‘சரி’,என சொல்லிவிட்டோம். அவர்கள் வந்து போன பின் நான் எனது நெருங்கிய உறவினர்களுடன் அடுத்த சில நாட்களில் பெண்ணின் வீட்டிற்கு சென்று விட்டோம்.
மகன் வினோத்தின் சம்மதம் பெறுவது எளிதான  காரியமாக தெரியவில்லை.
‘எனக்கு யோசிக்க சில நாட்கள் வேண்டும்’ என்றான். ‘எதாவது காரணம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிடுவானோ’ என்பது எனக்கு அச்சம்.
‘இல்லை,

இதில் யோசிக்க என்ன இருக்கு?பொண்ணு படிச்சிருக்கு,பொண்ணு நல்லா இல்லையா,சொல்லு அடுத்த பெண்ணை பார்க்கலாம்’  என்றேன்.
அவன் உடனே, ‘பொண்ணு நல்லாத்தான்பா இருக்கு,ஆனா எனக்கு யோசிக்கணும்....என்றான்.
நான் எனது சகலையிடம், ‘இவனிடம் இப்போதே சம்மதம் வாங்கிவிடுங்கள் என்றேன்.
அவரும் விடாப்பிடியாக பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார். பெண்ணின் அப்பாவிடம், ‘கல்யாணம் நாங்கள் செய்து கொள்கிறோம் என்றேன். எனது மனைவி,
இல்லை,நீங்களே பண்ணிவிடுங்கள்என்றாள்.
பிறகு தனியே அவளை அழைத்து, ‘ஏன் இப்படி பண்ணிட்டே?’ மேலும் நான் , ‘நமது பிள்ளைக்கு நாம் கல்யாணம் செய்வது தானே நல்லது,அவர்களை செய்யச் சொன்னால் சம்பரதாயம், சடங்கு என நீட்டி விடுவார்களே?’

கல்யணம் என்றால் லட்சக்கணக்கில் செலவாகும்,நாம் எங்கே போறது?’ மேலும் அவள், ‘என் புள்ள என்ஜினியர் படிச்சிருக்கான்,அங்கங்கே புள்ளைக்கு வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்றாங்க,எம் புள்ளைக்கு என்ன குறைச்சல்? நாம வரதட்சணையா கேட்க போறம்?,
அவங்க செலவு பண்ணி கல்யாணம் பண்ணட்டுமேஎன்றாள்.
இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை,எப்படியோ கல்யணம் நடந்தால் போதும் என விட்டு விட்டேன்.
மேலும் நான், ‘கல்யாணத்தில் பார்ப்பான்கூடாதுஎன்றேன்.
பெண்ணுக்கு அப்பா, ‘கல்யாண செலவு எங்களுடையது, கல்யாணத்து அன்றைக்கு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ, நாங்க எப்படியோ பண்ணிக்கிறோம்என்றார்.

இங்கே விவாதம் செய்து எனது கொள்கையை நிலைநாட்ட விரும்ப வில்லை.பகுத்தறிவாளனால் மட்டுமே விட்டுக் கொடுக்க முடியும்,ஆனால் ஆத்திரம் கொள்ளும் ஆத்திகர்கள் எதையும் விட்டுத் தர மாட்டார்கள்
என்பது எனக்கு தெரியும்...., ஒரு காலத்தில் நானே ஆத்திகனாக இருந்தவன் தானே? நான் ஒதுங்கிக் கொண்டேன்.2008 பிப்புரவரி 20ந்தேதி கல்யாணம். கல்யாணத்தில் பார்ப்பான் அருகே என் சின்ன அண்ணாவை எனக்கு பதில் அமர வைத்தேன். பார்ப்பானிடம் சொன்னேன்,
தமிழில் மந்திரம் சொல்லத் தெரியுமா? இல்லையெனில் நீ விலகிவிடு’. உடனே அந்த பார்ப்பான்,
எனக்கு தமிழில் மந்திரம் சொல்லத் தெரியும், தமிழிலே நடத்துகிறேன்என்றான். கல்யாணம் முடிந்தது,
பெங்களூரில் கோரமங்களா எனும் இடத்தில் தனிக் குடித்தனம் வைத்தோம்.
                    **************

2008-ல் பிரான்சை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலகப் புகழ்பெற்ற வானூர்தி (Air Bus) நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.1 லட்சம் என ஒப்பந்தாமாகி பணியில் சேர்ந்தான்

No comments: