145-வானூர்தியியல்
‘அப்பா!,எனக்கு
சின்ன வயசுல இருந்தே வானில் பறக்கும் விமானத்தை பற்றிய சிந்தனைதாம்பா...’
‘சரி, எதோ படி’
இவனுக்கு கணக்கு நன்றாக வரும் 10-ம் வகுப்பில்
100%மதிப்பெண் பெற்றவன்.எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கணக்கு சரியாக வராது.அந்த
வகையில் இவன் ஒரு விதி விலக்கு.
12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் ஆயிரத்தை தொட்டது.
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில்,
அவன் விரும்பிய பாடப் பிரிவை பொதுப்பிரிவில் பெற முடியவில்லை.இட ஒதுக்கீட்டில்
மட்டுமே பெற முடிந்தது.
அப்போது மருத்துவர் அய்யா,இட
ஒதுக்கீடு போராட்டம் செய்து சமுகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு 20% இட
ஒதுக்கீடு பெற்று தந்தார்.அந்த வகையில் இவன் விருப்ப பாடமான ‘விமான ஊர்தியியல்’ (aeronautical engineering) பெற்றது இட ஒதுக்கீடு முறை அமலில் இருந்த தாலே
கிடைத்தது.
அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடந்த கலந்தாய்வு நாளன்று
சென்னை மற்றும் கோவையில் இயங்கும் ‘விமான ஊர்தியியல்’ படிப்பு நிறைவு பெற்று
விட்டது.
ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில்
இயங்கும் தனியார் கல்லூரியில் மட்டுமே இரண்டு இருக்கைகள் இருந்தது.
அந்த இரண்டில் ஒன்று கலந்தாய்வு துவங்கிய உடனே முடிந்து
விட்டது. ஒரு இருக்கை மட்டுமே இருந்தது.இதைக் கண்ட மகனுக்கு bp எகிறி
விட்டது. ‘அப்பா,அந்த ஒன்று
எனக்கு கிடைக்குமாப்பா?’
‘கிடைக்காட்டி
போகுது விடுடா,நான் பணம் கட்டியாவது உன்னை படிக்க வைக்கின்றேன்.’ என்றேன்.
அந்த கால கட்டத்தில்,Free seat க்கு ஒரு செமஸ்ட்டருக்கு ரூ.15 ஆயிரம்,மாறாக
பணம் கட்டி படிக்க ரூ.35 ஆயிரம் .கலந்தாய்வில் இவனுடைய அங்காலாய்ப்பை
தூரத்திலிருந்து கவனித்த அந்த அதிகாரி,
‘தம்பி, MBC யில வர்ரீங்களா,?’
‘ஆமா சார்!’ தலையாட்டினான்
‘நான்
reserve செய்து வைக்கிறேன்,மெல்ல
வாருங்கள்’ என்றார்.
இவன் ஆசைப்பட்டது போல,அவரும்
சொன்னதற்கு ஏற்றாற்போல அந்த விமான ஊர்தியியல் இருக்கை இவனுக்கு கிடைத்துவிட்டது.
அந்த பட்டப்படிப்பு படிக்க,படித்து
முடிக்க மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் இவன் போராட வேண்டியிருந்தது.ராமநாதபுரம்
கீழைக்கறையில் அமைந்துள்ள முகமது சதக் எனும் தனியார் கல்லூரியில் வானூர்தியியல்
இருக்கை கிடைத்தது!
இதற்கிடையே,இவன்
கல்லூரி செலவுக்கு ஏதாவது வருமானம் தேடவேண்டும்.என்ன செய்வது?
மணலி புது நகரில் வாங்கியுள்ள வீட்டு மனையில் ஒரு
வருவாய் வரும் அளவுக்கு கட்டிடம் கட்ட திட்ட மிட்டேன்.1999-ல் திட்டமிட்டு,2000-ல் முடித்தேன். மூன்று கடை, ஒரு
கடைக்கு ஆயிரம் ரூபாய்,என மாதம் 3 ஆயிரம் வருவாய் கிடைத்தது.இன்றும்
கிடைக்கிறது, இப்போது நான்கு மடங்கு உயர்வு பெற்று வருவாய்
கிடைக்கின்றது.
அந்த கல்லூரியின் இரண்டாம் ‘செட்’ ஐ
சேர்ந்தவன் இவன்.பாடம் சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருந்தாலும்,முறையாக
தேர்வு நடத்த மாட்டார்கள்.
அதற்காக இவன், தலைமையில் மாணவர்கள் ஒன்று கூடி மதுரை
பல்கலை கழக வளாகத்தில் போராடி வெற்றி
பெற்றானர்.நானும் பெற்றோர் எனும் முறையில் போராட்டத்தில் கலந்து கொண்டேன்,மற்ற
மாணவர்களின் பெற்றோர்களையும் ஒன்று திரட்டி போராடினான்.என் மகன்,எங்கள்
வெய்யிலாளி உறவு வட்டாரத்தில் முதல் பொறியியல் மாணவன்.
146-சிறையிலிருந்த ஊழியர்களை மீட்டேன்
அதே 1999 என்று நினைக்கின்றேன்.செம்புலிவரம் கிடங்கில்
100 சர்க்கரை மூட்டைகளை கதவின் பூட்டை உடைத்து திருடப்பட்டு விட்டதாக அதன் கிடங்கு
பொறுப்பாளர்களை நிர்வாகம் கைது செய்துவிட்டது.
இதற்கு எப்படி ஊழியர்களை பொறுப்பாக்க
முடியும்.?தமிழகத்தின் பெருமை மிக்க பொதுத்துறை நிறுவனங்களுள்,நுகர்பொருள்
வாணிபக்கழகமும் ஒன்று.
1972-அது துவங்கிய நாளிலிருந்து இது நாள் வரை அதன்
ஊழியர்கள் இது போன்ற காரியங்களை செய்தது இல்லை.நமது நிறுவனத்திற்கு
கூட்டுறவுத்துறை நிறுவன அதிகாரிகளை விழிப்புப்பணிக் குழு அதிகாரிகளாக நியமித்த
அரசு,அந்த கூட்டுறவு நிறுவன ஊழியர்களின் போக்கு போல்தான் நுகர்பொருள் வாணிபக்கழக
ஊழியர்களும் இருப்பார்கள் எனும் தவறான யூகத்தில் நிர்வாகம் அவ்வாறு ஊழியர்களை கைது
செய்துவிட்டது.எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
‘நாளைக்கு
நான் வேலை செய்யும் கிடங்கில் இது போன்று சம்பவம் நடந்தால் என்னையும் நிர்வாகம்
இது போல் கைது செய்யாது என்பது என்ன நிச்சயம்?.’ மாவட்டத்தில்
இயங்கும் 7 கிடங்குகளையும் பூட்டி அவைகளின் சாவிகளை மண்டல மேலாளர் மேசைமீது
வைத்துவிடுவது என தீர்மானித்தோம்,இந்த புரட்சியை நான் தான் முன்னெடுத்து
இயக்கினேன்.அவ்வாறே அதே நாள் அனைத்து சாவிகளையும் மண்டல மேலாளரிடம்
ஒப்படைத்தோம்.மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைத்தனர்.
அடுத்த நாள் காஞ்சிபுரம் மண்டலமும் எங்களோடு
ஸ்ட்ரைக்கில் ஈடு பட்டது.வேலூர் மண்டலம்,கடலூர் என பரவத் தொடங்கியது.இப்படியே
போனால் நிலமை மோசமாகிவிடும் என்பதை அரசு உணர்ந்தது.
அப்போது தமிழ் நாட்டில் ஆளும் கட்சி அஇஅதிமுக.அதன்
தொழிற்சங்கப் பிரிவில் நானும் ஒரு அலுவலக பதவியில் இருந்தேன். தலைமை அலுவலக
தொழிற்சங்க அலுவலகத்தில் அதன் பொதுச் செயலாளரான திரு.அ.கு. ஏழுமலை அவர்களை, CMD அழைத்து, ‘என்ன, ஏழுமலை!,ஆளும்
கட்சி சங்கத்தில் இருப்பவரே(என்னை) ‘ஸ்டரைக்’ கில் ஈடுபடலாமா?’
அதற்கு திரு அ.கு.ஏழுமலை அவர்கள், ‘அய்யா,ஒரு ஊழியர் பாதிக்கப்பட்டால்,அந்த
நிறுவனத்தின் சக ஊழியருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்புதான். அதைத்தானே
அவர்(நான்) முன்னெடுத்து செய்துள்ளார்.’
பின்னாளில் நான் திரு அ.கு.
ஏழுமலையை சந்தித்தபோது இந்த உண்மையைய எனக்கு தெரிவித்தார்.
இந்த பிரச்சினை அரசின் கவனத்திற்கு சென்றது.அரசின்
அறிவுரையின் பேரில்,CMD உடனே திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை
திருவள்ளூரில் சந்தித்தார். அந்த கண்காணிப்பாளர் உடனே ஊழியர்களை சிறை
வைத்திருக்கும் பொறுப்பாளரான பொன்னேரி சிறைத்துறை அதிகாரியை சந்தித்துள்ளார்.
மூன்றாம் நாள் மாலை GM(A) என்னை தொடர்பு கொண்டார். ‘சிறை
வைக்கப்பட்ட ஊழியர்களை விடுவித்து விட்டோம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களை
பணிக்கு செல்லச் சொல்லுங்கள்’ என்றார்.நான்,
‘உண்மையானால்
சிறை சென்ற ஊழியர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள்’ என்றேன்.
அடுத்த சில நிமிடங்களில்,பாதிக்கப்பட்ட ஊழியர்கள் என்னிடம் பேசினர். ‘சார்
மிக்க நன்றி!,எங்களை வெளியில் கொண்டு வந்ததற்கு அனைவரும் ஒற்றுமையோடு
போராடி எங்களை மீட்டதற்கு மீண்டும் ஒரு முறை நாங்கள் தங்களுக்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறோம்.’
என்றனர்.
அடுத்த நாள் அனைவரும் பணிக்கு திரும்பினோம்.3 நாட்கள்
பணிக்கு செல்லாத காரணத்தால் எங்கள் அனைவருக்கும் 3 நாட்கள் சம்பளம் இல்லை என
சொல்லிவிட்டனர்.மீண்டும் போராடினோம்.அந்த 3 நாள் சம்பளத்திற்காக, நேரில்
வந்தGM(A), போராடும் எங்களைப்பார்த்து,
‘எல்லாவற்றையும்
சரி செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்,என்னை
நம்புங்கள் ,பணிக்கு செல்லுங்கள்’ என்றார்.ஆனால்
அவர் சொன்னது போல் செய்ய வில்லை.LPF தொழிற் சங்க
பொதுச் செயலாளரான திரு பேச்சி முத்துவும்,INTUC தொழிற்சங்க பொதுச் செயலாளரான திரு இளவரியும் இதற்கு ஒத்துழைப்பு நல்க
வில்லை. நான் பணி ஓய்வு
பெறும் முன்னர்கூட என் அலுவலக நண்பர்கள்,
‘யார்
யாருக்கோ நல்லது செய்றீங்க,
அவனெல்லாம் இப்ப
உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறான்,நமக்கு
எல்லாம் 3 நாள் சம்பளம் ‘கட்’ ஆனது தான்
மிச்சம்.’
அப்போ நான் அவர்களுக்கு சொன்னேன்,
‘நல்லது
செய்யவேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்கும் போது,பயனாளிகள்
நம்மை நாலுபேர் மத்தியில் பாரட்டவேண்டும் என்பது நினைப்பது தவறு. இருப்பினும் அவன்
மனதில் நாம் வாழ்வோம்,பயனாளி நம்மை வெளிப்படையாக பாராட்ட வில்லை என பகைமை
கொள்ளக்கூடாது.இது நமது கலாச்சாரம்.’
இந்த கிடங்கு கொள்ளையை தொடர்ந்து,அடுத்த
சில நாட்களில் ஊத்துக்கோட்டை கிடங்கில்(29.05.1999) 100 மூட்டை சர்க்கரை மற்றும்
30 மூட்டை அரிசி கொள்ளை யடித்துவிட்டு,அடுத்த
சில நாட்களில் தொடர்ச்சியாக மதுராந்தகம் கிடங்கில் கொள்ளை அடித்தனர்.இது
தென்னகத்தைச் சார்ந்த வியாபார கொள்ளையர்களின் கைவரிசை என பின்னாளில் நிர்வாகம்
உணர்ந்து கொண்டது.இந்த ஊத்துக்கோட்டை கிடங்கை அதோடு மூடிவிட்டனர்.
ஊத்துக்கோட்டை வட்டத்தின் பொது விநியோக திட்டம்
திருவள்ளூர் கிடங்கில் சேர்த்து பார்த்ததால்,எனக்கு
பணிச் சுமை அதிகமானது.
ஊத்துக்கோட்டை கிடங்கை மீண்டும் இயக்க நேர்ந்தால்,திருவள்ளூர்
கிடங்கின் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலையின்மை உருவாகும் என தொழிலாளர்
பிரச்சினையை உருவாக்கினர். நிர்வாகம் என்னை தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே
இருந்தது.
ஊத்துக்கோட்டையில் கிடங்குகளை கட்டி இயக்காமல் மூடி
வைத்திருப்பது அரசு துறைக்கு நட்டமே.எப்படியாவது ஊத்துக்கோட்டை கிடங்கை திறக்க
வேண்டும் என்பதில் நிர்வாகம், உறுதியாக
இருந்தது.எனக்கும் தான்,என் பணிச்சுமையும் பாதியாக குறையும்.
நான்,திருவள்ளூர்
கிடங்கில் ஒரு குறிப்பிட்ட அளவு தொழிலாளர்களையும் ஊத்துக்கோட்டை கிடங்கு
அமைந்துள்ள கச்சூரில் சில தொழிலாளர்களையும் இணைத்து ஒரு புது குழுவை உருவாக்கி
கிடங்கை திறக்க போனேன்.ஆனால் ஊர்மக்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்னர்.
‘மொத்தமே
எங்கள் ஊரைச் சார்ந்த தொழிலாளர்களுக்குத் தான் பணி வழங்கிட வேண்டும்’ என்றனர்.திருவள்ளூர்
கிடங்கு தொழிலாளர்கள் உரிமை பிரச்சினையை கிளப்பினர்.நிறுவனத்தின் பச்சை அட்டை
பெற்றவர்கள் என்பதால் இவர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என
நிர்வாகம் சொல்லி விட்டது.
மீண்டும் கிடங்கை திறக்க காவல் துறை அதிகாரிகளின் உதவியை
நாடினேன்.திருவள்ளூர் கிடங்கு தொழிலாளர் உதவியுடன் கிடங்கை திறந்து வேலை செய்ய
லாரிகளுடன் சென்றேன்.அங்கே முன்கூட்டியே ஒரு DSP ரேங்கில்
ஒரு காவல் துறை பட்டாளம் நிறுத்தப்பட்டது.
ஊர் மக்கள் திரண்டு வந்தனர்.இருதரப்பு வாதங்களை கேட்டு
கிடங்கை தொடர்ந்து நடத்த ஊர்மக்கள் உதவ வேண்டும் எனும் பேச்சில் 10 பேர் கச்சூரைச்
சரந்தவர்களும்,திருவள்ளூர் கிடங்கு தொயிலாளர்கள் 10 பேர் எனவும் ஆக
மொத்தம் 20 தொழிலாளர்களுடன் ஊத்துக்கோட்டை கிடங்கை இயக்கப்பட்டது.
***
147-
அரசு துறையில் ஆதிக்க
சாதிகள்
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவது என்பது தகுதி (படிப்பு?),திறமை
மற்றும் நேர்மைக்கு அவ்வப்போது சோதனைகள் வரும்,அவைகளை
தந்திரமாக சமாளிக்க தனித்திறமை வேண்டும்.
அரசு நிறுவனங்களில் வெய்யிலாளி வர்க்கங்கள் வேலை
வாங்குவது அல்லது வேலை பெறுவது என்பது சுலபமான காரியமல்ல.அரசுத்துறை என்பது ஒரு
குறிப்பிட்ட சாதிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடும்.இன்றளவும் இதே நிலைதான்.நான்
படிக்கும் போது மட்டுமல்ல படிப்பை முடித்து அரசுத்துறையில் வேலை கிடைத்த பின் இதை
உணர சில காலங்கள் ஆனது.
1975-76-ல் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்
இளநிலை அறிவியல் பட்டதாரிகளுக்கு முறையாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் யாருக்கும்
லஞ்சம் தராமல் நேர்மையான முறையில் பணியில் சேர்ந்த எனது நண்பர்கள் பின்னாளில்,
‘உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசி’
நாடகமாடியதை நான்
அறிந்தேன்,அந்த அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு வெகுநாட்கள்
ஆகிவிட்டது. அநீதியைக் கண்டு கோபம் அடைவது எனது பிறவி குணம்.பணியில்
சேறும் போது எங்கள் நால்வருக்கும் (நான், தசரதராமன், மணிபாலன்&வாசுதேவன்) திருமணம் ஆகவில்லை.
திருமணம் ஆன ஒரு தெலுங்கு நண்பர்,திரு
முனிரத்தின ரெட்டி, -இவர் ஒரு நேர்மையற்ற நண்பர் என்பது எங்கள்
நால்வருக்கும் தெரியும்.இருப்பினும் ஒட்டலில் நாங்கள் சாப்பிடும் உணவுக்கு அவர்தான்
பணம் செலுத்துவார். இங்கே எங்கள் மொத்த நேர்மையும் அடிபட்டுப் போய் விட்டது! உண்மைதானே?
பணியில் சேர்ந்த 5 ஆண்டுகள் கழித்தே ஒருவர் பின் ஒருவராக
எங்களுக்கு திருமணம் ஆனது.அதுவரை எங்கள் நட்பு தூய்மையானது என எண்ணியிருந்தேன்.
1984-ல் நான் திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் பணி புரிந்த
காலம்.ஒரு நாள் வழக்கமாக எங்கள் அம்மாவின் நினைவு நாள் அனுசரிக்க கிராமத்திற்கு
சென்றேன்.
கிராமத்தில் பக்கத்து வீட்டுப் பையன் ஒரு லாரி கிளீனர்,அவன்
பொன்னேரி கிடங்கில் அவனுடைய லாரி பொது விநியோகம் செய்து வந்தது.அவன் வாயிலாக சொன்ன
சேதி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது, ஒருநாள் (அன்று
தீபாவளி) விடியற்காலை அந்த கிடங்கு பொறுப்பாளராக(எனது நெருங்கிய நண்பன்
திரு.தசரதராமன்) இருந்தவர்,அந்த பையனுடைய லாரியில் 100 மூட்டை அரிசி ஏற்றப்பட்டு
செங்குன்றம் தனியார் அரிசி ஆலைக்கு சென்று அடுக்கப்பட்டது. என்னை கிராமத்தில்
பார்த்த அந்த பையன்,
‘சித்தப்பா,நீங்க
வேலை செய்யறதும் அந்த டிப்பார்ட்மென்ட் தானே?
அவர் (எனது நண்பர்)செய்யறது போல நீங்க செஞ்சா நிறைய காசு
வருமே அப்பா,இத்தனை வருஷம் (8வருஷம்) வேலை செய்யறீங்க, ஒன்னும் சம்பாதிச்ச மாதிரி
தெரியலையேப்பா?’
எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது,
அவன் சொன்ன சேதி.எனக்கும் நண்பன் தசரதராமனுக்கும் ஒரே எண்ணம், ஒரே
செயல்பாடு என வளர்ந்தோம் ,என் நண்பனா அப்படிச் செய்தான்.?
இதை உறுதிப்படுத்திக் கொள்ள அவனை கேட்டுவிடுவது என
தீர்மானித்தேன். (நான் அப்படி அவனை கேட்டிருக்க கூடாது என பின்னாளில்
வருத்தப்பட்டேன், எனக்கு, இங்கிதம்,நாசுக்கு,யதார்த்தம்
என்று சொல்வார்களே அதெல்லாம் எனக்கு தெரியாது,....! இப்ப மட்டும் என்ன வாழுதாம்?)
அது காஞ்சிபுரத்தில் நடந்த மாதாந்திர மண்டல ஆய்வாளர்கள்
கூட்டம் .நானும் மற்ற மூன்று நண்பர்களும் (இதில் அந்த பொன்னேரி நண்பரும் அடக்கம்) மதிய
உணவுக்கு ஓட்டலுக்கு சென்றோம்.உணவு முடித்தவுடன், அந்த பையன் சொன்ன சேதியை அவனைத்
தவிர மற்ற இரண்டு நண்பர்களிடம் தெரிவித்தேன்,ஆனால் அந்த இரண்டு பேரும் அது பொய்யாக
இருக்கும் என்று என் வாயை மூடினார்கள்.
இருப்பினும் அவனிடம் நான் சொன்ன விஷயங்களை சொல்லி உறுதிப்படுத்த
ஆசைப்பட்டனர். அவன் கோவத்தின் உச்சத்திற்கே போய்விட்டான்.அவன் சொன்னான், ‘இதுக்கு
பேர்தான், ‘charactor
assassination” என்று சொல்வார்கள்.
இவனெல்லாம் மனுசனா, என் பேரைக் கெடுப்பது மட்டுமல்ல அதற்கு பதில் என்னை இவன் கொலை
செய்ததற்கு சமம் என்றே நினைக்கிறேன்.’ என்று ஆவேசமாக பேசி ஒரு ‘யோக்கியன்’ நாடகத்தை
அங்கே நடத்தி முடித்தான்.
இதிலிருந்து ஒன்று புரிந்து கொண்டேன்,அதாவது மற்ற அந்த
இரண்டு நண்பர்களும்,இவனும் ஒரே நேர்கோட்டில் செல்கின்றார்கள் என தெரிந்து கொண்டேன்.மற்ற
நான்கு நண்பர்கள் பற்றிய அடிப்படை வர்ணாசிரம குணங்களை இங்கே விவரிப்பது என்
கொள்கைக்கு உடன் பட்டதாக இருக்கும் என்பதாலேயே இங்கே சொல்ல விழைகிறேன்.
முதல் நண்பன்,
தாய் மொழி தெலுங்கு(கம்ம நாயுடு)
இரண்டாமவன்,பிள்ளைமார்
(கணக்குப் பிள்ளை) தமிழ் வெய்யிலாளி இனத்தை ஆட்டிபடைக்கும் முன்னேறிய
சாதி.மூன்றாமவன்,தெலுங்கு ‘ரெட்டி’,மூவருமே
‘நிழலாளி’
வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்,நான்காம் நண்பன் திரு மணிபாலன்.மணிபாலனும் நானும் தமிழ் பேசும் ‘வெய்யிலாளி’
இனத்தைச் சார்ந்தவர்கள்.
நான் சார்ந்த இனத்தையும்,எங்களின்
உணவு முறைப் பழக்க வழக்கங்களையும் கிண்டலடித்து விவாதம் செய்வார்கள். (வெய்யிலாளிகள்
உணவான கூழ் குடித்தல்,ஒரு கேவலமான உணவு பழக்கம் என்பது அவர்களின் வாதம்)
நாட்டின் 70 சதவிகித மக்களில் வெய்யிலாளி இனத்தைச் சார்ந்தவர்கள்
தான்,ஏன் உலக அளவில் கூட சொல்லலாம்.அமெரிக்கா,பிரிட்டன்,ஜெர்மன்
போன்ற நாடுகளில் வெய்யிலாளி இன மக்களின் மக்கள் தொகை சற்று குறைவாகவே இருக்கும்,அதாவது,30 முதல்
40 சதவிகிதம் மட்டுமே வெய்யிலாளி மக்கள் வாழ்கின்றனர்.
வெய்யிலாளி இன மக்களின் தொழிலே விவசாயம் தான்,விவசாயம்
தான் மக்களின் வாழ்க்கையை உயிரூட்டுகிறது.ஆனால் உலகில் விவசாயத்தில் ஈடுபடுவோரின்
வாழ்க்கை முறையை கிண்டலடிக்கின்றது, நிழலாளி
வர்க்கம்.
‘நிழலில்
வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பவர்கள், முன்னேறிய
சாதிகள் எனவும்,மற்றவர்களை பின் தங்கியவர்கள் அல்லது மிகவும் பின்
தங்கியவர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள் என வகைப் பிரிக்கின்றது. இதைத்தான் ‘வர்ணாசிரம
தர்மம் என்கிறது இந்து மதம்.’
எனக்குள் ஒரு தாழ்வு மனப்பன்மை இருந்து கொண்டே
இருக்கும்.இந்த மூவருக்கும் எனக்கும் அடிக்கடி சாதிய அடிப்படையில் விவாதம்
நடக்கும்.வீரா வேசமாக நடக்கும்.பார்ப்பவர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்ப்பார்கள்.அடுத்த
நாள் நாங்கள் நால்வரும் சகஜமாக பேசிக் கொண்டிருப்போம்.அப்போது அவர்கள், ‘என்னைய்யா
? நேத்து அப்படி சண்டை போட்டீங்க. இன்னைக்கு அதெல்லாம்
மறந்துட்டு பேசிக்கிட்டு இருக்கீங்க,உங்களை
புரிஞ்சிக்கவே முடியலப்பா!’
**********
1986-க்குப்பின் என் இறுக்கத்தை தளர்த்திக்
கொண்டேன்.அதாவது ஒரு பண்பட்ட மனிதனாக மாறத் துவங்கினேன்.இருப்பினும் என் மனதுள்
நான் யார்? என் மூலம் என்ன? என்
முன்னோரின் வாழ்க்கை முறை என்ன? எனும் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
மனிதனுள் இருக்கும்(5வகை) பஞ்ச
குணங்களான (பஞ்ச)5 தொழில் ரீதியான மனிதர்கள் என்பது இந்து மதம் வகுத்தது.இதை
ஏற்க மறுக்கும் நவீன சமுகவியலாளர்கள், உலகில்
ஆண்/பெண் என இரண்டு சாதிகள் தான் என்பர் புரிதல் இல்லாதவர்கள், ஆனால்
நானோ,உலக அளவில், ‘வெய்யிலாளி/நிழலாளி
இரண்டு சாதிகள்’
மட்டுமே என்பேன்.
******
No comments:
Post a Comment