101-யார் என் கணவர்? தெரியவில்லை!
கல்யாணம் ஆன அன்று மாலை,என்
மைத்துனர் மற்றும் சகலை ஆகியோர் , ‘உங்களுக்கு
கோயில் செல்லும் பழக்கமோ,கடவுள் நம்பிக்கையோ இல்லை என எங்களுக்கு தெரியும்,இருப்பினும்,பெண்களை
நம்மால் மாற்ற முடியுமா?
எதற்கும் நீங்கள்
ஒரு சம்பரதாயமாக,இருவரும் மைலாபூர் கபாலீசுவரர் கோயிலுக்கு மனைவியை
அழைத்துப் போங்கள்,நீங்கள் வெளியே இருங்கள்,அவள்
கோயிலுக்கு போய் வரட்டும்’
என சொன்னார்கள்.
ஒரு பகுத்தறிவாளிகளால் மட்டுமே மனிதர்களோடு அனுசரித்து வாழ
முடியும்! நான்,
‘சரிங்க’ என்றேன்.
கடவுள் நம்பிக்கையாளர்களை, நம்பிக்கையற்ற
சூழலுக்கு கொண்டு போக முடியாது.
நான் முன்னே செல்ல,அவள்
பின் தொடர்ந்தாள்.எதாவது பேச வேண்டுமே !என்ன பேசுவது என்று இருவருக்குமே
தெரியவில்லை.
‘நான் கோயிலின் உள் பிரகாரத்தின் படி கட்டில் அமர்ந்து
கொண்டிருக்கின்றேன்,நீ போய் கும்பிட்டு வா’ என
அனுப்பி விட்டு நான் படிக்கட்டில் அமர்ந்து கொண்டேன்.
சில நிமிடங்கள் கழித்து என்னை நோக்கி வந்தாள்,அப்போது
என்னுடன் இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.
வந்தவள் என் முகத்தை பார்க்க வில்லை,யாரையோ
பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள்.நான் எழுந்து,
‘என்ன
ஆயிற்று திரும்பிக் கொண்டாய்?’ என்றேன்.
சிரித்தவள், ‘உங்க முகத்தை இதற்கு முன் பார்க்கலைங்க,எல்லாரும்
மாப்பிள்ளை அழாகா இருப்பார்ன்னு சொன்னாங்க,அழாகாத்தானே இருக்காரு மெல்ல
பார்த்துக்கலாம் என்றிருந்து விட்டேன், இப்பத்தான் தெரியுது,மாப்பிள்ள முகத்தை முதலிலேயே பார்க்காம விட்டுட்டோமே,எங்க தேடறது?
என யோசிச்சிக்கினு இருக்கேன்!.
‘அட!, இந்த காலத்தில இப்படியொரு பெண்ணா?’
‘சரி இப்ப என்ன பண்ணலாம்?’
‘நீங்க சொல்லுங்க!’
‘சரி,பீச் பக்கத்துல இருக்குமா?,போலாமா?’
‘போலாம்’
சான்தோம் கடற்கரைக்குச் சென்றோம்.மாலை 6 மணி
இருக்கும்.அருகருகே அமர்ந்தோம்.நான் உண்மையை சொல்லிவிட வேண்டும் என நினைத்தேன்.
நான் கீதாவோடு பழகியதையும் பின் அவள் சகோதரியை நான்
கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னதையும், எனக்கு
காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை என நான் விலகியதையும்,இதை கவனித்த அவளுடைய
அத்தை,அவளை வீட்டை விட்டு விரட்டியதையும்,அவளை தனியே ஒரு அறை
எடுத்து தங்க வைத்துள்ளதையும் சுருக்கமகச் சொன்னேன்,
அவளுக்கு தாலி கட்டியதை மட்டும் மறைத்து விட்டேன்.
மேலும் நான் தொடர்ந்தேன்,
‘உனக்கு இது போன்ற அனுபவம் உண்டா?’‘இல்லை’ மேலும்
தொடர்ந்தாள்,
‘இதற்கு முன்,ஒரு போலிஸ்காரர் பெண் பார்க்க
வந்தார்.அவருடைய நடத்தை சரியில்லை என என் அண்ணன் கூறி விட்டதால் தடை பட்டுப்போனது.’
(இப்ப நான் கூடத்தான்.. சரியில்லையே,என்ன
பண்ணப்போற? என எனக்குள் கேட்டுக் கொண்டேன்) மேலும் சொன்னாள்,
‘நீங்க கவர்மெண்டல வேலை செய்யிரீங்க,பையன் நல்ல
உயரம்,நீங்க சம்பாதிச்சி தான் வீடு கட்டியிருக்கீங்க, எதிர்காலத்துல நல்லா
முன்னுக்கு வருவான் என எங்க மாமா சொன்னார்,கிராமமா இருந்தாலும் பையன் நகரத்துலதான்
வேலை செய்யப் போறான்,எங்கே வேலை செய்யறானோ,அங்க குடும்பத்தை வச்சுப்பான்னாங்க’
வேலை செய்யற இடத்துலதான் குடும்பத்தை வைக்கணும் என்பது
எனக்கு கூட உடன் பாடுதான்.ஆனால் அப்போதைய சம்பளம், வீட்டு
வாடகை கொடுத்து,
மளிகைப் பொருள்
வாங்க கணக்கு போட்டால் பற்றாற்குறை பட்ஜெட் தான்.
எனவே கிராமத்தில் சில காலம் மனைவியை வைத்துக் கொண்டால் எரிபொருள்,வீட்டு
வாடகை எல்லாம் மிச்சமாகிறது,எனவே சில நாட்கள்
கிராமத்தில் இருந்தால் நமது மக்களிடையே மனைவிக்கு பழகும் வாய்ப்பும்
கிடைக்கும்,உறவு முறைகளில் நெருக்கம் ஏற்படும்,குழந்தைகள்
பிறந்து பள்ளிக்கு செல்லும் காலத்தில் நகரத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்துக்
கொள்ளலாம் என கணக்கு போட்டேன்.
நான் கிராமத்தில் வாழ்வது தான் சிக்கனம் என் நினைத்து
எனக்கு பொன்னேரி கிடங்கிற்கு மாற்றல் ஆணை வழங்கியது நிர்வாகம்.கிராமத்தில் 6
மாதங்கள் தான் வாழ முடிந்தது.காரணம் பொன்னேரி கிடங்கில் ஏற்பட்ட பிரச்சினையால்
என்னை காஞ்சிபுரம் மாற்றி விட்டார்கள்.
இதற்கிடையே மனைவி ராஜாத்தி கர்பம் அடைந்ததால் அவள் ,உடல்
நிலை பாதிப்புக்கு உள்ளானது.அவளை மைலாபூரில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு
நான் காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் சென்று விட்டேன். வாரம் ஒரு முறை சென்னை மைலாப்பூருக்கு
சென்று மனைவியைப் பார்த்து விட்டு வருவேன்.
*******
102-வரா
வை விட்டுறாதீங்க!
திருவள்ளூரில் என்னை நன்கு தெரிந்த வட்டாட்சியர் (திரு.அழகர்
சாமி) என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.1976 ல் நானும் அந்த தாசில்தாரும்
காஞ்சிபுரம் ரயில் முனைப்பணியில் பணியாற்றிய போது பழக்கம்.அவர் reception tasildar ஆக பணியாற்றிய காலத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களான
அரசியல் தலைவர்களோடு பழகியதையும் அவர்களுடைய அந்தரங்க பழக்கவழக்கங்களை என்னடு
பகிர்ந்து கொண்ட போது அதிர்ந்து போனேன். ஒரு தலைவரின் அந்தரங்க பழக்கவழக்கங்கள்
நாம் நினைப்பது போல் சுத்தமாக இருப்பதில்லை என உணர்ந்து கொண்டேன்.
வரவேற்பு வட்டாட்சியர் பதவி என்பது,பொது
நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சர்களை மனம் கோணாமல் பராமரிக்க வேண்டும்,அதற்காக
ஆகும் செலவை மாவட்ட நிர்வாகத்துக்கு செலவின பட்டியலை சமர்பித்து காசை பெற்றுக்
கொள்ளலாம்.வீட்டை விட்டு வெளியே வரும் அமைச்சர்களுக்கு குடி பழக்கம் மற்றும் பிற
பெண்களை படுக்கைக்கு அமைத்து கொடுப்பதும் ஆங்கிலேயர் காலத்திலிருந்து
பழக்கத்திலிருப்பதுதான் என எனக்கு அந்த வட்டாட்சியர் சொன்னபோது வியப்படைந்தேன்.
*******************
1979 ல் நான் திருவள்ளூர் கிடங்கில் பணியாற்றிய போது
சிமென்ட் வழங்கல் தொடர்பாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது வரா
வீட்டில் சிமென்ட் பயன்பாட்டின் நம்பகத் தன்மைபற்றி விசாரிக்க வரா வீட்டுக்கு
தாசில்தார் அழகர்சாமி வந்திருந்தார்.அப்போது என்னை காதலிப்பதாகவும் கல்யாணம்
செய்யப்போவதாகவும் கூறி இருக்கின்றாள்.அதை கவனத்தில் கொண்டிருந்த திரு அழகர்சாமி
அவரை நான் 9 மாதங்கள் கழித்து சந்தித்த போது வராவைப்பற்றி விசாரித்தார்.
அவளோடு திருமணம் ஆனதையும் பின் எனக்கு திருமணம் ஆனதையும்
தெரிந்து கொண்டார்.
இளமையில் எதிர்காலம் பற்றி தொலை நோக்கு சிந்தனை இல்லாமல்
ஏராளமான இளைஞர்கள் இதுபோல் செய்து கொள்கின்றனர்,பின்
வருந்தும்படி ஆகிவிடுகிறது,என்றார் . ‘எங்க
வேலை செய்றீங்க?,
எப்படி
இருக்கீங்க? வீட்டில் சொன்னாங்க என்று கல்யாணம் செஞ்சிகிட்டீங்க,இங்கே
கவரைத்தெருவில் உங்களை நம்பி வந்த ‘வரா’வை
என்ன செஞ்சீங்க?
நான், ‘அவளை தனியே வீடு
எடுத்து தங்க வைத்துள்ளேன்,இப்போது மனைவி கர்பமாக உள்ளாள்,இவளுக்கு(வராவுக்கு)
இன்னும் குழந்தை உருவாகவில்லை,வராவுக்கு
குழந்தையே வேண்டாம் என நினைக்கிறேன்.அங்கேயும் குழந்தை,இங்கேயும்
குழந்தை என்றால் என்னால் குடும்பம் நடத்தும் அளவுக்கு பொருளாதாரம் இல்லை.’ என்றேன்.
அப்போது அந்த வட்டாட்சியர், ‘இளமை
வேகத்துல விளையாட்டா செஞ்சிட்ரீங்க,உங்களை
நம்பி வர்ர பெண்களை வாழவைக்க வேண்டியது உங்க பொறுப்பு அல்லவா?
‘ஆண்கள்,
பெண்களை மாற்றிக் கொள்வது போல் பெண்களால் ஆண்களை மாற்றிக் கொள்ள முடியாது’,நமது
சமுதாய கட்டமைப்பு அப்படி.’
என சொல்லிவிட்டு
மேலும் சொன்னார்,
‘வரா, சம்பாதிக்கிறாங்க,உங்க
மூலமா ஒரு குழந்தை அவளுக்கு உருவாகுமானால் உங்களைப் பற்றிய நினைவுகள்,
குழந்தை மேல் திசை திரும்பி விடும்.குழந்தையை பராமரிப்பதிலே அவள் கவனம் சென்று
விடும்,எனவே ஒரே ஒரு குழந்தையை அவள் பெற்றுக் கொள்ள அனுமதி
அளியுங்கள், இது என் அன்பான வேண்டுகோள்.’ என்றார்.ராஜாத்தி
கர்பமானவுடன்,இரண்டு மாதம் கழித்து ‘வரா’
கர்பமாகும் நிலைக்கு வந்தாள்,ஆனால்,
ராஜாத்தியின் முதல் கரு மணமான 45 நாளில் கலைந்து
விட்டது.
அடுத்து ராசாத்தி கர்பமாகி குழந்தை பெறுவதில் கால தாமதம்
ஆனது,இதனால் வரா குழந்தை பெறுவதில் முந்திக் கொண்டாள்.இருவருக்கும்
24 நாட்கள் வித்யாசம்.1981
ஆகஸ்ட் 1ந்தேதி
வராவுக்கு திருவள்ளூரில் ஆண் குழந்தை பிறந்தான்.
1981 ஆகஸ்ட் 24ந்தேதி ராசாத்திக்கு சென்னை மைலாபூரில் தலை
மகன் பிறந்தான்.அந்நேரத்தில் காஞ்சிபுரம் அலுவலகத்தில் வேலை என்பதால்
காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தேன்.
இருவருக்குமே சுகப்பிரசவம்.
*******
இதற்கிடையே என்னை காஞ்சிபுரம் மண்டல
அலுவலகத்திலிலிருந்து நசரத்பேட்டை கிடங்குக்கு மாற்றினார்கள்.1982 தை மாதம் என
நினைக்கிறேன், என் மனைவி, ‘ஏங்க
,குழந்தை பிறந்து வளர்ந்து 6 மாதம் ஆயிடிச்சிங்க,நீங்க
வேலை பார்க்கிற இடத்துல ஒரு வீடு பாருங்க,
நாம இங்கிருந்து போயிடலாங்க’ மேலும் சொன்னாள்,
‘உங்க
வருமானத்துக்கு ஏற்றாற் போல நான் சிக்கணமா குடும்பம் நடத்துவேங்க’
என் மனைவி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள்,செல்லமாக
வளர்க்கப்பட்டவள்.எனக்கு பசி பட்டிணி பழக்கமானது ஒன்று. இருப்பினும் என் வருமானம்
குறைவானது என உணர்ந்து ,இவள் இந்த அளவுக்கு இறங்கி வந்து சிக்கணமாக குடும்பம்
நடத்துவேன் என சொன்னது எனக்கு மகிழ்ச்சிதான்.
அவள் சொல்வது எனக்கு சரி எனப் பட்டது.நசரத்
பேட்டைக்கு அருகே உள்ள நகரம் பூவிருந்தவல்லி,அங்கே
ஈசுவரன் கோயில் தெருவில் ஒரு வசதியற்ற வீடு பார்த்தேன்,வாடகை,ரூ.60.00.இரண்டு
மாதம் அங்கே இருந்தோம்,அடுத்து,அதே
தெருவில் கொஞ்சம் வசதியான வீடு.மாதம் ரூ.100.00வாடகை. கழிப்பறைகள் உள்ள வீடு.
அப்போது மனைவியின் தாய் வீட்டு சீதனமாக குழந்தைக்கு தங்க
நகைகள் போட வேண்டும் என்பது வழக்கம்,இப்போதும்
தான்.நான் என் மனைவியிடம்,
‘அது மாதிரி
எதுவும் வேண்டாம் ஆனால் அந்த நகைக்கான
தொகையை எனக்கு பணமாக வழங்கினால் திருவள்ளூரில் ஒரு வீட்டு மனை வாங்கிவிடலாம்.
நான் வாரக்கடைசியில் திருவள்ளூருக்கு ஏன் செல்கிறேன் என
தெரிந்து கொண்டாள்.இதை தவிர்க்க முடியாத பிரச்சினையாக தொடரும் என தெரிந்து
கொண்டாள். ‘அழுதாள் ,அரண்டாள்,எனக்கு
ஏன் இப்படியொரு நிலமை?
என தன்னைத்தானே
கேட்டுக்கொண்டாள்’
ராஜாத்தியின் அண்ணனும்,அவள்
மாமாவும்(பெரிய அக்காவின் கணவர்) அவளை அணுகி,திருவள்ளூரில்
இருக்கும் அந்தப் பெண்ணை இவரிடம் இருந்து அவளுக்கு காசு கொடுத்து பிரித்துவிடலாமா? என
கேட்டிருக்கின்றனர். ராஜாத்தி மறுத்து விட்டாள்.
‘என்னிடம்
அவர் அன்பாகத்தான் இருக்கின்றார், நான் இந்த
பிரச்சினையை நானே சரி செய்து கொள்கிறேன், நீங்கள்
யாரும் எதுவும் செய்ய வேண்டாம்’ என்று
சொல்லியிருக்கின்றாள்.இந்த சேதியை பல ஆண்டுகள் கழித்து தான் எனக்கு சொன்னாள்.
திருவள்ளூரில் சொந்தாமாக வீடு இருந்தால் படிக்க வைக்கவும், நமது
சுற்றத்தார் வந்து போக வசதியாகவும் நான் அங்கிருந்து மாவட்டத்தின் பல இடங்களில்
மாற்றல் வந்தால் பணிக்கு சென்று வீடுவர வசதியாக இருக்கும்’
என்று சொன்னேன்.
இதில் மனைவிக்கு உடன் பாடு.அவள் வீட்டிலும் அதற்கு உடன்
பட்டு ரூ 3000.00 கொடுத்தார்கள்அந்த பணத்தோடு நான் நாலாயிரம் போட்டு இப்போதுள்ள
வீட்டு மனையை 1981 நவம்பரில் ரூ. 6000.00க்கு வாங்கினேன்.பதிவு செலவு ரூ 1000.00
ஆனது.இப்போது இதன் மதிப்பு ஒரு கோடி பெறும்.இந்த வீட்டுமனை எவ்வாறு தேர்வு
செய்யப்பட்டது எனில், திருவள்ளூரில் வரா குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின்
உறவினர் ஒரு மனை வணிகர்.அவரிடம் பேசி மனையை தேர்வு செய்து விலை நிர்ணயம் செய்தது
எல்லாமே ‘வரா’தான்.அந்த மனையை
பதிவு செய்ய உதவியரும் அந்த வீட்டின் உரிமையாளர்தான்.
அந்த மனை வாங்கும் போது மனைக்கு போகும் வழியில் சேரிவாழ்
மக்கள் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் இருந்தன.அப்போது அந்த மனை வணிகர், ‘இந்த
குடும்பங்கள் எல்லாம் நிரந்தர குடியுரிமை அற்றவர்கள்,
அவர்களுக்கு வேறு இடம் தேடி குடுக்க முயன்று வருகிறோம்,நீங்கள்
வீடுகட்டி வருவதற்குள் எல்லாம் சரியாகி விடும்’ என்றார்.சேரி
மக்களோடு வாழ்வதில் எனக்கு எப்பொழுதும் எந்த பிரச்சினையும் இல்லை.இருப்பினும் என்
நண்பர்கள் , ‘சேரி மக்கள் இருக்கும் இடத்தில் நாம் நிம்மதியா வாழ
முடியாதுடா! என்பார்கள்எதற்கும் துணிந்து 1985-ல் கடகால் போட்டேன்.அது உண்மைதான்
என இங்கே குடிவந்த ஆறு மாதத்தில் தெரிந்து கொண்டேன்.அந்த பிரச்சினைகளை எப்படி
சமாளித்தேன் என பின்னர் கூறுகிறேன்.இன்னும் அதிக சேரி குடும்பங்கள் வந்துவிட்டன,
இப்பொழுது அவர்கள் எங்களோடு நன்கு பழக ஆரம்பித்து விட்டனர்.பழகும்
விதத்தில் பழகிப் பார்த்தால்,பகைவன் கூட
நண்பன் தான்
பூந்தமல்லியில் குடி இருக்கும் போது ஒரு நாள் நான்
காஞ்சிபுரம் அலுவலகம் சென்று விட்டு மாலை வீடு திரும்பினேன். அப்போது மனைவி
ராஜாத்தி, ‘ஏங்க,யாரோ ஒருத்தர்
உங்க தம்பின்னு வந்தாருங்க,
இதற்கு முன் நான் அவரைப் பார்த்ததில்லை, சரி,
உங்க அண்ணன்,காஞ்சிபுரம் சென்றுள்ளார், வருவதற்கு
மாலை யாகிவிடும்,இங்கேயே இருங்கள் என்றேன்,அவர்
வெளியே போயிட்டு அண்ணன் வந்த பிறகு வருகிறேன் என போய்விட்டார்.’என்றாள்.
‘அப்படியா?,நான்
அவனைப் பார்த்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது,
என் திருமணத்திற்கு வந்தானா என்பது நினைவில்லை.1978-ல்
வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
எங்க அண்ணா வீடு கட்ட நான் காசு தந்த போது,அவர்
வேலை செய்த்தாக ஒரு நாள் கூலி எடுத்துக் கொள்ளவார்,
இதை அவன் எதிர்த்தாகவும்,மேலும் எங்க அண்ணி அவனுக்கு பசிக்கு உணவளிக்காததாலும்
வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக என்னிடம் சொன்னான்.
அம்பத்தூர் அருகே இருக்கும் மேனாம்பேட்டில் எங்கள் (பெரியப்பா
பெண்) அக்கா வீட்டிற்கு நாங்கள் விடுமுறை நாட்களில் செல்வோம்,மிகவும்
அன்பாக நடந்து கொள்வார்கள்,அதனால் நான் கூட அடிக்கடி அங்கு செல்வேன்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் மட்டுமே,பசு
மாடுகள் வைத்துக்கொண்டு பால் வியாபாரம் செய்வார்கள்.நான் படித்து விட்டு வேலை
கிடைக்காத காலத்தில் நான் அங்கே தங்குவதைப் பார்த்து என்னிடம்,
‘நான்
பால் ஊத்துர அய்யருங்க பெரிய அதிகாரியா இருக்காங்கடா,நான்
அவர்களிடம்,என் தம்பி படிச்சிருக்கான்,அவனுக்கு
ஒரு வேலை வாங்கி கொடுங்கண்ணு கேட்கட்டுமாடா,’என்பார்கள்.
சென்னை அருகே இருக்கும் இடம் என்பதால் அங்கே புதிய
திரைப்படங்கள் வெளி வரும்,அவருடைய பிள்ளைகளோடு சினிமாவுக்கு போவது பிடிக்கும்,இது
ஒரு பொழுது போக்கு.
என் தம்பி,
அவர்களின் முயற்சியால் ஆவின் பால் நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிந்தேன்.
மேலும் நான் மனைவியிடம் என் தம்பியைப் பற்றி சொன்னேன், ‘எங்க
அம்மா,என்னைப்போல் இவனை படிக்க வைக்க முயன்றார்கள்,இவனுக்கு
படிக்கும் ஆர்வம் இல்லை.
நான் ஆறாம் வகுப்பு படிக்க ஆரணிக்கு சென்றபோது,இவனை முதல் வகுப்பில் சேர்க்க
வேண்டும்.அந்நாளில் எங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளிக்கூடம் இல்லை.எங்கள்
ஊருக்கும் ஆரணிக்கும் மத்தியில் பாலவாக்கம் எனும் சிற்றூர் உள்ளது.இந்த ஊரில்
மொத்தமே 20 குடும்பங்கள் கூட இருக்காது, அவ்வளவு பேரும் முதலியார் இனத்தவர்கள். ஆனால்
இவர்களை நம்பி ஒரு 50 குடும்பங்கள் சேரிவாழ் மக்கள் வசிப்பார்கள்.அந்த ஊர்
பஜனைக்கோயில் மேடை வாசலில் ஒரு பத்து
மாணவர்கள் தெரு பள்ளிக்கூடம் அமைத்து படித்து வந்தனர்,அங்கே ஒரு கணகுப்பிள்ளை திண்ணை
ஆசிரியர் தொழில் செய்துவந்தார்.
அவரிடம், ‘தம்பி
நாலெழுத்து கற்றுக் கொள்ளட்டும்’ என என்னோடு
எங்கம்மா என் தம்பியை அனுப்பினர்.என் தம்பி பள்ளிக்கூடம் போகமாட்டேன் என அடம்
பிடிப்பான்,எங்கம்மா இவனை,கெஞ்சி,கொஞ்சி அனுப்ப முயல்வார்கள். அப்போதும் என்னோடு
வர மாட்டான்.
தினமும் அவனுக்கு இரண்டு பாக்கெட் நிறைய வேர்க்கடலையை
நிறப்பி விடுவார்கள்.அப்போது என் பாக்கெட்டிலும் வேர்க்கடலையை
நிறப்புவார்கள்.நாங்கள் இருவரும் கொரித்துக்
கொண்டே பள்ளிக்கூடம் செல்வோம்.
இரண்டு ஆண்டுகள் என்னோடு வந்தான் அதன் பிறகு
பள்ளிக்கூடம் போகமாட்டேன் என அடம் பிடித்தான்.அந்த இரண்டு ஆண்டில் அவன் ஒரு
எழுத்து கூட கற்றுக் கொள்ளவில்லை ,எங்க அம்மா ஒரு முடிவுக்கு வந்தார்கள், ‘இவன்
படிக்க மாட்டான்,கழனி வேலைக்குத்தான் லாயக்கு!’ என்று.
இதனால் மனம் உடைந்த எங்க அம்மா இறக்கும் முன் ஒரு நாள் என்னிடம், ‘டேய்,நைநா!, இவன்
ஒரு தருதலையா இருக்காண்டா,நீ படிச்சவன், அண்ணிகளோடு
ஒத்துப்போவே, நீ எப்படியாவது பொழைச்சிப்பே, இவனை
நீ தாண்டா கரை சேர்க்கணும்.’
இறக்கமான குரலில்
எங்கம்மா சொன்னார்கள்.
‘சரிம்மா’ என்றேன்.
மேலும் மனைவியிடம் கூறினேன்,
‘எங்க
அக்காவுக்கு,அவருடைய தலைப் பெண்ணை எனக்கு கட்டிக் கொடுக்க ஆசை,ஆனால்
அவள் படிக்க வில்லை என்கிற ஒரே காரணத்தால்,நான்
மறுத்து வந்தேன்.தாய் வீட்டு உறவு விட்டுப் போச்சிண்ணு என்னோடு எங்க அக்கா பேசுவது
இல்லை.அந்த அக்கா பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடிச்சி,அவளுக்கு
அடுத்த படியா ஒரு பொண்ணு இருக்கா,வாயாடி அவளை
இவனுக்கு கட்டிவச்சா எங்க அண்ணிகளோடு நல்ல போட்டி போட்டு வாயாடுவா,நீ
என்ன சொல்ற?
103- தம்பிக்கு அக்கா பெண்
‘சரிங்க,உங்க
மாமா இங்கே அடிக்கடி வர்ராரே,நான் உங்களுக்கா
அவர் வீட்டுக்கு போய் பெண் கேக்றங்க,என்னாலா
உங்க குடும்பம் ஒன்னு சேரட்டுமே!’
இப்படி நானும் என் மனைவியும் பேசிக் கொண்டிருக்கும் போதே
என் தம்பி வீடு வந்து சேர்ந்தான்.அப்போது அவன், ‘நான்
வேலை பார்த்த ஆவின் நிறுவனம் என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்கள்,அண்ணா,இப்போ
நான் என்ன செய்யறதுன்னே தெரியலை’ என்றான்.
அவனை வரவேற்று,உணவளித்து, ‘நீ
,இங்கேயே இருடா,உனக்கா
அக்காவிடம் பெண் கேட்டு வரச்சொல்லி
அண்ணியை நாளைக்கு அனுப்புகிறேன், கல்யாணம்
பண்ணிக்கிட்டு,நீ கள்ளூரில் தங்கி விவசாயம் பார் ,நான்
விவசாயத்திற்கு வேண்டிய பண உதவிகள் எதாவது செய்யறேன்.’ என்றேன்.
என் தம்பியும், ‘சரி
அண்ணா’ என்றான்.
அடுத்த நாள் என் மனைவி பெண் கேட்க அருகில் உள்ள பாரிவாக்கம்
கிராமத்திற்கு தனியே சென்றாள். உண்மையை சொல்லி தன் மைத்துனருக்கு பெண் கேட்டு தன்
நாத்தனாரை வேண்டினாள்,அதற்கு எங்க அக்கா, ‘அவன்
என்ன வேலை செய்யறான்?,என்ன சம்பாதிக்கிறான்?அவனுக்கெல்லாம்
பெண் தர முடியாது’
என மறுத்து
விடுகிறார்.
எங்க மாமாவும், ‘அவன்
நடத்தை சரியில்லம்மா,
சம்பாதிக்கல எதை
நம்பி பொண்ணு குடுக்கிறது?’என்றார்.விட்டுப் பிடிப்போம் எனும் எண்ணத்தில், விடை
பெற்று வந்து விட்டாள்.
அன்று இரவு நெடுநேரம் நாங்கள் இருவரும் யோசித்துக்
கொண்டிருந்தோம்.என் மனைவி விடா முயற்சியாக,
‘இருங்க,உங்க
மாமாவை எப்படியும்,அவர் மனதை கரைக்க முடியும் எனும் நம்பிக்கை உள்ளது,ஓரிரு
நாள் கழித்து இதைப்பற்றி உங்க மாமாவிடம் பேசினால்,
எப்படியும் உங்க அக்கா மனதை அவர் மாற்றிவிடுவார்,எனும்
நம்பிக்கை எனக்குள்ளது,நான் அவரிடம் பேசுகிறேன்,’ என
அவள் சொன்னதைக் கேட்டு,அன்று இரவு தூங்கப்போய் விட்டோம். அடுத்த நாள்,மாமா
விட்டுக்கு வந்தார் அப்போது,என் மனைவி, ‘மாமா,நீங்களே
நம்ம புள்ளைக்கு பெண் தர யோசிச்சா,ஊரில்
வேறு எவன் பொண்ணு கொடுப்பான்’
‘சரிம்மா,இப்ப
கல்யாணம் பண்ண எங்கிட்ட காசில்ல’
நான், ‘பொண்ணு
கொடுக்கிறேன்னு சொல்லு மாமா,நாங்க பண்ணிக்கிறோம்.’
‘சீர்
செய்ய வேண்டாமா?’
நான், ‘அது வேண்டாம்
விடுங்க’
‘சீர்
செய்யாமா பொண்ணை கொடுத்தா,ஊரில் நாலுபேர் நாலுவிதமா சொல்லுவாண்டா’
‘சரி
மாமா,ஊரில் சொல்றவனெல்லாம் நமக்கு சோறு போட மாட்டான்.
நான் தாலிக்கு தங்கம் தருகின்றேன்,பட்டு
புடவை மற்ற துணிமணிகள் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் கல்யாண செலவை நான்
ஏத்துக்கிறேன் மாமா’
‘அதெல்லாம்,வேண்டாம்பா, நீ
வேண்டுமென்றால் என்னுடைய நிலத்தை ஒரு ஏக்கரா வாங்கிக்க,நான்
மத்த செலவை செஞ்சிக்கிறேன்.
‘அந்த
ஒரு ஏக்கராவை நான் வாங்கிறதை விட அதை பொண்ணுமேல எழுதி சீதனமா கொடுத்துடு மாமா,நான்
நிலத்தை வாங்கி என்ன செய்ய போறேன்,தம்பிதான்
பயிர் செய்யணும்,அவனுக்கு அவன் பொண்டாட்டி மேல நிலம் இருந்தா விவசாயத்துல
ஒரு அக்கரை இருக்கும்,மாமா’
‘சரி,எதாவது
செய்யுங்க!’ என சொல்லி விட்டு எங்க மாமா கிளம்பி விட்டார். ஓரிரு
நாளில் எங்க சின்ன அக்கா வந்தாங்க, ‘தம்பி
,என் பொண்ணும் கல்யாணத்துக்கு இருக்கா,நான்
போட்டி போடல,
ஆனா எம் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கேன்,மாப்பிள்ளை
தாலிக்கு தங்கம் செஞ்சிக்கிறதா சொல்றான்,நீ,
பார்த்து எதாவது சீர் செஞ்சா,போதும்.’
‘சரிக்கா,செஞ்சிடலாம்’ என்றேன்.
‘எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டேன்,ஆனா,காசுக்கு
எங்க போறதுன்னு தெரியல’ மனைவியிடம் யோசனை செய்தேன்.
‘என்னிடம் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைக்கலாம்
அல்லது வித்துடலாம்,பின்னாளில் வசதி வந்தா நகைகளை வாங்கிக்கலாம்.’ என் மனைவி
தயக்கமின்றி சொன்னாள்.
மனைவி சொன்னது போல்,கொஞ்சம் நகைகளை வித்தும்,கொஞ்சம்
நகைகளை அடகு வைத்தும், தெரிந்தவர்களிடம் ஒரு சில ஆயிரங்கள் கடன் வாங்கியும் ரூ.12 ஆயிரம் தேற்றினோம்.
1982-ல் இரண்டு கல்யாணம்,பூந்தமல்லியில் இரண்டு
எதிரெதிர் மண்டபங்களில் முடித்து விட்டோம்.இரு கல்யாணங்களுக்கும் ஒரே உறவினர்கள்
தானே?(1982-ல் ஒரு சவரன் தங்கம்,ரூ.1600)
தம்பியை கிராமத்தில் என்னுடைய வீட்டில் குடி
வைத்தோம்.விவசாயம் பார்க்க தேவையான உபகரணங்களை வாங்கி ஆண்டுக்கு உரம் வாங்கி
கொடுத்தேன்.
எதற்கும் இவ்வளவு வந்தது இவ்வளவு செலவாச்சி என சொல்ல
மாட்டான்.நானும் சரி கிராமத்தில் 3 அல்லது6 மாதத்திற்கு ஒரு முறைதானே மகசூல் வரும்
அதை வைத்து குடுப்பம் நடத்த வேண்டும்.
எனக்கும் மாதம் சம்பளம் வருவதால் நான் தம்பியை பெரிதும்
கேட்க மாட்டேன்.ஊரில் தம்பி,
ஒரு பெரிய மனுசனாக
வாழ்ந்தால் போதும் என்றிருந்தேன்.
இதற்கிடையே நாப்பாளையத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கும் எனது கடைசீ அக்கா என்னைத் தேடி
வந்தார்.இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.கணவர் பால் தயிர் வியாபாரம் செய்வார்.கூடவே
குடிப்பழக்கம் உண்டு.இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை சச்ரவுகள்
இருக்கும்.வந்தவர்,
‘தம்பி,நாங்கள் ஒரு மாடு வைத்து பால் வியாபாரம் செய்து
வருகிறோம்,இன்னொரு மாடு இருந்தால் குடும்பத்தை சமாளிக்க முடியும் நீ எதாவது உதவி
செய்தால் எனக்கு நிம்மதி கிடைக்கும்.’ என்றார்.
‘சரிக்கா, மாடு பிடிக்க எவ்வளவு வேண்டும்?’
‘ஆயிரம் ரூபா இருந்தா போதும்.’
‘சரிக்கா,நான் ரூ 500.தருகிறேன் கூடவே என் 4 கிராம்
விரல் மோதிரத்தை தருகிறேன் .மோதிரத்தை மட்டும் மூட்டுக்கொடுத்தால் போதும்.’ என
சொல்லி பணத்தையும் மோதிரத்தையும் கொடுத்து அனுப்பினேன்.
இரண்டு ஆண்டுகளில் எங்க அக்கா நல்ல நிலைக்கு வந்து
விட்டார்கள். மோதிரத்தையும் மீட்டுக் கொடுத்தார்கள்.கூடவே அண்ணனும் தன் குடும்பம்
நடத்த விவசாயம் பார்க்க அவ்வப்போது வந்து எதாவது பண உதவி கேட்பார்.என்னால்
முடிந்ததை 200,300 என கொடுப்பேன்.
No comments:
Post a Comment