Saturday, December 7, 2019

இ.பி-21


             86- காஞ்சிபுரம் பணி மாற்றம்

எனக்கு(1979-ஜூன்) காஞ்சிபுரம் மாற்றலாகிவிட்டது.இந்த மாற்றல் உத்தரவு ஏன்&எப்படி வந்தது என விவரிப்பது நல்லது என நினைக்கின்றேன்.
அப்பொழுது தமிழகமெங்கும் சிமெண்ட் தட்டுப்பாடு.அதன்  காரணமாக கிடங்கில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைத்து, ‘வீட்டு வரி ரசீதுகளின் பேரில் 5 மூட்டைகள் தரலாம் எனும் அரசு உத்ரவின் பேரில் பதிவேட்டில் பெயர்களை பதியவைத்து முன்னுரிமை அடிப்படையில் சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டு வந்தது.இதில் எந்தவிதமான சிபாரிசும் நான் மேற்கொள்ளவில்லை.
ஒருநாள் வேப்பம்பட்டுலிருந்து புத்த மடாதிபதிகள் திருவள்ளூர் கிடங்கிற்கு வந்தார்கள். சிமென்ட் வேண்டு மென்றார்கள்,நான் அவர்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, ‘இப்பொழுது சிமென்ட் இருப்பு இல்லை வந்தவுடன் முன்னுரிமைஅடிப்படையில் உங்களுக்கு சிமென்ட் வழங்கப்படும் என்றேன்.

15 நாட்கள் கழித்து அந்த மடாதிபதிகள் கிடங்கிற்கு வந்தார்கள்.அப்போது நான்,
உங்களுக்கு இன்னும் சீனியாரிட்டி வரவில்லை. வந்தவுடன் உங்களுக்கு தகவல் தருகிறேன்என்றேன்,   அப்போது சிமெண்ட் வந்து முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் நடந்து கொண்டிருக்கின்றது.இதில் உண்மை இல்ல என சாமியார்கள் நினைத்துக் கொண்டனர். அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரை அணுகினர்.
 அந்த ஆட்சியர்,மண்டல மேலாளரை விசாரித்தார்.
மண்டல மேலாளர் என்னை போனில் தொடர்பு கொண்டு, ‘சிமென்ட் இருப்பு இருந்தும் சாமியார்களுக்கே நீ சிமென்ட் வழங்க மறுத்ததாக மாவட்ட ஆட்சியர் நினைக்கின்றார்,உடனே உங்களை மாற்ற வேண்டும் என்கிறார்என சொல்லிவிட்டு,என்னை காஞ்சிபுரம் வரச் சொல்லி விட்டார்.இது நடந்தது 1979 ஜூன் மாதம் முதல் வாரம்.
            
                 87-என்னையும் வாழ வையுங்கள்                     

நான் மாற்றலான செய்தி வரா வுக்கு தெரிந்து விட்டது என நினைக்கிறேன்.நான் காஞ்சிபுரம் புறப்படும் முந்தைய நாள் என்னிடம் ஒரு கடிதம் சேர்க்க, அதை எழுதிவந்து  கிடங்கு காவலரிடம் கொடுத்தாள்.அந்த காவலரோ,
நீங்களே போய் கொடுங்கள்,அவர் மேலேதான் உள்ளார்என சொன்னவுடன் அவள் மேலே ஏறிவந்தாள்.
எனக்கு ஆச்சர்யம்.கடிதம் கொடுத்தாள் வாங்கிக் கொண்டேன்.அப்போது,நான், ‘என்னை காஞ்சிபுரம் மாற்றி விட்டார்கள்என்றேன். அவள், ‘அப்படியா?’ என அதிர்ச்சி அடைந்தாள்.
அப்பொது,அவளை கட்டியணைத்து ஒரு முத்தமிட்டேன். விலகிச் சென்று விட்டாள்.அந்த கடிதத்தில், ‘உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது,நீங்கள் உங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.! என்னையும் வாழ வையுங்கள்.எனக்கு தாலி கட்டி விடுங்கள் நான் வாழ்ந்து கொள்கிறேன்.!!
                          *******

1979 ஜூன் மாதத்தில் நான் மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வகத்தில் உதவி தர ஆய்வாளராக பணியில் சேர்ந்தேன்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு வீட்டில் வாடகைக்கு ஒரு அறையை எடுத்துக் கொண்டேன், என்னோடு எங்கள் துறையின் மாநில சங்க பொதுச் செயலாளரான திரு.பிரேம் குமார் தங்கினார். (அரசியல் சார்பற்ற 325 பதிவு எண் கொண்ட சக்தி வாய்ந்த சங்கம்)
             
               88-உத்ரமேரூர் பணி மாற்றம்

சில மாதங்கள் கழித்து என்னை உத்ரமேரூர் கிடங்கிற்கு மாற்றினார்கள்.இந்த கிடங்கு அப்போது உத்தரமேரூர் மகளீர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கலை அரங்கில் இயங்கியது.
கிடங்கு பொறுப்பாளராக நண்பர் திரு. ராஜகோபால் இருந்தார். (இவர் மன்னார்குடிக்காரர்,இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.).என்னை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு பொறுப்பாக்கி நிறுவனம் உத்திரவிட்டது.

நண்பர் ராஜகோபால் திருமணமாகி மனைவி குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்.இவர் ஒரு இசை வல்லுனர்.புல்புல்தாரா,பிடில் போன்ற இசைக்ருவியை இசைப்பார்.அருமையாக பாடுவார். இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு பையன் என நினைக்கின்றேன்.அவர்கள் வீட்டில் ஒரு முறை உணவருந்தி உள்ளேன்,அவர் மனைவி அருமையாக சமைப்பார்.
ராஜாதி ராஜ மக..ராஜப்பிரதான ராஜா வந்தேனே,வந்து சபைக்கு வந்தனம் செய்தேனே...தங்கச்சரிகை சேலை எங்கும் பளபளக்க........எனும் நவராத்தரி சினிமாவில் வரும் இசை நாடகத்தை நடத்திக்காட்டுவார். நாங்கள் ரசிப்பது மட்டுமல்ல,வேலையில்லா நேரங்களில் சிறந்த பொழுது போக்காகவும் இருக்கும்.
நான் பிரம்மச்சாரி.எனவே அதே அரங்கில் மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தேன்.ஞாயிற்றுக்கிழமை தோறும் காஞ்சிபுரத்தில் தங்கியுள்ள என் சக நண்பர்கள் இருக்கும் அறையில் தங்கி விட்டு உத்தரமேரூருக்கு திங்கள் காலை பணிக்கு  வருவேன்.    
                              *****
            
               89-எலும்புருக்கு நோய்(tuberculosis)

1980 பொங்கல் முன் தினம் கிராமத்திற்கு சென்றேன்.எனது உடல் நிலை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போய் குளிர் காய்ச்சல் அதிகமாகி விட்டது.
நான் யாருக்கும் தெரிவிக்காமல், அம்பத்தூர் சர்.ஐவன் ஸ்டெட்போடுமருத்துவமனையில் சேர்ந்து விட்டேன்.சேர்ந்த முதல் நாள் எனக்கு என்ன வியாதி என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.அடுத்த நாள் அந்த மருத்துவ மனைக்கு சென்னை மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் வருகை புரிந்தார்.
அவர் என் வயிற்றை ஒவ்வொரு அங்குலமாக அழுத்தி வந்தார்,ஒரு இடத்தில் அவர் கை வைக்கும் போது தாங்க முடியாத வலி.உடனே அவர், ‘இவருக்கு எலும்புருக்கு நோய் தாக்குதல் உள்ளதுஎன சொல்லிவிட்டு,

 ‘தம்பி நீ பயப்பட வேண்டாம்,உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை,மது போன்ற பழக்கமும் இல்லை,எனவே 6 மாதம் மருத்துவ சிகிச்சையில் நீ இருந்தால் இந்நோயை முற்றிலும் ஒழித்து விடலாம்என்றார்.
மேலும் தன் சக மருத்துவர்களுக்கு நான் என்ன மருந்து எப்படி சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி சென்று விட்டார்.எனக்கு வைத்தியம் பார்த்தது ‘மீனா’ எனும் இளவயது பெண் மருத்துவர்.
அவர் என்னைப் பார்த்து , ‘தினமும் ஸ்டெப்டோ மைசின் சல்பேட் 90 நாட்களுக்கு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்,மேலும் ஐசோனக்ஸ்300 எம்ஜி அளவுள்ள ஒரு மாத்திரையை தினமும்  சப்பிடவேண்டும்என  அறிவுறுத்தினார்.
உத்ரமேரூர் நான் தங்கி இருந்த அறையில்  தினமும் காலை காய்ச்சிய பாலை ஆரவைத்து ஒரு பச்சை முட்டையை அதோடு கலக்கி 10 நாட்கள் சாப்பிட்டேன்.என் முதுகு தண்டில் வலி எடுக்க ஆரம்பித்தது.உடனே அதை நிறுத்தி விட்டேன்.என் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
                           ********
                
                  90-ரூ.50 ஆயிரம் திருட்டு

நெல் வாங்க என்னிடம் எங்கள் நிறுவனம் 50 ஆயிரம் நூறு ரூபாய் கட்டுகளை(5 கட்டு) என்னிடம் கொடுத்து வைத்தனர்.அதை எனக்கு வழங்கப்பட்ட பணப் பெட்டியில் வைத்து,மேசை மீது அசைக்க முடியாதவாறு பொறுத்தி விட்டேன்.பணப்பெட்டியின் சாவி மட்டும் என்னிடம் இருக்கும். ஒரு சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம் சென்று நண்பர்களோடு தங்கிவிட்டு திங்கட் கிழமை காலை 9 மணிக்கு உத்தரமேரூரில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்தேன்.அப்போது என்னுடன் பணியாற்றும் உதவியாளர்கள்,நண்பர் ராஜகோபால் எல்லாரும் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.என்னைப் பார்த்ததும் அனைவரும் ஒரே குரலில்,
சார்,நம்ம DPC பணம் திருடு போயிடுச்சி சார்!
என்ன விளையாடறீங்களா?’
இல்லை சார்,உண்மை தான்!
எப்படி?’

பணம் வைத்த மேசை மீது பொருத்தியிருந்த பெட்டி மற்றும் மேசையும் காணவில்லை சார்!இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது!,
என்னய்யா ,விளையாடறீங்க? வாட்ச் மேன் எங்கியா போனான்?’வாட்ச் மேன் அருகில் இருந்தான், அவன், ‘ராத்திரி கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் சார்
என்ன செய்வது என யோசித்து உடனே அலுவலகம் தொடர்பு கொண்டு மண்டல மேலாளருக்கு தகவல் தெரிவித்தேன்.அவர் உடனே,
நீ ,உடனடியா உள்ளூர் போலீசுக்கு கடிதம் மூலம் ஒரு தகவல் கொடுத்து அதற்கான ஒப்புதல் கடிதம் வாங்கி எனக்கு ஒரு report அனுப்புஎன்றார்.அப்பொழுதெல்லாம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடு போனால் DSP தகுதிக்கு குறையாமல் விசாரணை நடத்தவேண்டும் என்பது விதி.எனவே அன்றே என்னை க்காண ஒரு டி.எஸ்.பி வந்தார்.அவர் விசாரித்து ஒரு அறிக்கை வாங்கிக் கொண்டார்.பத்திரிக்கைகளில் செய்தி வந்துவிட்டது.
அலுவலகத்தில் ஆளாளுக்கு எப்படி பேசிக் கொண்டார்கள் தெரியுமா? ‘...50 ஆயிரம் திருடு போய்விட்டது என அலுவலக ஊழியர்கள் தகவல் சொன்னவுடன் இவன் சிரித்தானாமே..,இவன் தான் திருடியிருப்பான்...!’ அடுத்து,இன்னொரு விதமாக பேச்சு,
‘..கூடஇருக்கும் ராஜகோபால் வேலையாகத்தானிருக்கும், அவன் பொறாமையில் செய்திருப்பான்,புள்ளை குட்டிக்காரன் அவசரத்துக்கு திருடியிருப்பான்...’

அந்த காவல் அதிகாரி மண்டல மேலாளரை அணுகி அந்த அதிகாரியை(என்னை) தற்காலிக பணி நீக்கம் செய்ய முடியுமா?’ என கேட்டுள்ளார்.அதற்கு மண்டல மேலாளர்,
அவர் ஒரு நேர்மையான அதிகாரி,கடந்த காலத்தில் இது போன்ற சம்பவம் எதுவும் அவர் காலத்தில் நடக்க வில்லை.என்னால் அவரை பணி நீக்கம் செய்ய இயலாதுஎன தெரிவித்ததாக பின்னாளில் எனக்கு அலுவலக நண்பர்கள் தெரிவித்தார்கள்.
தினமும் ஒவ்வொரு காவல் அதிகாரியாக வந்து எங்களைக் கண்டு தனித்தனியே அறிக்கை வாங்கிச் செல்வார்கள்.

அடுத்த நாள் காவல் துறை நாயை வர வழைத்தார்கள். எங்களை எல்லாம் வரிசையாக நிற்க வைத்தார்கள். ஊரில் உள்ள திருடர்களையும் எங்களோடு நிற்க வைத்தார்கள்.
அந்த நாய் எல்லாரையும் மோப்பம் பிடித்தது.கடைசியாக அந்த நாய் எங்கள் வாட்ச் மேனை கவ்வி பிடித்தது. ‘திருடன் கிடைத்து விட்டான்’ என எங்களுக்கு ஒரு நிம்மதி வந்துவிட்டது எல்லாரும் வாட்ச் மேன் தான் திருடன் என முடிவு செய்தோம். காவல் துறையில் ஒரு பழக்கம் உண்டு,திருடு போய் விட்டதாக தகவல் வந்தால் முதலில் யார் தகவல் கொடுக்கின்றார்களோ அவர்களையே சந்தேகம் கொள்வது.பின் அவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விசாரிப்பது.இதில் எதாவது ஒரு துப்பு கிடைக்கும் என்பது காவல்துறையின் நம்பிக்கை.
என்னை மட்டும் காவல் துறையின் ஒப்புதல் இல்லாமல் ‘ஊரைவிட்டு செல்லக்கூடாது’ என உத்தரவு.இந்த சம்பரதாயம் எல்லாம் என் விஷயத்தில் முடிந்து விட்டது.அதன் பின் உள்ளூர் திருடர்களை(history sheeters) நோட்டம் விடுவது.ஒரு வாரம் ஆகிவிட்டது.ஒரு காவல் அதிகாரி என்னிடம் வந்தார்,

சார், இது உள்ளூர்த் திருடன் கை வரிசையாகத் தான் இருக்கும்,காரணம் ஒரு மேசையோடு ஒருவன் இரவு நேரத்தில் தலைமேல் தூக்கிக் கொண்டு போக முடியாது.நாங்களும் உள்ளூர் திருடர்களை விசாரித்து விட்டோம்.புதிய திருடன் எவனோ நம் ஊரில் தோன்றியுள்ளான், என்கின்றனர்.மேலும் அவர்,
நீங்களும் கிணறு குட்டை என தேடிப் பாருங்கள் எங்கியாவது மேசை கிடைக்கின்றதா என தேடுங்கள் என்றார்.
அப்பொழுது நான், ‘சார், திருடன் தான் கிடைத்து விட்டானே சார், அவனை கைது செய்தால் நமக்கு திருடப்பட்ட பணம் கிடைக்காதா?’ என்றேன்.
அதற்கு அவர் சிரித்து விட்டார்.என்ன சார்,சிரிக்கிறீங்க?’ மேலும், ‘நான் வாட்ச் மேன்தான் கிடைத்து விட்டானே? அவனை கைது செய்தால் உண்மை வராதா?’
      
               91-நாய்க்கு ஏது  சுய அறிவு?

நாய்க்கு என்ன சார் அறிவு இருக்கு? ஆறறிவு உள்ள மனிதனுக்கே சிந்தனை  திறன் இருப்பதில்லை, நாய்க்கு எப்படி சார் அறிவு இருக்கும்?’ என என்னையே மடக்கினார்.,
பின்னே நாயை ஏன் சார் வச்சிருக்கீங்க?’
அதற்கு அவர் ஒரு விளக்கம் தந்தார். இது ஒரு தந்திரம் சார்.நாய்க்கு எப்படி திருடனை பிடிக்கும் வேண்டும் எனும் பழக்கத்தை கற்றுத் தறுகிறோம் என்றால்,பல தரப்பட்ட உடையணிந்த மக்களை வரிசையாக நிற்க வைப்போம்,அதில் லுங்கி கட்டியுள்ள ஆண்களை மட்டும் கவ்வி பிடிக்க பயிற்சி கொடுப்போம்,நம்ம ஊரில் திருடனெல்லாம் லுங்கித்தானே கட்டுவான்.அதுவும் கருப்பா தெரிபவனை கவ்வி பிடிக்க பயிற்சி அளிப்போம்.
இப்ப புரியுதா? நாய் ஏன் லுங்கி கட்டிய கருப்பு  வாட்ச் மேனை பிடித்தது என்று!

சரி, சார் வாட்ச் மேனை விசாரிக்க வில்லையா?’
விசாரித்தோம்,அவன் ஒரு அப்பாவி!
சரி, அந்த காவல் அதிகாரி சொன்னதை செய்ய முயற்சித்தோம்.
கிராமங்களில் பாதாள கொலுசுஎன ஒரு கருவி இருக்கும்.அது சிறு சிறு வளையங்களாக ஊசிபோல் கோர்க்ப்பட்டு ஒரு நீண்ட கயிற்றால் இணைக்கப் பட்டிருக்கும். கிணற்றில் நீர் சேந்தும் போது வாளி,தவலை போன்ற பாத்திரங்கள் விழுந்து விட்டால் அதை ஆழமுள்ள கிணற்றில் போட்டு துளாவி,விழுந்த பாத்திரத்தை மேலிருந்த வாரியாக எடுத்து விடுவார்கள்.
நான் அந்த மாதிரி சாதனம் யார் வீட்டிலாவது இருக்கின்றதா என பார்த்து வாங்கி வாருங்கள் என அலுவலக ஊழியர்களுக்கு சொன்னேன். அந்த உபகரணம் கிடைத்தது.

தினமும் நாங்கள் அனைவரும் அந்த பாதாள கொலுசுவை எடுத்துக்கொண்டு, கிணறு,குட்டைகளில் போட்டு துழாவுவோம்.எல்லா கிணறுகளையும் துழாவி விட்டோம்,இனி ஊரை ஒட்டிய குட்டைகளை பார்க்க வேண்டும்.
அடுத்த நாள் குட்டைகளைப் பார்த்து யாராவது ஒருவரை குளத்தின் நடுவே பாதாள கொலுசுவை போட்டு விட்டு கறையில் இருந்து இழுப்போம்,அப்படி செய்யும் போது ஒரு குட்டையில் அந்த மேசை உடைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது, தெரிந்தது.அந்த கொலுசு போய் மேசையில் மாட்டி இழுக்கும் போது கரைக்கு வந்து விட்டது.அந்த அதிகாரி சொன்னது போல் உள்ளூர் திருடன் தான் என்பதற்கு ஒரு ஆதாரம் கிடைத்து விட்டது.இந்த சேதியை மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளூர் காவல் அதிகாரியை சந்தித்து சொன்னோம்.
அதற்கு அந்த அதிகாரி, “திருடு போய் விட்டது,நீங்கள் புகார் அளித்தீர்கள்,திருடனை காண்டு பிடிக்க வேண்டியது எங்கள் வேலை.உங்களை யார் இந்த வேலையை செய்யச் சொன்னது?”
எங்களுக்கு ஒரே அதிர்சி!

என்ன,சார்,இப்படி கேக்கறீங்க?நாங்கள் புகார் அளித்தோம்,அதில் உங்கள் முயற்சி என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை, நாங்கள் சுயமாக முடிவெடுத்து தடயங்களை சேகரித்தோம் ,இது தவறா?’
அந்த அதிகாரி. ஒரு திருடனைப் பிடிக்க இன்னொரு திருடன் துணை தேவைப்படுகின்றது சார்,நாங்கள் திருடன் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டோம்,ஓரிரு நாளில் வெளிப்பட்டுவிடும்.என்றார்.அவர் சொன்னது போலவே ஓரிரு நாளில் திருடனை பணத்தோடு பிடித்து விட்டார்.
இது எப்படி சார் நடந்தது?’
        
             92-திருடு போன பணம் கிடைத்தது

அந்த போலீஸ் அதிகாரியின் வாயிலாக.......
அந்த திருடன் தினமும் இரண்டாவது சினிமா பார்த்துவிட்டு இரவு நேரத்தில் ஊரில் ஒதுக்குப் புறமாக இருக்கும் கரும்பு தோட்டத்திற்கு சென்று வருவதை ஒரு திருடன் கண்டு பிடித்தான்.அவன் தந்த உளவுத்தகவல் படி, நான் அவன் பின்னால் சென்று அவனுக்கு தெரியாமல் என்ன செய்கிறான் என கவனித்தேன்மேலும் அவர் சொன்னார்,
ஒரு லுங்கியில் பணக்கட்டுகளை சுற்றி ஒரு குழியில் மண்ணைப் போட்டு புதைத்து வைத்துள்ளான், நான் மற்றும் இன்னொரு காவல் துறை அதிகாரி இருவரும் சென்று கையோடு பிடித்து விசாரித்தோம்.
அவன் சொன்னான், ‘சார்,இவ்வளவு பணம் இருக்கும் என எனக்கு தெரியாது சார்.மேலும் அவன் சொன்னான், ‘ஒரு பணக்கட்டில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்பதும் எனக்குத் தெரியாது சார்,நான் செலவுக்கு 200 ரூபாய் எடுத்தேன் சார்,இந்த பணத்தை என்ன செய்யறது என எனக்கு தெரியலை சார்.மீதி பணம் இது தான் சார், இது.
மேலும் காவல் அதிகாரி விசாரித்ததில் அவன் தெரிவித்த தகவல்.
தினமும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வரும் ஆட்களோடு அவன் வந்துவிடுவான்,பணத்தை எங்கு வைத்து பூட்டுகின்றார்கள் என்பதை கவனித்துள்ளான். நான் வாரக் கடைசீயில் அலுவலகத்தில் தங்குவதில்லை என தெரிந்து கொண்டான்.

இரவு 9 மணிக்கு கிடங்கு காவலாளி சாப்பிட அருகில் உள்ள தன் வீட்டுக்கு சென்று விடுவான்.அந்த நேரம் பார்த்து,அலுவலகத்தில் நுழைந்து மேசை மீது பதித்திருந்த பணப்பெட்டியை கழற்ற முயன்று உள்ளான்.முடியாமல் போகவே பணப் பெட்டியோடு மேசையை தலைமீது தூக்கிக் கொண்டு கிடங்குக்கு பின்புற வாசல் வழியே கழனி பக்கம் உள்ள ஒரு குட்டைக்கு சென்று விட்டான்.
குட்டை அருகில் அந்த மேசையை உடைத்து அந்த இரும்பு பெட்டியை கல்லால் தாக்கி உடைத்து பணக்கட்டுகளை வெளியே எடுத்துள்ளான், உடைக்கப்பட்ட மேசை மற்றும் பணப் பெட்டியை அந்த குட்டையில் போட்டுவிட்டு பணக்கட்டுகளை ஒரு லுங்கியில் சுற்றி அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் புதைத்துவிட்டான்.

தினமும் இரவு நேரத்தில் அந்த பணம் வைத்த இடத்தில் உள்ளதா என சென்று பார்த்துவிட்டு வருவது இவன் வழக்கம்,என அப்பாவித்தனமாக அவன் சொல்லியதாக,  அந்த அதிகாரி சொன்னார்.
 மேலும் அந்த காவல் அதிகாரி சொன்னார்,
அவன்,ஒரு இளம் குற்றவாளி, தெரியாமல் தவறு செய்திருக்கலாம், அவன் திருந்த நாம் ஒரு வழி காட்ட வேண்டும்.தொடர்ந்து அவன் எங்கள் கண்காணிப்பில் இருப்பான்,திருந்தி விட்டானா? அல்லது தொடர் குற்றம் செய்பவனா? என்பதை எங்கள் துறை காவலர்கள் கண்கணிப்பில் வைப்பார்கள்,எனக்கு அனுப்பபடும் மாதாந்திர அறிக்கையில் அந்த இளம் குற்றவாளியை கண்காணிப்பேன்.’ அவர் சொன்னது ஏற்புடையதாக இருந்தது!
நான்கு பிரிக்கப்படாத 100 ரூபாய் கட்டுகளும்,ஒரு கட்டு பிரிந்த நிலையில் ரூ.500ம் குறைவாக மொத்தம்49 ஆயிரத்து,500 ரூபாயை கைப்பற்றி நீதி மன்றத்தில் ஒப்படைத்து விட்டு பத்திரிக்கைக்குத் தகவல் வெளியிட்டனர்.

நான் என் கிராமத்திற்கு சென்றேன்.எங்க அப்பா ஒரு சேதி சொன்னார். ஒரு காவல் அதிகாரி வந்தாண்டா,உன்னைப் பற்றி விசாரித்தான்,எவ்வளவு சம்பளம்,?எவ்வளவு வீட்டுக்கு தருகின்றார்? கடைசீயா எப்ப வீட்டுக்கு வந்தார்?என்றெல்லம் விசாரித்தான்.
இதை எல்லாம் இவன் ஏன் விசாரிக்கணும்?’ என சொல்லிவிட்டு மேலும் அவர் சொன்னார்,
ஒரு வேளை, நம்ம பையனுக்கு பொண்ணு குடுக்கப் போறானா என்று நான் யோசித்தேண்டா...!’ என்றார்.
அதன் பிறகு என் பாதுகாப்பில் இருந்த 50 ஆயிரம் பணம் திருடு போனதையும் திருட்டை கண்டு பிடிக்கும் வரை நான் ஊருக்கு போக கூடாது என காவல் துறை அதிகாரி உத்தரவு இட்டதையும் என் அப்பாவிடம் தெரிவித்தேன்.
இதைக்கேட்ட என் அண்ணா உட்பட அனைவரும்,

 ‘இவ்வளவு பணமா உன்னிடம் இருக்கும்?என்னா வேலைடா நீ செய்யற? எல்லாறும் கேக்கிறாங்க?’
நான் என்ன வேலை செய்யறன்னு சொன்னா உங்களுக்கு என்ன  தெரியும்?அதனால சொல்ல..ல.
மாதாமாதம் என்னுடைய சம்பளத்தை என் அண்ணனிடம் சேர்ப்பித்தேன்.


எனக்கு ஒரு உத்தரவு வந்தது, ‘உடனே அந்த புதிய கிடங்கை திறந்து அதில் நெல் மூட்டைகளை அடுக்க வேண்டும்என சொல்லப்பட்டது.
மண்டல அலுவலகத்திலும்,என்னோடு பணி புரியும் நண்பர்களும் , ‘புதிய கிடங்கை திறக்க வேண்டுமானால் பூசணிக்காய் உடைக்க வேண்டும்,கற்பூரம் கொளுத்த வேண்டும்.தேங்காய் உடைக்க வேண்டும்என்றனர்.
நான், ‘ஒரு எழவும் வேண்டாம்...........கிடங்கை திறந்து சுத்தம் செய்து கிரேட்டுகளை பரப்பி மூட்டைகளை அடுக்கும் வேலைகளை பாருங்கள்என்றேன்.
ஓரிரு வாரங்களில் 5ஆயிரம் டன் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை அடுக்கப்பட்டுவிட்டது.நான் உத்ரமேரூர் சென்ற ஒரு சில நாட்களில், மண்டல மேலாளர், (திரு.ராஜமாணிக்கம்,பின்னாளில் இவர் முதல்வர் கருணாநிதிக்கு தனிச் செயலாளராக பணி புரிந்தார்.) அவர்கள் நிர்வாகப்பிரிவு உதவியாளரை என்னிடம் அனுப்பினார்.அந்த உதவியாளர்,
சார்.உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாறுதல் செய்து தர உங்களிடம் ஒப்புதல் கேட்டு வரச் சொன்னார்என்றார், ‘திருவள்ளூருக்கே மாற்றல் செய்து தரும்படி கூறினேன்
                         ******

No comments: