Tuesday, December 3, 2019

இ.பி-18


                  74-திருவள்ளூர் பணி மாற்றம்

தன் மேசை மீது உள்ள பேப்பரை எடுத்தார் அதில்,
‘post him(என் பெயரை குறிப்பிட்டு) at Thiruvallur’ என எழுதினார்.
என்னிடம் கொடுத்து, ‘செக்ஷனில் கொடு என்றார்.
நான் செக்ஷனில் கொடுத்துவிட்டு மதுராந்தகம் சென்று விட்டேன்.எனது பெட்டி படுக்கையை எடுத்து வந்து விட்டேன்.
(ஒரு சிறிய கைப் பெட்டி அதில் ஒரு மடக்கு பாய்,காற்றுப்பை தலையணை,ஒரு லுங்கி,இரண்டு ஜட்டிகள்,இரண்டு பனியன்கள்,4 சட்டைகள் ,இரண்டு பேண்டுகள்,சோப்பு, சீப்பு கண்ணாடி,ஷேவிங் செட்டுஅவ்வளவுதான் )
காஞ்சிபுரத்தில் ஒரு லாட்ஜில் தங்கிக்கொண்டு தினமும் மண்டல அலுவலகம் சென்று வருவேன்.ஒரு நாள் என்னைப் பார்த்துவிட்ட  மண்டல மேலாளர் ,கடை நிலை ஊழியரை விட்டு என்னை வரச் சொன்னார்.

 நீ,ஏன் இங்கு சுற்றிக் கொண்டு இருக்கிற..?,உன்னை திருவள்ளூர் போகச் சொன்னேனே ,போகலையா?’
இன்னும் எனக்கு உத்தரவு தரவில்லை சார்!
யோவ்,நான் ஒரு டெபுட்டி கலக்டர்,நான் பேப்பரில் எழுதினால் கூட அது உத்ரவுதான்,நீ போய் திருவள்ளூரில் join பண்ணு.பண்ணிட்டு joinig report அனுப்பு,இவன் எவனும் உனக்கு உத்ரவு போடமாட்டான்! என்றார்.
நான் இந்த சேதியை செக்ஷனில் சொன்னேன்.அதற்கு அந்த பிரிவு கண்காணிப்பாளர்,
திருவள்ளூருக்கு போடச் சொல்லி எழுதிட்டாரு,அங்கே ஏற்கனவே வேலை செய்பவரை என்ன செய்யறது?.’ என என்னைக் கேட்டார்.
உடனே அவர் மண்டல மேலாளரை காணச் சென்றார்.சில நிமிடங்கள் கழித்து அந்த கண்காணிப்பாளர், ‘இருய்யா ஒரு உத்தரவு போட்டுத் தருகின்றேன்,கொஞ்ச நேரம் இருஎன்றார்.

திருவள்ளூர் வட்ட அரிசி ஆலை அரவை முகவர்களுக்கு இரட்டைபூட்டு அதிகாரியாக(DLO)என்னை நியமனம் செய்து ஆணை வழங்கினர்.
(1977-அக்டோபர் 20-ந் தேதி என நினைப்பு)
நான் பேருந்தை பிடித்து திருவள்ளூர் வந்து சேர்ந்தேன். மாலை 7 மணி ஆகிவிட்டது.
இரவு சிற்றுண்டி முடித்து ஒரு சைக்கிள் ரிக்சா மூலம் கவரைத் தெருவில்(இப்போது கம்பர் தெரு) உள்ள அலுவலகம் வந்தேன்.அலுவலகத்தின் காவலரை அணுகி மாடியில் உள்ள அறையில் தங்கிக் கொண்டேன்.
என் உடல் நிலை பாதிக்கப்பட்டு நான்கு நாள் வெளியே தலை காட்ட முடியவில்லை.கிடங்கு காவலரான திரு சொக்கலிங்கம் என்பவர் தான் என்னை கவனித்துக் கொண்டார்.அவருக்கு தெரிந்தவர் வீட்டில் கஞ்சி காய்ச்சி கொண்டு வந்து கொடுப்பார்.காய்ச்சல் குறைந்து விட்டது.
                      
                75-கீதா தரிசனம்

நான்கு நாள் கழித்து தெருவில் ஒரே சத்தமாக இருக்கின்றதே என நான் தங்கியிருந்த அறையின் மாடியில் இருந்து கவனித்தேன்.
பாவாடை சட்டை போட்ட இரண்டு பெண்கள்(11 அல்லது 12 வயதிருக்கும்)ஒருத்தி முதுகின் மேல் ஒருத்தி படர்ந்து சுழன்று சுழன்று(ரங்க ராட்டினம் அல்லது தட்டாமாலை என்று அதற்கு பேர்) விளையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே வயதுக்கு வந்த பருவ பெண்கள்  போல் தோற்றம் கொண்டவர்கள்.ஆனால் முன்னழகை மூட மனமில்லாமல் ரவிக்கை மட்டும் அணிந்து கொண்டு, விளையாட்டு பிள்ளைகளாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயசு,இருவரில் ஒருத்தி என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.என் மனதுக்குள்,

என்ன ஆயிற்று இவளுக்கு?என்னையே ஏன் பார்க்க வேண்டும்?’ என என்னையே நான் கேட்டுக் கொண்டேன். அவள் வீட்டிற்கு சென்று விட்டு பின் தனியாக வந்து என்னை உற்று நோக்கி நகர்ந்தாள்.ஏதோ குழந்தைத்தனமான செயலாக இருக்கும் என நான் நினைத்துக் கொண்டேன்.சரி, இருக்கட்டும்!
நான் எப்பொழுது கடைத்தெரு பக்கம் சென்றாலும் என் பின் தொடர்ந்தே வருவாள்,அவளுடைய அப்பாவுக்கு கடைத்தெருவில் பல சரக்கு கடை ஒன்று உள்ளது.நான் இரவு உணவு உண்ணும் நாடார் மெஸ்அந்த கடையின் அருகே 4 வீடுகள் தள்ளி இருக்கும்.
நான் இரவு உணவை முடித்துவிட்டு வெளியே வரும் வரை அவள் கடையில் காத்திருப்பாள்.நான் முன்னே செல்ல என் பின்னே பின் தொடர்வாள், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டோம்.இதே நிலை 1977 நவம்பரில் இருந்து 1979 மார்ச் வரை நீடித்தது. 

1978- பெப்புருவரியில் எனக்கு ஒரு ஆணை வந்தது. அப்போது கிடங்கு பொறுப்பில் இருக்கும் திரு ஜெயராமனை (தற்போது இவர் இல்லை,இறந்து விட்டார்) விடுவிக்கும் படி.
எனக்குப் பின் பணியில் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து அரசு ஆணை வந்து விட்டது!.அதன் விளைவே இந்த ஆணை.1978 ஆண்டு முதல் 1979 ஜூன் வரை திருவள்ளூரில்,
1-கிடங்கு பொறுப்பாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு    அதிகாரி
2- இரட்டைப்பூட்டு அதிகாரி,
3-நெல் கொள்முதல்(DPC) உதவியாளர்.
4-LCC-(RICE) LEVY COIIECTION CENTRE,பொறுப்பாளர், மற்றும்
5-சிமென்ட் வழங்கும் பொறுப்பாளர்- என அத்தனை
பொறுப்புமிக்க பணிகளை செய்யவேண்டும்-
அத்துணைக்கும்  sslc படித்த ஒரே உதவியாளர் (helper) மட்டுமே,(இவர் ஒரு in-complete BSc)அவரும் சளைக்காமல்(திரு சுப்பிரமணியம்) என்னோடு  பணி புரிந்தார்..எனது பணிச் சுமையையான எழுத்து வேலைகளை முழுவதும் எடுத்துக் கொண்டார். நேர்மையான ஊழியர்.

திருவள்ளூரைத் தவிர பெரிய குப்பம்,ஈக்காடு, கல்யாணகுப்பம், பூச்சிஅத்திப்பேடு, அகரம்,பண்ணூர் ஊத்துக்கோட்டை போன்ற இடங்களில் நெல் மற்றும் அரிசி சேமிப்பு கிடங்குகளை பராமரிக்க வேண்டும்.
இந்த இடங்களையெல்லாம் ஆய்வு செய்ய அவ்வப்போது அதிகாரிகள் வருவார்கள்.கிடங்கு உதவியாளரிடம் சாவியை கொடுத்து அந்த அதிகாரிக்கு உதவுமாறு அனுப்பி விடுவேன்.ஆனால், யாருக்கும் ஒரு டீகூட வாங்கித் தர மாட்டேன்.
டீவாங்கித் தரலைன்னா என்னய்யா? நமது நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாப்பாக வைத்துள்ளானா? அதுதான் முக்கியம்!
இப்படித்தான் மண்டல மேலாளர் தன் துணை நிலை அதிகாரிகளுக்கு சொல்வதாக என்னிடம் கூறுவர். 

இத்தனைக்கும் நான் இரட்டை பூட்டு அதிகாரி என்கிற முறையில் , ‘hulling bill’ எனப்படும் அரவை முகவர் அரவை கூலி பெற ஏதுவாக நான் அதற்கான பத்திர ஆவணங்களை வைத்து மண்டல அலுவலகம் சமர்பிக்க வேண்டும்.எனக்கு நேரமில்லாத காரணத்தால், திரு. வீரப்பநாயுடு எனும் அரவை முகவர் அவருடைய அரவைக் கூலியை சில மாதங்களாக பெறாமல் இருந்தார்.
அவரே தன் செல்வாக்கை பயன்படுத்தி மண்டல அலுவலகத்தில் பணி புரியும் அதிகாரிகளில் ஒருவரை அழைத்துவந்து தன் அலுவலகத்தில் தங்கவைத்து hulling bill-தயார் செய்துவிட்டார்.அந்த அதிகாரி ஒரு தாசில்தார், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘இன்று மாலை வீரப்ப நாயுடு அரிசி ஆலைக்கு வாருங்கள்என்றார்.
            
                76-மது அருந்த வேண்டும்

மண்டல அலுவலக அதிகாரி அழைப்பு என்றால் நான் அலட்சியப்படுத்த முடியாது.எனவே நான் அவரின் அழைப்பை ஏற்று அன்று மாலை அரவை ஆலைக்கு சென்றேன்.என்னை அந்த அதிகாரி வரவேற்ற வரவேற்பில் அன்பும் ஆதரவும் கலந்து இருந்தது.எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவர் மேலும் சொன்னார்,
சார்,நீங்க என்னோடு இன்று மது அருந்த வேண்டும்என்றார்.
சார் ,எனக்கு பழக்க மில்லை!
அதனால் என்ன இப்ப பழகிக்குவோம்
இல்லை,சார்,நான் கிளம்பரேன்

நான் ஒரு அதிகாரி சொல்றேன் என் பேச்சை honour பண்ண மாட்டியா?’ மேலும் அவர்,
மது அருந்துவதற்கு பழக்கம் தேவையில்லை,ஒரு புதிய அனுபவமாக இருக்கட்டுமே?’
வார்த்தைகளால் மடக்கி என்னை உட்காரவைத்து விட்டார்.ஒரு டம்பளரில் பாதி குடித்தேன்,சில நிமிடங்களில் என் கால்கள் இரண்டும் எங்கிருக்கின்றது என எனக்கு தெரியவில்லை,முற்றிலும் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற உணர்வு.
அந்நேரத்தில் என்னிடம் ஒரு hulling bill-ல் கையொப்பம் இடவேண்டும் என்றார்.நான் புதிய உணர்வுகளை அனுபவித்தாலும் என் சுய நினைவை இழக்க வில்லை, ‘சார் இந்த பில்லி்ல் கையொப்பம் இடவேண்டும் அவ்வளவுதானே, நான் நாளைக்கு காலையில் வந்து போடுகிறேன் சார், இப்போது வேண்டாம்,’ மேலும் நான்,

பிளீஸ்!,சார்,வெறுமனே என்னை கையெழுத்து போடச்சொன்னால் போட்டிருப்பேனே,அதற்கு எதற்கு இந்த அலம்பல் எல்லாம்,சரி பரவாயில்லை நாளை நான் சுய நினைவோடு வந்து போடுகிறேன் சார்,நான் போகிறேன்’,என புறப்பட தயாரானேன்,
ஆனால் என் கால்கள் என் பேச்சை கேட்க வில்லை,இதை அறிந்த அந்த அதிகாரி,
சார்,இருங்க ,உங்களை நீங்கள் இருக்கும் அறைக்கு விட்டு வர ஒரு ரிக்சாவை ஏற்பாடு செய்கிறேன்.என சொல்லிவிட்டு ஒரு ரிக்சாவை வரவழைத்து அதில் ஏற்றி விட்டு,அந்த ரிக்சா ஓட்டியிடும்,
சாரை பத்திரமா அவர் அறையில் சேர்த்துவிட்டு என்னிடம் வந்து சொல்என்றார்.
அவர் சொன்னது போல அந்த ரிக்சா ஓட்டி என்னை பத்திரமாக என் அறையில் விட்டுச் சென்று விட்டான்.
அடுத்த நாள் காலையில் சென்று அந்த hulling bill-கையெழுத்திட்டு விட்டு வந்தேன். 
           
           77- மண்டல மேலாளர் கேட்ட கடன்

ஒருமுறை மண்டல மேலாளர்,திருவள்ளூர் கிடங்கிற்கு வந்தார், ஆய்வை முடித்து விட்டு திரும்பும் போது,
நீ ஒண்டி கட்டைதானே?,ஒரு 50 ரூபா கொடு,ஆபிசுக்கு வந்தா வாங்கிக்க..என்றார்,நானும் கொடுத்தேன். சொன்னபடி அடுத்த அலுவலக மீட்டிங்கிக்கு காஞ்சிபுரம் சென்ற போது,கூப்பிட்டு அந்த 50 ரூபாயைக் கொடுத்தார்.இது போன்ற அதிகாரிகளை இன்னாளில் காண்பது அபூர்வம்.
ஒரு நாள் மண்டல மேலாளர் என்னை அழைத்தார், ‘திருவள்ளூர் அருகே தோமூர் எனும் ஊரில் ஒரு அரவை முகவர் நமது நிறுவனத்திற்கு 130 டன் நெல் தர வேண்டும்,ஒருவனும் அவனிடம் நெல்லை வாங்க உருப்படியான முயற்சியை மேற்கொள்ளவில்லை,
அவனிடம் போகிற அதிகாரிகள் காசு வாங்கிக்கொண்டு எதாவது சமாதானமா அறிக்கை தந்துவிடுகின்றனர்.நீ அவனை சந்தித்து அந்த நெல்லை வாங்க ஏற்பாடு பண்ணுய்யா
‘சரிங்க சார்’
அவர் சொன்னது போல் அந்த அரவை முகவரை சந்நித்தேன்,நெல்லை deposit செய்ய ஒத்துக் கொண்டார்.

அந்த அரவை முகவர் நெல்லை வைக்கும் போது ஈர நெல் மூட்டைகளை உள்ளே வைத்து வெளியே காய்ந்த நெல்லை என்னிடம் காண்பித்து வைத்து விட்டார்.நெல்லை அடுக்கிவிட்ட பிறகு,ஆய்விற்காக மேலாளர்(தரக்கட்டுபாடு) வந்தார்.நெல்லில் அதிக ஈரம் இருப்பதை கண்டறிந்து விட்டு என்னை சில கேள்விகள் கேட்டார்.
இந்த நெல்லை வாங்க உனக்கு யார் pressure கொடுத்தது?, யாருமே வாங்க முற்படாத நெல்லை நீ ஏன் வாங்கினாய்?’ என்றார்.
நான் பேசாமல் இருந்தேன், ‘என்னைய்யா? நான் கேக்கறன்....எதுவுமே பதில் சொல்ல மாட்டேங்கிற...?,நான் சொல்லும் வரை இந்த நெல்லை எங்கும் அனுப்ப கூடாது!என எழுதி விட்டு போய்விட்டார்.
இந்த சேதியை மண்டல மேலாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தேன்.ஒரு நாள் இரவு 10 மணி இருக்கும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ம.மே,
எத்தனை லோடு நெல் தேறும்என்றார்.
7 லோடுங்க சார்
சரி, நீ என்ன பண்ற,காலையில் லாரி பிடிச்சி,அந்த 7 லோடு நெல்லையும் திம்மாவரம் நவின அரிசி ஆலைக்கு அனுப்பிவிடு.
  சரிங்க சார்
நெல்லை அனுப்பிய சேதியை மேலாளர்(த.க) மோப்பம் பிடித்துவிட்டார்.7 லோடு நெல்லையும் silo வில் கொட்ட தயார் நிலையில் இருப்பதை அறிந்த அவர்,7 லோடுகளுக்கும் sample தயார் செய்து,ஆய்விற்கு அனுப்பிவிட்டார். அந்த ஆய்வில் ரூ.20,000.00க்கு எனக்கு recovery உத்ரவு போட்டார்.
அதற்கு கையெழுத்து போட்டவரும் மண்டல மேலாளர்.எனக்கு அப்ப சம்பளமே ரூ.250.00 தான்.
நான் மண்டல மேலாளரை சந்தித்து,
என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?’
சரிய்யா,எழுதி வைக்கிறான்,நான் கையெழுத்து போடாம இருக்க முடியுமா?,சரி பாத்துக்கலாம் விடுஎன்றார்.
அந்த மண்டல மேலாளருக்கு மாற்றுதல் உத்தரவு வந்து விட்டது.அவரே எனக்கு போன் செய்து,
ஏய்யா,உனக்கு 20 ஆயிரம் கட்ட சொல்லி உத்தரவு இருக்கே கட்டிட்றியா?’
என்ன சார்,இப்படி சொல்றீங்க?’
அங்க உக்காந்திக்கிட்டு என்னய்யா பண்ற? சீக்கிரம் வா,நாளைக்கு நீ என்னை பார்க்க முடியாது.
மாலை நாலு மணி இருக்கும்.நான் ம.மே வைப் பார்த்தேன்

இந்தா அந்த பைல்என்னிடம் கொடுத்தார்.
 நான் என்ன சார் செய்யணும்?
கிழிச்சிப் போட்டுட்டு போ
நான் பேசாமல் நின்றிருந்தேன். என்னய்யா,நான் சொல்றன்,பேசாம நிக்கிற..சீக்கிரம் எடத்தை காலி பண்ணு,அந்த ஆளு(மேலாளர்(த.க)) வந்துடப்போறான், அவன் காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கான்,அவன் கண்ணில் மாட்டாதே, பைலை எடுத்துக் கொண்டு ஒடிப்போய்விடு அந்த பைலை சுமார் 12 மாதங்கள் என் பாதுகாப்பில் வைத்திருந்தேன்.
யாரும் அதை கண்டு கொள்ளவில்லை,பின்பு ஒரு நாள் அதை கிழித்து குப்பை தொட்டியில் போட்டேன்.அதன் பின் ஒரு நாள் அந்த பைல்என்னாச்சு? என அப்போதைய AM(QC)திரு பி.பி.தேவராஜ், திருவள்ளூர் கிடங்கிற்கு ஆய்வு செய்யும் போது என்னை கேட்டார்.
எனக்கு ஒன்றும் தெரியாது சார்
இப்படி சொன்னா எப்படி?’

உண்மையில் எனக்கு ஒன்றும் தெரியாது சார்
அந்த அதிகாரியைத் தேடி(ஓசூருக்கு) இந்த அதிகாரி அந்த பைல் தொடர்பா விசாரிக்க சென்றுள்ளார்.சில நாள் கழித்து காஞ்சிபுரம் வந்த அந்த அதிகாரி என்னை வரச் சொல்லி பார்த்தார் அப்போது அவர்,
அந்த கஞ்சி (மலையாளியை,கஞ்சி என்றுதான் அவர் அழைப்பார்) என்னைத்தேடி வந்தான்ய்யா,எங்கிட்ட அந்த பைல் வரவே இல்லைன்னு சொல்லிட்டேன்
 சொல்லிவிட்டு, ‘நீ என்ன சொன்ன?’ எனக் கேட்டார்
எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டேன், சார்
 அவ்வளவுதான் போ
           
          78-300-டன் நெல்லை காணவில்லை !

1978-ல் திருவள்ளூர் இரட்டை பூட்டு அதிகாரியாக எனது கல்லூரி நண்பரும் காஞ்சிபுர மண்டல த.நா.நு.பொ.வா.கழக, திமுக தொழிற்சங்க தலைவருமான திரு,மணிபாலன் அவர்களை பணி நியமனம் செய்தார்கள்.
(இவர் தற்போது ஒய்வு பெற்ற நிலையில் திமுக வின் கும்மிடிபூண்டி மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.) 6 மாத காலம் பணியிலிருந்தபின் அவரை மாற்றி விட்டு மீண்டும் என்னையே திருவள்ளூர் வட்ட இரட்டை பூட்டு அதிகாரியாக(கூடுதல் பொறுப்பு) நியமித்தார்கள்.
அப்போது,திருவள்ளூரில் உள்ள ஒரு அரவை முகவரின்(திரு.வீரப்ப நாயுடு) அரிசி ஆலையை ஆய்வு செய்ய சென்றேன்.அவர் இருப்பில் இருக்க வேண்டிய 300 டன் நெல் காணவில்லை.இதனை ஒரு அறிக்கையாக காஞ்சிபுரம் மண்டல மேலாளருக்கு அனுப்பினேன். மண்டல மேலாளர்(பொறுப்பு) (திரு.ஒய்.ராமநாதன்), என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,
உடனடியாக நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து,அந்த அரவை முகவர் மீது ஒரு FIR பதிவு செய்ய சொல்லுங்கள்.அப்படி பதிவு செய்யப்பட்ட புகாரை நகல் எடுத்து எனக்கு அனுப்புங்கள்என்று அறிவுறுத்தினார்.அவ்வாறே நான் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.அந்த காவல் அதிகாரி உடனடியாக அந்த அரவை முகவரை கைது செய்ய புறப்பட்டார்.

இதில் வேடிக்கை என்ன வெனில்,அந்த மண்டல மேலாளர்,என்னை புகார் அளிக்கச் சொல்லிவிட்டு,அந்த அரவை முகவருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் உடனடியாக  anticipatory bail எடுக்கச் சொல்லி அறிவுறுத்தி விட்டார்.
அந்த காவல் அதிகாரி சுற்றித் தேடிப் பார்த்து விட்டு. அவர் கிடைக்க வில்லை,அவர் கிடைத்த உடன் நான் கைது நடவடிக்கையில் இறங்கிவிடுவேன்,சார்என என்னப் பார்த்து சொன்னார்.
என்னை இது தொடர்பாக இரண்டு அல்லது மூன்று முறை சென்னை உயர்நீதி மன்றம், துறை சார்ந்த சாட்சியாக அழைத்து விசாரித்தது,அதன் பிறகு அதன் முடிவு என்ன என்று எனக்கு தெரியவில்லை

No comments: