Wednesday, December 4, 2019

இ.பி-19


            79-சின்னதா வீடு கட்டச் சொன்னேன்

1978 கார்த்திகை மாதம்,அம்மாவின் நினைவு நாள் அனுசரிக்க கிராமத்திற்கு சென்றேன்.நிகழ்ச்சி முடிந்ததும் என் அண்ணாவைப் பார்த்து என்னிடம் சேமிப்பில் இருந்த ரூ5 ஆயிரத்தை கொடுத்து ஒரு சின்ன அறை கட்ட கடகால் போடுண்ணா,அம்மா படம் மாட்டி வைக்க ஒரு இடம் வேண்டும் அண்ணா,அம்மா,படம் இல்லாமல் நினைவு நாள் அனுசரிப்பது மனதுக்கு என்னவோ போல் உள்ளது,அண்ணா! (ஏற்கனவே இருந்த படம் மழை ஒழுகலில் நனைந்து கெட்டுவிட்டது.)
 சரிடாஒரு வாரம் கழித்து வீட்டுக்கு சென்றேன்,கொளுத்து மேஸ்த்திரி பேச்சைக் கேட்டு ஒரு 6 சதுரத்திற்கு கடகால் போட்டு விட்டார்.எனக்கு அண்ணா மேல் கோவமாக வந்து விட்டது

என்னன்ணா,இப்படி பண்ணிட்ட, எப்படி இவ்வளவு பெரிய வீடு நம்மால் கட்ட முடியும்?
ஒரு வீடுண்ணா,அது விசாலமா இருக்க வேணாமா? மேலும் அவர், ‘சரிடா ,மெல்ல மெல்ல கட்டிக்கலாம்டா!என்றார்.எனக்கு என் சம்பளத்தை சேமிக்கும் பழக்கம் வந்துவிட்டது,சுய இன்ப பழக்கங்களான,புகை பிடித்தல்,மது அருந்துதல்,இன்ன பிற பழக்கங்களுக்கு என்னை நான் உட்படுத்திக் கொள்ள வில்லை,மேலும் வீட்டு வாடகை என எதுவும் தர வேண்டியதில்லை,எனது சம்பளம் முழுவதும் சேமிப்பாக்கிவிட்டேன்.
அப்போது சிமென்ட் விலை ஒரு மூட்டைரூ.15 மட்டுமே.கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காகித உறை கொண்ட மூட்டைகள்.திருவள்ளூரில் எனக்கு தெரிந்த சிமென்ட உபயோகிப்பாளர் மூலம் வீட்டுவரி ரசிதுகளை திரட்டி 200 மூட்டைகளுக்கு உண்டான சிமென்ட்டை,  ஒரு லாரியில் ஏற்றி எங்கள் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்பினேன்.வீடும் கட்டி முடிக்கப்பட்டது.
                           ****
               80-என் சிந்தையை சீரழித்தவள்

இதற்கிடையே என்னை காலை,மதியம்,மாலை,இரவு என ஒரு நாளைக்கு நான்கு முறை நான் என் அலுவலகத்தை விட்டு வெளியே வருவேன்,அதாவது,காலை 8 மணிக்கு சிற்றுண்டி,மதியம் 12.45க்கு மதிய உணவு,மாலை 4 மணிக்கு போண்டா காபி, இரவு 8 மணிக்கு இரவு உணவு.
இந்த நான்கு வேளையும் என்னை பின் தெடர்பவள் கீதா. என் சிந்தையை சீரழித்தவள்.அவதான், என்னை முதன் முதலா வைத்த கண் விடாமல் பார்த்த அந்த மூக்கும் முழியும் உள்ள பாவாடை சட்டை போட்டவள் என்னை வசீகரித்தாள்!. நான் தலை குனிந்து வேலை செய்து கொண்டிருப்பேன்,என் கவனத்தை ஈர்க்க,கால் செருப்பை தரையில் தேய்ப்பாள்,தேய்த்து நடப்பாள்,நான் பார்த்தப் பின்பே நகர்வாள். அவள் அப்பாவிற்கு சொந்தமான பலசரக்கு கடையை தாண்டிதான் நான் மெஸ் சிற்கு செல்ல வேண்டும்.நான் உணவருந்திவிட்டு வரும் வரை என் வழி மீது விழி வைத்து காத்திருப்பாள்.நான் கடையறுகே வந்தவுடன் என்னுடன் நடை கட்டுவாள்.நான் பேசமாட்டேன்,அவளும் பேசுவதில்லை.

இரவு 9 மணி அளவில் தூங்கப்போய் விடுவேன்.அதுவரை நான் மேல் வெளி வெராண்டாவில் தெருவை வேடிக்கை பார்ப்பது வழக்கம்.இவளும் என்னைப் பார்க்க அடிக்கடி வெளியே வந்து பார்த்துவிட்டு போவாள்.இரவு 9.30 மணிக்கு வெளியே குப்பைகொட்ட வெளியே வருவாள்,குப்பை கொட்டியபின் நான் இருக்கும் திசை நோக்கி பார்ப்பாள், நான் இல்லை என்றால் இரும்பு முறத்தை தட்டுவாள்,நான் சென்று பார்க்கும் வரை முறத்தை ஒரு நிமிடம் இடைவெளி விட்டு,தட்டிக் கொண்டே இருப்பாள்.நான் பார்த்த பின் அவள் தூங்க போய்விடுவாள்.

இதற்கிடையே கடைத்தெருவில் ஒருநாள் கிருஷ்ண ஜெயிந்தி அன்று உறியடி திருவிழா! பொழுது போக்கிற்காக நான் வேடிக்கை பார்க்கச் சென்றேன்.அவளும் பின் தொடர்ந்தாள்.எனக்கு எதிரே என்னை பார்த்துக் கொண்டிருந்தாள்,கையில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு என்னிடம் தர எத்தனிப்பது எனக்கு புரிந்தது.என்னருகே வந்தாள்.என் கையில் திணித்தாள். அதை வாங்கிக் கொண்டேன்.என் அறைக்கு வந்து பிரித்து பார்த்தேன்,அது ஒரு கருப்பு நிற இங்க் பேனா!
அடுத்த நாள் ஒரு பொட்டலம் ‘சோன்பப்படி’ கொடுத்தாள். அப்படி ஒரு இனிப்பு உள்ளதை நான் அதுவரை பார்த்ததே இல்லை,சுவைத்ததும் இல்லை,!,அன்று தான் சுவைத்தேன்.அன்று ஒரு நாள் தீபாவளி,அன்றைய அதிரசத்தை ஒரு காகிதத்தில் சுற்றி  எனக்கு கொடுத்தாள்.                         
                                  *******
            

      81-திருமணம் செய்துகொள்வீர்களா?

அதே தெருவில்,இன்னொரு பெண் அவள் பெயர் எலிஸ்எனும் எலிசபத்.அந்த ஆண்டு கிறிஸ்த்துமசிற்கு விருந்துக்கு அழைத்தாள்.நானும் சென்றேன்.அவள் அம்மா,அண்ணா அனைவரும் வரவேற்றார்கள், அன்றைய தின பலகாரங்களை எனக்கு படைத்தனர்.
ஒரு நாள் என்னை கீதா பின் தொடரவில்லை,அன்று,இந்த எலிஸ் எனக்கு கடிதம் கொடுத்தாள்,அதில் ஒரு பக்கத்திற்கு என்னை வர்னித்தாள்,கடைசீ வரியில் நான் உங்களை விரும்புகிறேன்,என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் இந்த கடிதத்தை கிழித்துப்போடுங்கள்,யாரிடமும் இதைப் பற்றி கூற வேண்டாம்என எழுதியிருந்தாள், நான் பதில் கடிதம் தரவில்லை.                                             .                          
                         ****************** 
                       
                            82-சிறை வாசம் 

1979- மார்ச் மாதம்,தமிழகம் முழுவதும் மூன்றாவது சம்பள கமிஷனை எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அரசு அமல் படுத்தவேண்டி போராட்டம் நடக்கிறது.என்னை காஞ்சிபுரம் வரச்சொல்லி நண்பர்கள் அழைத்தார்கள். வேடிக்கை பார்க்கத்தான் போனேன்.எனது அலுவலக நண்பர்கள் சிறை நிரப்பும் போராட்டம் செல்ல  ஒரு வேனில் வேலூர் சிறைக்குச் செல்ல வரிசையில் நின்று விட்டார்கள்.
நானும் அந்த வரிசையில் நின்று ,நின்றிருந்த வேனில் ஏறிக் கொண்டேன்.அது நேராக வேலூர் சிறைக்கு சென்றது.அன்று இரவு எங்களை தங்க வைக்க இடமில்லாத காரணத்தால், சிறு குற்றம் புரிந்த ஏராளமான குற்றவாளிகளோடு அடைத்தார்கள். அங்கே ஒவ்வொருவருக்கும் ஜட்டியுடன், ஒரு போர்வை வழங்கப்பட்டிருந்தது.பெரும்பாலும் 20லிருந்து 25 வயது வாலிபர்கள்.நடு நிசி அங்கே கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சி அளித்தது! 
அவனவன் நின்று கொண்டு கையடித்துக் கொண்டிருந்தான்.புதிய இடம்,புதிய சூழல்,புதிய அனுபவம்,தூக்கம் வரவில்லை.

அடுத்த நாள், போராடும் ஊழியர்களான எங்களை  ஒரு dormetry யில் தங்க வைத்தனர்.காலையில் களி சாம்பார் கொடுத்தார்கள் மதியம் வழங்கப்பட்ட சாதத்துடன் கூடிய பீன்ஸ் சாம்பாரில் கொட்டை கொட்டையாக இரண்டு புழுக்கள் மிதந்தது,அதைக்கண்டதும் எனக்கு வாந்தியாக வந்தது.....!நான் சாப்பிட வில்லை,அடுத்த நாளும் சாப்பிடவில்லை,பசி வயிற்றை கிள்ளியது.மறுநாள் கொடுத்த சாதத்தில் இறந்து போன வண்டுகள் இருந்ததை தூர எறிந்து விட்டு மீதமுள்ள சாதத்தை சாப்பிட்டேன்.மாலை கொண்ட கடலை சுண்டல் தருவார்கள்.ஆறு மணிக்குஎல்லாம் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு சிறைக் கைதிகளை எண்ணிவிட்டு சிறையில் அடைத்து சிறைக் கதவை மூடிவிடுவார்கள்.

இரவு நேரத்தில் மூட்டைப் பூச்சிகள் படை எடுக்கும்.படுக்க முடியாது.பகலில் மூட்டைப்பூச்சி தொல்லை இருக்காது.எனவே பகலில் தூங்கிவிட்டு இரவில் கண்விழித்துக் கொண்டிருப்போம்.ஆளுக்கு ஒரு திண்ணை அதில் தான் படுக்க வேண்டும்.
இதற்கு முன் யாரோ பயன் படுத்திய ஒரு அலுமினிய டம்ப்ளர்,ஒரு தட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வேளையும் வரிசையில் நின்று கொண்டு தட்டில் உணவை வாங்கி சாப்பிட வேண்டும்,அதை கழுவி அடுத்த வேளைக்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.தினமும் காலை மாலை தட்டை தலைமீது வைத்து குத்துக் காலிட்டு உட்கார வேண்டும்.இது கைதிகளை கணக்கெடுக்கும் சிறைத் துறை விதி.

தினமும் சிறையில் எங்களை காணவரும் நண்பர்கள் பீடி பண்டல்களையும், சிகரட் பாக்கெட்டுகளையும் கொடுத்துவிட்டு போவார்கள்.சிறையில் இருக்கும் சக கைதிகளுக்கு(நோயளி கைதிகள்) வழங்கப்படும் வறுத்த மீன்,மாமிசம் போன்ற உணவுகளை பீடிகளுக்கும் சிகரெட்டுகளுக்கும் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.
பெரும்பாலான சிறைக் கைதிகள் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.அவர்களுக்கு தரப்படும் உணவுகளை பீடி,சிகரெட் வேண்டி முன் பதிவு செய்து கொள்வார்கள். எனவே என்னை போன்றவர்களுக்கு பீடிகளும்,சிகரெட்டுகளும் சிறையில் பண மதிப்பு கொண்டவை.உணவுக்காக பண்ட மாற்று செய்து கொள்வோம்.

நாட்கள் கடந்து கொண்டிருந்தன.நாங்கள் சிறையை விட்டு வெளியே வருவோமா?,அல்லது சிறைவாசம் தான் நிரந்தரமா? எனும் எண்ணம் எங்களை ஆட்கொண்டது.
பகலில் கொலை குற்றவாளிகளை பேட்டி காண்பது தான் எங்கள் பொழுது போக்கு.அப்படி நாங்கள் பேட்டி கண்டது அப்போது பிரபலமான(இப்போதும் தான்) கொலை குற்றவாளி , ‘தியாகு
இவர், 1968 டிசம்பர் 25-ல் தஞ்சை மாவட்டம்,கீழ் வெண்மணி கிராமத்தில்,  42 பேர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களை தூக்கத்தில் வைத்து குடிசைகளோடு தீயிட்டு அழித்த வழக்கில்,    

தஞ்சாவூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருப்பவர்.தியாகு வாயிலாக கேட்ட கதை இதோ!
இந்த கோபால கிருஷ்ண நாயுடு. எப்பொழுதும் தனியாக வெளியே செல்வதில்லை,முப்போதும் இரண்டு நாய்கள்
துணையுடன்தான் வெளியே வருவார்.ஒருநாள் நாய்களின்றி தனியே வந்துள்ளார்,இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை அரிவாளாளல் வெட்டி சாய்க்கப்பட்டார்.இதில் தியாகுக்கு தொடர்புண்டு என நிருபிக்கப்பட்டு அந்நாளில் சிறை வாசம் அனுபவத்தவர்.இவர் இன்றும் தனித் தமிழர் இயக்கத்தை தலைமை தாங்கி இயக்குகிறார். வேலூர் சிறையில் 10 நாட்கள் கழித்து விட்டேன்,11-ம் நாள் நான் ஜாமினில் எடுக்கப்பட்டேன்.என்னை ஏன் ஜாமினில் எடுத்தார்கள்?,யார் எடுத்தார்கள்? எனும் விவரம் எனக்குத் தெரியாது.

நான் சிறை வாசம் அனுபவித்த பின் தான் தெரிகிறது, ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சிறைவாசம் அனுபவிப்பது வாழ்க்கையில் ஒரு தனி அனுபவம் தான்.அது புது அனுபவமும் கூட ஆனால் நல்ல நோக்கத்திற்கு போராடி சிறை செல்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
12-ம் நாள் அரசு இணங்கியது,கோரிக்கை வெற்றி பெற்றதாக எங்கள் நிறுவன சங்கம் அறிவித்தது.நான் காஞ்சிபுரம் அலுவலகம் சென்று கிடங்கு சாவியைப் பெற்றுக் கொண்டு திருவள்ளூர் கிடங்கு பொறுப்பாளராக செயல்பட ஆரம்பித்தேன்.
                           ******
              83-பத்துநாளா எங்கே போனீங்க?

வழக்கம் போல் அன்று இரவு 8 மணிக்கு நான் சாப்பிடும் மெஸ்சுக்கு சென்றேன்,உணவு உண்ட பின் வழியில் ஒரு இருட்டுத் திண்ணையில்   கீதா அமர்திருந்தாள் .என்னை கண்டதும் என்னோடு இணைந்து கொண்டாள்.                         நான்,‘என்னாச்சு?,இங்கே..ஏன்..?..இப்படி..?’ என்றேன். நான் முதன் முதலில் அவளிடம் பேசிய வார்த்தைகள் அவை.
பத்து நாளா காணோமே... எங்க போனீங்க?
நான் வேலூர் சிறைக்கு சென்றதை அவளிடம் தெரிவித்தேன்.
ஏன் சிறைக்கு போனீங்க?
பேசிக்கொண்டே அவள் தோளை  கிள்ளினேன்!
நான் சின்னப் பொண்ணு,எங்க அக்கா உங்களை விரும்பராங்க.அவங்களை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.நல்லா இருப்பாங்க.

 அக்காவா...? யாரது?’அதிர்ச்சி அடைந்தேன்.
எங்க அக்காவை நீங்க பார்த்ததில்லையா?
இல்லை
எனக்கு உன்னைத்தாண்டி தெரியும்,உங்க அக்காவை எனக்கு எப்படித் தெரியும்?’
‘எங்க அத்தை வீடு தெரியுமா?’
‘தெரியாது’
‘நீங்க இருக்கிற வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும்.’ மேலும் அவள்,நான் அவங்களை எங்க அத்தை  வீட்டு மொட்டை மாடிக்கு அழைச்சின்னு  வர்ரேன்,உங்கள் வீட்டிலிருந்து பாருங்க,நல்லா இருப்பாங்க!என்றாள். 

இதற்கிடையே தி ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த திருமண விளம்பரத்தில், “wanted bridegroom” எனும் முகவரியில் திருச்சியில் உள்ள என் இனம் சார்ந்த பெண்ணுக்கு மணமகன் வேண்டிய விளம்பரத்தை பார்த்தேன்.அந்த முகவரிக்கு  என்னுடைய bio-data  அனுப்பி வைத்தேன்.

(எனக்குத் தெரிந்து எங்கள் சொந்தத்தில் பட்டம் படித்த பெண் இல்லையே அதனால் இது போன்று முயற்சியில் இறங்கினேன்)
இருவர் வந்தனர்.
வந்தவர்கள் என்னை சந்தித்து, ‘உங்களை எங்களுக்கு பிடித்துள்ளது.நீங்கள் வீட்டோடு மாப்பிள்ளையா இருக்க சம்மதம் என்றால் தொடர்ந்து பேசலாம்என்றனர்.அவர்கள் சொல்லி முடிக்கும் முன்னரே,
அய்யா,எனக்கு அதில் உடன் பாடு இல்லைஎன்றேன். அவர்கள் சென்று விட்டனர்.

No comments: