1982-83-ல் நாடு முழுவதும் இரு சக்ர வாகனப்புரட்சி நடக்கும் நேரம்.இந்தியாவில்
புல்லட்,ஜாவா,மற்றும் ராஜ்தூத்
ஆகிய மூன்று வண்டிகள் தான்.அவைகள் முறையே,ரூ.40.30,25 ஆயிரங்கள் கொண்டது.
அப்போது பஜாஜ் M-50 எனும் வாகனம் 7ஆயிரம் ரூபாய் என விளம்பரம் கண்டேன்.அதற்கு முன் பணமாக
ரூ.500 கட்ட வேண்டும் என்பது விதி.நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த
அலுவலகத்தில் ரூ 500 கட்டி ரசீது வாங்கி வீடு வந்தேன்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை.நான் குடியிருந்த
வீட்டின் படுக்கை அறையில் தெருவைப் பார்த்த ஒரு ஜன்னல் உண்டு.அதில் ஆள் உட்காரும்
அளவுக்கு அகலமான மேடை போன்று அமைப்பு இருக்கும்.அதில் உட்கார்ந்து கொண்டேன். நடு
இரவைக் கடந்து நான் அசாதாரணமாக அமர்ந்து இருப்பதைப் பார்த்த என் மனைவி,
‘ஏங்க,தூங்காம
எண்ண பண்றீங்க,இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கிங்க?
ஓன்று மில்லை,மோட்டார்
சைக்கிளுக்கு முன்பணம் கட்டி விட்டேன்.அது வந்தா வாங்க காசில்லை,அதை
யோசித்தேன் தூக்கம் வரவில்லை!.
‘அது
எப்ப வருமோ? அதுக்கு இப்பவே தூங்காம ஒடம்ப கெடுத்துக்கிறீங்க,பேசாம,படுங்க!,’
அதன் பிறகு வெஸ்பா ஸ்கூட்டர் விளம்பரம் கண்டேன்,அதற்கும்
ரூ 500.ஐ தேனாம்பேட்டை பிள்ளை&சன்ஸ்-ல்
கட்டிவிட்டேன்.அந்த ஸ்கூட்டர்-ஐப் பார்த்ததிலிருந்து அதன் வனப்பை கண்டு எனக்கு
தூக்கமே வரவில்லை. என்ன அழகு? அது மட்டுமல்ல
ஒரு நாள் மாலை நான் என் கிராமத்திற்கு செல்ல கவரைப்பேட்டையில் பேருந்துக்காக காத்திருக்கின்றேன், அப்போது
ஒரு இளைஞர், என் எதிரே புதிய எம்-50 ஐ கொண்டு நிறுத்தி,அதன் பெட்டியிலிருந்து ஒரு சீப்பை எடுத்து தலை சீவி
அந்த சீப்பை மீண்டும் அதன் பெட்டியில் வைத்து வண்டியை பூட்டி சாவியை பாக்கெட்டில்
வைத்து கடைக்கு போனாரே,’ சே......!,வாழ்க்கையில் வாங்கினா இந்த வண்டியைத்தான்
வாங்கணும்.....!’
அந்த கனவு
அவ்வளவு சீக்கரம் எனக்கு பலிக்கவே இல்லை...!
.
*********
என்னை திம்மாவரத்திற்கு ஏன் மாற்றினார்கள்,அந்த
சம்பவத்தை இங்கு விவரிக்க வேண்டும்.1983-ல்,நசரத்பேட்டைய கிடங்கில் நடந்த
சம்பவத்தை இங்கே விவரிக்க வேண்டும்.
அப்போது பூவிருந்தவல்லியில் ஒரு காங்கிரஸ் சட்டமன்ற
உறுப்பினர் இருந்தார்.உள்ளூர் வியாபாரிகளும் பக்கத்து கூட்டுறவு அலுவலக
அதிகாரிகளும் என்னை மாற்ற வேண்டும் என அந்த சட்டமன்ற உறுப்பினரிடம் புகார்
அளித்தனர். அடுத்த நாள் என் அந்த சட்ட மன்ற உறுப்பினர் பக்கத்து கூட்டுறவு
அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு,என்னை அழைத்துவர
இரண்டு அடியாட்களை அனுப்பினார்,வந்தவர்கள், ‘யார்
இங்கே அதிகாரி? உங்களை எம்எல் ஏ வரச்சொன்னார்’ என்றனர்.நான்
அவர்களிடம், ‘நான் அங்கு எல்லாம் வரமுடியாது...அவரை எங்க அலுவலகம்
வரச்சொல்லுங்கள்’ என்றேன்.
வந்தவர்கள்,
‘டேய்....நீ
என்ன பெரிய கொம்பா?
ஒரு எம் எல் ஏ
என்றால் அவருக்கு கீழேதான் எல்லா அதிகாரிகளும்...’என
சொல்லிக் கொண்டே என்னை தாக்கும் விதமாக நோக்கி வந்தார்கள்.நான் உடனே எழுந்து
கொண்டு , ‘சரி வாங்க போகலாம்’ என்று
அந்த சட்டமன்ற உறுப்பினரை பார்த்தேன்.அவர், ‘நீ
தான் நெல் வாங்கும் அதிகாரியா?’ என்றார்.
‘ஆமாம்
சார்’
நீ என்ன நெல்லை வாங்க சொன்னா வாங்கமாட்டேன் என
திருப்பிரியாமே?
தரம் நல்லா இல்லாத நெல்லை திருப்புரேன் சார்,தரமான
நெல்லை வாங்கிக் கொள்கிறேன் சார்.
‘அப்படி
எல்லாம் சொல்ல கூடாது..எல்லா நெல்லையும் வாங்கணும்’
அதை காஞ்சிபுரத்தில் இருக்கும் எங்கள் அதிகாரி சொல்லணும்
சார்!
‘அப்ப
நான் சொன்னா வாங்க மாட்டியா?’
‘மாட்டேன்
சார்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன்.
104-என் பேர் பேப்பரில் வந்தது
1979-ஜூன் மாதம் திருவள்ளூரில் நிகழ்ந்த சிமென்ட் பிரச்சினைப் போல் நசரத்
பேட்டையிலும் நிகழ்ந்தது.1983-ல் தமிழகத்தில் திரு. கருணாநிதி சட்டமன்ற
எதிர்க்கட்சித் தலைவர். எம்ஜியார் முதல்வர்.அப்போது சட்ட மன்றத்தில் சிமென்ட்
பிரச்சினையை எழுப்பிய திரு கருணாநிதி,
‘தமிழகத்தில்
சிமென்ட் ஊழல் தலைவிரித்தாடுகிறது, உதாரணத்திற்கு
நசரத்பேட்டை எனும் கிடங்கில் திருநின்றவூரில் இருந்து சிமென்ட் வாங்க,பேட்டை
கிடங்கிற்கு சென்ற நுகர்வோர் 10 பேர்களை,அங்கே கிடங்கு பொறுப்பாளரும் உதவி தர
ஆய்வாளருமான திரு.திருவேங்கடம், அடி ஆட்களை வைத்து அடித்துள்ளார்.உயிருக்கு பயந்து
சுவர் ஏறி குதித்து வந்த அவலம்....’ என
சட்ட மன்றத்தில் பேசிய பேச்சுக்கள், முரசொலி
மற்றும் முன்னணி நாளிதழ்களில் வெளிவந்தது.
இந்த செய்திகளை படித்த நான் மிரண்டு போய்விட்டேன்.காரணம்
அப்படியொறு சம்பவமே நடக்க வில்லை. உடனே நான் காஞ்சிபுரம் புறப்பட்டு அப்போதைய
மண்டல மேலாளர், திரு உன்னிக்கிருஷ்ணன், அவர்களை
அலுவலகத்தில் அடுத்த நாள் மாலை சந்தித்தேன்.
அப்போது அவர் என்னைப் பார்த்து,
“you became famous,I did not have such a cedit in my
life,உன் பேரு பத்ரிக்கையிலேயே
வந்திருக்கேய்யா!... கிடங்குக்கு வரும் பயனாளிகளை யார் விரட்டி அடிப்பார்கள்?,எனக்கு
தெரியாதா?அது மட்டுமல்ல,அந்த
கிடங்குக்கு மதில் சுவரே இல்லையே!இந்த செய்தியே பொய் என்று நான் காலையிலேயே
அரசுக்கு தகவல் தெரிவித்து விட்டேன்.நீ போ ஒன்றும் ஆகாது’
அதே ஆண்டு சில வாரங்கள் கழித்து,நெல்
வாங்க மறுத்ததாக நடந்த பொய் நாடகத்தை இங்கே விவரிக்க வேண்டும். ‘நல்ல
தரமான நெல்லை கூட வாங்க மறுக்கின்றார்,இந்த
உதவி தர ஆய்வாளர்’ என்பது
குற்றச்சாட்டு.இந்த தகவல் அதே திரு உன்னிகிருஷ்ணனிடம் சென்றது, மாவட்ட
ஆட்சியர்,அவரை மாற்ற வேண்டும் எனும் பேச்சுக்கு, ‘அவன்
நெல்லு வாங்கனாத்தான்,வாங்கிய நெல்லில் தரம் சரியில்லை என அவன் மீது நடவடிக்கை
எடுக்க முடியும்,வாங்காத நெல்லுக்கு நான் எப்படி நடவடிக்கை எடுக்க
முடியும்?’ என தகவல் தெரிவித்து விட்டு,ஒரு
நாள் பகல் ஒரு மணிக்கு அலுவலர் குழுவோடு கிடங்கிற்கு வந்தார்.
நான் வழக்கமாக மதிய சாப்பாட்டிக்கு வீட்டிற்கு சென்று
விட்டு பிற்பகல் 2 மணிக்கு கிடங்கி்ற்கு வந்தேன்.
ஏராளமான ஊர் மக்களும்,அதிகாரிளும்
வியாபாரிகளும் கிடங்கைச் சுற்றி நின்று கொண்டு என்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்
என்பதை வேடிக்கை பார்க்க ஆவலாக உள்ளனர்.
மக்கள் கூட்டத்தை விலக்கி நான் எனது மண்டல மேலாளரை
பார்த்து, ‘வணக்கம்’
வைத்தேன்.மா.மே அவர்கள்,
‘வாய்யா,இவர்தான்
தர ஆய்வாளர்’,என அங்கே கூடியிருந்தவர்களிடம் என்னை அறிமுகம்
செய்துவிட்டு, ‘என்னய்யா,நல்ல
நெல்லையெல்லாம் வாங்காம,திருப்பி விடுறியாமே?’என
என்னை கேட்டுவிட்டு,
‘இந்த,இந்த
sample ல் உள்ள நெல்லை திருப்பினாயா?’
‘சார்,இது
நல்லாத்தான் இருக்கு,இது போன்று நெல் வந்தா நான் ஏன் சார் திருப்ப போறேன்.?’ என்று
சொன்ன எனக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது,
இருப்பினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்
இருந்தேன்.
(அந்த
முன் மாதிரி நெல் நன்கு உலர்த்தப்பட்டு, காயவைத்து
புடைத்து தயார் செய்யப்பட்ட மாதிரி போல் உள்ளது.பழை நெல் போல் உள்ளது.)
அதற்குள் அந்த நெல்லை கவனித்து விட்ட அப்போதைய உதவி
மேலாளர் (த.க) திரு. எம்.ஆர்.கிருஷ்ணன், அவர்கள், அந்த
நெல்லை உன்னிப்பாக ஆய்வு செய்து,
‘இது பார்ப்பதற்கு நல்ல சுத்தமான நெல்போல்
தோற்றமளித்தாலும்,இது ஒரு பூச்சி தாக்குதலுக்கு உண்டான நெல்(insect bored grain)இதில் உள்ளது,
எனவே அவர் திருப்பியது சரிதான்,பூச்சி
தாக்குதலுக்கு உண்டான நெல்லை அவர் வாங்கியிருந்தால் இந்நேரம் இவர் suspend ஆகியிருப்பார்’
என்றார்.வந்தவர்கள்
அனைவரும் அமைதியாக திரும்பி போய்விட்டனர்.
அந்த ஆண்டு ஜூன் மாதம் திரு .உன்னிகிருஷ்ணனை மாற்றி
விட்டார்கள்.அடுத்து சேலத்திலிருந்து
திரு.சம்பத்IAS
எனும் அதிகாரி வந்தார்.(பின்னாளில் இவருடைய ஒரே மகளை எனது மகன் திரு வினோத்துக்கு
தனது பெண்ணைத்தர சம்மதித்து கடிதம் எழுதியிருந்தார், ஆனால்
அப்போது மகனுக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லாமல் போய்விட்டது.)
என்னை புரிந்து கொள்ளாத அந்த அதிகாரி அவருடைய சொந்த
ஊர்க்காரரான பக்கத்து கூட்டறவு துறை தனி அலுவலரின் பேச்சைக்கேட்டு என்னை மாற்றி
விட்டார். பின்னாளில் என்னை புரிந்து கொண்டு என் மீது போடப்பட்ட குற்றச்சாட்டு
குறிப்பாணை தவறு என உணர்ந்து ரத்து செய்ய ஆசைப்பட்டார்.ஆனால் establishment section அவர் கருத்தை ஏற்கவில்லை.
என்னை திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு மாற்றிவிட்டார்கள்.
தினமும் மதியம் சாப்பாடு கட்டிக் கொண்டு கிண்டிக்கு
பேருந்தில் சென்று,கிண்டியிலிருந்து செங்கல்பட்டிற்கு தொடர்வண்டியில் சென்று பின்
அங்கிருந்து பேருந்தை பிடித்து காலை 10 மணிக்கெல்லாம் திம்மாவரம் சென்று விடுவேன்,
அந்நேரத்தில் 1983 ஜூலை மாதம் 12ந்தேதி இளையமகன் ‘வசந்த்’ பிறந்தான்.
பிறக்கப்போவது பெண்ணாக இருந்தால் ‘வசந்தி’
என வைக்கலாம் என பிறக்கு முன்னே அந்தக் குழந்தைக்கு பேர் வைத்து விட்டோம்.ஆனால்
ஆண் குழந்தை என்பதால் ‘வசந்த’ என பெயர்
மாறியது. 1983,84,85 வரை அந்த ஆலையில்தான் பணி செய்தேன்.
1984-ஏப்ரலில் ஒருநாள் எனக்கு தொலைபேசித் தகவல் வந்தது.அதாவது,குழந்தை
வினோத்துக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு கைகால் இழுப்பு வந்து உள்ளூர் கிளினிக்கில்
சேர்த்துள்ளதாக.
நான் பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் பூந்தமல்லிக்கு
சென்று குழந்தையை பார்த்தேன்.
105-மூன்று
வயதில் தலைமகனுக்கு மறுபிறவி
குழந்தை மிரண்டு,மிரண்டு பார்க்கிறான்.என்ன செய்வதென்றே
தெரியவில்லை.குழந்தைக்கு அந்த நர்சு overdose மருந்தை கொடுத்துவிட்டாள். பேசி பிரயோஜனம் இல்லை,உடனடியாக சென்னை, நுங்கம்பாக்கம்
child trust
hospital –க்கு கொண்டு செல்லுங்கள் என சொல்லிவிட்டனர்.
கையில் காசில்லை.ஆம்புலன்சுக்கு கொடுக்க காசு இருந்தது,
ஏற்பாடு செய்து கொண்டோம்.நான் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு,
குழந்தை பிழைப்பானா எனும் நம்பிக்கை இழந்த நிலையில் மாலை4 மணிக்கெல்லாம் மருத்துவ
மனைக்கு கொண்டு போனோம்.
என் மனைவி அவளுடைய அண்ணனுக்கு தகவல் சொன்னாள்.இதற்கிடையே
மருத்துவமனையில் என்னை முன்பணம் ரூ.5 ஆயிரம் கட்டச் சொன்னார்கள். ‘இது அறக்கட்டளை
நிர்வகிக்கும் மருத்துவ மனைதானே? என் குழந்தைக்கு மருத்துவம் பாருங்கள்,நாளை பணம்
கட்டுகிறேன்’என்றேன்.அதெல்லாம் முடியாது பணம் கட்டுங்கள் என்றனர்.
நான் மருத்துவமனை பொறுப்பாளரை சந்திதேன். ‘இப்பவே பணம்
கட்ட என்னால் முடியாது,என் குழந்தையை திருப்பி கொடுங்கள்,நான் வேறு மருத்துவ
மனைக்கு எடுத்துச் செல்கிறேன்.’ என்றேன்.அதற்கு அவர் உடன் பட வில்லை,
‘குழந்தைக்கு வைத்தியம் பார்ப்பது எங்கள் நோக்கம்,
குழந்தையை குணப்படுத்தாமல் கொடுப்பது சரியல்ல,பணத்துக்கு ஏற்பாடு
செய்யுங்கள்,நாங்கள் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் உள்ளோம், இப்போது
குழந்தையை இடமாற்றம் செய்வது நல்லதல்ல’என்றனர்
அதற்குள் என் மைத்துணர் வந்துவிட்டார். ‘பணம் எவ்வளவு
செலவானாலும் பரவாயில்லை,நான் பணம் கட்டுகிறேன்.குழந்தைக்கு மருத்துவம் பாருங்கள்’
என்றார்.
அன்று மறுநாள் விடியற்காலை 3 மணிக்கு குழந்தையின் முனகல்
சத்தம் கேட்டது,
என்றார்கள். குழந்தையை
காப்பாற்றி விட்டார்கள்.தகவல் வந்து நாங்கள் போய் பார்த்தோம். மருத்துவர்கள்,
‘குழந்தை உயிருக்கு பயம் இல்லிங்க,சரி செஞ்சிடலாம்’ என்றனர்.
அப்போது எங்களுக்கு எற்பட்ட நிம்மதிப் பெறுமூச்சு,மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை.
குழந்தைக்கு primary complex எனும் இழுப்பு நோய்,மாதாமாதம் மருத்துவ செலவுக்கு ரூ.300
லிருத்து 500 ரூபாய் செலவாகும்.
அப்போது என் சம்பளமே மாதம் ரூ.520.00.வீட்டு
வாடகை.ரூ120.00,மற்றும் மீதமுள்ள ரூ 400.00ல் குடும்பம் நடத்தவும்,வேலைக்கு செல்ல
போக்குவரத்து செலவு என மாதா மாதம் துண்டு விழும்.
என் மைத்துனர்,அவ்வப்போது அவருடைய தங்கையை தொடர்பு
கொண்டு,
‘குழந்தைகளுக்கு உடல் நிலை எப்படிமா உள்ளது? எதாவது
செலவுக்கு பணம் வேண்டுமா?’ என கேட்டுக்கொண்டே இருப்பார்.என் மனைவியும்
‘தேவைப்பட்டால் நான் தகவல் தெரிவிக்கிறேன் அண்ணா,இப்போ எதுவும் தேவை இல்லை.’
என்பாள்.....பருப்பு வாங்கவே காசு இருக்காது!
வாராரம்,
பூந்தமல்லியிலிருந்து ‘வரா’-வைப்
பார்க்க திருவள்ளூர் வருவேன்.என் கை செலவுக்கு பணம் இருக்கா என விசாரித்து
அவ்வப்போது அவள் சேமிப்பிலிருந்து ரூ.100 அல்லது 200 தருவாள்.எனக்கு அவளிடம் பணம்
வாங்குவதில் சங்கடப்படுவேன் அப்போது அவள், ‘நீங்க என்ன சம்பாதிக்கிறீங்கன்னு
ராஜாத்திக்கு தெரியாது,அவளும் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என கேட்டதில்லை,ஆனால்
உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என எனக்குத் தெரியும்,உங்களுக்கு பணக் கஷ்ட்டம்
என்றால் அதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க மனம் இடம் தரவில்லை. என்னால்
தானே உங்களுக்கு கஷ்ட்டம்? எனக்கு ஒரு பையன் தானே,?அவனுக்கு
மருத்துவ செலவுன்னு பெரிசா எதுவும் இல்லை.நான் வேலை செய்யும் பள்ளியில், மாணவர்களுக்கு
ட்யூஷன் சொல்லித் தருகிறேன்.மாசம் 300 ரூபாய்க்கு மேல் வருகிறது,மாத
வாடகையும் 60 ரூபாய்தானே?
நான் பணத்தை சேமித்து என்ன செய்யப்போறேன்?மேலும்
அவள் சொன்னாள்,
‘நாம் இருவரும் சேர்ந்து தானே ராஜாத்திக்கு கஷ்ட்டம்
இல்லாமல் பார்த்துக்கணும்.?’
‘வரா’வுக்கு
மனைவி எனும் அந்தஸ்த்தை நான் தரவில்லை,இன்று
வரை தந்ததில்லை அதாவது ஜோடிபோட்டுக் கொண்டு சினிமா, சுற்றுலா
அல்லது சொந்த பந்தங்கள் என இட்டுச் சென்றதில்லை,அவளும்
கேட்டதில்லை,எத்தனை நாள் கழித்து நான் அவளைத்தேடி சென்றாலும்
புன்முறுவலுடன் வரவேற்பாள்,
இத்தனை நாள்
என்னைப் பார்க்க ஏன் வரவில்லை? என கேட்டதே
இல்லை.அவள் என் மனசாட்சியாகத்தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்,மனைவியாக
அல்ல!
இதற்கிடையே என்னை 1984-(ஏப்ரல்15&மே-ஜூன் 15)ல் எங்கள் நிறுவனத்தில் டெல்லிக்கு அருகில் உள்ள ஹாப்பூர் எனும்
இடத்தில்(INDIAN
GRAIN STORAGE INSTITUTE)
என்னை 2 மாத பயிற்சிக்கு அனுப்பினார்கள்.அப்போது பயிற்சி காலத்தில் 10 நாட்கள் study tour என உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள நைனிடால்,ஆக்ரா
என அழைத்துச் சென்றார்கள். பயிற்சிக்கு என்னோடு திரு ரகுநாதன் (உதவி தர ஆய்வாளர்)
வந்தார்.
அப்போது,அவர், ‘நாம் கட்சி சார்பற்ற ‘தரக்கட்டுபாடு
ஊழியர் கூட்டமைப்’பை ஏற்படுத்தலாம் என்றார்.(நான் அப்போது காஞ்சிபுரம் மண்டலத்தின்
LPF தொழிற் சங்கப் பிரிவின் துணை மண்டலத் தலைவராக இயங்கி
வந்தேன்.)
‘அது எப்படி முடியும்?’ என்றேன்.
‘நீங்கள்,காஞ்சிபுரத்தில் ஒரு கிளை உருவாக்குங்கள், மற்ற
மண்டலத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என திரு ரகுநாதன் கூறினார்.அவர் சொல்வது
எனக்கு சரி எனப்பட்டது.
ஜூன் இரண்டாம் வாரத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.பின்
திம்மாவரம் சென்று நவீன அரிசி ஆலையில் பணியில் இணைந்து கொண்டேன்.அந்நேரத்தில்
எங்கள் ஆலைக்கு நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர்(திரு.பி.எஸ் பாண்டியன்)
ஆய்வுக்கு வந்தார்.வந்தவர் திரும்பு முன்,
‘உங்களில்
யாருக்காவது பணியில் பிரச்சினை உள்ளதா?’ என
வினவினார். நான் முன்னமே தயாராக எழுதி வைத்திருந்த ஒரு மனுவை அவரிடம் நீட்டினேன்.
அந்த கோரிக்கை மனுவில்,
‘ஆலை
தொழிலாளிகளுக்கு dust
allowance வழங்கப்படுகிறது,அதே
வளாகத்தில் பணி புரியும் நிர்வாகப்பிரிவு ஊழியர்களான எங்களுக்கும் அவர்களுக்கு
நிகராக, dust allowance
வழங்கிட
ஆணையிடவேண்டும்’எனும் கோரிக்கை வைத்தேன். படித்து பார்த்தவர், ‘நல்ல
கோரிக்கை தான்.நான் தலைமை அலுவலகம் சென்றதும் இதற்கான உத்தரவை பிறப்பிக்கிறேன்’.என
சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
அன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள நவீன அரிசி ஆலை
நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு தினமும் ரூ7.00 வீதம் மாத சம்பளத்தோடு வழங்கப்பட்டது.இன்று
ரூ.20 வழங்கப்படுவதாக அறிந்தேன்.
திரு எம் ஆர் கிருஷ்ணன் நவீன அரிசி ஆலையின் உதவி மேலாளர்,அவரும் நானும் சேர்ந்து திரு முனிரத்தின ரெட்டி எனும் உதவி தர ஆய்வாளர் மற்றும் திரு அன்பழகன் ஆகியோர் தலா 2500 போட்டு 10 ஆயிரத்தில் ஒரு லாரியை due அடிப்படையில் எடுத்து ஆலையில் shunting அடிக்க விட்டோம்.அதனை இயக்கும் பொறுப்பை திரு ரெட்டியிடம் ஒப்படைத்தோம்.
சில மாதங்கள் போட்ட முதலுக்கு வட்டி வழங்கி வந்த திரு.ரெட்டி
லாரி நஷ்ட்டத்தில் இயங்குகிறது என கூறினார்.அப்படியானால் அந்த லாரியை ,ரெட்டியே
எடுத்துக் கொள்ளட்டும் என நாங்கள் விலகிவிட்டோம். திரு.ரெட்டி அந்த லாரியை தன்
மனைவி பெயருக்கு மாற்றி விட்டார்.எவனோ ஒருவன் இந்த சேதியை தலைமை அலுவலகத்துக்கு ‘மொட்டை
பெட்டிஷன்’ போட்டு விட்டான்.மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.அவர் வழி
காட்டுதல் பேரில் நாங்கள் யாரும் தன் பெயருக்கு சொத்து வாங்குவதை தவிர்த்தோம்.
**********
No comments:
Post a Comment