Friday, December 13, 2019

இ,பி-26


           106-நான் ஒரு டிவி மெக்கானிக்

சிறு வயதிலிருந்தே எனக்கு, என்னுள் ஒரு கேள்வி எழுந்து   கொண்டே இருக்கும்.எங்கோயோ ஓலிபரப்பப் படும் ஒலி நமது காதுக்கு ட்ரான்சிஸ்ட்டர் மூலம் எப்படி கேட்கிறது?அந்த ட்ரான்சிஸ்ட்டரை எப்படி பழுது பார்ப்பது? ஒலியை ஈர்த்து ,ஒலியை எப்படி பெருக்கி நம்மால் கேட்க முடிகிறது?
அது போன்று தொலைக்காட்சி வந்த போது அதைப்பற்றிய ஆய்வுகளை நான் மேற்கொண்டேன். என்னுள் எனக்கு எழுந்த கேள்வி, ‘நாம் என்ன படித்து என்ன பிரயோஜனம்,அறிவியலில் சுத்த சூன்யமாக உள்ளோமே?
அப்போது தான் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் மாலை நேர வகுப்பாக தொலைக்காட்சி பழுது பார்க்கும் வகுப்பு துவங்கப்பட உள்ளதை தினசரி மூலம் அறிந்தேன்.அதற்கு முன் பணமாக ரூ 500 கட்ட வேண்டும் என்றனர்.மாலை ஆறு மணிக்கு வகுப்புகள் துவங்கும்,6 மாதங்கள் பயிற்சியில் ஈடு படவேண்டும்.இது எனக்கு துணை வருவாயை ஈட்டித்தரும் தொழிலாக அமையும் என கணக்கு போட்டேன்.
மேலும் திம்மாவரத்திலிருந்து தொடர்வண்டியை பிடித்து மாலை 6 அல்லது 6.30க்கு வகுப்புக்கு வந்துவிடலாம். வகுப்பு முடிந்து,இரவு 9 மணிக்கு பூந்தமல்லியில் இருக்கும் வீட்டுக்கு போய் சேர்ந்து விடலாம்.
வகுப்பில் தொடர்ந்து படித்து வந்தேன்.

 எலக்ட்ரானிக்ஸ்என்றால் என்ன? ஒலி,ஒளியை எவ்வாறு மாற்றுகிறது?. வீட்டில் தொலைக்காட்சி எப்படி இயங்குகிறது? போன்ற தொழில் நுட்பத்திற்கு என்ன மூலப்பொருட்கள் தேவை போன்ற அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொண்டேன்.பழுது பட்ட தொலைக்காட்சி பெட்டியில் எந்த பொருள் கெட்டுவிட்டதை எப்படி கண்டறிவது போன்ற தொழில் நுட்பத்தை கண்டிறிந்தேன்.தேர்வு காலம் இன்னும் சில நாட்களே இருந்தன.அதற்குள் ஹாப்பூர் செல்ல வேண்டியதாயிற்று.
1984-ல் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஏரி எதுவாயில் இருந்தது.அப்போது நான் 1979-ல் வைக்கப்பட்ட சவுக்குத்தோப்பை வெட்டி சென்னைக்கு அனுப்பினேன்.சவுக்கு சரியாக முத்தாமலே வெட்டும் சூழலை என் அண்ணந்தம்பிகள் உருவாக்கிவிட்டனர். காரணம் அந்த நிலத்தை விற்க வேண்டும் எனும் நிலைக்கு வந்து விட்டனர்.
சவுக்கு நாத்து வாங்கி நிலத்தை சீர் செய்து,அதை நடவு நட்டு வளர்த்து வெட்டி முடிக்க மனைவியின் நகைகளை அடகு வைத்து அப்போதே ரூ 5ஆயிரம் ஆனது.சவுக்கு கட்டைகளை விற்று வந்த பணமோ ரூ7 ஆயிரம்.நகையை மீட்க ரூ.6500 ஆனது.இதில் லாபம் எதுவும் இல்லையே என என் அண்ணாவிடம் தெரிவித்தேன்,அவர் நம்பினாலும் என் சின்ன அண்ணாவும்,அண்ணியும் நம்ப வில்லை.இன்றளவும் நம்பவில்லை.

எப்படியும் ரூ50 ஆயிரம் வந்திருக்கும் என வதந்திகளை பரப்பிவிட்டனர்.செலவெல்லாம்போக ரூ 25 ஆயிரங்களை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.      என்றனர்.
நிலம் எல்லாருக்கும் பொது தானே அதில் வந்த வருமானத்தை எல்லாருக்கும் பங்கு கொடுத்திருக்க வேண்டும் என்றனர்.இல்லாத பணத்தை எப்படி பங்கு போடுவது? நாத்து நட எவ்வளவு செலவானது,மரம் வெட்டி எவ்வளவு வந்தது என என் பெரிய அண்ணாவுக்கு தெரியும் அந்த 5 ஏக்கர் நிலமும் பட்டா செய்யப்படாமல் இருந்தது.அதை பட்டா செய்ய வேண்டும் என்றால் எங்க மாமா(பெரிய அக்கா கணவர்) கையெழுத்திட வேண்டும்.அடுத்து அனக்காபுத்தூரில் உள்ள எங்கள் பங்காளி அண்ணா திரு நடராஜன் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.அந்நாளில் எங்க அப்பா நிலத்தின் மதிப்பை பேரம் பேசி பணத்தை கட்டிவிட்டால்,நாளடைவில் அந்த நிலம் கிரையம் செய்யப்பட்டதாக அர்த்தம். பத்திர பதிவு செய்யப்படுவதில்லை. இது அந்நாளில் உள்ள சம்பரதாயம்.
ஆனால் இப்பொழுது பதிவு செய்யப்பட்ட பத்திரம் இருந்தால் மட்டுமே நிலத்தை பேரம் பேச முடியும்.அதற்காக எங்கள் மாமா,மற்றும் பங்காளி அண்ணாவை அழைத்து வந்தோம்.நிலம் பத்திர பதிவின் போது எங்க மாமா,ரூ 5 ஆயிரம் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவேன் என அடம் பிடித்தார்.ஆனால் பங்காளி அண்ணாவோ,

அதெல்லாம் தேவை இல்லை அன்றே மொத்த பணத்தையும் வாங்கி விட்டோமே. பத்திரப்பதிவு கால கழிந்து செய்யப்படுவதால் அதற்கு காசு கேட்பது நியாயம் இல்லை.என்று கூறினார்.ஆனால் எங்க மாமா அடம் பிடித்தார்.பின்பு நாலாயிரம் தருவதாக சொன்ன பின் வாங்கிக் கொண்டு கையெழுத்திட்டார்.எங்கள் பங்காளி அண்ணாவோ வெறுமனே கையெழுத்திட்டார்.
நிலத்தின் மொத்த மதிப்பு ரூ 25 ஆயிரம் தான்.செலவெல்லாம் போக ரூ 20 ஆயிரத்தை நால்வர் பங்கிட்டுக்கொண்டோம்.அப்போது நான்,
அண்ணா, தம்பி கல்யாணத்திற்கு 12 ஆயிரம் நகை அடகு வைக்கப்ட்டது.அதை மீட்க தற்போது ரூ 5 ஆயிரம் தேவை படுகிறது,நீங்கள் ஆளுக்கு ஆயிரம் கொடுத்தால் போதும் என்றேன்.
தம்பி மட்டும் ரூ ஆயிரம் கொடுத்தான்,மற்ற இருவரும் அப்புறம் தருகிறேன் என்று சொன்னார்கள்.சொன்னதோடு சரி.நானும் மீண்டும் கேட்க வில்லை அவர்களும் தரவில்லை.அதே நாளில் வீட்டில் பொது வாக பயிடப்பட்டிருந்த கழனி, வீட்டை சுற்றியுள்ள தோட்டப்பயிர் வைத்து பராமரிக்கப்பட்டிருந்த நிலங்களை பங்கு போடவேண்டும் என்றனர்.
1982-ல் தம்பி மற்றும் அக்கா பெண்(வனஜா) கல்யாணத்திற்கு அப்போது ரூ.12 ஆயிரம் ஆனது,ஆனால் தம்பி கொடுத்ததோ ரூ.ஆயிரம்.இது என்ன கணக்கு என எனக்கு தெரியவில்லை.
               
            107-பாகப்பிரிவினை

சுமார் 60 ஆண்டு காலம் தோட்டப்பயிர்(பணப் பயிர்) செய்து குடும்ப வளர்ச்சிக்கு காரணமான எங்கள் அத்தைக்கு சொந்தமான நிலத்தை மொத்தமாக தம்பிக்கே கொடுத்துவிடுவது என முடிவெடுத்தோம். மீதமுள்ள பட்டா செய்யப்படாத நத்தம் புரம்போக்கு நிலங்களை நாங்கள் மூவரும் பங்கிட்டு கொள்வது என முடிவெடுத்தோம்.அப்போது பேசாமல் இருந்த என் தம்பி பின்னாளில் எனக்கு ஒதுக்கப்பட்ட புரம்போக்கு நிலத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். ...அவனிடம் சண்டை போட்டா வாங்க முடியும்?
2010-ல் கிராமத்தில் நடந்த சம்பவம்.தம்பியின் அநாகரிகப்போக்கும்,காட்டு மிரண்டி தனத்தையும் பார்த்து, மகன் வசந்த மிரண்டே விட்டான்.

என்னப்பா, சித்தப்பா இப்படி நடந்து கொள்கிறார்?’ என என்னைப் பார்த்து வினவினான். கிராமத்து மக்களின் வன்முறையும்,அசிங்கமான வார்த்தைகளையும் அதுவரை கேட்டறியாத என் மகன் மிரண்டு விட்டான்.
இனி இந்தப்பக்கமே நாம் வரவேண்டாம்பா! என்றான்.
அப்படி என்னதான் செய்தான் தம்பி தெரியுமா?
ஊரில் ஒரு பத்து பேர் உட்கார்ந்து நியாயம் பேசும் போது என் தம்பி,எங்கள் எதிரே வந்து நின்றான்,ஒரு பக்கத்தில் என் சின்ன அண்ணாவும்,இன்னொரு பக்கத்தில் என் இளைய மகன் வசந்தும் இருக்கின்றனர்.அப்போது என் தம்பி,
இவனா ? எனக்கு கல்யாணம் செய்தான்! இவனா என்னை நிலை நிறுத்தினான்? லவடக்காபால்,’ என ஒரு கல்லை தூக்கிக்கொண்டு என்னை தாக்க வந்தான்.ஊரில் உள்ளவர்கள் அவன் செயதது தவறு என யாருமே அவனை கண்டிக்க வில்லை.
சின்ன அண்ணாவும், ஏண்டா இப்படி செய்யற? என ஒரு வார்த்தை அவனைப்பார்த்து கேட்க வில்லை! ஆம் நான் படித்தவன்,அவன் படிக்காதவன்.
படிக்காதவன் எது செய்தாலும் ஊர், அவன் பக்கம் தான் இருக்கும்.காரணம் ஊரே படிக்காதவர்கள் வாழும் ஊர்.படித்தவனுக்கும் பணம் உள்ளவனுக்கும் ஊர் நியாயம் பேசாது.வா,போகலாம் என அழுது கொண்டே வந்து விட்டோம்.(தம்பியின் தடாலடி வேலைகளை பின்னால் கூறுகிறேன்
                         *******

           108-தரக்கட்டுப்பாடு ஊழியர் சங்கம்

1985-ல் காஞ்சிபுரத்தில் தி.மு.க,அதிமுக போன்ற வலிமையான தொழிற்சங்கத்தை எதிர்த்து, தரக்கட்டுபாடு ஊழியர்களை தனியாக பிரித்து அரசியல் சார்பற்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் செயலாளராக நான் இயங்கினேன்.1985-ல் தர ஆய்வாளர் பதவி உயர்விற்கு என்னை அதற்கான பேனல்லில் சிலர் செய்த சதியால் சேர்க்கவில்லை. அந்த ஆண்டு எனக்குப் பின் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் தர ஆய்வாளாராகிவிட்டனர்.
1982-ல் எங்கள் நிறுவனத்தின் மூலம் திருவள்ளூரில் உள்ள வீட்டு மனையில்,வீடு கட்ட கடன் வாங்க அனுமதி கோரியிருந்தேன்.
                     
                109-திருவள்ளூரில் கடகால்

அந்த கடன் எப்படியும் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் மூன்றாண்டு கழிந்து விட்ட நிலையில்,1985-கார்த்திகை மாதம்,திருவள்ளூரில் இப்போது உள்ள வீட்டுக்கு கடகால் போட ஆயத்தமான வேலைகளில் ஈடுபட்டேன்.பூந்தமல்லியிலி இருந்து மனைவியுடன் திருவள்ளூருக்கு வந்தேன்.
திருவள்ளூரில் உள்ள வரா வீட்டுக்கு வந்தோம்.
இன்முகத்துடன் வரவேற்ற வரா இருவருக்கும் சிற்றுண்டி அளித்தாள்.பின்பு அந்த வீட்டின் உரிமையாளரான திருமதி ராதா அவர்களை அழைத்துக் கொண்டு மனை அமைந்திருக்கும் பத்தியால்பேட்டை அருகே அமைந்துள்ள (இப்பொழுது கண்ணதாசன் நகர்) புதிய வீட்டு மனைக்கு வந்து மேஸ்த்திரியுடன் கடகால் போட வந்தோம். அப்போது மேஸ்த்திரி, ‘சார் ,கடகால் போடணும் அப்படின்னா,சில சடங்குகள் செய்ய வேண்டும்’ என்றார்.

‘என்ன சடங்கு?’
‘கடகாலுக்கு குழி தோண்டுமுன் மூன்று செங்கற்களை வைக்க வேண்டும், அதற்கு குங்குமம் மஞ்சள்,பூ வெத்திலை பாக்கு தேங்காய் வாங்க வேண்டும்’ அதெல்லாம் எதுக்கு?எதாவது சாப்பிடும் பொருள் வேண்டுமா,வாங்கித்தருகிறேன்,இந்த குப்பை கூளத்தை எல்லாம்,வாங்க மாட்டேன்,உங்களுக்கு என்ன? நான் சொல்லும் வேலையை வாங்கிக் கொண்டு,சம்பளத்தை வாங்கிச்செல்’
‘அதெல்லாம் ஒரு சாஸ்த்திரம் சார்.’

‘எனக்கு சாஸ்த்திரம் வேண்டாம்’
‘சரி நானே வாங்கி வருகிறேன்,என சொல்லி அவரே எதோ வாங்கி செய்தார்,நானும்,நமக்கு வேலையாகணும் எத்தையாவது வாங்கி எதையாவது செய்யட்டும், இன்றைக்கு இவர் கூலி என்னவோ அதை கொடுத்து ஆகணும்,குழி தோண்டும் அன்றைக்கு முழு நாள் வேலை செய்யமாட்டான்.நானும் அன்று முன்பணமாக அடுத்த நாள் செய்வதற்கான காசை கொடுத்துவிட்டு ராஜாத்தியை பூந்தமல்லிக்கு பேருந்தில் ஏற்றிவிட்டு,மோட்டார் சைக்கிளில், காஞ்சிபுரம் சென்று விட்டேன்.
அந்நேரத்தில் என்னை நெல் கொள்முதல் செய்ய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூருக்கு  மாற்றினார்கள். 

(அப்போது திருவாரூர், நாகை மாவட்டங்கள் பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது)

எனக்கு தஞ்சாவூர் சென்று பணி புரிய உடன் பாடு இல்லை.இருப்பினும் ஆணையை மதிக்க வேண்டும் எனும் நோக்கில்,நான் தஞ்சாவூருக்கு சென்று பணியில் சேர்ந்தேன், அன்றே திருவாரூருக்கு அனுப்பினார்கள், திருவாரூர் நவீன அரிசி ஆலையில் பணி.
ஆனால் என்னை ஆலையில் பணி செய்ய அந்த அதிகாரி அனுமதிக்கவில்லை,மாறாக என்னை திருவாரூர் ரயில் முனையில் பணியாற்ற வேண்டும் என என்னை ஜீப்பில் ஏறச் சொன்னார்கள்...நவீன அரிசி ஆலைக்கும் ரயில் முனையத்திற்கும் 200 அடி தூரம்தான் இருக்கும்...நான் நடந்து வருகிறேன்...கிட்டதானே இருக்கு.. இதுக்கு ஏன் ஜீப்?....நான் சொல்வதை அதிகாரி கேட்கவில்லை.உடனே ஏறுங்கள் என என்னை வேகப்படுத்தினார்..எனக்கு ஒன்றும் புரியவில்லை...200 அடி தூரத்திற்கு ஏன் ஜீப் சவாரி...இதில் எதோ சூட்சமம் இருக்கு என கருதினேன்....ஜீப்பில் ஏறி ரயில் முனையத்தில் விட்டுவிட்டு இங்கே வேகனில் நெல்லைப்பிடித்து ஏற்ற வேண்டும் என்றனர்...
உடனே பணத்தை பிடி...டாக்குமெண்ட்களை பிடி..என்றனர்.அவ்வளவு வேகமா?..ஏராளமான நெல்மூட்டைகளை கொண்ட ஏராளமான லாரிகள்...! ஒரு கணம் யோசித்தேன்....

நாம் காஞ்சிபுரம் மாவட்டம்...தஞ்சாவூரில் இந்த பணியில் சேர்ந்தால் அவ்வளவு எளிதில் இந்த மையத்தை விட்டு போகமுடியாது...உடல் நிலை சரியில்லா குழந்தைகள்..தனியே மனைவியை குழந்தைகளோடு தவிக்கவிட்டு இங்கு பணி செய்வதா?..திமுக சங்கத்தை  விட்டு விலகியதால் சங்கத்தலைமை செய்த சூழ்ச்சி இது என புரிந்து கொண்டேன்.பக்கத்தில் உள்ள சக ஊழியரிடம்
சார்,ஒரு 5 நிமிடம் பொருங்கள்..நான் தங்கியிருக்கும் லாட்ஜிக்கு சென்று வருகிரேன்.என சொல்லிவிட்டு நேரே நான் தங்கியிருந்த அறைக்கு சென்று காலி செய்துவிட்டு தபால் அலுவலகம் நோக்கி பயணித்தேன்..அருகில் உள்ள தந்தி அலுவலகத்தில் காஞ்சிபுரம் மண்டல மேலாளருக்கு,
உடல் நிலை பாதிப்பு  15 நாட்கள் மருத்துவ விடுப்பு வேண்டும்என தந்தி அடித்து விட்டு நேராக நாகைபட்டிணம் பேருந்து பிடித்தேன்.நாகையில் சென்னைக்கு இரவு நேர பேருந்து மட்டும்தான் உள்ளது என்றனர்,அருகில் ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி விட்டு இரவு 10 மணி பேருந்தைப் பிடித்து சென்னை வந்து வீடு வந்துவிட்டேன்..15 நாட்கள் கழிந்து மீண்டும் நான் 

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் பணிக்கு சேர்ந்தேன்.
தலைமை அலுவலகத்தில் என்னை தஞ்சாவூரில் தேடுகின்றனர். அப்போது காஞ்சிபுரம் மண்டல மேலாளரை (திரு.ஜவகர்பாபு, பின்னாளில் முதலமைச்சருக்கும்  கவர்னருக்கும் PA வாக இருந்தார்)
நீங்கள்,அனுப்பிய திருவேங்கடம் எங்கே?’ என கேட்டுள்ளனர். அவர் அப்போதுதான் நான் திம்மாவரத்தில் பணியில் இருப்பதை கண்டுபிடித்தார்.இதனால் தலைமை அலுவலகத்தின் கோபத்திற்கு ம.மே.ஆளானார்.இதை மனதில் வைத்து நான் போட்ட வீடு கட்டும்  கடன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

ஜவகர் பாபு மாறி திரு சிவராம கிருஷ்ணன் அப்போது மண்டல மேலாளர்.1986-துவக்கத்தில் தர ஆய்வாளர் பேனல்தயாரானது.நான் ஒரு கோரிக்கை மனு எழுதிக்கொண்டு மண்டல மேலாளரை காஞ்சிபுரம் சென்று பார்த்தேன்.அப்போது,
சார்!,என்னை இந்த ஆண்டு தர ஆய்வாளர் பதவி உயர்வுக்கு தங்கள் சிபாரிசு செய்தால் நான் தர ஆய்வாளராக முடியும்என்றேன்.அதற்கு அவர், ‘அதெப்படி முடியும்?’ என்றார். நான் மேலும் அவரிடம் மிகவும் பணிவான குரலில், ‘அய்யா ,நான் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
எனக்கு முன் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் முடித்தவரெல்லாம் தர ஆய்வாளராகி விட்டனர்.  

 என்னை இந்த ஆண்டு பேனலில் சேர்த்தால் நான் தர ஆய்வாளாராகி விடுவேன்.என கெஞ்சினேன்.
அப்படி எல்லாம் செய்ய முடியாது என சொல்லிவிட்டு நான் கொடுத்த மனுவை இனிஷியல் போட்டு செக்ஷனில் கொடுஎன என்னிடமே தந்தார்,நான் அதை அவர் முன்னாலேயே கிழித்துப் போட்டு விட்டு நான் திம்மாவரம் சென்று விட்டேன்.பேருந்தை விட்டு இறங்கியதும்,அரிசி ஆலையின் துணை மேலாளர்,(திரு எம் ஆர் கிருஷ்ணன்) என்னைப் பார்த்து,
‘மண்ட மேலாளரிடம் என்ன பேசினீங்க? அவர் உடனே திரும்பவும் காஞ்சிபுரம் வரச் சொன்னார்’ என்றார்.
‘நான் போக விரும்ப வில்லை சார்’
ஆனால் மண்டல மேலாளரின் தொடர் வற்புறுத்தலால், ஆலையின் துணை மேலாளர், ‘சார் பெரியவருக்கு மதிப்பு கொடுங்க,அவர் வரச்சொல்றார்,அவர் நினைச்சா, உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,நீங்க உடனே புறப்பட்டு போங்க,அது தான் உங்களுக்கு நல்லது’ என்றார். நான் மீண்டும் காஞ்சிபுரம் சென்று ம.மே.வைப் பார்த்தேன்.
மண்டல மேலாளர் முன் நின்றேன்,

 ‘நீங்க ,என்ன நினைச்சிக் கொண்டு இருக்கீங்க? நான் ஒரு டெபுட்டி கலக்டர்.என் முன்னே என்னை அவமதிக்கும் படி எனக்கு கொடுத்த ஒரு கடிதத்தை எப்படி கிழித்து போடலாம்?’ என சொல்லிவிட்டு குரலை தாழ்த்தி மேலும் தொடர்ந்தார், ‘உங்க ரெக்கார்ட்ஸ் எல்லாம் கொண்டு வரச்சொல்லி பார்த்தேன்.நீங்க ஒரு நேர்மையான அதிகாரியாத்தான் இருந்திருக்கீங்க, ஆனால்  உங்கள் மீது ஒரு
 ‘மைனர்’ சார்ஜ் நிலுவையில் உள்ளது.இது நாள் வரை இதை ஏன் நீங்க கவனிக்கல,இப்போ அதை கிளியர் செய்ய நேரமில்லை’ என்றவர்.

நீங்க காஞ்சிபுரம் கிடங்குக்கு போறீங்களா? அங்கே ஒரு நேர்மையான அதிகாரி தேவைப்படுகிறது.நீங்க என்ன சொல்றீங்க?’ என்று சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தார்.
கிடங்குக்கு எல்லாம் போனால் பதவி உயர்வு பெறுவது தடைப்பட்டு போகும் சார் 
அதெல்லாம் ஒன்னும் ஆகாது,நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்என சொல்லிவிட்டு (திருப்பெரும்பூதூர் நடமாடும் கொள்முதல் நிலையத்திலிருந்து),நவீன அரிசி ஆலையில் இருந்து பணியாற்ற  deputation செய்து ஆணை வழங்கப்பட்டது.
1986-ஏப்ரல் மாதம்,எனக்கு சிறு காவேரிபாக்கத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் கிடங்கிற்கு மாற்றி ஆணை வழங்கப்பட்டது. அந்த கிடங்கு வளாகம் 14 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 7 கிடங்குகளை கொண்டது. அந்நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய கிடங்கு அதுதான்.பின்பு அந்த மண்டல மேலாளர் பணி மாற்றலாகி விட்டார்.
                **************
1986 வரை நான் முன் பணம் கட்டிய மோட்டார் சைக்கிள் கள் எனக்கு கிடைக்கவே இல்லை,ஆனால் முறைதவறிய முறைகளில் அந்தந்த கம்பனிகள் அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து விட்டன.
          
            110- 35- வயதில் மோட்டார் சைக்கிள்

வெறுத்துப்போய் ஒரு பழைய ராஜ்தூத் மோட்டார் சைக்கிளை 1986 ஜூனில், ரூ 6 ஆயிரத்திற்கு வாங்கினேன்.அப்போது நான் காஞ்சிபுரம் கிடங்கில் பணிசெய்து கொண்டிருக்கின்றேன். தினமும் திருவள்ளூருக்கு வந்து புதிய வீட்டுமனையில்  3 சதுரத்தில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கும்  பணியை பார்வையிட வருவேன்.அப்போது இந்த இரு சக்ர வாகனம் வசதியாக இருந்தது.
வண்டி வாங்கிய ஆர்வத்தில் மாலை பணி முடிந்த உடன் திருவள்ளூருக்கு பயணித்தேன்,திருவள்ளூர் அருகே வரும்போது, என் இரு கைகளும் வண்டி கைப்பிடியிலிருந்து தானாக விலகி விட்டன. இரவு 9.30 மணி இருக்கும்.என் பின்னால் லாரி,பேருந்து எதுவும் வரவில்லை.

நான் வண்டி முன் விழுந்தேன்.முகம்,கைகால் எல்லம் தேய்த்து கொண்டு ரத்தம் வடிய ஆரம்பித்தன.வலியிலும் எழுந்து வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தேன்.வீட்டில் வரா சாப்பிட்டு தூங்கி விட்டாள்.நான் சந்தடி இல்லாமல் வண்டியில் இருந்து விழுந்ததை யாருக்கும் சொல்லாமல்,கொள்ளாமல்  வந்து படுத்துக் கொண்டேன்.
வந்த களைப்பில் வலி மறந்து தூங்கி விட்டேன்.காலையில் அடிபட்ட கைகால்,முகம் இடங்களில் ரத்தப்போக்கு கட்டியதைப் பார்த்து வரா அலறி விட்டாள்.
காலையில் திருவள்ளூர் மருத்துவ மனைக்கு சென்று கட்டுப்போட்டுக் கொண்டு வழக்கமா அலுவலகம் சென்று விட்டேன்.சில மாதங்களில் அந்த ராஜ்தூத் வண்டியை விற்றுவிட்டு,என் கனவு வண்டியான பஜாஜ் எம்-80 வண்டியை அலுவலக கடனில் வாங்கினேன்.அதில் தான் விடியற்காலை காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு, திருவள்ளூருக்கு வந்து மேஸ்த்திரியைப் பார்த்து அடுத்த நாள் வேலைக்கு முன்பணம் கொடுத்துவிட்டு,மீண்டும் நான் காலை 9.30க்கு காஞ்சிபுரம் சென்று கிடங்கை திறப்பேன்.ஒரு ஆண்டு அதே போல் செய்தேன்.
            
            111-நசரத் பேட்டைக்கு பணி மாற்றம்

1987-ல் ஏப்ரலில் நசரத்பேட்டை கிடங்கிற்கு மாற்றினார்கள்.அதே ஆண்டு ஜூன் மாதம் திருவள்ளூரில் வீடு கட்டி முடிக்கப்பட்டது.காஞ்சிபுரத்திலிருந்த குடும்பத்தை திருவள்ளூருக்கு சொந்த வீட்டிற்கு மாற்ற முடிவு செய்தோம்.
புது வீடு கட்டி முடித்து வீட்டில் குடிபுக விழா எடுக்க வேண்டும். எல்லரும் சொன்னார்கள், மேஸ்த்திரியும் சொன்னார்.நான் மேஸ்த்திரியை அழைத்து , ‘உங்களுக்கு என்ன வேண்டும்?,நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றேன்.
‘எனக்கும் என் ஊழியர்களுக்கும் மரியதை செய்ய வேண்டும்,இரவு கோழி அறுத்து காவு கொடுக்க வேண்டும்’

 ‘சரி, அதற்குண்டான காசை வாங்கிக்கொண்டு காலையில் எனக்கு வீட்டை சுத்தம் செய்து கொடுங்கள்’ என சொல்லிவிட்டு அவர் கேட்ட காசை கொடுத்து விட்டு காஞ்சிபுரம் சென்று ஒரு லாரி பிடித்து வீட்டு தட்டு முட்டு சாமான்களை ஏற்றி வந்து புதியவீட்டில் அடைத்து விட்டேன்.
மனைவியையும் குழந்தைளையும் பேருந்தில் வரச்சொல்லி விட்டேன்,என் அண்ணாவையும் என் மனைவியின் அண்ணாவையும் வரச் சொன்னேன்.இருவரும் வந்து எங்களை வாழ்த்தினர். பார்ப்பனரை அழைக்க வில்லை,கணபதி ஒமம் செய்ய வில்லை. இதுவரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
வீட்டில் மின்சாரம் இல்லை. சில மாதங்கள் சென்றன,என் அக்காக்கள் மூவரையும் அழைத்து புடவை ரவிக்கை எடுத்து கொடுத்து விருந்து வைத்து அனுப்பினேன்.
அப்போது வீட்டிற்கு மின் இணைப்பு இல்லை. புதிய லே அவுட்டிற்கு மின் இணைப்பை தருவதை நிறுத்தி வைத்திருப்பதாக திருவள்ளூர் மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு நேரத்தில் கொசு தொல்லையிலிருந்து விடுபட நான் ,மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் கொசுவலையை கட்டி அதனுள் வாசம் செய்வோம்.
வீட்டுக்கு முகவரி வேண்டும்.அப்போது மும்பாயிலிருந்து READERS DIGEST,BLITZ,டெல்லியிலிருந்து Caravan Probe &India Today,கல்கட்டாவிலிருந்து ,Sunday போன்ற மாதாந்திர வாராந்திர பத்ரிக்கைகளை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும்.அதற்கு முகவரி வேண்டும்.
               
              112-கண்ணதாசன் நகர் உதயம்

அந்நேரத்தில் பக்கத்து வீட்டில் திரு.ஸ்டாலின் வீடு கட்டி கொண்டிருந்தார்.அவரோடு கலந்து ஆலோசித்து, ‘நாம் இருக்கும் இடத்திற்கு முகவரி வேண்டும்.
 கண்ணதாசன் நகர்,பெரியார் தெரு என வைத்துக் கொள்ளலாம்,நீங்கள் என்ன சொல்கின்றீர்?’
சரி ஊர் பேர் ,தெருபேர் நல்ல தேர்வு தான் வைத்துக் கொள்ளலாம்என்றார்.
திருவள்ளூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பதிவு செய்தேன்.சில மாதங்கள் கழித்து நகராட்சி ஊழியர்கள் வீட்டுக்கு கதவு  எண் கொடுத்தார்கள்.காற்று நுழைய வசதியாக கதவுகளை திறந்து வைத்து,திருடர்களுக்கு பயந்து கிரில் கேட்டை பூட்டி தூங்குவோம்.

18 மாதங்கள் காட்டு வாசிகள் போல் மண்ணெண்ணை விளக்கொளியில் வாசம் செய்தோம்.
குடி தண்ணிக்கு ஒரு ஆழ்துளை கிணறு போட்டு கைப் பம்புபோட்டுக் கொண்டோம்.வீட்டை சுற்றி வேலி அமைத்துக் கொண்டோம்.சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அரசு பண்ணையில் 8 தென்னங்கன்றுகளை(4 நாட்டு ரகம்+4 மஞ்சள் சிங்கப்பூர் ரகம்) நட்டோம்.செங்கல்பட்டு அருகே (திம்மாவரம் அரிசி ஆலை அருகே) உள்ள அரசு பழப் பண்ணையில் இருந்துமா,பலா கொய்யா,சப்போட்டா போன்ற பழச் செடிகளை வைத்தோம்.
ஒரு குடும்ப நிகழ்ச்சியில் என் தாய்வழி உறவில் மாமா முறை கொண்டவரை சந்திக்க நேர்ந்தது.(திரு பாலகிருஷ்ணன்)என்னைப் பற்றி விசாரிக்கும் போது,நான் மின்சாரம் இல்லாமல் காட்டுவாசிபோல் வாழ்வதைக் கேள்விப்பட்டு,
நீங்கள்,என்னுடைய அலுவலகம் வாருங்கள்,நான் மவண்ட்ரோடில் இருக்கும் தமிழ் நாடு தலைமை மின் வாரியம் அலுவலகத்தில் section head ஆக பணி புரிகிறேன்.நான் உங்களை என் தலைமை அதிகாரிக்கு அறிமுகப் படுத்துகிறேன்,உங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள்,என்ன சொல்ல வேண்டுமோ,அதை ஒரு கோரிக்கை மனுவாக எழுதி வாருங்கள்.என்றார்.
அவர் சொன்னது போல் ஒரு மனு எழுதிக் கொண்டு அடுத்தநாள் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். என்னை தமிழ் நாடு மின் வாரிய சேர்மனிடம் அழைத்துச் சென்றார்.என்னை அறிமுகம் செய்தவுடன்,அந்த அதிகாரி என் கோரிக்கை மனுவை வாங்கிப்படித்தார்.பின் என்னை ஏரெடுத்து பார்த்து,

நீங்கள் போங்கள்,இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கு மின் இணைப்பை தர ஏற்பாடு செய்கிறேன்.என்றார்.அவர் சொன்னது போல் ஒரு சில நாட்களில் என் வீட்டருகே ஒரு கம்பத்தை நட்டு,மாலை நான் வீடுதிரும்பும் முன் மின் இணைப்பை வழங்கி வழங்கினர்.விளக்கு எரிகிறதைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த அதிகாரி,ஒரு நிஜ அதிகாரி போல் செயல்பட்டதை, இன்றும் நினைத்து இறும்பூதெய்துகிறேன்.

கண்ணதாசன் நகருக்கு மின் வசதி வந்த பின் திரு.ஸ்டாலின் குடிவந்தார், திரு.சம்பந்தம் ,இருவரும்
 RBCC பள்ளிகூட ஆசிரியர்,வீடுகட்டி குடி வந்தார்கள். பக்கத்து (அண்ணா தெரு) வாசிகாளான திரு.தனபால்,திரு கன்னியப்பன்,திரு.தனுஷ்கோடி,திரு.தாஸ்.திரு. மகாலிங்கம் மற்றும் காமராஜ் தெருவில் குடிவந்த திரு காதி.ஜெயராமன் போன்றோர்களை சேர்த்து கவியரசு கண்ணதாசன் நகர் குடியிருப்போர் நல சங்கம் அமைத்தோம்.
ஆண்டுதோரும் பொங்கலன்று குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தி நகரத் தந்தை(municipal chairman) உள்ளூர் காவல் அதிகாரி என அழைத்து அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினோம்.பின்னாளில் காஞ்சிபுரம் சென்று பதிவு செய்யப்பட்டது(1992)
வீட்டில் வாழை குலைகளும்,தென்னங்குலைகளுமாக பலன் தர ஆரம்பித்தது.ஒரு நாள் முற்றாத நிலையில் இரவோடு இரவாக வாழை குலையை அறுத்து விட்டார்கள். அப்போது நண்பர்கள்,
இதுக்குதான்யா சொன்னேன், சேரி பக்கத்துல வீடு கட்டாதே,என்றுஎன அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர்.

ஒரு நாள் எனது அண்ணன் மகன் வீட்டை சுற்றி வேலிகாத்தான் செடிகள் மண்டிக்கிடந்தன,
அதை கத்தியால் வெட்டி அப்புறப்படுத்தினான்.இதை கண்ட அருகில் உள்ள பத்தியால் பேட்டை இளைஞன் என் அண்ணன் மகனை அடித்து விட்டான்.நான் அலுவலகத்திலிருந்து மாலை வீடு வந்து சேர்ந்த போது,இந்த தகவலை எனக்கு சொன்னார்கள்.
நான் உடனே திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை எழுதி பதிவு செய்துவிட்டு அடுத்த நாள் பணிக்கு சென்று விட்டேன்.நான் அன்று மாலை வருவதற்குள்,பத்தியால்பேட்டை இளைஞனை காவல் துறை கைது செய்துவிட்டது.ஊர் மக்கள் திரண்டு வீட்டுக்கு முன் குவிந்து விட்டனர்.என் மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.பக்கத்து விட்டு திரு.ஸ்டாலின் அவர்கள்,வீட்டின் முன் நின்ற கும்பலிடம் இடைமறித்து விவரங்கள் கேட்டறிந்தார்.
நிலைமை மோசமாகி விட்டதை உணர்ந்த அவர்

இருங்க,அவர் வீட்டில் இல்லை,தவறு செய்தவன் மீது புகார் கொடுத்தால்,காவல் துறை நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும்.அவர் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம்,கலைந்து செல்லுங்கள்என்றார்.அவர்கள் கேட்பதாக தெரியவில்லை.
எங்களுக்கு எங்கள் பிள்ளை வேண்டும்வீட்டு வாசல் முன் ஒரே கூச்சல்.திரு.ஸ்டாலின், விட்டுக்குள் நுழைந்து என் மனைவியிடம், ‘ஏங்க, அவர் வந்தா நாம் பேசிக்கலாம், நீங்க சரின்னு சொல்லுங்க,அவர் கொடுத்த புகார் மனுவை வாபஸ் வாங்கிக்கிறேன் என்று சொல்லுங்க,நான் போய் அவனை காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்து விடுகிறேன்,என்ன சொல்றீங்க?’
சரிங்க!அதன் பிறகு காவல் நிலையம் சென்று அந்த இளைஞனை மீட்டு வந்தனர். கூட்டம் கலைந்தது.
நான் வீட்டுக்கு வர இரவு 9 மணி ஆகிவிட்டது.நடந்தவற்றை என்னிடம் என் மனைவி விவரித்தாள்.இந்த ஜனங்களை பார்த்து நான் பயந்தே போயிட்டேங்க!,’
நான், ‘சரி,நாம் இந்த சூடு கொடுக்க வில்லை எனில் இந்த இடத்தில் நாம் வாழ முடியுமா?அறிவிலிகளுக்கு இதுதான் பாடம்,சரி விட்டுத்தள்ளு
அதன் பிறகு அருகிலிருக்கும் சேரிவாழ் மக்கள் என்னை நண்பனாக்கிக் கொண்டார்கள். சேரிவாழ் மக்கள் இருக்கும் இடத்தில் நாம் நிம்மதியா வாழ முடியாது! மீண்டும் என் நண்பர்கள் என்னை இடித்துரைத்தனர்.சரி பழகும் விதத்தில் பழகிப்பார்த்தால்,பகைவன் கூட நண்பனே!

1988 ம் ஆண்டு முற்பகுதியில் நசரத்பேட்டை கிடங்கிற்கு விழிப்பு பணிக்குழு(கோணி துரைராஜ்) வந்து ஆய்வு நடத்தினர்.அந்த சமயத்தில் என் வண்டியில் அடிபட்டு எனக்கு கணுக்கால் நடக்க முடியாமல் இருந்தேன், என்னை வரச்சொல்லி  தகவல் தந்தார்கள்.நான் என் நிலைமையை சொல்லி அமர்ந்து கொள்கிறேன் என்றேன்.இதை மனதில் வைத்துக் கொண்டு, ‘என் எதிரே உட்காரும் அளவுக்கு திமிராகிடங்கில் இருக்கும் சிறு தவறுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்,இந்த ஸ்டேட்மென்டில் கையெழுத்திடுங்கள் என அவர் எழுதிய அறிக்கையில் கையெழுத்திடச் சொன்னார்.நான் மறுத்தேன். நீங்கள் சொல்வது போல் என்னால் எழுத முடியாது,உண்மை என்ன என விளக்கி எழுதி கையெழுத்திடுகிறேன்என்றேன்.
நீ,எதை வேண்டுமானாலும் எழுதிக்கொடு உன்னை suspend (பணி நீக்கம்) செய்யாமல் விட மாட்டேன்.என்றார்.

சரி, என நான் எழுதியதை அந்த அதிகாரியிடம் கொடுத்தேன்.எங்கள் நிறுவனத்தில் இந்த அதிகாரியின் நேர்மையும்,கடுமையான நடவடிக்கையாளர் எனவும் தெரியாத ஊழியர்கள் கிடையாது.நேர்மை என்றால் லஞ்சம் வாங்காமல் இருப்பது மட்டுமே என நினைக்கும் அந்த அதிகாரி எண்ணங்களை நேர்மையாக மனதில் வைக்க தவறியவர்.அடுத்த சில நாட்களில் என்னை  பணி நீக்கம் செய்து விட்டார்கள்.நான் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை நோரில் சந்தித்தேன்.
நடந்தவற்றை நேர்மையாக எழுதிக்கொண்டு  அந்த அதிகாரியிடம் உண்மை நிலையை சித்தரித்தேன். பொறுமையாக கேட்ட,அவர், ‘நீங்கள் சொல்வது உண்மை என்றால் உங்களுக்கு நியாயம் கிடைக்கும்என சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.
அடுத்த சில நாட்களில் என்னை மீண்டும் பணியில் சேர்த்த அந்த அதிகாரி பெயர், திரு.டி.ஆர்.சீனீவாசன்.ஐஏஎஸ். என்னை பழி வாங்கிய அந்த அதிகாரியை எதிர்த்து மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து,அந்த அதிகாரியை (கோணி துரைராஜ்) மாற்றல் செய்து உத்தரவிட்டார்

No comments: