Monday, November 30, 2020

ஏ.அ-46

 

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கும் இது ஒரு சம்பரதாயம், என தோன்றும், நம் முன்னோர்கள் போல் நாமும் பின்பற்றுவோம் எனும் எண்ணம் அவர்கள் மனதில் தோன்றும்,இதுவே பொங்கல் கொண்டாட்டம்.

குழந்தைப் பருவத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தரும் பழக்க வழக்கம் என்பது அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் மனதில் கொள்ளும் நிகழ்ச்சிகளாக பதிந்து விடும்.

எனக்கு என் அம்மா சொல்லி தந்த குழந்தைப்பருவ பழக்கங்கள் என்பது எந்திரத்தனமானது,ஆம் காலை எழுந்த உடன் படிக்க வேண்டும்,பின் குளிக்க வேண்டும்,குளித்த பின் பூஜை அறைக்கு செல்ல வேண்டும், பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் கடவுளர் படங்களுக்கு மலர் தூவி பின் கற்பூரம் கொளுத்தி படங்களுக்கு காட்ட வேண்டு்ம்,பின் ஊதுவத்தி கொளுத்தி வைக்க வேண்டும்,முடிந்த உடன் தயாராக வைக்கப்பட்டிருக்கும் ஒரு டம்ளரில் உள்ள நீரை ஆராதனை செய்ய வேண்டும்.

பின் கடவுளிடம் பாடல்கள் மூலம் தேவைகளை பட்டியிலிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அப்படித்தான் நான் ராமலிங்க அடிகளார் முருகனைப் பாடி தொழுத பாடலான, ’ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.......எனும் பாடலை முழுமையாக பாடி தினமும் பூசையை முடிப்பேன்.பின் பள்ளி கல்லூரிக்கு செல்ல வேண்டும்.....இது எங்க அம்மாவின் ஆசை,உத்தரவு.

ஆண்டொன்று போக வயதொன்று கூட அறிவியல் சிந்தனை வளரும்,வளர வேண்டும். இதுவே முழுமையடை முயற்சிக்கும் மனிதனின் செயல். மனிதர்களுக்கு குழந்தை பருவம் முடிந்ததும்(18 வயது வரை} சுய சார்புத்தன்மை வளரும். கூடவே சுற்று சூழல் பாதிப்புகளையும் உணரத்தெரிய வேண்டும்.

Sunday, November 29, 2020

ஏ.அ-45

 

இதனை உணர்ந்த, நான் அக்கம் பக்கத்தினர் தீபாவளி போன்ற விழாக்கள் கொண்டாடும்போது நம் பிள்ளைகளுக்கு உற்சாகம் குறையக்கூடாது எனும் நோக்கில் மற்றவர்களைப் போல் பலகாரங்கள் செய்து கொடுக்கச் சொல்லி என் மனைவியிடம் சொல்வேன். அவளும் மனம் கோணாமல் குழந்தைகளுக்கு பலகாரங்களை செய்து கொடுப்பாள்.

அந்நாளில் கிராமத்து மக்களுக்கு தினசரி உணவென்பது கூழும் களியும் தான்.

தீபாவளி என்பது கோழி அல்லது ஆட்டு இறைச்சியுடன்,இட்லி,தோசை மற்றும் வடை பாயாசம் போன்ற உணவு வகைகளை இரவு பகல் கண்விழித்து செய்து பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இப்பொழுதெல்லாம் இட்லி தோசை தினசரி காலை உணவாகி விட்டதால் தீபாவளியின் மவுசு குறைந்து விட்டது.

பொங்கல் என்பது உழவர் திருநாள் என்பதால் அன்று குழந்தைகளுக்கு புத்தாடையும் எடுத்து கொடுத்து குழந்தைகளின் முகத்தில் தோன்றும் சிரிப்பை கண்டு களிப்போம். கிராமங்களில் தெருக்களில் பொங்கல் வைப்பதால், எல்லா வீடுகளிலும் குழந்தைகள் மகிழ்ந்நி பொங்க ஓடியாடி விளையாடுவர். நகரத்தில் அதுபோன்று ஒரு குதூகலம் காண முடியாது.

இப்போதெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் ஒரு சடங்காகவே முடிந்து விடுகிறது,ஆம்,காலையில் தெருவில் வீட்டு வாசல் எதிரே செங்கற்களை அடுக்கி வெண்கலப் பானையை வைத்து கடையில் விற்கும் பச்சரிசியை போட்டு பொங்கி வரும்போது இரக்கி வைத்துவிடுவோம். அதற்குள் பகல் 12 மணியை கடந்துவிடும். குழந்தைகள் முன்னிலையில் சூரியனுக்கு உணவுப் பொருளை காட்டி குழந்தைகளை வணங்கச் சொல்வோம்.

Sunday, November 22, 2020

ஏ.அ-44

பிறந்த அத்துணை குழந்தைகளுக்கும்,உணவு உடை,கல்வி, உறைவிடம் கிடைக்க இந்த அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கின்றதா? கல்வியை இலவசமாக கட்டாயமாக குழந்தைகளுக்கு வழங்கினால் மட்டுமே தன்மானத்தோடு அவர்கள் உணவைதேட முடியும்.

பொது வழிப்பாட்டுத்தலங்கள் இருப்பதாலேயே பெரும்பாலான மக்கள் உழைக்க போகவேண்டும் எனும் எண்ணத்தையே வளர்த்துக் கொள்வதில்லை. எனவே கோயில்களை,சர்ச்சுகளை,மசூதிகளை மூடி விட்டால் அவரவர் வீட்டிலேயே கடவுகளை வணங்கிக் கொள்வர்.சமுகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து போகும். இதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும்`!

அடுத்து, நான் கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருப்பதில் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போக வாய்ப்புண்டு. என் வழித்தோன்றல்கள் மனதில் வாழ்க்கைப்பற்றிய அர்த்தம் இல்லாமல் போகும். அதாவது அவரவர்கள் மனம் போன போக்கில் வாழ நினைப்பர். எனவே குடும்ப நிகழ்ச்சிகளில், பெரியவர்களை வணங்க வேண்டும், என்பேன். இது கடவுள் மறுப்பாளருக்கு ஒவ்வாது, ஆனால் வாழ்க்கை முறைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுகின்றோம்.   

என் வாழ் நாளில் நான்,கடவுள் மறுப்பு சிந்தனைகளில் வளர்ந்த குடும்பங்களை மகிழ்ச்சியற்ற குடும்பமாக இருந்துள்ளதை நான் கண்டிருக்கின்றேன்.காரணம் கடவுள் மறுப்பாளர்கள் குடும்பங்களில் பெரும்பாலும் சடங்கு சம்பரதாயம் நிகழ்ச்சிகளை ஒதுக்கி விடுவர். இதனாலேயே அந்த குடும்பங்களில் மகிழ்ச்சியற்று காணப்படும். குழந்தைகளின் குதுகலம் என்பது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் பண்டிகைக்கால விழாக்களே!

 

Thursday, November 19, 2020

ஏ.அ-43

 

எழுத படிக்கத்தெரியாத மக்கள்,விவசாயத்திற்கு படிப்பு அவசியமில்லை என முடிவு பண்ணி தங்கள் இஷ்ட்டத்திற்கு அதிக பட்சம் 12 பிள்ளைகள் பெற்றவர்கெளல்லாம் வாழ்ந்தனர்.எனக்கு தெரிந்து ஒரு முதலியார் இணையர் 17 பெண்களும் கடைசியாக ஒரு ஆண் பிள்ளையும் ஆக 18 பிள்ளைகளை பெற்றனர்.இவர்கள் எங்கள் கிராமத்து அருகே உள்ள ஆரணி நகரத்தில் வாழ்ந்தனர்.

எங்க தந்தை இறந்த அடுத்த ஆண்டு(1991) கார்த்திகை 20 தேதியில் அம்மாவின் நினைவு நாளையும் இணைத்து இருவருக்கும் ஒரே நினைவு நாளை அனுசரிக்கத் தொடங்கினோம். நினைவு நாளை அக்கம் பக்கம் உறவினர்களுக்கு உணவளித்து முடிப்பதை விட அன்று வரும் மாற்று புடவை இல்லா பெண்களுக்கு புடவை ரவிக்கை வழங்க முடிவு செய்தேன்.

என் மாத சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பேங்கில் போட்டு வைத்து கார்த்திகை மாதம் 20 புடவை ரவிக்கை எடுத்து உறவினர்களுக்கும்  பக்கத்து வீடுகளை சார்ந்த பெண்மணிகளுக்கும் உணவளித்து வழங்குவதை வழக்கமாக கொண்டேன்.

அதன் பின் என் பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.எனக்கும் சம்பளத்தில் மிச்சம் செய்து அதிக சேமிப்பு வைத்தேன்.

பணத்தை சேர்த்து வைத்து என்ன சாதிக்கப் போகிறோம்?

நாம் ஏன் என் சேரிவாழ் குடும்ப பெண்களுக்கும் புடவை ரவிக்கை வழங்க கூடாது என யோசித்தேன்.1995 லிருந்து ஆண்டு தோறும் 70 புடவைகள் எடுக்க ஆரம்பித்தேன் ஒரு புடவை ரவிக்கையின் விலை 200 ரூபாய்க்குள் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.

அப்போது தான் துணி தரமாக இருக்கும் என்பது என் கணிப்பு. சில நேரங்களில் ரூ.200 அல்லது 220 கூட தாண்டும்.

Wednesday, November 18, 2020

ஏ.அ-42

 

அதற்கு அவர், ‘பரவாயில்லை தேய்பிறையில் கூட திதி தரலாம்உடனே நான் இந்த குழப்பமெல்லாம் வேண்டாம், நாங்களே தமிழ் மாதத்தில் வரும் இறந்த நாளை அனுசரித்துக் கொள்கிறோம்,அடுத்த ஆண்டு முதல் நீங்கள் வரவேண்டாம்என சொல்லி அய்யரை தடுத்து நிறுத்தினேன்.

அதுமுதல் நாங்கள் அக்கம் பக்கம் உள்ள  உறவினர்களுக்கு உணவளித்து விரதத்தை முடிப்போம்.

1990 கார்த்திகை 20 நாள் வியாழன் அன்று எங்கள் தந்தை வயோதிகத்தின் காரணமாக இறந்து போனார்,

அவருக்கு அப்போது 93 வயதிருக்கும்,இது என் தோராய கணக்கு. எங்கள் அப்பா இறந்த போது எனக்கு 39 வயது. 39 வருடங்களுக்கு முன் நான் பிறந்த போது எங்கள் அப்பாவுக்கு 55 வயதிருக்கும். எங்க அம்மாவுக்கு 40 வயதிருக்கும்.பொதுவாக பெண்களுக்கு பிள்ளை பெரும் வயது அதிக பட்சம் 45 அல்லது 46 வயது தான்.எனக்குப் பின்னால் என் தம்பி 5 ஆண்டுகள் கழித்து பிறந்துள்ளான்,என்பதை என் தாய் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.45க்கு மேல் தாய் பிள்ளை பெறுவது என்பது இயலாத காரியம். அந்நாளில் பெண்கள் கடைசி வயது வரை பிள்ளை பெறுவது என்பது ஒரு வழக்கம்.என் தந்தைக்கும் தாய்க்கும் 15 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கும் என்பது என் யூகம். எனவே என் தந்தையின் இறந்த வயதை 90 அல்லது 93 இருக்கும் என கணக்கிட்டேன்.