Sunday, November 3, 2019

இ.பி-4


                    9-மூன்று வகையான கிராமத்து வீடுகள்    

அப்பொழுதெல்லாம் கிராமத்தில் மூன்று வகையான வீடுகள் இருக்கும்.
ஒன்று, வட்டவடிவ குடிசை இதற்கு மையத்தில் 8அல்லது 9 அடி உயரத்தில் ஒரு கொம்பை நடுவார்கள் இதை மையப்படுத்தி வட்ட வடிவ சுற்றுச்சுவர் எழுப்புவார்கள் அதன் மீது மையக் கொம்பில் தலைப்பில் இணைத்து அவைகளின் மறு நுனிகளை சுவற்றில் தாங்கும் வகையாக அமைத்து விடுவார்கள்.
பின்பு கிட்டிகளை அமைத்து வலுவான ஒரு உட்கட்டமைப்பை அமைத்து அதன் மீது பனை ஒலைகளை வேய்ந்து விடுவர்.காற்று மழை, புயல்காற்றையும் தாங்கும் ஆற்றல் படைத்தது. புதியதாக திருமணம் ஆகி தனிக்குடித்தனம் விரும்பும் இணையருக்கு இதுபோன்று குடிசைகளை அமைத்துக் கொடுப்பர்.

குழந்தைகள் அதிகம் பிறந்தால் இரண்டாம் வகை வீடு,செவ்வக வடிவிலான வீடுகளை அமைப்பார்கள்.இவை பெரும்பாலும் 10 அடிக்கு 16 அடி, 6 அடி உயர மண் சுவர் எழுப்பி அதன் மீது தூலம் அமைத்து வலுவான உட் கட்டமைப்புடன் பனை ஓலைகளை வேய்ந்து வீடுகளை அமைப்பார்கள்.                                                                    இதில் 10 க்கு 8 அடி வாக்கில் ஒரு அறையை உருவாக்குவர்,அதில் விதவிதமான கடவுளர் படங்களை மாட்டி விடுவர்.யாரும் அதில் படுக்க கூடாது,நடு வீடு என்று அதற்கு பெயர்.அந்த அறையின் மீது பரண் அமைத்து வீட்டில் அதிகம் பயன்படாத பொருட்கள்,மற்றும் மழைக்காலங்களில் அடுப்பெரிக்க பயன்படும் உலர்ந்த கட்டைகளை சேமித்து வைப்பர்.

அமாவசை, கிருத்திகை, தீபாவளி,வருடப்பிறப்பு,பொங்கல் போன்ற நாட்களில் அந்த படங்களுக்கு விரதம் இருந்து வடை பாயாசத்துடன் வாழையிலை படையிலிட்டு கற்பூரம்,ஊதுவத்தி கொளுத்தி தேங்காய் உடைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து வணங்குவர்.
எங்களையெல்லாம் உணவுக்கு அமரவைத்துவிட்டு ஒரு வாழை இலையில், எங்க அம்மா சிறிதளவு பலகாரங்களுடன் காக்காவைத் தேடி போவார்கள், காக்காக்கள்  வந்து அந்த உணவை கொத்தும் வரை நாங்கள் யாரும் உணவைத் தொடக் கூடாது.இதற்கு எங்க அப்பா காவல்.காக்காக்கள் வர நேரமாகி விட்டாலோ,வரவே இல்லை என்றாலோ எங்க நிலைமை என்ன?
நினைத்துப் பாருங்கள்,அதை வார்த்தைகளால்  சொல்லி மாளாது. இன்றளவும் கிராமப் புறங்களில் இதே நிலைதான்!

என் தாய்த்தந்தையருக்கு 5 ஆண்கள் 4 பெண்கள் என 9 பிள்ளைகள் ,அதில் என்னை விட மூத்தவர் 10 வயதில் இறந்து போனார்.எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் 8பேர்,கடைசீ என் தம்பி,நான் எட்டாம் பிள்ளை.

இந்த வீடு போதவில்ல,இந்நேரத்தில் மூன்றாம் வகை வீடான சுற்றுக்கட்டு வீடு தேவைப்பட்டது.சுற்றுக்கட்டு வீடு என்பது செவ்வக வடிவ வீடுகளை இரண்டு உருவாக்கி இரண்டு வீட்டையும் இணைக்கும் பொருட்டு இடையில் சதுர வடிவ சாளரம் அமைப்பார்கள்.(சுற்று கட்டு வீட்டுக்கு நான்கு தூலங்கள் தேவைப்படும்.)சாளரம் என்பது வீட்டுக்குள்ளே அமைந்திருக்கும் சதுர வடிவ இடைவெளியில் மழை நீர் கொட்டும்,வெய்யில் அடிக்கும் காற்றோட்டமாக இருக்கும்.கூட்டுக் குடும்பம் நடத்த இதுதான் சரியான வீடு! என் மூத்த அண்ணாவுக்கு திருமணம் நடக்க வேண்டியிருப்பதால் இந்த விரிவாக்கம் தேவைப்பட்டது.    (1958-59,59-60,60-61) மூன்று வகுப்புகள் வரை எங்கள் பக்கத்து ஊரான ராமநாயகன் கண்டிகையில் தான் படித்தேன் .  
               
                  10-4&5 வகுப்புகள் படிக்க பாரிவாக்கம்                           

1961- ஏப்ரல் மாதத்தில் என் மூத்த அண்ணனுக்கு திருமணம் நடந்தது.எங்கள் குடும்பத்தில் மூன்றாவது கல்யாணம்.குடும்பத்தில் முதல் மாப்பிள்ளை எங்கள் அத்தையின் ஒரே பிள்ளைதான்.
அவர் மட்டுமே அந்நாளில் எங்கள் குடும்பத்தில், ‘மூன்றாம் வகுப்பு படித்த பெரியபடிப்பாளி!. பெரியார் இயக்கத்தில் இணைந்த கடவுள் மறுப்பு சிந்தனை கொண்டவர்.
பார்ப்பனர் கையில் மாங்கல்யம் எடுத்து கொடுத்தால் தாலி கட்டமாட்டேன் என மணமேடையில் இருந்து எழுந்து ஒடிவிட்டார்.வீட்டில் பெரியவர்கள் சமாதானப்படுத்தி அவருடைய தாய் தந்தை(எங்க அத்தை,மாமா) கையால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து  எங்க அக்கா கழுத்தில் தாலி கட்ட சம்மதித்தார்.

1961-ல் என் அண்ணாவின் திருமணம் முடிந்தவுடன் மாமாவிடம் எங்கள் அம்மா என்னைக் காட்டி, ‘அய்யா,இவனுக்கு படிப்பே ஏறவில்லை,நோஞ்சானாக இருக்கான்,இருக்கிற மத்த இரண்டு பிள்ளைகளும் விவசாயம் பார்த்துகிடட்டும், நாங்களும் யாரும் படிக்க வில்லை,இவனுக்கு தினமும் வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தால் ஏதோ நாலு எழுத்து கத்துக்கிட்டு பொழைச்சிப்பான்,இவனை அழைத்துக் கொண்டு உங்கள் ஊரில் உள்ள பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடு,உனக்கு புண்ணியமா போது’
சரி, மாமி,அனுப்பி வையுங்கள்

அடுத்த நாள் எங்க அக்கா வாழும் ஊரான ‘பாரிவாக்கம்’ சென்றோம் (பூவிருந்தவல்லி அருகே) என் முதல் பேருந்து பயண அனுபவம் அதுதான். பேருந்து பயணம் மனதுக்கு ஆனந்தமாக இருந்தது.
அந்த ஊரின் மதிப்பு வாய்ந்த மனிதர்களில் எங்க மாமாவும் ஒருவர்.அடுத்த நாள் என்னை அருகில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். தலைமை ஆசிரியர் சிகாமணி என்பது அவர்பெயர்.

அந்நாளில் அரசு வேலைக்கு சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.கிராம புற படித்த இளைஞர்கள் அதுவும் SSLC படித்தவர்கள் அபூர்வம். பள்ளி இறுதிப்படிப்பு முடிக்க 5+11=16 வயது போதும்,ஆனால் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே அரசு துறையில் வேலைக்கு அனுமதிக்கப்படுவர்.
இதனால் ஆசிரியர்களே 7வயது நிரம்பிய அல்லது நிரம்பியது போன்ற பொய்யான பிறந்த தேதி போட்டு சேர்த்துவிடுவர்.என்னையும் அப்படித்தான் சேர்த்தார் எங்க மாமா!
பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பியதும்,எங்க மாமா அன்றய தினம் வகுப்பில் நடந்த பாடங்களை நினைவு படுத்தச் சொல்வார், எதுவும் மனதில் பதியாது. பெரும்பாலும் பிரம்படி பட்டே அழுது கொண்டிருப்பேன், நான் அழுவதைக் கண்டதும் என் அக்காவுக்கு அழுகையாக வரும்,இதனால் எங்க மாமாவுக்கும் அக்காவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.

நான்காம் வகுப்பு சுமாராக படித்தாலும் என்னை 5 வகுப்புக்கு மாற்றி விட்டார்கள்.நான் படிக்கும் காலத்தில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த திரு காமராசர் அந்த பள்ளிக்கு வருகை தந்தார்கள். அவரைப் பார்த்ததில் எனக்கு அப்போ அவரைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பின்னாளில் அவர் ஒரு மாபெரும் மனிதர்,நாம் வாழும் காலத்தில் அப்படி ஒரு மனிதரைப் பார்த்தோமே என்பது மட்டுமல்ல அவர் ஆற்றிய தொண்டினை அறிந்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.   

அப்பொழுது 5-ம் வகுப்பில் தான் ஆங்கிலம் நுழைத்தார்கள். 5-ம் வகுப்புக்கு பொது தேர்வு வைத்துவிட்டார்கள்.பொதுத் தேர்வு என்றால் வழக்கமாக சொல்லித்தரும் வகுப்பாசிரியர்கள் எங்கள் தேர்வு நாளில் இருக்கமாட்டார்கள்.அதனால் அந்த ஆண்டு(1962-63)கிராம புற மாணவர்கள் நிறைய பேர் தேர்வில் தோல்வி அடைந்தார்கள்.
நான் ஆங்கிலத்தை ஆர்வமாக படிப்பேன்,தமிழைப் போல் ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டி படிப்பேன்.அதனால் நான் மட்டுமே ஆங்கிலத்தில் 20 மார்க் எடுத்தேன், மற்றவர்கள் ஒற்றை எண் கொண்ட மதிப்பெண்களை எடுத்தனர்.பிற பாடங்களில் ஒற்றை எண் கொண்ட மதிப்பெண் பெற்றனர்,நானும்தான்!அந்த ஆண்டு எங்க மாமாவின் செல்வாக்கால் என்னை மட்டும் தேர்வு செய்து ஆறாம் வகுப்பு சேர தகுதி ஆக்கினார்கள்.
                     
                          11- மீண்டும் கள்ளூர்

பூவிருந்தவல்லியில் ,ஆறாம் வகுப்பைத் தொடர எங்க அத்தை என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.சேதி கேட்டு எங்க அப்பா எங்க அத்தையை(எங்க அப்பாவின்  சகோதரி) காண வந்தார்.எங்க அத்தையைப் பார்த்து,
அக்கா,! நானும் படிக்கல,எங்க புள்ளைகளும் படிக்கல,இவனுக்கு மட்டும்தான் படிப்பு வருது,இவனை இங்கேயே படிக்க வைக்கா..., நான் தேவையான அளவுக்கு அரிசி,பருப்பு வாங்கித் தர்ரேன்
அத்தை, ‘முடியாது,நீ புள்ளையை கூட்டிக் கொண்டு போ,என்னால் உன் பிள்ளைக்கு சீர் செய்ய முடியாதுஎன்று முகத்திலடித்தால் போல் சொல்லி விட்டார். இதைக்கேட்ட எங்கப்பா அழுதேவிட்டார்,இருப்பினும் ஒரு வைராக்கியத்தை வரவழைத்துக் கொண்டார்

சரி, நான் என் பிள்ளையை ஆரணியில் 6ம் கிளாஸ் சேர்க்கிறேன்,படிக்க வைக்கிறேன்,என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் படிக்க வைக்கிறேன்
மேலும் என் அப்பா,தன் அக்காவைப் பார்த்து,

சரி நான் போறேன்’, என்னைப் பார்த்து எங்க அப்பா,
டேய்,நைநா,வா போகலாம்என்றார்.
அத்தை, ‘சரி, சாப்பிட்டுப் போங்கோ

அப்பா,‘ஒன்னும் வேண்டாம் நான் போகிறேன்என்னைப் பார்த்து, ‘வாடா போகலாம்எங்களை வழியனுப்பும் போது என் அக்கா அழுவதை நான் பார்த்தேன்,நானும் அழுதுகொண்டு விடை பெற்றேன்.

அன்று இரவு எங்கள் கிராமத்து வீட்டில் அம்மா மற்றும் இரண்டு அண்ணன்களோடு எங்க அப்பா ஆலோசனை நடத்தினார்.என் இரண்டு அண்ணன்களும் ஒரே எங்கள் குரலில்,
நீ படிடா,எவ்வளவு தூரம் படிக்கின்றாயோ அவ்வளவு தூரம் படி,நம்ம குடும்பத்தில் இதுவரை இந்த அளவு படித்தவர்கள் யாரும் இல்லை,எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை,நாங்கள் இருக்கின்றோம் படிடா,படி!

எங்கள் அம்மாவுக்கு மிக்க மகிழ்ச்சி! காரணம் நான் நோஞ்சானாக இருப்பேன். கழணி வேலைக்கு ஏற்ற உடல் வாகு எனக்கில்லை,மேலும் வரும் ஜோசியக் காரர்களெல்லாம்,

இவன் எட்டாம்போர், கிருஷ்ணனின் ஜாதகப் பொருத்தம் உள்ளது, மேலும் இவன் நாக்கில் சரஸ்வதி நர்த்தனமாடுகின்றாள் என அவிழ்த்து விட்டனர், அந்த வார்த்தைகளை காண்போர்களிடமெல்லாம் எங்கம்மா சொல்லி அங்கலாய்ப்பார்கள். எப்பேர் பட்டாவது என் பிள்ளையை படிக்க வைச்சி பெரியஆளாக்கி விடவேண்டும் என சொல்லிக்கொண்டு இருப்பார்.

ஆரணி (பொன்னேரி வட்டம்) உயர்நிலைப் பள்ளியில் என்னை ஆறாம் வகுப்பு சேர்க்க வேண்டும்.அதற்கு எவ்வளவு நுழைவு கட்டணம்,எத்தனை நோட்டுப் புத்தகங்கள்,பாட புத்தகங்கள்,பென்சில்,பேனா போன்ற பொருட்கள் வாங்க எவ்வளவு செலவாகும் போன்ற விவரங்களை எங்க அப்பா சேகரித்து வந்தார்.
             
                         12-பள்ளிக்கூடம் போகமாட்டேன்

என்னை பள்ளிக்கூடம் சேர்க்கும் நாளும் வந்தது. 1963-ஜூன் மாதம் முதல் வாரம், எங்க அம்மா மதிய உணவு தயாரித்து ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கட்டு சோறு மூட்டையைப் போல் கட்டிக் கொடுத்தார்கள்.நான் இந்த கட்டுசோறு மூட்டையை பள்ளிக்கூடம் எடுத்துச் செல்ல மாட்டேன் என சொல்லி விட்டேன்......!
எங்க அம்மா அப்பா,எங்க அண்ணா,அண்ணி ,அக்கா எல்லாரும் சொல்லிப் பார்த்தார்கள்.நான் பள்ளிக்கூடமே போகமாட்டேன் என சொல்லிவிட்டேன். 

மாணவர்கள் எல்லாரும், ‘அடுக்கு டிபன் கேரியரில் உணவு எடுத்துச் செல்வதை நான் பார்த்துள்ளேன்,அது போன்று எனக்கும் வேண்டும் என அடம் பிடித்தேன்.எனக்கு இந்த சோத்து மூட்டையை எடுத்துச் செல்ல வெட்கமாக இருந்தது.
சக நண்பர்கள் என்னை கேலி பேசுவார்கள்,என்னால் முடியாது என தீர்க்கமாக மறுத்துவிட்டேன்.
எங்க அப்பாவுக்கு கோவம் உச்சத்திற்கு வந்துவிட்டது. 

என்ன பாடுபட்டாவது என் பிள்ளையை படிக்க வைப்பேன் என என் அக்காவிடம் சபதம் செய்துவிட்டு வந்தேனே....!,இவன் ஏன்  இப்படி அடம் பிடிக்கின்றான்?, நான் என்ன செய்வது?’ என தனக்குத்தானே நொந்து கொண்டார்.தலையில் கை வைத்து உட்கார்ந்தார்.நான் அழுது கொண்டே இருந்தேன்.

எங்க அப்பாவிற்கு என்னை அடித்து பயமுறுத்தி பணியவைப்பதை விட வேறு வழி தெரியவில்லை. ஒரு மூன்றடி நீள மெல்லிய சவுக்கு கொம்பை எடுத்துக் கொண்டார், அடி பின்னி எடுத்துவிட்டார், நான் அலறினேன், துடித்தேன். எங்கம்மாவுக்கு அழுவதைத் தவிற வேறு ஒன்றும் தெரியவில்லை.
எங்கப்பா மிருகத்தை அடிப்பது போல் அடிக்க துவங்கி விட்டார். கைப்பையில் சில நோட்டுப் புத்தகங்களைப் போட்டு என் கையில் கொடுத்தார்,

அவரே அந்த தூக்கு மூட்டை சோற்றை கையில் எடுத்துக் கொண்டார்,அவரே பள்ளிக்கூடம்  என்னோடு வருவதாக கூறினார்,ஒரு கையில் பிரம்பையும்,மறுகையில் என்னையும் பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டே இழுத்துப் போனார்.ஊரை விட்டு அகலும் வரை அடி விழுந்து கொண்டே இருந்தது,எங்கப்பா என்னைப் பார்த்து அழ ஆரம்பித்தார்,கண்ணே , செல்லம்,ராஜா  என கொஞ்ச-கெஞ்ச  ஆரம்பித்தார்.

எங்கள் ஊரிலிருந்து ஆரணி பள்ளிக்கூடம் 5 கிலோ மீட்டர் தூரம். நடந்தே செல்ல வேண்டும்.காலில் செருப்புக்கு வழி இல்லை,அந்நாளில் கிராமத்தில் யாருக்கும் செருப்பு போடும் பழக்கமும் இல்லை. பள்ளிக்கூட அலுவலகத்தில்  நுழைவுக் கட்ணமாக ரூ.7 கட்டப்பட்டது.
நான் அழுது கொண்டே இருந்தேன்.கட்டணம் கட்டியதும் அலுவலகத்தில் 6C வகுப்பில் சேரச் சொன்னார்கள்.

அப்பொழுது திருமதி வனஜாமணி எனும் ஆசிரியை வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்(இவர் இப்பொழுதும் பொன்னேரியில் வசிக்கின்றார்)
நான் அழுவதைப் பார்த்த அந்த ஆசிரியை எங்கப்பாவிடம் வினவினார்.எங்க அப்பா காரணத்தைச் சொன்னதும் அவர்,
 அழாதே கண்ணா! உனக்கு உங்க அப்பா நாளைக்கே நீ கேட்கும் கேரியரை வாங்கித்தருவர்,நான் சொல்லிட்டேன் நான் இருக்கிறேன், நீ அழுகைய நிறுத்துக் கண்ணா, என என் தலையை கோதி தடவி கொடுத்தார்,அந்த சோத்து மூட்டையை வாங்கி வைத்துக் கொண்டார்,என் அப்பாவைப் பார்த்து,
நீங்கள் போங்கள்,நான் பார்த்துக்கிறேன்,அவனை சாப்பிட வைக்கிறேன்என்றார்

No comments: