Friday, November 22, 2019

இ.பி-14


                54-கிடைத்த வேலை போச்சே!

அன்று எங்க அம்மாவுக்கு 3-ம் ஆண்டு நினைவு நாள்.மாலை 3 மணி அளவில்,அஞ்சல் துறை ஊழியர் ஒரு கடிதம் கொண்டு வந்தார்.அதில்,
உடனே சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள, ‘ஓரியன் கெமிக்கல்ஸ்&இன்டஸ்ட்ரிஸ் எனும் நிறுவனத்தில், ‘கெமிஸ்ட்எனும் பதவியில் சேரவேண்டும் என இருந்தது.
(தினசரி விளம்பரங்களைப் பார்த்து வேலை காலி உள்ள நிறுவனங்களுக்கு எழுதி போடுவது என் வழக்கம்,அப்படி எழுதி போட்டதில் வந்தது தான் இந்த வேலை வாய்ப்பு) எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.!
அந்த கடிதத்தை வாங்கிக் கொண்டு,மறுநாள் அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.சேரும் போது அந்த நிறுவனத்தின் மேலாளர்,என்னைப் பார்த்து,
உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருகிறேன்.உங்களுக்கு மாதம் ரூ.400.00 என சம்பளத்தை நிர்னயிக்கிறேன். உங்களுக்கு தங்கும் வீடு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.நான் படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைத்துவிட்டது எனும் மகிழ்ச்சி.
நான் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு அமர்த்தி தினமும் அந்த கம்பனிக்கு வேலைக்கு சென்று வந்தேன்.எனக்கு, அந்த நிறுவனத்தின் தலைமை கெமிஸ்ட்பயிற்சி அளித்தார்.20 நாட்கள் கழிந்தன,

ஒரு நாள் அந்த நிறுவனத்தின் முதலாளி(ராமசாமி உடையார்,இப்பொழுது உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி நிறுவியவர்) வந்தார்.
மேலாளர் அறைக்கு சென்ற முதலாளி என்ன சொன்னார் என தெரியவில்லை.அவர் சென்ற உடன் அந்த மேலாளர் என்னை உள்ளே அழைத்தார்.நானும் உள்ளே போய் அவர் முன்னே நின்றேன்,

நீங்கள் நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்,உங்களுக்கு இது நாள் வரை வேலை பார்த்ததற்கு சம்பளம் வழங்க சொல்கிறேன்,அந்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு நீங்கள் போகலாம்
எனக்கு ஒரே அதிர்ச்சி,அதிலிருந்து மீள முடியாமல் அவர் முன்னே அழுதேன்!
சார்! நான் என்ன தப்பு செய்தேன்?,என்னை ஏன் பணியிலிருந்து நீக்குகின்றீர்கள்?’
என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது, நீங்கள், போகலாம் என்றார்.

நான் ,நேராக பாரிவாக்கத்தில் இருக்கும் எங்க அக்கா வீட்டுக்கு போனேன்,அக்காவைப் பார்த்ததும்,கிடைச்ச வேலை போயிடுத்துக்கா....! என அழுது விட்டேன். நான் அழுவதைப் பார்த்து எங்க அக்கா அழவில்லை,மாறாக,

டேய்,நீ, ஆம்பளடா.., நீ.. படிச்சிருக்கிற,  இந்த வேலை இல்லன்னா இன்னொரு வேலை கிடைக்கப் போகுது. இதுக்கு போய் ஏண்டா அழறே..?! இந்த கம்பனியில வேலை கிடைக்கும்னா நீ பொறந்தே..? போ..,போயி..முகத்தை அலம்பிக்கிட்டு கைகாலை கழுவிக் கொண்டு வா,எல்லாம் சரியாகிவிடும்..என்றார்.
சிறிது நேரத்திற்கெல்லாம்,என் தம்பி கிராமத்திலிருந்து ஒரு இன்டர்வ்யூகார்டு கொண்டு வந்தான்.
அன்று 1975,டிசம்பர் 30.அடுத்தா நாள் 31,அது தான் கடைசீ ஒரு நாள்,நான் பயிற்சியில் சேருவதற்கு.அது 4 நாள் பயிற்சி.ஆனால் அந்த கடிதம் கால தாமதாமதமாக கிடைத்தது.
(இந்த நேர்காணல் கடிதம் எப்படி கிடைத்தது என நான் சொல்ல வேண்டும்.)
ஒரு நாள்,ஆரணியில் எனது கல்லூரி நண்பன் திரு உமாபதியை சந்திக்க நேர்ந்தது,அப்போது அவர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், காஞ்சிபுரத்திலிருந்து, எனக்கு ஒரு இன்டர்வ்யு வந்துள்ளது,ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை,காரணம் நான் விஏஓ ஆகப்போகிறேன் என்று சொன்னார்.
உனக்கு எப்படி இன்டர்வ்யு  கிடைத்தது?
எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சிலிருந்து !
நாம் இருவரும் ஒன்றாகத்தானே எம்ப்ளாய்மென்டில் பதிவு செய்தோம் ,எனக்கு மட்டும் ஏன் வர வில்லை?
எனக்கு தெரியாது,நீ வேண்டுமென்றால் அந்த அதிகாரியைப் போய் பார்என்றார்.
அடுத்த நாள் சைதாப்பேட்டையில் உள்ள அந்த வேலைவாய்ப்பு அதிகாரியை காணச் சென்றேன்.அவரிடம் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர் என்னை உள்ளே விட மறுக்கின்றார்.நான் எவ்வளவோ கெஞ்சியும் என்னை விடவில்லை.நான் வெகு நேரம் அங்கேயே நின்றிருந்தேன்.
அந்த கடைநிலை ஊழியரை அந்த அதிகாரி டீவாங்க அனுப்பினார்,இதுதான் சமயம் என நான், ‘சட் என உள்ளே நுழைந்து விட்டேன்.
அதிகாரி,
என்ன வேண்டும்?’
அய்யா,நானும் என் நண்பனும் ஒரே நாளில் இங்கு வந்து பதிவு செய்தோம்,அவருக்கு இன்டர்வ்யு வந்தது,எனக்கு மட்டும் வரவில்லை
அப்படியா..! ?,நான் பார்க்கிறேன்.என சொல்லிவிட்டு உடனே பதிவு விவரங்களைப் பார்த்தார்.மேலும் அவர்,‘எப்படியோ விடுபட்டு போய்விட்டது,நான் உங்களுக்கு கார்டு அனுப்புகிறேன்

அடுத்த சில தினங்களில் அந்த வேலை வாய்ப்பு கார்டு கிடைத்தது.வேலை வாய்ப்பு அட்டையில் குறிப்பிடப்பட்ட தேதியில் நான் காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழக,மண்டல அலுவலகத்தில் நேர்காணலுக்கு சென்றேன்.
அப்போது என் பள்ளி மற்றும் கல்லூரிகால நண்பர்களை பார்க்க நேரந்தது. குறிப்பாக, திரு.கேசவன் (SBI பணியிலிருந்து ஓய்வு), வாசுதேவன், மணிபாலன்,(மூவரும் பொன்னேரி கல்லூரி நண்பர்கள்) தசரதராமன் (ஆரணி பள்ளிக்கூட தெலுகு வகுப்பு நண்பர்) மற்றும், அத்திமாஞ்சேரி திரு சுப்ரமணியம் (இவர்,Bed சைதாபேட்டை கல்வியியல் கல்லூரி நண்பர்) நேர்க்காணலில்,visuval test-ல் 5 ரக நெல்லை வைத்து அதன் பெயர்களை குறிக்கச் சொன்னார்கள்.அதன் பிறகு நேருக்கு நேர் நேர்காணலில் ஒரு நீளமான நெல்லை காட்டி அதன் பேர் என்ன? என்றார்கள்.நான் விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் நெல் ரகங்களை நான் அறிந்தவன் அல்ல. நான் கேள்விப்பட்டது பார்த்தது எல்லாம் சிறுமணி,IR8 நெல் மட்டுமே ,எனவே நான் IR8 என சொன்னேன்.
வெளியில் வந்த நான் ,மற்றவர்களைப் பார்த்து, ‘அது என்ன ரகம்?’ என்றேன்.
ஒருவர் பூசாஎன்றார்,மற்றவர் IET 1722&35 என சொன்னார்.அவர்களுக்கே குழப்பம் தான்.எல்லாம் 

நேர்காணலில் தோற்றால் கூட அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்தாக வேண்டும் எனும் அரசின் கட்டாயம் இருந்ததால் எங்கள் எல்லாருக்கும் வேலை கிடைத்தது.
அப்போது என் பள்ளிக்கால நண்பன் திரு.தசரதராமன், கல்லூரி நண்பர்களான திரு. மணிபாலன்,திரு.வாசுதேவன் ஆகியோரை சந்திக்கும் போது, நான் தனியார் நிறுவனமான ஓரியன் கெமிகல்சில் கெமிஸ்ட்டாக பணியில் இருப்பதை சொன்னேன், உடனடியாக நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் பணியில் சேர முடியாது என்றேன், பின்னாளில் அதே துறையில் நான் பணியில் சேர்ந்த போது, அவர்களின் கால அளவான சீனீயரிட்டையை பெற முடியாமல் போய்விட்டது.
அவர்களுக்கு பின், 20 நாட்கள் பணியில் நான் சேர்ந்ததால், அவர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றனர்.மேலும் நான் அதிகாரிகளுடன் இணங்கிபோக தெரியாததால் மட்டுமல்ல,சாதி பாகுபாடு காரணமாக சர்வீசில் எனக்கு பின்னடைவு ஏற்பட்டது.நான் வெய்யிலாளி வர்கம்,என் இன அதிகாரிகள் ,அரசு பணியில் இருப்பது அரிது.அப்படி இருந்தலும் ,அவர்களால் என்னை போன்றவர்களுக்கு பயன் இருக்காது.
                         ********
     
            55-இறந்து போன அம்மாவை மேலும் சாகடித்தேன்

இந்த வேலையை நான் எப்படியாகிலும் வாங்கி விட வேண்டும். உண்மையை சொன்னால் வேலை கிடைக்காது.அதிகாரி நம்பும் படியும்,அதிகாரி,அனுதாபம் பெற பொருந்தும்படி ஒரு பொய் சொல்ல வேண்டும்!.
அடுத்தநாள் காஞ்சிபுரம் செல்ல வேண்டும்.பிராட்வே பஸ் நிலையம் சென்றேன், ‘79’ எண் கொண்ட பஸ் காஞ்சிபுரம் எனும் வழித்தடம் எழுதப்பட்டிருந்தது. ஏறி விட்டேன்.
பிற்பகல் 2 மணிக்கு மண்டல மேலாளரை சந்தித்தேன். இன்டர்வ்யு கடிதத்தை கொடுத்து ,
சார், எனக்கு இந்த கடிதம் நேற்று தான் கிடைத்தது,அதற்கு முந்தையா நாள் எங்க அம்மா இறந்து விட்டார்கள், அதனால் காலதாமதம் ஆகிவிட்டது சார்!

தம்பி,உன் நிலை பரிதாபமாக உள்ளது,இப்பொழுது பயிற்சியே முடியப் போகிறது.நீ உடனே ‘TO’ (technical officer) வைப் போய்ப் பார்.அவர்தான் உங்களுக்கு அதிகாரி. பய‍ற்சி அதிகாரியும் அவர்தான் அவரைப் போய்ப் பார். அவர்தான் உங்களுக்கு பயிற்சி கொடுத்து வேலை கொடுக்க வேண்டும்.சொல்லிவிட்டு மேலும் என்னைப் பார்த்து,
அவர் திம்மாவரத்தில் இருக்கின்றார்,உடனே அவரை போய்ப்பார்,கால தாமதம் கூடாது.என்றார்.உடனே மக்குத்தனமாக நான் அவரைப் பார்த்து, ‘அந்த ஊர் எங்கிருக்கின்றது என தெரியாது சார்!என்றேன்.நல்ல மனம் படைத்த அந்த அதிகாரி,
பஸ்ட்டேண்டிற்கு போய் செங்கல்பட்டு போகும் பஸ் எல்லாம் அந்த வழியே போகும், போ
வேறு அதிகாரியா இருந்தா,இதெல்லாமய்யா ,என்னிடம் கேட்பாய்? என விரட்டி விட்டுருப்பார்.(அவர்தன்,திரு சுப்பரமணிய அய்யப்பான்)

மாலை 3.30 மணிக்கு பேருந்தை விட்டு இறங்கி அருகிலிருக்கும் அந்த நவீன அரிசி ஆலைக்குள் நுழைந்தேன்.MTO-MILL TECHNICAL OFFICER, எனும் அதிகாரியை சந்தித்து,மண்டல மேலாளரை சந்தித்த விவரத்தை சொன்னேன்,அங்கே சொன்ன பொய்யை,மீண்டும் அவரிடம் சொன்னேன்.பயிற்சியை முடித்து புறப்பட தயாராக இருந்த அந்த அதிகாரி,
பயிற்சி முடித்து விட்டு நின்று கொண்டிருந்த நபர்களில் ஒருவரைப் பார்த்து,
இவருக்கு , “how to operate moisture metre” மட்டும் சொல்லிக் கொடுங்கள். மற்றதை எல்லாம் பீல்டில் சொல்லிக் கொடுக்கலாம்என்றார்.
இவர் சொன்னதிலிருந்து எனக்கு வேலை கிடைப்பது உறுதி என ஆகிவிட்டது.30 நிமிடங்களில் அந்த எந்திரத்தின் பயன் பாடுகளை சொல்லிக் கொடுத்தார்கள்.
புறப்படலாம் என அந்த அதிகாரி சொல்லிக் கொண்டிருக்கும் போது அவருக்கு காஞ்சிபுரத்திலிருந்து ஒரு போன் வந்தது.  ஆலை அலுவலகத்தில் தொலைப்பேசி உரையடலை துண்டித்துவிட்டு எங்களிடம் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இங்கே பக்கத்திலிருக்கும்,ஆத்தூரில் நாளை ஒரு DPC(direct purchase centre)
(நேரடி நெல் கொள்முதல் நிலையம்) யைத் திறக்க வேண்டியதிருக்கும்.
அங்கே ஓரியன் கெமிக்கல்சு அதிபரின் நெல்லை வாங்க வேண்டுமாம்.அவர் ராமசாமி உடையார் ,உங்களை மிரட்டபார்ப்பார், யாருக்கும் அஞ்சா மனம் படைத்தவர்தான் அங்கே போகவேண்டும் என்றார். மேலும் அவர், ‘யார் வாங்கப் போறீங்க?’ என கேட்டுவிட்டு என்னைப் பார்த்தார்.உடனே, ‘இவருக்கு record maintenance பற்றி தெரியாது,வேற யார் போறீங்க?

எனக்கு ஒரு பெரிய relief,எனக்கு வேலை இல்லை என்று சொன்னவனின்(ராமசாமி உடையார்) தேவைகளை நிறைவேற்ற வேண்டும் , என் மனம் தூய்மையாக வேலை செய்யாது. முதல் நாளே சிக்கலில் மாட்டுவதா? ‘எப்படியோ தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போச்சு என்பார்களே,அதுபோல.
மீண்டும் என்னைப் பார்த்த அந்த அதிகாரி, ‘உங்களுக்கு appointment order ஐ தபாலில் அனுப்புகிறேன், தம்பி, நீங்கள் போகலாம். என்றார்.அவர் சொன்ன ஒரு வாரத்தில் எனக்கு உத்தரவு கிடைத்தது..MILL TECHNICAL ASSISITANT என்று அந்த பதவிக்கு பேர்.
            
             56-பொன்னேரியில் பணியில் சேர்ந்தேன்

1976,ஜனவரி 9ந்தேதி  உத்தரவு கிடைத்தது,நான் 10-ந் தேதி பொன்னேரியில் உள்ள purchase officer(tasildar) இடம் பணியில் சேர வேண்டும் என உத்தரவு வந்தது. அதிகாரியிடம் பணி நியமன ஆணையை ,கொடுத்து duty joining report கொடுத்தேன். என்னை பொன்னேரிக்கு அருகிலிருக்கும், ‘திருவெள்ளிவயல்எனும் கிராமத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செல்ல பணி நியமனம் செய்யப்பட்டேன்.
             
                       57-பள்ளிப்பட்டிற்கு பணி மாற்றம்

ஆனால் என்னை அங்கு போக விடவில்லை. அடுத்த நாள்,ஜனவரி 11-ந்தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து பொன்னேரி வட்டாட்சியருக்கு ஒரு தொலைபேசி செய்தி வந்தது,
‘திரு.திருவேங்கடம் MTA (mill technical assisitant) அவர்களை,உடனடியாக பள்ளிப்பட்டிற்கு சென்று அங்கு உள்ள தாசில்தாரிடம் report செய்ய வேண்டும்’ என எனக்கு அந்த தொலைபேசி உத்தரவை படித்து காண்பித்தனர்.

ஜனவரி 12 அன்று,காலை வீட்டை விட்டு கிளம்பி திருத்தணி வழியாக பள்ளிப்பட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்று வட்டாட்சியர் அலுவலகம் சென்றேன்.
அங்கு தங்கியிருந்த duty  அலுவலரிடம் duty joining report ஐ அளித்தேன்.அவர் சொன்னார்,
நாளை போகி பண்டிகை. எல்லா அலுவலரும் பொங்கல் கொண்டாட தத்தமது ஊருக்கு சென்று விட்டார்கள். நீங்களும், பொங்கல் கொண்டாடி விட்டு வந்திருக்கலாமே..!..?’
பொங்கலாவது, பண்டிகையாவது எனக்குத்தான் வேலை கிடைத்தால் போதும் என ஏங்கிக் கொண்டிருந்தேனே! அன்றிரவு அங்கேயே,வட்டாட்சியர் அலுவலகத்தில் படுத்து விட்டேன். இரவு 9 மணி இருக்கும்.என்னைப் பார்க்க ஒரு பெரிய மனிதர் வருவதாக அந்த அலுவலகத்தின் கடைநிலை ஊழியர் தெரிவித்தார்.

என் மனதுக்குள், ‘என்னை பார்க்கவா..? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா.?...!’ என நினைத்துக் கொண்டே . வரச் சொல்லுங்கள்என்றேன்.
வந்தவர், ‘அய்யா ! ,வணக்கம்! என் பெயர் செல்லையா செட்டி’,நான் இந்த ஊரில் ஒரு ரைஸ் மில் வைத்துள்ளேன்,எனக்கு சொந்தமாக என் நிலத்தில் விளைந்த 300 மூட்டைகள் நெல் உள்ளன,முதல் நபராக பதிவு செய்து என்னுடைய நெல்லை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.என்றார்.சொன்னவர் தன் சட்டைப் பையிலிருந்து கத்தையாக நூறு ரூபாய் தாள்களை எடுத்தார்!,
இதை என் அன்பளிப்பாக வைத்துக்  கொள்ள வேண்டும்என்றார். நான்,
நான் உங்கள் நெல்லை எடுக்க வேண்டும், அவ்வளவுதானே? அதற்கு உங்கள் பணம் எனக்கு எதற்கு?’
அவர்

அய்யா,நீங்கள் உங்கள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டே என் நெல்லை எடுங்கள்.இருந்தாலும்,எங்கள் ஊருக்கு வந்துள்ள ஒரு மதிப்பு மிக்க அலுவலர், நீங்கள்.இதை நீங்கள் எங்கள் அன்பளிப்பாக பெற்றுக் கொள்ள வேண்டும்.என்றார்.
எனக்கு அழுகையாக வந்து விட்டது,என் கண்ணில் நீர் வடிவதைப் பார்த்த அந்த பெரிய மனிதர், ‘சார்,இதுக்கு போய் அழறீங்களே,என்ன சார்?.. ஒரு தைரியமில்லாத ஆளா இருக்கீங்களே?’ என்றார். கண்ணில் வந்த நீரை துடைத்துக்  கொண்டு,
நான். சார், நான், காந்திய வழி கொள்கையாளன்,எனக்கு அரசாங்கம் சம்பளம் தருவார்கள்,நான் ஏன் உங்களிடம் பணம் வாங்க வேண்டும்?
(எனக்கு என் பள்ளி இறுதி படிப்பில் முதன்மை மாணவன் என்கின்ற முறையில், காந்தியின் சத்ய சோதனைஎனும் நூல் பரிசளிக்கப்பட்டது,அதை ஊன்றிப்படித்ததால் அவரைப்போல் சத்யத்தை கடைபிடித்து வாழவேண்டும் எனும் எண்ணம் கொண்டவன்)
என்ன,சார் பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே..!..?’
இல்லை சார், நான் நாளைக்கு மையத்திற்கு வருகிறேன்,அங்கே என்ன நடைமுறையோ அதன்படி உங்கள் நெல்லை வாங்க முயற்சிக்கிறேன்
என சொல்லி பணத்தை வாங்க மறுத்து அவரை அனுப்பி விட்டேன்.

செங்கல்பட்டு நவின அரிசி ஆலையில் 30 நிமிட பயிற்சியின் போது எனக்கு வேலை தருவதாக சொன்ன அந்த அதிகாரி(MTO.திரு.ஏகாம்பரம்), சொன்னது என் நினைவுக்கு வந்தது,
எந்த விதமான அச்சுறுத்தலுக்கும், ஆசைக்கும் அடிபணியாமல் பணியாற்றுங்கள்,எந்த விதமான மிரட்டல் வந்தாலும் தரமான நெல்லை மட்டுமே வாங்க வேண்டும் என உறுதியாக இருங்கள்,எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தங்கள் கடமையிலிருந்து பின் வாங்காதீர்கள், நான் உங்களுக்கு பக்க பலமாக செயலாற்றுவேன், நான் இருக்கும் வரை நீங்கள் அச்சமின்றி பணியாற்றலாம்.என்று சொன்ன அவர் வார்த்தைகள், என் மனதில் இன்றும் நிழலாடுகின்றன!.
அடுத்த நாள் போகி என்றதாலும்,அடுத்து இரண்டு மூன்று நாள் விடுமுறை என்பதாலும் நான் வட்டாட்சியர் அலுவலக்தில் தங்கி விட்டேன்.
விடுமுறை கழிந்து நான், நெல் கொள்முதல் நிலையம் இயங்கும் பள்ளிப்பட்டு யசோதம்மாள் அரிசி ஆலைக்கு சென்றேன்.அங்கே ஏகப்பட்ட நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.எனக்கு உதவியாளர் என்று ஒருவர் என்னிடம் வந்து,
நான் உங்களுடைய Helper,நீங்கள் சொல்லும்  வேலையை செய்வது தான் என் வேலை,’ என்றார்.
அதன் பின் திரு .பழனி என்பவர் வந்தார். (இவர் பின்னாளில் பதவி உயர்வு பெற்று மண்டல மேலாளாராக ஓய்வு பெற்றார்)

நான், காஞ்சிபுரத்திலுள்ள மண்டல அலுவலகத்தில் JA வாக பணி புரிகிறேன். என் பெயர் பழனி, ஒரு BCom பட்டதாரி. நெல்லை வாங்க  ஒரு அறிவியல்(BSc) பட்டதாரியல் மட்டுமே முடியும் என்பது நமது நிறுவனத்தின் சட்டம்.அவசரத்திற்கு ஆள் இல்லை என நிர்வாகம் அனுப்பியது.எனக்கு தரம்பார்த்து நெல் வாங்கத் தெரியாது.இங்கே இருக்கும் நெல் மூட்டைகளை நீங்கள் தான் தரம் பார்த்து வாங்க வேண்டும்.என சொல்லி ஒரு லட்ச ரூபாய் பணத்தையும், அதற்குண்டான பதிவேடுகளையும் என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.

நான் அவ்வளவு பெரிய பணத் தொகையை,எங்கே பாது காப்பது?அந்த பணத்தை, அலுவலகத்தில்   உள்ள மேசை அறையில் வைத்து பூட்டி விட்டேன்.ஒவ்வொரு நாளும் நெல்லுக்குண்டான தொகையை உரியவர்களிடம் கொடுத்துவிட்டு,மீதி பணத்தை மேசை அறையில் வைத்து பூட்டி விட்டு இரவு நேரத்தில் அதன் மீது படுத்து தூங்கிவிடுவேன்.மீதிப் பணம் எவ்வளவு உள்ளது என எண்ணிப் பார்ப்பது இல்லை!,காரணம் பணம் என்  பாதுகாப்பில்தானே உள்ளது இதை எதற்கு எண்ண வேண்டும் எனும் நம்பிக்கைதான்.

எனக்கு நெல் வாங்க போதிய பணத்தை ஒரு தாசில்தார் அந்தஸ்தில் உள்ள purchase officer காஞ்சிபுரத்திலிருந்து தந்து விட்டு ஒரு ஒப்புதல் கடிதம் பெற்றுக் கொண்டு போய்விடுவார். மொத்தம் ரூ.3 லட்சம்.ஒரு நாள் அந்த அதிகாரி, ‘நான் இதுவரை மூன்று லட்ச ரூபாய் கொடுத்துள்ளேன் இதற்குண்டான adjustment billவேண்டும் என்றார்.
நான் அவரிடம்,
அப்படி என்றால் என்ன சார்?’
போச்சு போ! உனக்கு யாருமே, எதுவுமே சொல்லித் தரவில்லையா?’ தன் தலைமீது கையைய வைத்து உட்கார்ந்து கொண்டார்.
இல்லை, சார்!நான் எப்படி வேலைக்கான உத்தரவை பெற்றேன் என அவரிடம் தெரிவித்தேன்.
அப்படியா?’ என சொல்லிவிட்டு அவரே எனக்கு பதிவேடுகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

நான் தங்கியிருந்த அரிசி ஆலை அதிபரின் மகன் திரு ஆனந்தன் என்பவர், என்னோடு நட்புடன் பழகுவார். அவருடைய நண்பரான ஒரு B.Com பட்டதாரியின் உதவியுடன் 3 லட்ச ரூபாய்க்கான adjustment bill தயாரித்து அந்த அதிகாரியிடம் கொடுத்து விட்டேன்

No comments: