Saturday, November 9, 2019

இ.பி-6


                     22-பட்டணம் பார்க்க போனேன்

1968-ல் பொங்கல் நாளில் சென்னை அண்ணா நகரில் உலக வர்த்தக பொருட்காட்சிநடந்து கொண்டிருக்கின்றது.அறிஞர் அண்ணா முதலமைச்சர்.

1967-மே மாதம்  நடந்த பொது தேர்தலில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரசை (அப்போது திரு பக்தவச்சலம் முதமைச்சர்) தோற்கடித்து திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்தது.தமிழ் உணர்வுகளை தமி்ழ் மக்களுக்கு ஊட்டி வளர்த்து ஆட்சியைப் பிடித்தார்கள். அதன் விளைவாக தமிழ் அறிஞர்களுக்கு சென்னை கடற்கரையில் சிலைகள் வைத்தார்கள்.
சென்னை மெரினா பீச்சில் தமிழ் மூதறிஞர்கள் சிலைகள் வைக்கப் பட்டதை காண வேண்டும் என்பது என் ஆசை.நானும் பொருட் காட்சி காணவேண்டும் எனும் அவா என்னுள் எழுந்தது.அதுவரை நான் பட்டணம் போனது இல்லை.

அப்போது லட்சுமி அக்கா மகன் திரு வேணுகோபால் ஊருக்கு வந்திருந்தார்.எங்க அம்மா அவரை  அழைத்து, ‘டேய்,கண்ணா,என் பையன் பட்டணத்தை பார்த்தில்லை, அவனை கூட்டிக் கொண்டு போடா,எல்லாத்தை காட்டிட்டு வந்து சேருங்கஅம்மா,ஆளுக்கு 5 ரூபா கொடுத்தாங்க.வேணுவும்,
சரி, அத்தை, நான் அழைச்சிணு போறேன்.
என்னைப் பார்த்து, ‘டேய்,வாடா போலாம்என்றார்.

காலை 6 மணிக்கெல்லமா புறப்பட்டோம்.ஆரணியில் பேருந்தை பிடித்து,சென்னை மூல கொத்தளம்(பேசின் பிரிட்ஜ்)இறங்கினோம்.அப்போது,பக்கிங்காம் கால்வாயில் பழவேற்காடு பகுதியில் இருந்து படகில் சவுக்கு கட்டைகள், சென்னை வாசிகளுக்காக அடுப்பெரிக்கும் நோக்கத்திற்காக இறங்குவதை பார்த்தேன்.
பேருந்தில் இறங்கி,மெரினா பீச்சுக்கு நடந்தே சென்றோம்.வேணுவும், ‘டேய் நீ பட்டணத்தையே பார்க்கல என்று சொல்லற,நடந்து போனாத்தாண்டா,நாலு எடத்தை பார்க்க முடியும். நானும். சரிடா,நடந்தே போகலாம்என்றேன்.அப்போ ஆரணியிலிருந்து சென்னைக்கு பேருந்து கட்டணமே  75 பைசா என நினைக்கின்றேன். பீச்சில் உள்ள பாரதியார்,கண்ணகி போன்ற சிலைகளை (10 சிலைகள்) கண்டோம்.
அப்போது உயர் நீதி மன்ற வளாகத்தில் கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. அதை அதன் உச்சத்தில் சென்று சென்னை நகரை  கண்டு களித்தோம்.
பின் நடந்தே சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே உள்ள மிருக காட்சி சாலையில் உள்ள மிருகங்களை கண்டு களித்தோம்.இப்போது அந்த மிருக காட்சிசாலை வண்டலூர் மாற்றப்பட்டு விட்டது.அங்கிருந்து நடந்து,எழும்பூர் அருங்காட்சியகம் சென்றோம்.பழங்கால நினைவு சின்னங்களான போர்க்கருவிகள், கல்வெட்டுக்கள்,தாமிர பத்திரங்கள் போன்றவைகளை கண்டு களித்தோம்.
எழும்பூரிலிருந்து பேருந்தை பிடித்து பொருட் காட்சி நடக்கும் அண்ணா நகருக்கு சென்றோம்.அப்போது நான் கண்டதை கண்கொள்ளா கட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.எல்லா ஸ்டால்களையும் சுற்றிப் பார்க்க மாலை 6 மணி ஆகிவிட்டது. அண்ணா நகரிலிருந்து பேருந்தை பிடித்து மூல கொத்தளம் வந்து பேருந்தை பிடித்து வீடுவந்து சேருவதற்கு இரவு 9 மணி ஆகிவிட்டது.
                    ********
         
              23-அடிகளாரின் வழியி்ல் கடவுள் வழிபாடு

பத்தாம் வகுப்பில்(1967-68) தமிழ் புத்தகத்தில் ராமலிங்க அடிகளார்இன் கடவுள் வழிபாடு பற்றிய பாடல் இடம் பெற்றிருக்கும்.அந்த பாடல் இதோ,

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்,
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
உறவு கல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மனமானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டுமுனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்..
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
....இப்படியாக அந்த பாடல் சென்னை கந்த கோட்ட முருகனை ராமலிங்க அடிகள் வணங்கிய பாடல் அது,
எனக்கும் இந்த பாடலை பிடித்துப் போயிற்று. தினமும் நான் பள்ளிக்கு செல்லும் முன் குளித்துவிட்டு,நெற்றியில் திருநீரு இட்டு,பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களுக்கு முன் வள்ளலாரின் துதி பாடலை பாடி,கற்பூரம்,ஊதுவத்தி கொளுத்தி,தரையில் விழுந்து வணங்கி ,

முருகா. நான் நன்றாக படிக்க வேண்டும்,பள்ளியில் முதல் மாணவனாக வர நீ தான் கருணை புரியவேண்டும்...முருகா! என வேண்டுதலோடு பள்ளிக்குச் செல்வேன். நான் தொழுகைகயை மறந்தால் கூட பள்ளிக்கு செல்லும் போது,எங்க அம்மா மறக்காமல்,
டேய், கண்ணு, சாமிபடத்துக்கு கற்பூரம்,ஊதுபத்தி கொளுத்தினியா?’ என்பார்கள்.
              
                       *********அம்மா!********

எங்க அம்மா மாம்பழம் விற்றுவிட்டு,மாலையில் வீடு திரும்பும் போது,  என் புத்தகப் பைகளைப் பார்த்து, ‘இவ்வளவு புஸ்த்தகமா படிக்கிற கண்ணு, அதை கொடு நான் தூக்கிக்கினு வர்ரேன்’ என  என்னிடம் இருந்து வாங்கி அதை கூடையில் வைத்து தலைமேல் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
அவ்வாறு வரும் போது,மளிகைப் பொருட்களை வாங்கி வருவார்கள். வீட்டில் வந்தவுடன் ,அப்போது பொட்டலம் கட்டி வரும் காகிதங்களின் எழுத்துக்களை படிப்பது என் வழக்கம். அப்படி படிக்கும் போதுதான் குமுதம், கல்கண்டு,ஆனந்த விகடன்,கல்கி போன்ற வாரந்திரிகள் இருப்பது தெரியும். அப்போது தான், அவைகளை நூலகத்திலோ அல்லது பெட்டிக் கடைகளிலோ வாங்கி படிக்கும் பழக்கத்திற்கு அடிமையானேன். இன்றும் ஆனந்த விகடன்,குமுதம் போன்ற வாராந்திரிகளை படிக்கும் பழக்கம் எனக்கு விட்டபாடில்லை.
                         ********
                
                      24-நான் முதல் தர மாணவன்

அப்பொழுதெல்லாம் மாதாந்திர தேர்வுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 5 ரேங்க் வாங்கும் மாணவர்களை பள்ளிக்கூடத்தில் தினமும் நடக்கும் தொழுகை(assembly) கூட்டத்தில் தலைமை ஆசிரியர் கவுரவிப்பார்,அந்த 5 பேரில் நானும் ஒருவனாக வரவேண்டும் என வைராக்கியம் கொண்டேன். என் மனதுக்குள் ஒரு உத்வேகம் எழுந்தது.
நான் ஏன் இந்த போட்டியில் இறங்க கூடாது?
நானும் அங்கில vocabulary படிக்க வேண்டும் என என் மனதை அதற்கு தகுந்தால் போல் பக்குவப்படுத்திக் கொண்டேன்.10-ம் வகுப்பில் 5-ம் ரேங்கை எட்டி பிடித்தேன்.தலைமை ஆசிரியர், ஆயிரம் மாணவர்கள் மத்தியில் என்னை கவுரவ படுத்தியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!  அதற்குள் முழு ஆண்டுத்தேர்வு வந்து விட்டது.
          
                    25-   10,எழுதாமலே 11,க்கு போனேன் !                                     

திங்கள் அன்று 10-ம் வகுப்பு தேர்வு துவங்க இருக்கின்றது.நானும் எல்லா பாடத்திலும் முழுமையாக படித்துவிட்டேன். தேர்வுக்கு முந்தைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி இருக்கும்,எங்களுக்கு சொந்தமான பனை மரங்களில் எதாவது ஒன்றில் ஏறி பனங் காய்களை பறித்து பசியைப் போக்கலாம் என நினைத்து  கத்தியை தீட்டிக் கொண்டு கையில் உள்ள கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு 30 அடி உயர பனை மரத்தில் ஏற ஆரம்பித்தேன்.
உச்சிக்கு சென்ற நான் ஒரு கையில் காய்ந்த பனை மட்டையை பிடித்துக் கொண்டு,மறுகையில் குலையை வெட்டினேன்.வெட்டிய குலை என் தொடைமீது விழுந்தது,பாரம் தாங்காமல் காய்ந்த மட்டை மரத்திலிருந்து பிய்த்துக்கொண்டு மரத்துக்கு கீழே, ‘சூர முள் புதர் மீது விழுந்தேன்.விழுந்து இரண்டு மூன்று நிமிடங்கள் நினைவு இருந்தது.
அதன் பிறகு நினைவு திரும்பியபோது வீட்டில்,கயிற்று கட்டிலில் என்னை படுக்க வைத்து எங்கம்மா எனக்கு அழுது கொண்டே சோறு ஊட்டிக் கொண்டிருந்தார்.
வலது தோள் பட்டை வீங்கி விட்டது.வலியால் துடித்தேன்.என்னை புத்தூர்க்கு அழைத்துப் போக தீர்மானித்தனர்.பெரிய அண்ணாவைத் தேடினார்கள். எங்கு போனார் என்று தெரியவில்லை,அவர்தான் குடும்பத்தில் விவரம் தெரிந்தவர்.இவர் ஒரு -extrovert
 என் சின்ன அண்ணா அருகில் இருந்தார்,எங்க அம்மா , ‘இவனை புத்தூருக்கு அழைத்துப் போடா
சரி என்று சொன்ன என் சின்ன அண்ணா என்னை அழைத்துக் கொண்டு புத்தூருக்கு பஸ்சில் கிளம்பிவிட்டார்.
இவர் ஒருintrovert, யாரிடமும் சரியாக பேசமாட்டார்.அன்று மாலை 6 மணிக்கெல்லாம் புத்தூர் சென்று விட்டோம்.அங்கிருந்து குதிரை வண்டி ஏறி 3 கிமீ தூரம் உள்ள கட்டு போடவேண்டிய,‘ஈசலாபுரம்சென்று விட்டேம்.ஆனால் காலையில் தான் கட்டு போடப்படும் என்றனர்.இரவு அங்கே தங்கி விட்டோம்.
வலி தாங்க முடியவில்லை.என் அண்ணா என் அருகே வந்து, ‘டேய் கள்ளு குடிடா ,கொஞ்சம் வலி குறையும் என்றார்.
கள்ளு குடிச்சா எப்படிண்ணா வலி குறையும்?
வலி மறைக்க சாராயம் குடிப்பாங்க,சாராயம் குடிக்கிறது உடம்புக்கு நல்லதல்ல,கள்ளு குடி உடம்புக்கு நல்லது என்றார்.
நானும், ‘சரிண்ணா,வாங்கிக் கொடு,குடிக்கிறேன் கு்டித்தேன்,குடிக்கும் போது புளிப்பு கலந்த வாசனை இருந்தது,எப்படியோ மூக்கைப்பிடித்து கொண்டு குடித்தேன். போதை என்றால் எப்படி இருக்கும் என்று உணர்ந்தேன்.

காலையில் கட்டு போட்டதும் புத்தூருக்கு வந்து பேருந்தைப் பிடித்து வீடு திரும்பும் வழியில் ராமகிரிஎனும் இடத்தில் பஸ் விபத்துக்குள்ளானது. பிற்பகல் ஒரு மணி இருக்கும்,எதிர்பாராவிதமாக ஒரு வயோதிகர் பஸ்சிற்கு முன்னே வந்துவிட்டார் அவரைக் காப்பாற்ற ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால் பஸ் தலைகீழாக உருண்டு அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.விழும் போது நான் எனது இடது கையால் பேருந்தின் கூரையில் இருக்கும் குறுக்கு கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டேன், மற்றவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்ததால்,பேருந்துக்குள்ளே உருண்டு கீழே போய் விட்டார்கள் .பேருந்தின் வாயில் தரையில் உள்ளதால் ,பேருந்தின் இன்னொரு பக்கம் ஏறி பயணிகள் வெளியேறினர்.
அப்படி கீழே உருண்டு செல்லும் போது நிறைய பேருக்கு கைகால் உடைந்து விட்டது. எனக்கு ஒன்றும் ஆகவில்லை. என்னோடு அமர்ந்திருந்த என் அண்ணாவும் உருண்டு கீழே போய்விட்டார்.அவர்,கூட பயணித்த பயணி மீது விழுந்ததால் அவருக்கு அடியில்லை,அந்த பயணிக்கு பலத்த காயம்.ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் 10-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வு எழுத முடியாத நிலை.என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரோ ஒருவர் யோசனை தெரிவித்தார்,
இவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரைப் பாருங்கள்,அவர் எதாவது வழி சொல்லுவார்
அப்படியே என்னை அழைத்துக் கொண்டு எங்க அப்பா தலைமை ஆசிரிரைப் பார்க்கச் சென்றார்.அவர் உடனே என்னுடைய வகுப்பாசிரியரை அழைத்து ,
இவன் எப்படி படிப்பான்?,இவனைப்பற்றிய performance report கொடுங்கள்! என்றார்.சில நிமிடங்கள் அந்த ரிப்போர்ட்டை பார்த்த தலைமை ஆசிரியர்,எங்கள் அப்பாவிடம், ‘இவனை அழைத்துப் போங்கள், தேர்வு எழுத வேண்டாம், கால் ஆண்டு, அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்துள்ளான் ,11-ம் வகுப்புக்கு அனுப்பி விடுகிறோம்என்றார் .மிக்க மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.
முதுகெல்லாம் சூர முள் பதிந்து பல ஆண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தது.கடைசியாக 

1982ல் 14 ஆண்டுகள் கழித்து முதுகில் இருந்த ஒரு முள் வெளி வந்தது.
11-ம் வகுப்பு. (இது தான் அப்போதைய SSLC)முதல் ரேங்க் எடுப்பதே என் குறிக்கோள்.தனிப்படிப்பு (tuition) தேவையில்லை என முடிவுடுத்தேன்.அப்பொழுதெல்லாம் 5 பாடப்பிரிவுகள் போக elective பாடப்பிரிவாக கணக்கு,அறிவியல் மற்றும் வரலாறு- இதில் எதாவது ஒன்றை எடுத்து படிக்க வேண்டும்.எனக்கு வரலாறு ஒதுக்கப்பட்டது.
எங்கள் வகுப்பாசியர், (திரு பி.ஏ,வீரராகவன்) ஆங்கிலம் மற்றும் கணக்கிற்கு ஆசிரியர்.இவருடைய தமக்கை மகள் எங்கள் வகுப்பு தோழி. (பின்னாளில் அவளை திருமணம் செய்து கொண்டார்)
அவள் நன்கு படிக்க வேண்டி 11-ம் வகுப்பில் எங்கள் எல்லாருக்கும் ஆங்கிலம் மற்றும் கணக்கிற்கு special class என காலை மாலை நடத்துவார் .அக்கறையாக பாடம் நடத்துவார்,கடுமையாக உழைத்தார்.அந்த ஆண்டு 40 பேர் கொண்ட எங்கள் வகுப்பு பிரிவில் 8 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
நான் மட்டுமே ஆங்கிலத்தில் சுயமாக கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றவன். திரு. வீரராகவன் அவர்கள்,தமிழில் இலக்கணம் நன்கு பயிற்சி பெற்றிருந்தால் ஆங்கில இலக்கணம் கற்பது மிக சுலபம் என எங்களுக்கு சொல்லி கொடுத்தார்.அன்னாரின் ஆங்கில அறிவு அபரிமிதமானது.அவரின்  ஆங்கில மற்றும் கணித அறிவாற்றலை என்னால் மட்டுமே கிரகிக்க முடிந்தது.
நான் எழுதும் ஆங்கில பரிட்சை தாளை மற்ற மாணவர்கள் எழுதிவிட்டு எனக்கு வந்து சேர கடைசீ மணித்துளி யாக இருக்கும் !.

அந்த ஆண்டு(1969) சமுக வரலாறுபாடத்தில் மாவட்ட அளவில் தேர்வு எழுதிய மாணவர்களில் நான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனானேன்.11-ம் வகுப்பு முடிவுறும் போது மாதாந்திர தேர்வில் (பிப்ருவரி 1969) நான் 2-ம் ரேங்க் மட்டுமே எடுக்க முடிந்தது.என் கையெழுத்துதான் சரியில்லையே நான் என்ன செய்வது?

இதற்கிடையே என்னை விவசாயத்தில் ஈடுபடுத்தி விடுவார்கள், ‘கவலை ஓட்டுவது,ஏர்,சேடை அடித்தல், நடவு காலில் நாற்று விளாசுவது  போன்ற வேலைகளை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஈடுபடுத்துவார்கள். சம்பா பின் பட்டம் என்று ஒன்று உண்டு.அதாவது தைமாத சம்பா அறுவடைக்குப் பின் ஏரியில் இருக்கும் சொற்ப நீரை நம்பி குறுகிய கால நெற்பயிர் செய்வது.அதற்கு நீரேற்ற வேண்டும்.

இரவு நேரங்களில் என் பெரிய அண்ணா என்னை துணைக்கு அழைத்துச் செல்வார்.ஏற்றம் அமைத்து என்னை மேலே ஏற்றி கிடையை மிதிக்கச் சொல்வார்.கீழே ஒரு கொம்பில் இணைக்கப் பட்டிருக்கும் சால்லில் நீர் மொண்டு மேலே உள்ள கால்வாயில் அண்ணன் ஊற்றுவார். இது போன்று தொடர்ந்து இரவு முழுக்கச் செய்ய வேண்டும் .அப்பொழுதுதான் அரை ஏக்கராவது பாயும்,முழு ஏக்கர் நீர் பரவ இரண்டு மூன்று இரவுகள் ஏற்றம் இரைக்க வேண்டும்.பொதுத்தேர்வுக்கு போகும் முன் மீண்டும் ஒரு முறை படித்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய தவறி விட்டேன் அதனால் என்  நினைவாற்றல் மந்தப்பட்டு விட்டது.

சரி! நான்தான் எல்லா பாடப்பிரிவிலும் எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கும் தகுதி பெற்றுவிட்டேனே எனும் மதப்பில் இருந்து விட்டேன்! Elective subject (history)-ல் கவனம் செலுத்த தவறிவிட்டேன்.பொதுத் தேர்வில் கணக்கிலும் வரலாற்றிலும் குறைவான(65%) மதிப்பெண்கள் பெற்றேன். மாவட்ட அளவில் ஆங்கிலத்தில் 74%, நான் பெற்றதோ 73%, (English grammer-ல் முழு மதிப்பெண் பெற்று விடுவேன்) வரலாறு மற்றும் புவியியலில் 94%-(மாநில அளவில் முதல் மதிப்பெண் 98%) பெற்றேன்.(மொத்தம்373) என்னதான் விழுந்து விழுந்து புரண்டாலும் நம் உடலில் எவ்வளவு மண் ஒட்டுமோ   அவ்வளவுதானே!.

No comments: