Tuesday, November 12, 2019

இ.பி -9


                         32-பூர்வீகம்

எங்கள் கிராமம் 300 ஆண்டுகள் பழைமையானது .எங்கள் தாத்தாவுக்கு அப்பா காலத்தில் திண்டிவனம் அருகே செஞ்சி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்திருக்க வேண்டும்.எங்கள் குலதெய்வம் படைவீடு ரேணுகாம்பாள்.ஜம்புமகரிஷி கோத்ரம்.
தேசிங்கு ராஜன் காலத்தில் அடிக்கடி சண்டைகள் நடக்கும். எதிரிகளுடன் போரிடும் முந்தைய  நாள் படைவீரர்கள் அணி வகுத்து தங்கள் படைகலன்களை அம்மன் சிலைக்கு முன் வைத்து,அம்மனிடம் ஒப்புதல் வாங்கும் நிகழ்ச்சியின் இடத்தின் பெயர் படைவீடுஅதனால் படைவீட்டம்மன் என பெயர் பெற்றது.பின் நாளில் இது பட வட்டம்மன்,படவேடு என பெயர் மறுவியது.

எங்கள் பங்காளிகள் சண்டைக்கு பயந்து நிம்மதி தேடி பாதுகாப்பு வேண்டி காடுகள் நிறைந்த வனப்பகுதிக்கு குடியேறி இருக்க வேண்டும்.அப்படி வந்தவர்கள் காஞ்சிபுரம்,கொப்பூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஊர்களை உரைவிடமாக கொண்டு உறவுமுறைகளை வளர்த்துக் கொண்டனர் புலம் பெயர்ந்தவர்கள் திருக்கழுக்குன்றம்,தாம்பரம் அருகே பழந்தண்டலம், காரனோடை அருகே ஜகன்னாத புரம் போன்ற வளமான பூமியில் குடியமர்ந்தனர்.

எங்க தாத்தாவுக்கு தாத்தா பங்காளி சண்டையால் இப்போது நாங்கள் இருக்கும் வானம்பாத்த பூமிக்கு வந்துவிட்டனர். பெரிய ஏரிக்கும் காட்டுக்கும் மத்தியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தனர்.ஊருக்கு வட கிழக்கே சுடுகாடு.  தென்கிழக்கே பார்ப்பனர்கள் வீடுகள்.
அந்தாளில் வன்னியர்கள் எங்கே குடும்பங்களை அமைக்கின்றனரோ அங்கே பார்ப்பனர்கள், கணக்குப்பிள்ளைகள், அம்மட்டன், வெட்டியான், வண்ணான் போன்றோர் கூடவே வந்து விடுவார்கள்.ஊர் பஞ்சாயித்தில் இவர்களுக்கு குடும்பத்திற்கு ஒரு காணி நிலம்(125 சென்ட்) ஒதுக்குவார்கள் .

இப்பொழுதும் வண்ணான் மானியம்,அமட்டன் மானியம், வெட்டியான் மானியம்,பாப்பான் மானியம், தெவிடியா மானியம் என தொழில் வாரியாக கிராம பதிவேட்டில் பதியப்பட்டிருக்கும்.ஆண்டுக்கு ஒரு விவசாயி அவர்கள் மானியங்களை பயிர் செய்து விளை பொருள்கள் செலவு போக அவரவர்களுக்கு தந்து விட வேண்டும்.இது எல்லா கிராமங்களிலும் நடைமுறையில் ஒரு காலத்தில் இருந்தது.இப்போ அந்த கலாச்சாரம் அழிந்து வருகிறது.

குடும்பங்கள் பெருக பெருக இடம் வேண்டி புலம் பெயர்ந்து விட்டார்கள்.(பழைய இடத்தில் யாருமே இல்லை)
எங்கள் வீட்டிற்கு குப்பி வீட்டு மூலை,அதற்கு சற்று தள்ளி கரையான் வீட்டு மூலை (நீலாங்கரை),மூக்க மூட்டு மூலை (மூக்கு குத்தும் பழக்க முடையவர்கள், பனைமலையான் மூலை (திண்டிவனம்,செஞ்சி அருகே)   என பல மூலைகளா பிரிந்து இன்றும் காணப்படுகின்றனர்.

தற்போது எங்கள் வீடு அமைந்துள்ள வீட்டிற்கு தென் கிழக்கே சுமார் ஆயிரம் அடி தூரத்தில் உள்ள வேற்காட்டான்(காட்டு ஓரத்தான்) கொல்லையில் எங்கள் வீடு இருந்த காலத்தில் 7 பேர் பிறந்துள்ளனர்.  (1951 க்கு முன்).  நானும் என் தம்பியும்  தற்போது நாங்கள் இருக்கும் புறம்போக்கு இடத்திற்கு எங்கள் குடும்பம் புலம் பெயர்ந்த பின் பிறந்துள்ளோம். 1955ல் என் கடைசீத் தம்பி (9-ம் நபர)பிறந்துள்ளான்.

என் தம்பி பிறக்கும் போது எங்க அம்மாவுக்கு 45 வயதிருக்கும்.அப்பாவுக்கு 55 வயதிருக்கும்.எங்களோடு எங்கள் பெரியப்பா குடும்பமும் இடம் பெயர்ந்து வந்துள்ளது.எங்க பெரியப்பா குடும்பம் வளர்ச்சியடைய வில்லை. தற்போது எங்க பெரியப்பாவின் பேரன் திரு சுந்தரமூர்த்தி மட்டுமே உள்ளான்.அவன் வாழ்க்கையும் பெருமையாக சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை.

எங்கள் வம்சத்தில் நான் மட்டுமே வளர்ந்து, படித்து ,என் பிள்ளைகளும் பொறியிலாளர்கள் என படித்து, சமுதாயத்தில் பெருமை படும் விதமாக வாழ்கின்றனர்.
மற்ற என் உடன் பிறப்புகள் மற்றும் அவர்கள் வாரிசுகள் யாவரும்(படிப்பில்) பெருமைபட வாழ வில்லை,என்பதை நான் குறிப்பிட வேண்டும்.என் மூத்த அண்ணாவுக்கு மூன்று பெண் குழந்தைகள்,ஒரு ஆண்-இவர்களும் படிக்க வில்லை,அவர்கள் வாரிசுகள் யாவரும் சிறப்பாக படிக்க வில்லை.
என்னை படிக்க கஷ்ட்டப்பட்ட என் பெரியண்ணாவின் ஒரே மகனை நான் படிக்க வைக்க ஆசைப்பட்டேன்.ஆனால் அவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை.+2 வரைதான் படித்தான்.பின் திருவள்ளூரில் என்னோடு தங்க வைத்து,தொழிற் படிப்பு(ஐ.டி.ஐ) படித்தான்.என் சின்ன அண்ணாவுக்கு 6 பெண் குழந்தைகள், அவர்களும் படிக்கவில்லை,அவர்கள் வாரிசுகளும்  படிக்க வில்லை.
என் தம்பிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்,அவர்களுக்கு இன்னும் மணமாகவில்லை, மணமாகிய ஒரு பெண்ணுக்கும் ஒரு பிள்ளை, என் தம்பியின் குடும்பம் சிறப்பாக இல்லை *******.
                 
                            33-கல்லூரிக் காலம்

கல்லூரி கால வாழ்க்கை(1969-73)மழைக் காலங்களில் சைக்கிளில் சென்று கல்லூரி படிப்பை தொடர்வது எப்படி? குடை பிடித்துக்கொண்டு சைக்கிளை மிதிக்க முடியாது.
காற்றின் வேகம் அதிகம் இருப்பின் குடையை இறுக்கிப் பிடிக்கவே என் பலத்தை காட்டவேண்டும்.மிதிக்க முடியாது.எனவே குடை தேவை இல்லை என முடிவெடுத்தேன்.புத்தகங்களை ஒரு மைக்கா பையில் சுற்றி சைக்கிள் கேரியரில் வைத்து ஈரம் படாமல் பாது காத்து வைத்துவிடுவேன். சில மணி நேரம் காத்திருந்தும் மழை நிற்கவில்லை எனில் ,மழையில் நனைந்து கொண்டே சைக்கிள் ஓட்டுவது என தீர்மானித்துவிடுவேன்.
சில நேரங்களில் எதிர்க் காற்று பலமாக இருந்தால்,பேசாமல் சைக்கிளை தள்ளிக்கொண்டு சில கிலோமீட்டர்கள் நடந்தே வருவேன்.எதிர்க் காற்று நின்றதும் சைக்கிளை மீண்டும் மிதிப்பேன்.இப்படி பல நாட்கள் எனக்கு நேர்ந்தது உண்டு.
மாலை 5மணிக்கெல்லாம் ஆரணியில் உள்ள ஓரு ‘பொட்டலம்’ கடையில் (sweets&savouries stall).50 கிராம் காரம்(25 பைசா) மற்றும் ஒரு தேநீர் கடையில் தேநீர்(ஒரு அணா-6பைசா) அருந்தி விட்டு வீடு வந்து சேர்வேன் .

கல்லூரி செல்ல ஒரு நாளைக்கு 42(21+21) கிமி சைக்கிளை மிதிக்க வேண்டும். மொத்தம் நான்கு ஆண்டுகள் மிதித்துள்ளேன்.மாதம் 25 நாட்கள் என கணக்கு போட்டால் 25*42=1050 கிமி,ஆண்டுக்கு 10 மாதங்கள் கல்லூரி நாட்கள் என்றால் 10*1050=10500 கிமி,4ஆண்டுகளுக்கு மொத்தம் 10500*4=42000 கிமிக்கள்! இந்த பூமியின் சுற்றளவு 40,075 கிமி.கள்.(25000மைல்கள்)அப்படி என்றால் நான்கு ஆண்டுகளில் பூமியை ஒரு முறை சுற்றியதற்கு சமம் !
             
                      34-தூக்கமில்லா மழைக் காலங்கள்

இரவு நேரங்களில் அதிக மழை பெய்தால் வீடு ஒழுக ஆரம்பிக்கும்.நல்ல தூக்கத்தில் மழை வந்து தூக்கத்தை கெடுத்துவிடும்.அந்நேரத்தில் எங்கம்மா ஆள்ளுக்கொரு பாத்திரத்தை கொடுத்துவிடுவார்கள். மழை நீரை சேகரிப்போம்.
பாத்திரம் நிரம்பியதும் வெளியே கொண்டு கொட்டிவிடுவோம்.குடும்பத்தில் அத்துணை பேரும் இந்த மழை நீர் சேகரிப்பு வேலை செய்வோம்,எங்கம்மா- அப்பாவையும்,என் அண்ணன்களையும் திட்டிக்கொண்டே இருப்பார்கள். ‘மழைக்காலம் வரும்னு தெரியமே,அதற்கு முன்னமே கூரைமீது வைக்கோல் வேய்ந்திருந்தால் இதுபோன்று நடக்குமா?’

பள்ளிக்கு(வன்னியர்களுக்கு) பாய்ங்கீழே தண்ணி வந்தாத்தான்,கூரையை பார்ப்பான்
என எங்கள் அப்பா அவர் பாட்டுக்கு ஒரு பழமொழி சொல்வார்.பெரிய அண்ணா,
‘இங்கு மாடுகளுக்கே வைக்கா இல்லை,கூரைக்கு எங்க போறது? என வெம்புவார். நான்,குளிருக்கு கோணிக்குள் காலை விட்டுக்கொண்டு, எங்கம்மா புடவையை நான்காக மடித்து போர்த்திக் கொண்டு தூங்குவேன்.தம்பிக்கும் இதே நிலைதான்.
                        
                           35- பஞ்சம்

1971-ல் நாடு முழுக்க பருவ மழை தவறி விட்டது.இதனால் கடும் வறட்சி.மாடுகளுக்கு தாகம் தீர்க்க நீர் நிலைகள் இல்லை,பசும் புல் இல்லை,வைக்கோல் இல்லை! மனிதர்களுக்கும் உண்ண உணவு இல்லை!! நித்தமும் சோகம்தான் வீட்டில்.எங்கள் வீட்டில் விவசாயம் செய்ய கிணறு இருக்கும்,இது 30 அல்லது 35 அடி ஆழமுள்ளது.முதலில் மண் கிணறாக இருந்தது.
1960- களில் திரிகல்லை செப்பனிட்டு கட்டப்பட்டது.  மாடுகளை பூட்டி ஓட்டும் கவலை மூலம்தான் விவசாயம் செய்தோம்.இப்போதைய தலைமுறைக்கு இதுபற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை அதைப்பற்றிய ஒரு விளக்கம் இதோ-
                        
                      36-  கவலை

முற்றிய பனை மரம் இரண்டு துண்டுகளை கிணற்றுக்கு குறுக்கே போடவேண்டும்.அதன் மீது கவிழ்ந்த நிலையில் உள்ள, 4 அடி உயர ‘ப’  வடிவ மரத்தாலான பட்டரையை பொறுத்த வேண்டும்,அதற்கு நடு பாகத்தில் இரு கவட்டையை பொருத்த வேண்டும்,அதற்கு மத்தியில் ஒரு வட்ட வடிவ உருளையை ஒரு அச்சாணி கொண்டு பொறுத்த வேண்டும்.அந்த உருளை மீது ஒரு 50 அல்லது 60 அடி நீள(கிணற்றின் ஆழத்திற்கு ஏற்றாற் போல் வடம் தின் நீளம் மாறும்) வடத்தை பொறுத்து வேண்டும்.
வடத்தின் ஒரு முனையை கிணற்றில் இரும்பு படலங்களான பெரும் பானை போன்ற நீர் மொள்ளும் ‘சால்’ ஐ பொருத்த வேண்டும்.சாலின் அடிப் பாகம் குறுகலாக ஒரு பானையின் ‘வாய்’ போல் அமைந்திருக்கும்.
அந்த வாய்ப்புறத்தில் மாட்டுத் தோலால் ஆன 4 அல்லது 5 அடி நீள உருளைவடிவ ‘தொண்டான்’-ஐ பொறுத்த வேண்டும்.தொண்டானின் மறு முனையை ஒரு தாம்பு கயிற்றை(தும்பு கயிறு) இணைத்து வடத்தின் மறு முனையையும் தாம்பு காயிற்றையும் ஒன்றாக இணைத்து இரண்டு மாடுகளை இணைக்கும் நுகத்தடியில் இணைக்க வேண்டும்.
இப்பொழுது கிணற்றுக்குள் இருக்கும் நீரை சாலில் மொள்ள வசதியாக பட்டரையின் கீழ் இரண்டு கால்களுக்கு மத்தியில் ஒரு 3 அடி நீட்டு மர உருளையைப் பொருத்தி அதன் மீது தாம்புக் கயிரு உருண்டு வரும் அளவுக்கு பொருத்த வேண்டும். அந்த 3 அடி உருளை ஆரம்பிக்கும் இடத்தில் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்ட பனையின் அடிப்பாகத்தை கால் வாய் போல் செதுக்க வேண்டும் ,இதற்கு , ‘தோனை’ என்று பெயர்.
அந்த தோனையின் மறு முனையில் தாம்பு கயிறு உருள வசதியாக உருண்டுவர 2 அடி நீள மர உருளையை பொருத்த வேண்டும்.இப்பொழுது தோனையின் மறு முனையோடு ஓரு சிறு தோனையை, ‘ட’ வடிவத்தில் பெறுத்த வேண்டும்.இதற்கு, ‘மலுக்கு தோனை’ என்று பெயர்.
இப்பொழுது இரண்டு மாடுகளுடன் பூட்டிய வடம் கிணற்றருகே இழுத்துவந்தால் ,கிணற்றுக்குள் ‘சால்’ நீர் மொள்ள, ‘கவலை யோட்டி’ இடது கையால் தாம்புக் கயிற்றை தூக்க வேண்டும்.வலது கை மாட்டின் மூக்கணாங் கயிறோடு  இணைக்கப்பட்ட ‘தும்பு’(கயிறு)- ஐ பிடித்திருக்க வேண்டும்.
நீர் மூண்ட உடன் கவலையோட்டி வடத்தின் மீது உட்கார்ந்து மாட்டை இயக்க வேண்டும்
மாடு கவலைபாரியின் மறு முனையை அடைந்ததும் நீர் தோனைவழியே ஊற்றப்பட்டு மலுக்கு தோனை வழியே கால்வாயிற்குள் விழும். இதற்கு பேர்தான் கவலை

இது போன்று நாள் முழுக்க இயக்கினால் ஒரு ஏக்கர் பாசனம் செய்யலாம். (கடலை, கேழ்வரகு, சேம்பு, மிளகா, கத்தரி, வெண்டை, கனாகம்பரம்,ஜாதிமல்லி,காவட்டான், மல்லி போன்ற பணப்பயிர்கள் (தோட்டப்) பயிர்கள்.கேழ்வரகு மட்டும் உணவுப்பயிர்)
திரு.பாரதிராஜா திரைப்படமான, ‘கருத்தம்மா படத்தில் திரு. பெரியார்தாசன் கவலையோட்டியாக வருவார்.அங்கே பார்க்கலாம் அந்த கவலையை.
இந்த கிணற்றுப் பாசனம் சித்திரை வரை கிணற்றில் நீர் வற்றாமல் இருக்கும்.அதன் பின், ‘சுரப்பு நீர்தான்.சுரப்பு நீர் என்பது நீர் கிணற்றுக்கு அடியில் சென்றுவிடும்,பின் சுரந்து ஒரு 6 அடி தண்ணிர் வர ஒரு நாள் ஆகும்.
இந்த 6 அடி ஆழ நீர் சேந்த ஓரிரு மணிகளில் காலியாகி விடும்.ஆண்டுக்கு ஒரு முறை கிணற்றை தூர் வாருவோம்,தூர் வார ஐந்து  மனித உழைப்புகள் தேவை.நானும் கலந்து கொள்வேன்.ஒரு நாளெல்லாம் தூர் வாரினால் ஒன்று அல்லது இரண்டு அடி ஆழமெடுக்கலாம்.
எவ்வளவு ஆழம் எடுத்தாலும் நீரின் சுரப்பு அதிகரிப்பது போல் தோன்றினாலும் சில நாட்களில் பழைய நிலைக்கு திரும்பி விடும்.அதற்குள் கடலை,சேம்பு போன்ற பயிர்கள் அறுவடைக்கு வந்துவிடும்.இதன் மூலம் கிடைக்கும் வருமானம், வீட்டின் கடனை ஒரளவுக்கு அடைக்கவும்,அடமானம் போட்ட நகைகளை மீட்கவும் உதவும்.வறட்சியானால் விவசாயம் செய்வது நின்று விடும்,அடுத்த மழைக்காலம் துவங்க,ஆடி மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

1960 களின் பிற்பகுதியில் எங்கள் கிராமத்தில் உள்ள கவலை விவசாயம் மறைந்து ஆயில் இன்ஜின்விவசாயம் வந்து விட்டது.அந்த ஆயில் இன்ஜின் மெக்கானிக் நான்தான்.அதை தனித்தனியே கழட்டி பூட்டி விடுவேன்,மொத்த பழுது பார்த்தல் வேலைகளையும் நானே செய்து விடுவேன்.
இடைப்பட்ட நாட்களில் இரு சக்கர இரட்டை மாட்டு வண்டி (இப்பொழுது இந்த ரக வண்டியை யாரும் பயன்படுத்துவது இல்லை) மூலம் சவுக்கு கட்டைகளை ஏற்றிக் கொண்டு ஆரணியில் உள்ள கட்டை தொட்டிக்கு இரக்கி விட்டு அதற்கான வாடகையாக(கூலியாக) ரூ.2.50 அல்லது ரூ.3.00 பெற்றுவருவோம்.ஒவ்வொரு கட்டை வண்டியிலும் இரண்டு டன் கட்டைகளை ஏற்றலாம். மாடுகளும் இழுக்கும், அதற்கு மேல் ஏற்றினால் மாடும் இழுக்காது,வண்டியும் தாங்காது.
சவுக்குத் தோப்புகளில் கட்டைகளை ஏற்றிக் கொண்டு வரிசையாக இரண்டு மூன்று மாட்டு வண்டிகள் ஆரணி நோக்கி செல்லும்.எல்லாறும் ஆற்றை கடந்து தான் போக வேண்டும்.வருடத்தில் ஒரு 3 மாதம் மட்டுமே ஆற்றில் நீர் ஓடும். மற்ற நேரத்தில் வரண்டு கிடக்கும் .வெறும் ஆற்று மணலே ஓடும்.மாடுகள் மிகுந்த பாரத்தை சுமந்து கொண்டு அந்த ஆற்றை கடக்க மிகுந்த சிரமப்படும்.புதை மணலில்  வண்டிசக்கரங்கள் உருளுவதே கஷ்டம். ஆற்றை கடந்து எதிர் மேட்டில் ஏறி சமதள சாலைக்கு செல்ல காளை மாடுகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும்.
வண்டி சக்ரங்கள் உளையில்(உளை என்பது களிப்பான மணலில் சுமார் இரண்டடி ஆழத்துக்கு தூர்ந்து விடும்) மாட்டிக் கொள்ளும்,என்னை வண்டி ஒட்டச்சொல்லி,என் அண்ணன் சக்ரத்தின் இலைகளில் தோள் கொடுத்து வண்டியை நகர்த்துவார்.மாடுகளும் தோள் கொடுக்கும்.
ஏற்றிய கட்டைகளை, கட்டை தொட்டிகளில் சேர்த்துவிட்டு,வண்டிச்சத்தம்(வாடகை) பெற்றுக் கொண்டு,அதன் மூலம் வீட்டுக்கு தேவையான அரிசி,பருப்பு போன்ற பொருட்களை வாங்கி வருவோம். மாடுகளுக்கும் தேவையான தவிடு,புண்ணாக்கு ஆகியவற்றையும் வாங்கிவருவோம். 

கோடைக் காலங்களில் மாட்டு வண்டியை பூட்டிக் கொண்டு, வண்டியில் ஜல்லிக் கூடையை பொறுத்திக் கொண்டு, தந்தி பலகையும் மண்வெட்டியுமாக எங்கப்பா என்னைக் கூட்டிக் கொண்டு ஏரி எதுவாய்க்கு போவார்.
ஏரி எதுவாயில் நீர் வற்றியதும் நீரில் படர்ந்திருக்கும் பாசிகள் வெய்யிலில் உலர்ந்து வடைபோல் காட்சியளிக்கும்.இதற்கு வண்டல் மண் என்று பெயர்.இந்த வண்டல் மண்ணை தந்தி பலகை மூலம் சேகரித்து குவியல் குவியலாக வைப்போம் ,பின்னர் அந்த குவியல்களை ஒரு கூடையில் போட்டு வண்டியில் உள்ள ஜல்லிக்கூடையில் நிரப்புவோம்.
இந்த வண்டல் மண்ணை தாங்கலில் உள்ள நெல் விளையும் நிலத்தில் கொட்டி வைப்போம்.ஆடி மாத வாக்கில் அந்த குவியல்களை வயலில் பரப்பி ஏறு கட்டி உழுதுவிடுவோம்.இது போன்று ஆண்டு தோறும் செய்வது வழக்கம்,விளைச்சலும் பெறுகும்.

No comments: