Wednesday, November 13, 2019

இ.பி-10


                37-  பிள்ளையார் சதுர்த்தி பிள்ளை

ஆவணி மாதங்களில் வரும், ‘விநாயக சதுர்த்திஅன்று நான் தான் கதா நாயகன்.அன்று முழுவதும் எங்க அம்மா என்னை விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும் என சொல்லுவார்.
காலை குளித்து விட்டு, எங்கள் ஊர் பொடுதா குளத்தில் களிமண்ணை எடுத்துவந்து, விநாயகர் உருவம் செய்வேன். அதற்கு வண்ணக் குடை செய்வேன். இதை செய்து முடிக்க மாலை 3 அல்லது 4 மணியாகிவிடும். இதற்கிடையே எங்க அம்மா பலகாரங்கள் செய்து முடித்துவிடுவார். மாலை 4 மணிக்கு விநாயகர் உருவத்தின் முன்னே நான் படிக்கும் புத்தகங்களை வைத்து அமர்ந்து விநாயகர் வழிபாடு மந்திரங்களை படிப்பேன்.இந்த மந்திரங்களை முடிக்க 5 மணி ஆகிவிடும்.
இதற்குள் எங்க அண்ணா,‘டேய் பசிக்குதுடா,சீக்கரம் முடிடா..’ என்பார்.கற்பூரம் எரியும்போதே வாயால் ஊதி அணைத்து விடுவார். அம்மாவிடம் திட்டு வாங்குவார்.

புரட்டாசி மாதங்களில் வரும் ஆயுத பூஜை அன்றும் என் புத்தகங்களை வைத்து வழிபடவேண்டும் என என் தாயார் வற்புறுத்துவார்,அது மட்டுமல்ல,அன்றய தினம் விவசாய உற்பத்திக்கு உதவி புரியும் ஏர் கலப்பை,வண்டி, கத்தி,கடப்பாரை, தொளறு,அறுவா போன்ற உபகரணங்களை தண்ணீரில் கழுவி காயவைத்து அவைகளுக்கு தூப ஆராதனை செய்வார் எங்க அம்மா, அதே போன்று மாட்டுப் பொங்கல் அன்றும் மாடுகளையும் குளிப்பாட்டி அவைக்ளுக்கு அலங்காரம் செய்வார் எங்க அண்ணா.குப்பை மேட்டுக்கும் கற்பூரம் கொளுத்தி தூப ஆராதனை செய்வார்கள்.
இதே நாட்களில் வீட்டுக்கு பின்புறம் வேப்ப மரம் இருக்கும்,அங்கே மூன்று செங்கல் நட்டு அதற்கு மஞ்சள் திருநீறு பூசி கற்பூரம் கொளுத்தி,தேங்காய் உடைத்து, ஊதுபத்தி கொளுத்தி பலகாரங்கள் வைத்து வழிபடுவர், காரணம் குடும்பத்தில் இறந்து போன எங்கள் முன்னோர்களான திருமணம் ஆகா கன்னிகள்,குழந்தை பிறக்க முடியமல் இறந்து போன சுமங்கலிகளை நினைத்து சித்தாடைவைத்து வழிபடுவது எங்க அம்மா வழக்கம்,இதற்கு கன்னி கோயில் என்று பெயர்

அப்படி வணங்கிய பிறகுதான்,வீட்டில் இருக்கும் நடுவீடு தெய்வங்களுக்கு பலகாரங்கள் வைத்து கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி, தேங்காய் உடைப்பது. இன்றும் கிராம புறங்களில் சில வீடுகளில் இந்த பழக்கங்கள் அனுசரிக்கப்படுகிறது.  

1970 களின் ஆரம்பத்தில் வறட்சியை தாங்க கூடிய  பணப்பயிரான,கனகாம்பரம் மற்றும் ஜாதி மல்லி செடிகளை எங்கள் ஊருக்கு எங்கள் அண்ணாதான் அறிமுகம் செய்தார்.
அதற்கு முன்னர் எங்கள் கிராமத்து விவசாயிகளுக்கு  பணத்தை பார்ப்பதே அபூர்வமாகும், ஆம்,ஒரு மாதப் பணப் பியிர்களான காய்கறி பயிரிடுவதால் (முள்ளங்கி, பூசணி, முலாம், வெள்ளறி போன்றவை) கிடைக்கும் சொற்ப பணத்தை வைத்து தான் குடும்பம் நடத்த வேண்டும்.
நெல்லை விற்க மாட்டோம் ,காரணம் அது எங்கள் தேவைகளுக்கே பற்றாது. வேர்க்கடலை,சேம்பு, ஊடுபயிரான உளுந்து, கம்பு, திணை, கொள்ளு, வரகு மற்றும் மானாவரி எள் மட்டுமே அதிக பணம் தரும் கோடைப்பயிர்.
               
                            38-புரட்டாசி சனிக்கிழமை


1972-நான் BSc இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.ஒவ்வொரு  ஆண்டும்  புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் சனிக்கிழமைகும்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்.எங்கள் குடும்பம் மட்டுமல்ல வெய்யிலாளி குடும்பங்கள் காலம்காலமாக கடைபிடித்து வரும் கலாச்சாரம்.குடும்ப உறுப்பினர்கள் காலையில் குளித்து விட்டு ஆண் பெண் அணைவரும் நெற்றியில் நாமத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.இது எங்கப்பாவின் வற்புறுத்தலின் பேரில் நடக்கும்.

புரட்டாசி மாதம் நான்காம் வாரம்(சனிக்கிழமை) என்னையும் என் தம்பியையும் தலையில் தண்ணியை ஊற்றி ,இடுப்பில் வேட்டியைக் கட்டி,நெற்றியில் நாமத்தைப் போட்டு கையில் ஒரு சொம்பை கொடுத்து வீடு வீடாக சென்று, ‘கோவிந்தாஎன்று கூவி பிச்சை எடுத்துவர அனுப்புவார்கள்.
இந்த விரத வழிபாட்டை ஊரில் எங்களைப் போன்று ஓரிரு குடும்பங்கள் தான் இது போன்று அனுசரிப்பார்கள்.இது ஆண்டுதோறும் செய்யப்படும் சடங்கு.சொம்புகளில் பிச்சையாக கேழ்வரகு,அரிசி மற்றும் நெல் போன்ற உணவு தானியங்கள் போடுவார்கள்.அந்த தானியங்களை கடையில் போட்டுவிட்டு அவ்வளவு காசுக்கும் கற்பூரம் வாங்கி வருவோம்.

எங்க அப்பா பொழுது சாயும் நேரத்தில் சூரியனுக்கு படையல் போட்டு, அந்த கற்பூரம் அனைத்தையும் கொளுத்தி,கோவிந்தா, கோவிந்தா என கூவி அழைத்து,
பல்லாண்டு,பல்லாண்டு பலகோடி நூறாயிரம்... என பல்லாண்டு பாடுவார்,பாடிக்கொண்டே வீட்டுக்குள் இருக்கும் கடவுள் படங்களுக்கு  நெய்வேத்யம் செய்வார். 
புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை, ‘மகாளய அமாவாசைஎன்று சொல்வார்கள்.எங்கம்மா அன்றய தினம் வீட்டை பசுஞ் சாணியால் மெழுகி கோலம் போட்டு மாவிலைத் தோரணங்கள் கட்டி  அழகு படுத்துவார்கள்.காலை 10 அல்லது 11 மணிக்கு புரோகித அய்யர் வீட்டுக்கு வருவார்.அய்யர் வரும் போதே,

ஏண்டி கண்ணம்மா..!, எல்லாம் முடிந்ததா..?,பூஜையை ஆரம்பிக்கலாமா?’என கேட்டுக் கொண்டே வருவார். சாமி....!, அதற்கு முன் சூடா பாலை காய்ச்சி
வச்சிருக்கேன், பாலை சாப்பிடுங்கோ, பூஜையை ஆரம்பிக்கலாம்
சரி கொண்டுவா
பாலை குடித்ததும், ‘சரி,உன் தோட்டத்தில் விளைந்த  காய்கறிகள்,பச்சரிசி,கலச சொம்பு,தேங்காய்,பூ, கற்பூரம், ஊது வத்தி, மஞ்சள், குங்குமம் வாழைப்பழம் தயிர்  எல்லாம் கொண்டுவா கூடவே ஒரு வாழையிலை கொண்டுவா
எல்லாம் தயாரா வச்சிருக்கேன் சாமி!
எங்க அப்பா, அய்யர் முன்னே பய பக்தியுடன் அமர்வார்.அவருக்கு பூ நூல் போட்டு  மஞ்சள் பூசிய அரிசியை நெற்றியில் வைப்பார்.
புரியாத மந்திரங்களை ஓதிவிட்டு,அப்பன் பேரென்ன?, பாட்டன் பேரென்ன? என்பார். முப்பாட்டன் பேரென்ன?,என கேட்பார், 

எங்கப்பா தன் அப்பா பேரையும் தன் தாத்தா பேரையும் சொல்வார், முப்பாட்டன் பேரெல்லாம் தெரியாதென்பார்.அதற்கு அய்யர்,
‘சரி, எட்டியப்ப ரெட்டிக்கு தர்ப்பணம்’ என்பார். எல்லாம் முடிந்து விட்டது, ‘குடும்பத்தில் எல்லாறும் வந்து ஆசிர்வதாம்,வாங்கிக்கோங்கோ’. நாங்கள் எல்லாரும் அய்யரிடம் நெற்றியில் மஞ்சள் அரிசியை வைத்துக் கொள்வோம். அவர் அந்த அரிசி காய் கறிகளை பையில் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடிவிடுவார்.
அப்படி அந்த புரட்டாசி நான்காம் சனிக்கிழமை  கும்பிட்டு விட்டு அந்த பலகாரங்களை நான் கல்லூரியிலிருந்து வந்த வுடன் எனக்கு கொடுத்துவிட்டு , 

என் அம்மா,
‘நீ சாப்பிடு கண்ணு,என்னால முடியல, நான் படுத்துக்கிறேன்,’ என இருமிக்கொண்டே படுத்தவர்தான் அதன் பிறகு எழுந்து உட்காரவே இல்லை.
எப்பொழுதுமே ஐப்பசி  கார்திகைகளில் உண்ண உணவு(கூழ்) கிடைப்பதில் எங்கள் கிராம வாசிகளுக்கு சிரமம் தான்.இருப்பினும் எங்கம்மா, அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு கூழை கரைத்து வைத்து விடுவார்.
எங்கள் வீட்டில் எப்பொழுதும் கூழ் தயார் நிலையில் இருக்கும்.கூழை அளவீடு செய்ய அகப்பையை 
(ஒரு முற்றிய  தேங்காயின் அறை மூடியில் ஒரு செதுக்கப் பட்ட 1 அல்லது 2 அடி நீள குச்சியை பொருத்தியிருப்பார்கள்) வைத்திருப்பார்கள்)  .சாதத்தை அள்ள அன்ன குத்தி,மற்றும் கரண்டி.
மார்கழியில் கடைசியில்,கார்த்திகை சம்பா வந்துவிடும். பொங்கலுக்கு புதிய அரிசியை ஊரில் பொங்கல் வைக்கும் பழக்கமுடையவர்களுக்கு எங்கம்மா கொடுப்பார்கள்.மொத்தமே 50 அல்லது 60 வீடுகள்தான் இருக்கும். அதில் பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகைகளை 5 அல்லது 6 வீடுகள் தான் கொண்டாடுவார்கள்

அந்நாளில் எங்க வீட்டில் 15 நபர்களுக்கு மேல் சாப்பிட வேண்டும்(அப்பா,அம்மா,அண்ணா-அண்ணி,அவர்களின் நான்கு குழந்தைகள்,சின்ன அண்ணா-அண்ணி இரண்டு குழந்தைகள்,நானும் என் தம்பியும்,மற்றும் எங்க இரண்டு அக்காக்களின் இரண்டு பிள்ளைகள்(படிப்பதற்காக எங்கள் வீட்டில் வளர்ந்தார்கள்),மாடுமேய்க்கும் பெண்,வெட்டியான்,வண்ணான்,அமட்டன் போன்ற இரவு நேர வேளை உணவாளர்கள்.
மொத்தம் 15 நபர்களுக்கு மேல் இரவு நேரத்தில் உணவருந்த இரண்டு படி அரிசி வேக வேண்டும்.ஆனால் பஞ்ச காலத்தில் ஒரு படி அரிசி கிடைப்பதற்கே மிகவும் சிரம படவேண்டும்.அந்த படி அரிசியை கஞ்சி காய்ச்சி விடுவார்கள்.15 பேருக்கும் ஒரு கரண்டி சாதம் கூட கொஞ்சம் வடி தண்ணி,சூடாக குடித்து விடுவோம்,அந்த தட்டை கழுவ முடியாத அளவுக்கு நக்கி எடுத்து விடுவேன்.இதைப் பார்த்து எங்க அம்மா,
குழந்தைகளுக்கு வயிறு பசி ஆற சோறு போட முடியவில்லையே என அழாத நாட்கள் இல்லை!
                        
                                39-புடி அரிசி

அந்த கஷ்ட்ட காலத்திலும் ,எங்கம்மாவுக்கு புடி அரிசி சேமிக்கும் பழக்கம் உண்டு! புடிஅரிசி என்றால்,தினமும் சோறு சமைக்கும் முன்,அந்த அரிசியில் ஒரு கைப்புடி அளவு எடுத்து, இன்னொரு பானையில் சேமிப்பார்கள்.
அந்த புடி அரிசி என்றாவது ஒரு நாள் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பசி ஆற்றும்.!கிராம வாசிகளில் எங்க அம்மாவிடம் நிறைய குடும்ப பெண்கள் நட்புறவுடன் பழகுவார்கள்.
                          

                          40- பண்டமாற்று

அவர்களுக்கு எல்லாம் சேமிப்பில் இருக்கும் கேழ்வரகை நான்குற்கு விடுவார்.(நாங்கு (நான்கு மடங்கு) க்கு கேழ்வரகு என்றால் விளைச்சல் இல்லாத கந்தாயத்தை சமாளிக்க உணவு தான்யத்தை இருப்பு வைத்திருப்பவர்களிடம், இல்லாதவர்கள் வாங்கி, வாங்கிய தானியத்திற்கு பதில் அதே தான்யமோ அல்லது அதற்கு சமமா வேறு தானியத்தையோ விளைச்சல் வந்தவுடன், நான்கு மடங்கு போட்டுத்தர வேண்டும்.இது கிராமத்தில் இருக்கும் ஒரு வழக்கம்.ஆனால் எங்கம்மா அப்படி செய்ய வில்லை,ஒரு மரக்கா(மரக்கா என்பது 8 படி,ஒரு படி என்பது 8 ஆழாக்கு அல்லது 4 உழக்குகள் கொண்டது) கேழ்வரகு வாங்கினால் இரண்டு மடங்கு அடுத்த கந்தாயத்தில் கொடுத்தால் போதும் என்பார்,இப்படி அதிகப்படியான கேழ்வரகை விற்று அவசர செலவை சமாளிக்க சேமிப்பு செய்து விடுவார்.

அப்படி சேமிக்கும் பணத்தை கேழ்வரகு பானையில் மறைத்து வைத்துவிடுவார்.இதை எப்படியோ எங்க அண்ணா கண்டுபிடித்து எடுத்துவிடுவார்.இதை உணர்ந்த எங்கம்மா என்னிடம் கொடுத்து,
பாதுகாப்பா வைத்திரு, அவசரத்திற்கு உதவும்என கொடுப்பார் .அப்படி என்னிடம் ரூ.450.00க்கு மேல் கொடுத்து வைத்திருந்தார்.இப்பொழுது அந்த பணத்தின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்.(அப்போது ஒரு சவரன் 200 ரூ.அதை வைத்து மதிப்பு போட்டேன்)

ஒரு நாள் இரவு நானும் எங்க அம்மாவும் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் படுத்திருந்தோம், எங்கப்பா மறு திண்ணையில் படுத்திருந்தார். உள்ளே எங்க பெரிய அண்ணா, அண்ணி ஆகியோர் இருந்தார்கள்.அப்போ எனக்கு 21 வயது,பட்டவகுப்பில் இரண்டாம் ஆண்டு.எங்க அண்ணாவுக்கு ,ஏனோ தெரியவில்லை, ‘அம்மா..! எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி, தம்பிக்குத்தான் ஆகல,கனகவல்லி பொண்ணை கட்டி வச்சிரலாம்மா..’ (கனகவல்லி என்பவர், எங்க அண்ணனுக்கு அடுத்ததாக பிறந்த பெரிய அக்கா)
நான். ம் க்கும்..போ..நான் மாட்டேன்.
அண்ணா, ‘அதெப்படி அந்த பொண்ண வேறு யார் கட்டுவா?’
நான், ‘மாட்டேன்னா மாட்டேன்
அண்ணா, ‘ஏன்? என்ன காரணம் சொல்லு?’
நான். அது படிக்கல!
எங்கம்மா, ‘ஏண்டா... இவன் இன்னும் படிப்பே முடிக்கல,அவளோ.. இன்னமும் வயசுக்கே வரல.. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். யார் யாருக்கு எங்கே முடிச்சி போட்டருக்கோ அப்போ கல்யாணம் ஆகும் காலத்தில பாத்துக்காலம் ..இப்ப ஏண்டா இவனை வம்பு பண்ற...?’  

No comments: