Monday, November 11, 2019

இ.பி-8


                 29-பஞ்சம் போக்கி உணவுகள்

கடைசி அக்கா திருமணம் ஆனதும் எங்க அம்மாவிற்கு மிக்க மகிழ்ச்சி.ஆனால்  அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்க வில்லை.காரணம் 1971-ம் ஆண்டு பருவ மழை பொய்த்ததால் நாடு முழுவதும் பஞ்சம் மண்டிக் கொண்டது.
தினமும் காலையில் எனக்கு உணவு தாயரிக்க அரிசி வேண்டும்.இது ஒரு பெரிய தலைவலி போல் ஆகிவிட்டது எங்க அம்மாவுக்கு.வீட்டிற்குப் போதுமான அளவுக்கு கேழ்வரகு வயலில்  விளையும்,ஆனால் அந்த அளவுக்கு நெல் விளையாது.அந்த வருடம் சுத்தமாக நெல் விளையவே இல்லை,ஊரில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இதே நிலைதான்.

நான் வீட்டில் இருக்கும் போது எனக்கு கேழ்வரகு களியை வைத்து சமாளித்து விடுவார்கள்.கல்லூரிக்கு செல்லும் காலங்களில் மாணவர்கள் மத்தியில் களி உண்பது நால்லா இருக்காது.சக மாணவர்கள் கேலி பேசுவார்கள்.மேலும் படிக்கும் மாணவர்கள் கேழ்வரகு உணவை தயாரித்து சாப்பிட்டால் உடல் சுறு சுறுப்பை இழந்துவிடும் என்பது எங்கம்மா அறிந்து வைத்திருந்தார்கள்.
          
                     பஞ்சத்திலும் தம்பி படிக்க வேண்டும்!

எனவே கல்லூரிக்கு போகும் நாட்களில் மதியம் சாப்பாடு செய்து கொடுக்க தினமும் ஆழாக்கு(125 கிராம்) அரிசியாவது வேண்டும்.என்ன செய்ய? தாய், தன் தலைமகனிடம் சென்று புலப்பினார்.எங்க அம்மாவின் கஷ்டங்களை அறிந்து, களையும் ஆற்றல் எங்க பெரிய அண்ணாவிற்கு மட்டுமே உண்டு. அண்ணன் ஒரு முடிவுக்கு வந்தார்,

தினமும் மரவள்ளிக் கிழங்கை அவித்து, ஒரு வாடகை சைக்கிளை அமர்த்தி ஊர் ஊராக  சுற்றி வித்து அதில் வரும் லாபத்தில் தம்பிக்கு ¼ படி அரிசியாவது வாங்கி வர்ரம்மா....தம்பி படிப்பை நிறுத்த வேண்டாம்மா..சொன்னபடியே செய்தார்!வெய்யிலில் அலைந்தார்! யாரோடு பழக்கமோ எங்கள் அண்ணாவுக்கு மாலையில் மது அருந்தும் பழக்கம் தொற்றிக்கொண்டது!

விடியற்காலை 3 மணிக்குள் எழுந்து கிழங்கை கழுவி அடுப்பில் தீமூட்டி வேகவைத்து அதை ஒரு கூடையில் அடுக்கி சைக்கிளில் வைத்து கட்டி 4 அல்லது 5 மணிக்கெல்லாம் 10 கி.மி.க்கும் அப்பால் உள்ள கிராமங்களை சுற்றி விற்று விடுவார்.
மாலை 6 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்துவிடுவார். வரும்போது ½ படி(சுமார் 700 கிராம்) அரிசி மற்றும் காய்கறி பருப்பு வாங்கி வந்துவிடுவார்.இப்படி ஒரு நாள் விட்டு மறுநாள் தான் வியாபாரம் செய்ய முடியும்.
காரணம், கிழங்கு வாங்க இன்னொரு 10 கிமி சென்று வாங்கிவர வேண்டும்.நானும் தினமும் கல்லூரிக்கு சென்றேன்.

ஒரு சில நாட்களில் அண்ணன் வியாபாரம் போக முடியாத சூழல் ஏற்படும் .அந்த நேரத்தில் ¼(25 பைசா நாணயம்) ரூபாயாவது வேண்டும், காரணம் பொன்னேரி ஓட்டல்களில் அப்பொழுது ஒரு தயிர்சாதம் அல்லது சாம்பார் சாதம் 25 பைசா.
அந்த நாலணா கூட ஒருசில நாட்களில் கிடைக்காமல் கல்லூரிக்கு போகாத நாட்களும் உண்டு.பசியோடு வகுப்பை எப்படி கவனிக்க முடியும்?
            ******************
   
                 30-வீடு தேடிவந்த முன்னணி பத்ரிக்கைகள்

பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன்,புகு முக வகுப்பில் எனக்கு வழங்கப்பட்ட scholarship பணத்தை கொண்டு   நூலகத்தில் படித்த வாராந்தரி, மாதமிருமுறை, மாதாந்திரி (ஆங்கிலம் மற்றும் தமிழ்) பத்திரிக்கைகளை வீட்டுக்கே வரவழைத்தேன். அப்படி வரவழைத்த வாராந்திரிகள்,

1-குமுதம்,இரண்டு அணா (இப்போதைய விலை-ரூ.20.00)கல்கண்டு ஒரு அணா, ஆனந்த விகடன்-2 அணா (ரூ.25), ஆங்கிலத்தில்-ஆர்கே கரஞ்சியா வை ஆசிரியராக கொண்ட பிலிட்ஸ்(BLITZ)(மும்பாய்) மற்றும் குஷ்வந்த் சிங்கை ஆசிரியராக கொண்ட இல்லஸ்ட்டரேட்டட்வீக்லி (ILLUSTRATED WEEKLY) அப்போதைய விலை வாரம்(ரூ.25),

2-மாதமிருமுறை-துக்ளக்,

3-மாதாந்திரிகள்-கோவையிலிருந்து வெளியாகும் கலைக்கதிர்,(தமிழ்) டெல்லியிலிருந்து வெளியாகும் காரவான், மதர் இந்தியா, இம்பிரின்ட, புரோப், (ஆங்கிலம்) மாதாந்திரிகள் மும்பாயிலிருந்து வெளியாகும் ரீடர்ஸ் டைஜஸ்ட் (இப்போதைய விலை ரூ.160.அப்போது ரூ.10.00).மற்றும் Blitz weekly

கல்கட்டாவிலிருந்து வெளியாகும் சண்டே(அப்போதைய விலை.ரூ.10.00) (வருடாந்திர சந்தா கட்டி வரவழைப்பேன்.) இது மட்டுமல்ல இலவசமாக ரஷ்யாவிருந்து வெளியாகும் ஸ்புட்னிக்,சோவியத் நாடு,(ரஷ்யா சிதறுண்ட பின் இவைகள் வருவது நின்று விட்டன) .இதன் வெளியீட்டாளர்களான நியூ சென்சுரி புக்க அவுசுக்கு ஆண்டு சந்தா கட்டியும் அனுப்பவே இல்லை!   
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அமெரிக்கன் ரிப்போர்ட்டர்,’ (இவை இரண்டும் தமிழ்) ஸ்பான்,(Span) (ஆங்கிலம்)-இலவசம். மற்றும் வாராந்திரிகள் டைம்(TIME)மற்றும் லைப்(LIFE) இவை இரண்டும் அப்போதே ஒவ்வொன்றும் வருடாந்திர சந்தா ரூ.1500.00 ஆகும்.
இவை இரண்டும் அதிக பணம் என்பதால் ஒரு 6 மாத சந்தாவோடு நிறுத்திவிட்டேன்.PUC யில் 

எனக்கு அரசு பண உதவி (scholarship) கிடைத்தது.மேலும் மூன்றாண்டுகள் தொடர்ந்து கிடைத்ததால். அதனைக்கொண்டு பத்ரிக்கைகளுக்கு சந்தா கட்டுவது எளிதாகிவிட்டது.
பொன்னேரி கல்லூரி நூலகத்திலிருந்து பிரபலமான ஆங்கில நாவலாசியர்களின் நூல்களான, Jane Auston,Aghtha Christie (pride and prejudice,sesnse and sensibility,last three nights and TOLSTOYS-WAR AND PEACE)ஆர்வமுடன் படித்த நூல்கள்.

1969 முதல் 1975 வரை (எனக்கு வேலை கிடைத்து வெளியூர் செல்லும் வரை) எங்கள் கிராமத்து முகவரிக்கு தினமும் அந்த அஞ்சல் துறை ஊழியர் வருவார்.எனக்கு மட்டுமே தபால் வரும், ஊரில் யாருக்கும் தபால் வாராது,காரணம் யாரும் படித்தவரில்லை,அப்படி ஒன்றிரண்டு வந்தாலும் அதை நான் தான் படித்துச் சொல்வேன்.

விடுமுறை நாட்களில் மாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி ஆரணியில் உள்ள நூலகத்திற்கு செல்வேன். நான் நூலக உறுப்பினர்.தினசரிகளையும் படித்துவிட்டு  புதிய சிந்தனைகள் கொண்ட நூல்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிப்பது வழக்கம்.  முடிந்தால் சினிமாவிற்கு போவேன், 

அந்நாளில் தரை டிக்கட் 2 அணா
(12 பைசா)இதை சேகரிக்க நான் எங்க அப்பாவிடம்,பெனிசில் வாங்க வேண்டும்,ரப்பர் வாங்க வேண்டும்,பேனா வாங்க வேண்டும் என எதாவது காரணம் சொல்லி எங்கப்பாவிடம் காசு சேகரித்துக் கொள்வேன்,ஒரு அணா அவரிடம் வாங்க ஒரு வாரமாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் அப்பத்தான் அரையணா கொடுப்பார்.
இந்தா இவ்வளவுதான் இருக்கு எடுத்துக் கொண்டு போ,எனக்கே பீடி வாங்க காசில்ல இதில உனக்கு வேற நான் எங்க போவேன்?, இனிமே சும்மா வந்து என்னிடம் துட்டு கேட்காதே!என எச்சரித்து அனுப்புவார்.
மீண்டும் 10 நாள் கழித்து ஒரு அணா வேண்டும் என்பேன்,அப்போ ஒரு அரையணா கொடுப்பார். இப்படியாக 2 அணா சேர்த்துக் கொண்டு ,நண்பர் சம்பந்தம் பார்த்த பிரபலமான அந்த சினிமாவை ஒரு ஆண்டு கழித்து ஆரணிக்கு வரும், பகல் 3 மணிக்காட்சிக்கு செல்வேன்.                                             
       
                  நீ,நினைப்பது நடக்கும்,சொல்வது நடக்காது!

1970களில் ஆனந்த விகடன் பத்ரிக்கையில் இதயம் பேசுகிறது மணியனின் சுற்றுப்பயண கட்டுரை வெளிவரும்.அப்போது ஒவ்வொரு வாரமும் மனதில் பதியக்கூடிய புகழ் பெற்ற ஆங்கில மற்றும் சமத்கிருத வரிகளை தமிழில் மொழி பெயர்த்து எழுதிவிட்டு கட்டுரையை தொடர்வார்.அப்படி என் மனதில் பதிந்து விட்ட வரி,

உன் மனதில் எண்ணங்கள் உள்ளவரை அவை அழகாக இருக்கும்,அவைகள் வாய்விட்டு வெளியே வரும்போது அதன் வசிகரம் போய்விடும்
இந்த வரிகள் மேலைநாட்டு அறிஞர் ஆங்கிலத்தில் சொன்னதாக மேற்கோள் காட்டுவார்.அந்த வரிக்கு எவ்வளவு வலிமை உள்ளது என்று எனக்கு எப்போ தெரிந்தது எனில், 

ஒரு முறை திருமதி இந்திரா காந்தி அவர்கள் (1972 என நினைக்கின்றேன்) பிரதமராக இருக்கும் போது,நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், 
‘நாடு முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்,சொல்லுங்கள்’ என வற்புறுத்தியபோது,  மேற்கண்ட வாசகத்தை சுட்டிக்காட்டி பேசினார்கள்.
“A woman who is always standing on the threshold of the house,is easily  available to men”
(இது காமசூத்ராவின் ஆங்கில மொழி பெயர்ப்பு).என எழுதி இருப்பார். இது போன்ற வரிகளை தாங்கிய வார இதழ் கட்டுரைகளை சேமிப்பது என் பழக்கம்.இதன் தமிழாக்கம் இதோ-ஒரு பெண்ணானவள் எப்பொழுதும் தன் வாசற்படியில் நின்று கொண்டிருப்பாளே எனில், அவள் பிற ஆண்களின் வலையில் சுலபமாக விழக்கூடியவள்!

God was created by rogue- கடவுள் ஒரு அய்யோக்கியனால் உருவாக்கப்பட்டது. இந்த வரி என் மனதை உலுக்கியவை! பின்னாளில் ஏழாம் அறிவு இயக்கம் துவங்க காரணமான வரிகள்

அப்போதெல்லாம் ஆனந்த விகடன்வாராந்திரியில் மாவட்ட வாரியாக பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய அந்தந்த மக்களின் சொல்லாடலில் சிறுகதைகள் வரும்  அவைகளை சேகரித்து ,என் மரப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தேன்.நான் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்ற காலத்தில் அவைகள் மழையில் பட்டு அழிந்து விட்டன
பல கையேடுகளை பழை பேப்பர் வாங்கும் கடையில் போட்டு அண்ணா தண்ணிஅடித்து விட்டா

ஆண்டுக்கு ஒரு நாள் (அம்மாவின் நினைவு நாள் கார்த்திகை 1, 1991க்குப் பிறகு அப்பாவின் நினைவு நாள் கார்த்திகை 20-அப்பா இறந்த பின் இருவருக்கும் இணைந்து ஒரே நாளாக கார்த்திகை 20, அன்று தான் என் தாய்த்தந்தையர் நினைவு நாள்)  என் குடும்பத்தினருடன் எங்கள் கிராம வெய்யிலாளி இனங்களோடு அமர்ந்து உணவு உண்பேன்.
பின்  அவர்களுக்கு சேலை மற்றும் ரவிக்கை வழங்கிவிட்டு மாலை, பூந்தமல்லி (1982-86), 1986-87 காஞ்சிபுரம்,பின் 1987லிருந்து திருவள்ளூர் நகரத்தில் இருக்கும் என் வீட்டிற்கு வருவது வழக்கம்.
      
                         31-முற்பிறவி....?..நினைவுகள்!

நான் 65 வயதை கடந்து விட்டேன்,அன்று என் தாய்த்தந்தையரின் நினைவுநாள் அனுசரிக்கும் பொருட்டு  காலை ,என் கால்கள் பட்ட இடங்களிலெல்லாம் மீண்டும் தடம் பதிக்க ஆசை வந்தது.25 வயது முடியும் முன்னே நான் வேலைதேடும் வேலையில் ஊரைவிட்டே வந்துவிட்டேன்!
சென்ற ஆண்டு(2015) அன்றய தினம் என்னை வளர்த்த முள்ளுச் செடிகளை காண என் மனம் விரும்பியது.
என்னைய்யா..! உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? முள்ளுச்செடி ஒரு மனுசனை எப்படியா.. வளர்க்கும்? கிறுக்கா...? நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
எனக்கு 8 வயதிருக்கும்...ஆம் ..! நான்,என்  மாடுகளை காட்டில் மேயட்டும் என விட்டுவிட்டு, முதலில் நான் தேடிப்போவது அந்த முள் களா செடிகளைத்தான்.நான் எப்பொழுதும் பசியோடு இருப்பேன்! பழமும் காய்களாகவும்  பறித்து வாய்நிறைய போட்டு மெல்லுவேன். என் கையில் 3 அல்லது 4 அடி நீளமுள்ள கிட்டிக் கொம்பு இருக்கும்.
(கிட்டிக்கொம்பு என்றால் முனையில் Y வடிவத்தில் பிரிந்திருக்கும்,இது முட்கிளைகளை அழுத்திப் பிடிக்க உதவும்) ஒரு கையில் முட்களை நீக்கி என் வலது கையால் பறித்து வாயில் போட்டு மெல்வேன், வயிற்றை நிரப்புவேன்! சொத்தை களா எனும் ஒரு ரகம் .இதில் புளிப்புத் தன்மை சற்று குறைவாக இருக்கும்.
சூரக்களா எனும் ஒரு ரகம் இது மற்ற களாக்காய்களைவிட சற்று பெரியவடிவம் கொண்டது, இதன் இலைகளோடு ஆணியைப் போன்ற சிவப்பு  முட்கள் கொண்டது.இதன் கனிமட்டுமே சுவையானது.
சப்பாத்திக் கள்ளியிலும் பழமிருக்கும்,அதன் புறத்தோலில் சிறு முட்கள் இருக்கும் அதை பக்குவமாக பிரித்து,அதனுள் இருக்கும் சதைப்பற்றுடன் கூடிய இனிப்பும் புளிப்பும் கலந்த சிறு விதைகளுடன் கூடிய சிவப்பு நிறமுடைய பழரசம் இருக்கும்,இது எனக்கு மாலை நேரத்து உணவு.
கொஞ்சி செடிகளை தேடிச் செல்வேன் ஆண்டின் துவக்கமான சித்திரை-வைகாசி மாதங்களில் கொஞ்சி பழுத்திருக்கும்.
(கொஞ்சி பழம் என்பது இளஞ் சிவப்பு நிறம் கொண்ட பட்டாணியை விட சற்று பெரிய தோற்றமுடைய மிதமான இனிப்பு சுவை கொண்ட சதைபிடிப்பானது-rose berry)அதில் ஒரு செடியை பிடுங்கி நான் வசிக்கும் நகரத்து வீட்டில் வைத்து வளர்க்க ஆசைப்பட்டேன். நானும் அந்த செடிகளில் சிறு தோற்றம் உடைய செடிகளாப் பார்த்து தோண்ட ஆரம்பித்தேன். தோண்டினேன்... தோண்டினேன்...தோண்டிக் கொண்டே இருந்தேன், வெய்யில் அதிகமாகி விட்டதால் அதன் ஆணி வேரைக் காண முடியவில்லை..தோல்வியுற்றேன்.
மீண்டும் முயல வேண்டும் என என் மனம் விரும்புகிறது.காரணம் அதன் பழத்துக்காக மட்டுமல்ல,அதன் வேர் மருத்துவ குணமுடையது.எனக்கு மூக்கில் நீர் வடியும் போதெல்லாம் ,அதன் வேரை தோண்டி நீரில் அலசி,  மேல் தோலை சீவி எடுத்து,சதைப் பற்றான உள் தோலை உரித்து அம்மியில் அரைத்து துவையலாக்கி ஒரு டம்ளர் நீரில் கரைத்து எனக்கு என் தாய் கொடுத்தது நினைவில் உள்ளது.அதன் கசப்பு மற்றும் காரத்  தன்மையால் குடிக்க முடியாமல் அழுது கொண்டே குடிப்பேன்.
எங்கள் ஊருக்கு மேற்கே சுடுகாடு உள்ளது,அதற்கும் மேற்கே ஒரு குளம் உள்ளது. ‘பொடுதா குளம்’ என்று அதற்குப் பெயர்.அதன் கரையில் நான் மேலே சொன்ன முட் செடிகளெல்லாம் காணலாம். அந்த குளக்கரையில் மேல் வாழும் முட் செடிகளில் ‘களிபுளி’ எனும் கொடி சதைப்பற்றுடன் சிறு ஊசிப்போன்ற தடித்த இலைகள் காணப்படும்.மிதமான புளிப்புச்சுவைக்  கொண்டது.
சிற்றீசம் செடி என்பது பேரீச்சம் பழ மரத்தின் முன்னோடி.கொத்துக் கொத்தாக பழுத்திருக்கும் கருமை நிற மணிகள் போன்ற தோற்றமுடையவை, இனிப்பு சுவையுள்ள பழம்,இது இரும்புச் சத்துடைய பழம் என்பது பின்னாளில் நான் அறிந்து கொண்டது.இதை பறிப்பது அவ்வளவு சுலபமில்லை,
கையில் உள்ள கிட்டிக் கொம்பை பயன்படுத்தி, கையில் அதன் முள் குத்தாமல் லாவகமாக பறிக்க வேண்டும்.
சில நேரங்களில் பசி அதிகமாகிவிட்டால் ஈசஞ்செடியை பிடுங்க, சிறு கொம்புகளை கூர்மையாக பேனா கத்தியால் சீவிக்கொள்வோம்,செடியின் வேர்களை கெல்லி வெளியே எடுத்துவிடுவோம்.பேனா கத்திக் கொண்டு ஈசஞ் செடியின் மட்டைகளை பிரித்து அதன் குருத்துகளை உண்போம்.இந்த குருத்து சுவை மிகுந்தது.மிருதுவாகவும் கிழங்கு போன்றும் ருசி இருக்கும். அந்த முட் செடிகளையெல்லாம் நான் காண ஆசைப்பட்டுச் சென்றேன்.
என்னைப் போன்ற மனம் படைத்த மனிதர்களுக்கு இது போன்ற இளமைக்கால செயல்கள் பசியோடு தொடர்புடையதால் மறக்க முடியாது.
அதன் நினைவுகள் உள் மனதில் பதிந்து விடுகின்றன, சற்றேரக்குறைய 50 ஆண்டுகள் கடந்து போன சம்பவங்களை மீண்டும் அசைபோடும்போது முற்பிறவி சம்பவங்கள் போல் மனதில் வந்து போகின்றன.
மனிதர்களுக்கு பிறவிகளை நிஜமாக்கி அதை கடக்க வேண்டும் என்பது ஒரு மன நோய் என்றே கூறலாம்.இதற்கு காரணமே மதங்கள் தான்.
மனிதர்களை நாகரிகப்படுத்த உருவாக்கப்பட்ட மதங்கள் மனிதர்களை hallucination(இல்லாததை இருப்பது போன்ற தோற்றம் கொள்ள மனதை பக்குவப்படுத்துவது) எனும் மன போதைக்கு ஆட்படுத்தி விடுகின்றன.எங்கள் ஊர் காடு பெரியது,குறுக்கும் நெடுக்குமாக 20 கிமி தொலைவு கொண்டது.
60  ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு காடுகளை அழித்து முந்திரி செடிகளையும்,தைல மரங்களையும் வைத்துவிட்டது.செடிகள் வைத்த 5 ஆண்டுகளில் முந்திரி பழமும் கொட்டையுமாக காட்சியளித்தது, இன்றும் என மனதில் நிழலாடுகிறது.
பழங்களை பறித்து தின்று விட்டு கொட்டைகளை அதன் மரத்தின் கீழே போட்டு விடவேண்டும்,கொட்டைகளை நாம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல கூடாது. வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தால் எங்களுக்கு தண்டணை கிடைக்கும்,சிறைக்கு அனுப்பி விடுவார்கள்.சில நேரங்களில் எனது நண்பர்களுடன் காட்டுக்கு சென்று விடுவோம்.
கூடவே தீப்பெட்டி எடுத்துச் செல்வோம்,முந்திரிக் கொட்டைகளை பொறுக்கி உலர்ந்த தழைகளை போட்டு கொளுத்தி சுட்டு உடைத்து அதன் பருப்புகளை தின்போம்,பெரும்பாலும் வனத்துறை காவலரிடமிருந்து தப்பித்துவிடுவோம்! ஒருமுறை வனத்துறை காவலரிடம் பிடிபட்டோம், ‘படிக்கிற பசங்களா..? இனி இந்தப் பக்கம் வந்தீங்கன்ன ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன், ஓடிப்போங்க!மன்னிப்புக் கேட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்தோம்,அதன் பின் முந்திரிக்  காட்டுக்கே போவதில்லை!
எங்கள் ஊர் ஏரி ,அதற்கு பெரிய ஏரி என்றே பெயர்.எங்கள் மாவட்டத்தில் இருக்கும் பெரிய ஏரிகளில் எங்கள் ஊர் ஏரியும் ஒன்று. காட்டின் முடிவில் ஏரி எதுவாய் ஆரம்பிக்கும்.(எதுவாய் எனில் ஏரிக்குள் நீர் உள்ளே நுழையும்  பகுதி.)மாடுகளை ஏரியின் எதுவாய் பகுதியில் மேயவிட்டு ஏரிக்கு வரும் சிறு சிறு  ஓடைகளின் வழியே எதிர் நீச்சல் அடித்துவரும் மீன்களை பிடிப்பது வழக்கம்.
அவைகளைப் பிடித்து ,பரல்கள் மற்றும் குடலை நீக்கி சுட்டுவிடுவோம்.இதன் சுவையே ஒரு தனிச்சுவை!
எதுவாயில் உயிர்வாழும் தவளை,நத்தை மற்றும் நண்டு போன்ற உயிரினங்களை வாத்துக் கூட்டங்கள் மேய்ந்துவரும்,ஓடையில் வாத்துக்கள் முட்டைகள் இட்டு செல்வதை வாத்து மேய்ப்பவன் கவனிப்பது இல்லை,அன்றய தினம் எங்களுக்கு ஒரு பெரிய முட்டை விருந்தே,சில நேரங்களில் பச்சையாக உடைத்து வாயில் ஊற்றிக் கொள்வோம்,
இது தினமும் கிடைக்காது!அதே நேரத்தில், காட்டின் முட்செடிகளின் கீழ் காடை மற்றும் கவுதாறி பறவைகளின் முட்டைகளை சேகரித்து அதைப் பசுஞ் சாணியில் சுற்றி காய்ந்த தழைகளைப் போட்டு கொளுத்தி சுடச்சுட ஓடுகளை உரித்து சாப்பிடுவோம்.சிலசமயம் பச்சையாக உடைத்து சாப்பிடுவோம்.!
ஏரி, ஓடை மற்றும் வாய்கால் வரப்பு ஓரங்களில், ‘கிட்டிக் கிழங்குஎன ஒருவகை சிறு கிழங்கு(இஞ்சி போன்ற தோற்ற முடையாது) சேற்றில் புதைந்து காணப்படும்,சேறு போக நீரில் அலசி அதன் வேர்களை நீக்கிவிட்டு மெல்லிய தோலை நீக்கி பச்சையாகவும் உண்போம்,சில நேரங்களில் சுட்டும் சாப்பிடுவோம்.

நான் மாடு மேய்த்துக் கொண்டிருந்த காலம்.சனி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் என்னை  மாடு மேய்க்கச்  சொல்வர்.சுமார் 25 பசுமாடுகள் இருக்கும் இவைகளின் எண்ணிக்கை அவ்வப்போது கூடும் அல்லது குறையும்,ஆமாம் பசு, காளை கன்றுகளை ஈன்ற, ஈன்று அது வளர்ந்தவுடன்,ஏறு ஓட்ட,கவலை ஓட்ட (கிணற்றிலிருந்து நீர் சேர்ந்தி வயலுக்கு கால்வாய் வெட்டி பாய்ச்சும் முறை) வண்டி ஓட்ட பயன் பாட்டுகளுக்காக தாய்ப் பசுவினிடமிருந்து பிரித்து விடுவோம்.பாலைக் கரந்து வியாபாரம் செய்யும் பழக்கம் என் தாய்க்கு இருந்தது இல்லை! விருந்தினர் வந்தவுடன் கன்று ஈன்ற மாட்டிடம் ஒரு சொம்பை எடுத்துக் கொண்டு செல்வார்.அக்கம் பக்கம் உள்ளோர் குழந்தை பெற்றிருந்தால்,அந்த குழந்தைகளுக்கு பால் வேண்டி வந்து நிற்போருக்கு பாலைக் கரந்து கொடுப்பார்.காசு வாங்கியது இல்லை.

No comments: