’
41-
சாராயத்தை ஒழித்தவன்
எங்கள் ஊரில் ஒரு சிலர் சொந்தமாக சாராயம்
காய்ச்சுவார்கள்.அவர்களை நான் , ‘போலீசில்
பிடிச்சு கொடுத்தத்தான் நீங்க திருந்துவீங்க’ என
மிரட்டுவேன்.
(அப்பொழுதெல்லாம்,எங்கள்
கிராமத்தில் காவல் துறையினர்,வீடு தவறாமல் கள்ளச்சாராயம் உள்ளதா என சோதனை
போடுவார்கள்.)
‘அப்படியெல்லாம்
ஒன்னுமில்லடா,நான் சாராயம் காச்சரதையே விட்டுட்டேன்டா’ என
பொய் சொல்வார்கள்.
ஒரு நாள் ஒரு காவல் அதிகாரி என்னை எங்கள் வீட்டில்
சந்தித்தார்.என்னைப் பார்த்து,
‘தம்பி,நீ
படிச்சப்புள்ளையா இருக்கிற,நீ
யெல்லாம் காவல் துறைக்கு ஒத்துழைக்கணும்’
‘நான் என்ன சார் செய்யணும்?’
‘இந்த
ஊரில கள்ளச்சாராயம் காய்ச்சரதா புகார் வந்திருக்கு.உனக்கு தெரிந்தா சொல்லு,உன்னை
காட்டிக்கொடுக்க மாட்டேன்.’
காய்ச்சப்படும் இடத்தை சொல்லி விட்டேன்.இதை கேட்டுக்
கொண்டிருந்த எங்க அம்மா,
‘ஏண்டா
நமக்கு அந்த பாவம்?எதோ பொழைச்சுப் போறாங்க,அவங்க
பொழைப்புல ஏண்ட மண்ணை அள்ளி போடற?’
‘சரிம்மா,இனி
யார் வந்து கேட்டாலும் எனக்கு தெரியாது என சொல்லிடரேன்’ அதன்
பிறகு எங்கள் ஊரில் கள்ளச்சாராயம் யாரும் காய்ச்சுவது இல்லை. குடிப்பவர்களும் என்
முன்னே வர மாட்டார்கள்.என்னைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள்.எங்க சின்ன மாமா(சின்ன
அக்கா கணவர்) பெருங்குடிக்காரர்,எப்பொழுதும் எங்க
அக்கா அழுது கொண்டே வீட்டுக்கு வருவார்கள்.இதனால் எனக்கு குடிகாரர்கள் மீது
வெறுப்பு.
ஊரில் எங்க பங்காளி அக்காவின் கணவர் கள்ளச்சாராயம்
காய்ச்சுவார்.ஊர் கட்டுப்பாட்டுக்கு மீறி அவர் கய்ச்சுவதை ஊர் பஞ்சாயித்தில் யாரோ
முறையிட அவரை பஞ்சாயித்து கூடும் இடத்தில் உள்ள ஒரு மரத்தில் கட்டிப் போட்டார்கள்.
தண்டோரா போட்டு ஊரைக் கூட்டினார்கள். பஞ்சாயித்துக்கு ஊர் பெருந்தனக்காரரான திரு
ரங்கநாத நாயகர் தலைமை வகித்தார். இந்த கள்ளச் சாரயம் காசும் ‘புளி
மூட்டை’க்கு ( புளி மூட்டை என்பது அவருடைய nickname அவருடைய நிஜப்பேர் என்ன என்பது எனக்கு தெரியாது) என்ன தண்டணை வழங்கலாம்?.என்பது
பஞ்சாயித்தில் விடுக்கப்பட்ட வினா.
ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்,
1-கட்டிபோட்டு
உதைக்கலாம்.
2- போலீசில் ஒப்படைக்கலாம்.
3- தண்டம் (தண்டம் என்பது தவறு செய்பவர்கள்
பஞ்சாயித்துக்கு பணம் கட்டி விடுவது) விதிக்கலாம்.
பஞ்சாயித்தில் நான் எழுந்து நின்றேன்.
‘அவன்
யார்?’
‘படவட்டான்
புள்ள..!’
‘படிச்சிக்கிறான்’
‘என்ன
சொல்றான் கேளு’
‘அவனை
கட்டிப்போட்டது தவறு’ என்கிறான்
‘ஊர்
கட்டுப்பாட்டை மீறி சாராயம் காய்ச்சுவது தப்பில்லையா?
‘தப்புதான்,அதற்காக
கட்டிப்போட்டது தவறு’.
‘சரி
அவனை அவிழ்த்து விடுங்கடா’
‘அவருக்கு
ரூ.100 அபராதம் விதிக்கிறோம்’.
‘அவரால்
அவ்வளவு பணம் கட்ட முடியாது.’
‘டேய், படிச்சவனுக்கு
அறிவே இருக்காதுடா’
‘அவனை
பேச விடாதிங்கடா’
இதற்குள் என் வயது ஒத்த நண்பர்கள் ‘பள்ளிக்கூடத்தான்’
சொல்றது சரிதான்,அவருக்கு விதிக்கப்பட்ட தண்டத் தொகை அதிகம்,
அதை 10 ரூபாயாக குறைக்கலாம்’ என்று கூச்சல் போட்டனர்.தண்டத்தொகை 10 ரூபாயாக
குறைக்கப்பட்டது
பஞ்சாயித்தில் விதிக்கப்ட்ட தண்டத் தொகையை எங்க அண்ணா
கட்டி அந்த ‘புளி மூட்டை’யை
அழைத்துச் சென்றார். அதோடு ஊரில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது நின்று விட்டது.
42-கவுரிநோன்பு
ஐப்பசி மாதங்களில் வரும் கவுரி நோன்பு (தீபாவளிக்கு
அடுத்த நாள்) எங்க அம்மாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
விடியற்காலை எழுந்து குளித்து விட்டு வீட்டை சாணி கொண்டு
மெழுகி வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து,மாவிலைத் தோரணங்கள் கட்டி ,வாசலில்
கோலமிட்டு,அதிரசம்,வடை பாயாசம் போன்ற பலகாரங்களை செய்து முடிக்க
மாலை நான்கு மணியாகிவிடும். எங்களுக்கு எல்லாம் வருடத்திற்கு இரண்டு நாட்கள் தான்
இட்லி,தோசை செய்வார்கள். ஒன்று தமிழ் வருடப்பிறப்பு மற்றொன்று
தீபாவளி.
தீபாவளி நாளை மறுநாள் என்றால் இன்றே மாவு ஆட்டி போட்டு விடுவார்கள்.
ஆட்டுக்கல்,தோசைக்கல்,உரல்,எந்திரம்-இதெல்லாம்
எங்கம்மா தான் வைத்திருப்பார்கள். எங்கம்மா மாவு ஆட்டியதும் அன்று முழுவதும் மற்ற
வீடுகளிலிருந்து மாவு ஆட்டிக்கொண்டு போவார்கள்.ஒரு பத்து வீடுகளுக்கு மேல் அன்றய
தினம் ஆட்டிக்கொண்டு போவார்கள். தீபாவளி அன்று
விடியற்காலை 3 மணிக்கெல்லாம் எங்கம்மா இட்லி சுட ஆரம்பித்து விடுவார்கள்.
இட்லிக்கு தொட்டுக் கொள்ள வடகறி,குறுமா போன்ற வாசனை
பொருட்கள் மூக்கை துளைக்கும்.அந்த இட்லி சாப்பிடும் ஆர்வத்தில் நாங்களும்
கண்விழித்து கொண்டிருப்போம்.
இட்லி,தோசைக்கு தொட்டுக்
கொள்ள கோழி குழம்பு,மற்றும் ஆட்டுக்கறி இதில் எதாவது ஒன்றோ அல்லது சில
நேரங்களில் இரண்டுமே(பண வசதிக்கு ஏற்றாற் போல்) செய்வார்கள்.
வருடத்திற்கு மூன்று நாட்கள் தான் கோழி,அல்லது
ஆட்டுக் கறி செய்வார்கள்.இன்னொரு நாள் மாட்டுப் பொங்கல். ஒவ்வொரு இட்லியும் கைக்கு
அடங்காத அளவுக்கு இருக்கும்.காலையில் இட்லியை ஆறு அல்லது 7 என கணக்கிட்டு தின்று
விட்டு ,அது ஜீரணிக்க முடியாமல் படுத்துப் புரள்வோம். மாலை
தோசை.அன்று முழுவதும் இட்லி,தோசைதான் உணவு. (இப்பொழுதெல்லாம் கிராமங்களில் கூட காலை
உணவு இட்லி தோசை என்பது வழக்கமாகிவிட்டது. கேழ்வரகும் பயிர் செய்வதில்லை,கூழ்
,களியும் மறைந்து விட்டது.)
அடுத்த நாள்,கவுரி
நோன்பு. நோன்பு என்பது, எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதற்கு ‘கேதார
கவுரி விரத மந்திரங்கள்’ அடங்கிய புத்தகம் உள்ளது.அதை எங்கம்மா எனக்கு வாங்கி கொடுத்து,அந்த
மந்திரங்களை ‘படி..’ என்பார்.கலசம்
நிறுத்தி மொத்த மந்திரங்களையும் படிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். மாலை 5
மணிக்கு மேல் ஆகிவிடும். அதன் பிறகு 5 மடல் வாழையிலைகளை நடுவீட்டில் பரப்பி
ஒவ்வொன்றிலும் ஒரு கலகாரங்களை படைத்து கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைப்பார்கள்,கற்பூரம்
அணைந்த வுடன் காக்கைக்கு பல காரங்கள் வைத்துவிட்டு பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து
உண்ணுவோம்.
விரதம் இருந்ததால் அம்மாவின் உடல் நிலை மோசாகி வருவதை
உணர்ந்தேன்.தொடர்ந்து வயிற்றுப்போக்கு அதிகம் ஆகிக் கொண்டிருந்ததை எங்களுக்கு யாருக்கும்
சொல்லவில்லை. படுத்த நிலைக்கு வந்து விட்டார்.
43-லஷ்மி அக்கா
இவர் எங்க குடும்பத்தின் தவிற்க முடியாத நபர்.இளவயதில்
அதாவது 30 வயதில் 8 குழந்தைகளைப் பெற்றவர்,
இவரது கணவர்,30ஆம்
வயதில் மூன்று மாத கரு வயிற்றில் இருக்கும் போதே நோய்வாய் பட்டு இறந்து
போனார்.நான்கு குழந்தைகள் இறந்து போக மீதம் மூன்று பெண் குழந்தைகள்,ஒரு
ஆண் என நான்கு பேரை வளர்க்க படாதபாடு பட்டார்.
எங்கம்மா அவர்களின் பசிக்கு கூழ் வார்த்துவிடுவார். களை
எடுத்தல்,நாற்று நடுதல் போன்ற விவசாய வேலைக்கு பயன் படுத்திக் கொள்வார்.அந்த
பஞ்ச காலத்தில் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை, விவசாயமே
நின்று விட்டது.ஆண் பிள்ளையை மட்டும் (இவர் பெயர் திரு வேணுகோபால்,இவரைப்
பற்றி முந்தைய பக்கங்களில் குறிப்பிட்டு இருப்பேன்) அம்பத்தூரில் வாழும் அண்ணன்-
தம்பி வீட்டில் தங்கி படிக்கட்டும் என விட்டு விட்டார்.
கிராமத்தில் வேறு எங்கேயாவது யாராவது வேலை கொடுப்பார்கள்,அதில்
வரும் கூலியை வைத்துக் கொண்டு, மாலை 4 மணி
அளவில் ஆரணிக்கு சென்று ஆழாக்கு அரிசி வாங்கிவந்து பொங்க வைப்பார்.
அப்படி வரும்போது எனக்கு மாலை நேர நொறுக்குத் தீனியாக 50
கிராம் மிக்சர் வாங்கி வருவார்.அந்த நொறுக்குத் தீனியில் அன்பு கலந்திருக்கும்.ஆதரவு
சேர்ந்திருக்கும்.லட்சுமி அக்காவிற்கு வயது வந்த இரண்டு பெண்கள் வீட்டில் இருப்பார்கள்,
அவர்களிடம் கூட அந்த நொறுக்குத் தீனியை தர மாட்டார்கள்.
‘என்னம்மா எங்களுக்கு தராம அவனுக்குப் போய் தர்ரீங்க?’
என அவர்கள் அம்மாவோடு சண்டை போடுவார்கள், அப்போது, ‘போங்கடி படிக்கிற புள்ளை
பசியோடு இருப்பான்,அவன் எங்க போவான்?’ என்பார்.
இரவோடு இரவு தான் இவர்கள் வீட்டில் அடுப்பெரியும்.இவர்கள்
வசிக்கும் வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் 500 அடிகளுக்கு மேல் இருக்கும்.அந்த இரவு நேரத்தில் அந்த கஞ்சியை
எடுத்துக் கொண்டு எங்கம்மாவைத் தேடி வருவார்கள்,
காரணம், உடல் நிலை
பாதிக்கபட்ட எங்க அம்மாவால் களி சாப்பிட முடியாது என்பது லஷ்மி அக்காவுக்கு
தெரியும்,அந்த கஞ்சியை கொடுத்துவிட்டு,
‘இந்தா..
சித்தி,இதை சாப்பிடுங்க..’
அதற்கு பதிலாக களியை வாங்கிக் கொண்டு போவார்கள்.இவருக்கு மாற்றுக் கட்ட ஒரு புடவை
இருக்காது.குளத்துக்குச் சென்று ஒற்றை புடவையை பாதி துவைத்து,மீதி
புடவை தன் உடலோடு சுற்றி இருக்கும்.காற்றில் ஆட விட்டு காய்ந்த பின் உடலில்
சுற்றியிருக்கும் மீதி புடவையை துவைத்து காயவைத்து கட்டிக்கொண்டு வருவார்.
அந்த ஒரு பிள்ளை தன் விருப்பம் போல் காதலித்து திருமணம்
புரிந்தவர்.அவர் சம்பாத்தியம் அவர் குடும்பம் நடத்தவே சரியாக இருக்கும்.எங்கேயோ
பிள்ளை நல்லா இருந்தா சரி,
நம்மோடு
கஞ்சிக்கும் கூழுக்கும் அடிபட்டுக் கொண்டிருக்காமல் நிழலில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றானே எனும் நிம்மதியில் இங்கே எங்களுடைய சுக துக்கங்களில்
பங்கெடுத்துக் கொண்டு எங்களோடு காலத்தை கழித்தவர்.
எங்கம்மா அந்த கஞ்சியை எனக்கு கொடுத்துவிட்டு, ‘படிக்கிற
புள்ள வெறும் களியைத் தின்றால் எப்படி படிப்பு ஏறும்?...நீ
..சாப்பிடு,..கண்ணா!’ என்று என்னிடம்
தந்துவிடுவார்கள்.
‘நீ
சாப்பிடும்மா..! எனக்கு களி போதும்..’
என்பேன்.
‘இல்லை
,நீ ..சாப்பிடுடா..கண்ணு!’ என
என்னிடம் திணிப்பார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து
வீட்டுக்காரம்மா,
(இவர் பெயரும் லஷ்மி தான்-இவர் பெற்றது 12 பிள்ளைகள்,இப்பொழுது
இருப்பதோ 9 பேர்,அதில் ஆண்கள் 6 பெண்கள் 3.எனக்கு தெரிந்த வரையில் ‘லட்சுமி’ என
பெயரைச் சூட்டியவர்கள்,
வாழ்க்கை
வறுமையிலேயும் கஷ்ட்டத்திலும் வாழ்ந்தவர்களாகத் தான் நான்(கைம்பெண் அல்லது
பல்லுடல் பரிமாற்றம் கொண்டவள்) கண்டிருக்கின்றேன்.ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள
லட்சுமிகள் வெறும் துன்பத்தில் வாழ்ந்தவர்கள். ‘அத்தை..
இந்தா.. ரா.. பட்டிணி கூடாது,கொஞ்சம்
சோறு துன்னுட்டு,தண்ணி குடிச்சிட்டு படுத்துக்கோ’
என தன் வீட்டில் பொங்கிய ஒரு கப் அரிசி சாதத்தை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இவர்கள் குழந்தைகளுக்கும் பகலில் சாப்பிட ஒன்றும்
இருக்காது, அவர்களுக்கும் கூழை கலக்கி கொடுப்பார்கள், எங்க
அம்மா.!.....கடும் பஞ்சம்!
எங்கண்ணா
காலையில் கனகாம்பரம் பறித்துக்கொண்டு அதை சென்னை பூக்கடையில் போட்டுவிட்டு,
வீட்டுக்கு வரும்போது,காக்காச்சோளம்
(இது 7 உறையுடன் கூடிய மிளகை விட சற்று சிறிய வடிவம்
கொண்ட கெட்டியான வெள்ளை தான்யம்) வாங்கி
வருவார்.
மாலை 6 அல்லது 7 மணியாகிவிடும்.இதை உரலில் போட்டு இரண்டு
அண்ணிகளும் உலக்கை கொண்டு மாறிமாறி குத்துவார்கள்.
இதன் 7 உறைகள் உரிய 7 தடவை குத்த வேண்டும். ஒரு மணி
நேரம் குத்தி,புடைத்து குத்தி புடைத்து, மீண்டும்
மீண்டும் குத்த வேண்டும்.(இதனை குறிக்கும்
விதமாக கிராமத்து சொல்லாடல் ஒன்று உண்டு, ‘வேலையித்த(வேலை
இல்லா) நாறி சோளம் குத்தி ஆக்கன கதையா இருக்கே....’என்பார்கள்.)
அப்பத்தான் உண்ணக்கூடிய உருண்டை வடிவ அரிசி போன்ற
தானியம் கிடைக்கும் .இதை கிண்டி எங்களுக்கு போட இரவு 9 மணி ஆகிவிடும்,பசி
வயிற்றை கிள்ளும்,
சாப்பிடும் வரை ,நான்
அழுது கொண்டே இருப்பேன். நாங்க சாப்பிட்டதும்,
எங்கம்மா சாப்பிட ஒன்றும் இருக்காது.வெத்திலை பாக்கு போடும் வழக்கமுடைய எங்க அம்மா
அதை மென்று முழுங்கி தண்ணீர் குடித்து படுத்துக் கொள்வார்.
எங்க அம்மாவின் உடல் நிலை உணவின்றியே மோசமான நிலைக்கு
வந்து விட்டது.
காலையில் நான் வழக்கமாக ராமலிங்க அடிகளாரின் பாடலான,
‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற...’பாடலை பாடி பூசை செய்யும் போது,
‘முருக.! எங்கம்மாவுக்கு உடல் நிலை நான்றாக தேறி
வரவேண்டும், சாக கூடாது...!, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நான் உன்னை
வணங்குவதையே விட்டு விடுவேன்’ என்றழுதேன்,.. அழழுதேன்.!
இறைவனை வணங்கும் போது அழுது வணங்கினால் இறைவன் அருள் கிடைக்கும் என மாணிக்க வாசகர்
முதற் கொண்டு வள்ளலார் வரை படித்துள்ளேன்.ஆனால் அதுவெல்லாம் ‘பாமரனின்
உழைப்பை சுரண்ட பரதேசி புலவர்கள் பாடியது’
என பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.
1972 நவம்பர் மாதம்,ஆரணியில்
வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் அம்மாவை காண்பித்தோம்,( இவர்
ஒரு ஓமியோ பதி மருத்துவர்)அவர்,
‘உங்களுக்கு
எத்தனை நாளா இந்த வயிற்றுப் போக்கு ஆகுதும்மா?’ எனக்
கேட்டார்,
‘ஒரு மாசமா இருக்கு’
‘அம்மாவுக்கு 60 வயதாகிறது இது ஒன்றும் சாகர வயசில்ல,இருப்பினும்
இதனை குணப்படுத்துவது கடினம்,’
‘நீங்கள்
சென்னைக்கு கொண்டு போங்கள்’
என மருத்துவர்
சொல்லிவிட்டார்.
சென்னை பில் தோட்ட ஆசுபத்திரிக்கு கொண்டு போவணும் என
வீட்டில் தீர்மானித்தார்கள்.(பில் தோட்டம் என்பது புல் தோட்டம் என்பதின் மரூவு,அந்நாளில்,
புல் தோட்டம்,(கீழ்ப்பாக்கம்
மருத்துவமனை),
கஞ்சி தொட்டி (ஸ்டான்லி மருத்துவ மனை),
லண்டன் தொட்டி(பொது மருத்துவ மனை)
இந்த மூன்று தான் விசேஷமான மருத்துவ மனைகள்.அன்று
வழக்கமா நான் கல்லூரிக்கு சென்று விட்டேன்,மாலை
வீடு வந்ததும் அம்மாவைத் தேடினேன்,
‘அம்மாவை
பில்தோட்ட ஆசுபத்திரிக்கு கொண்டு போயிட்டாங்க’ என
என் அண்ணி சொன்னார்கள்.அடுத்த நாள் கல்லூரிக்கு லீவு போட்டு விட்டு,நான்
மருத்துவ மனை இருக்கும் இடம் தேடி போனேன்.அங்கு,
‘உங்க
அம்மாவுக்கு chronic
diarrhoea (நெடு நாளைய
வயிற்றுப் போக்கு) உள்ளது. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது,எனவே
அவர்களை தண்டையார் பேட்டையில் உள்ள காலரா மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டேம்’ என்றார்கள்.
அன்று நேரமாகி விட்டது,நான்
வீட்டுக்கு சென்று விட்டேன்.அடுத்த நாள் தண்டையார் பேட்டை காலரா மருத்துவ மனைக்கு
சென்றேன்.அங்கே நான் எங்கம்மாவை கண்ட காட்சி என்னை அதிர வைத்தது.
கார்த்திகை மாதம்(ஐப்பசி முடிய இரண்டு நாட்கள் தான்
உள்ளது) கடுங்குளிர் .ஊதக்காற்றில் ஒரு வராண்டாவில் கசங்கிய துணி போல் போட்டு
விட்டார்கள்.(I saw my mother as an huddled heap) அப்போது சில
நாட்களுக்கு முன் ‘அகதா கிரிஸ்ட்டி’
எழுதிய ஆங்கில நாவலில் படித்த வரிகள் என் அம்மாவைப் பார்த்தும் என் நினைவுக்கு
வந்தது.
என்னைப் பார்த்ததும் எங்கம்மா கண்ணில் நீர் வடிந்தது,சத்தம்
போட்டு அழக்கூட எங்கம்மாவுக்கு பலம் இல்லை.அம்மா கண்ணீர் வடித்ததை பார்த்து,நானும்
அழுது விட்டேன்,தேம்பி தேம்பி அழுகிறேன், அம்மா,
‘டேய், கண்ணு,
என்னை எப்படியாவது வீட்டுக்கு கொண்டு போடா,இங்கு
என்னை விட்டு வைக்காதடா...!’
நான் அழுவதைப் பார்த்த
அந்த நர்சு,அவர்களும் அழுது விட்டார்கள்,
என்னை தேற்றினார்கள்.
‘அழாதீங்க’
‘அழுது
ஒரு பிரயோஜனமும் இல்லை சார்,
உங்கம்மாவுக்கு காலரா
இல்லை, அதனால் நாங்கள் மருத்துவம் பார்க்க முடியவில்லை! இருப்பினும்
இங்கே சேர்த்துக் கொண்டவர்களை குணப்படுத்தி அனுப்புவோம், குணப்படுத்த
முடியாமல் இறந்து விட்டால் பிணத்தை வெளியே அனுப்ப மாட்டோம்,நாங்களே
எரித்து விடுவோம்’
என்றார்.
இதைக்கேட்ட நான் மேலும் அழ ஆரம்பித்தேன்.
‘இதற்கு
வேறு வழியே இல்லையா சிஸ்ட்டர்?’
‘இருக்கு,நான்
சொன்னதாக எங்கும் சொல்லக்கூடாது’ என சொல்லிவிட்டு,
‘நீ
,போய் RMO வைப்பார்,எனக்கு
என் அம்மா வேண்டும்,
treatment இல்லாமல்
வராண்டாவில் போட்டுள்ளார்கள், எனக்கு எங்க அம்மாவை
திருப்பி தாருங்கள்’
என கேளுங்கள்’.என்றார்.
நான் அந்த ‘உள்ளிருப்பு
மருத்துவ அதிகாரியை’
பார்க்க அனுமதி
கேட்டேன்,அனுமதி கிடைத்தது,அவர்
ஒரு பெண் அதிகாரி.நான் அழுவதைப் பார்த்த அந்த அதிகாரி,
என்னிடம் விவரங்களை கேட்டறிந்தார்.சில நிமிடங்கள் யோசித்து விட்டு, உதவி
அதிகாரியை அழைத்தார்.
விவரங்களை கேட்டறிந்தார். என்னைப் பார்த்து, ‘எப்படி
கொண்டு போகப்போற?’
‘டேக்சியில்
கொண்டு போகின்றேன் ,மேடம்’
‘சரி நீ..போய்
டாக்சிக்கு ஏற்பாடு செய்’ வெளியே டேக்சியை தேடினேன்,ஒரு
வயது முதிர்ந்த ஓட்டுநர்,எங்கள் ஊருக்கு 40 ரூபாய்க்கு வர சம்மதித்தார்.
நான் அம்மாவிடம்,
‘அம்மா
40 ரூபா கேக்கறாம்மா,வீட்டில் என்னிடம் நீ கொடுத்து வைத்துள்ள பணத்திலிருந்து
40 ரூபா எடுத்து,அந்த டேக்சி காரனுக்கு கொடுத்துடலாமா?,நாம
போலாம்’
‘வேண்டாம்
அந்த பணத்தை எடுக்காதே,அப்படியே வச்சிரு!, வீட்ல
அண்ணா அல்லது அப்பா பார்த்துப்பாங்க,வா
போகலாம்.’
இறக்கும் தருவாயில் இருக்கும் போது கூட அம்மாவுக்கு ஏன்
தன் சேமிப்பை செலவழிக்க மனம் வர வில்லை? ‘நான்
பிழைக்க மாட்டேன்’ என எங்கம்மா என்னிடம் தெரிவித்தும்,பணம்
என்ன? பொன்னென்ன? நகையென்ன? சொந்தமென்ன? பந்தமென்ன?ஏன்
இறை நிலை(அமைதி) யடைய மனித மனம் மறுக்கின்றது?
நான் தான் எங்க அம்மாவை தூக்கி டாக்சியில் வைத்தேன்.கூடவே
அம்மாவை கவனித்துக்கொண்ட எங்க சின்ன அக்கா டாக்சியில் ஏற்ற உதவினார்கள்,
எங்க கடைசீ அக்கா வாழும் வழியான நாப்பாளையம் எனும் ஊர் வழியே வந்தது.
வழியில் எங்க அக்கா மாமாவை ஏற்றிக் கொண்டேன். அப்போது,
‘மாமா.டாக்சிக்கு
கொடுக்க வீட்டில் அம்மா சேமி்ப்பு உள்ளது ,அதிலிருந்து
40 ரூபா தரலாம் என்றால், வேண்டாம் என்று அம்மா சொல்லறாங்க..’ ‘சரி
பரவாயில்லை.., என்னிடம் உள்ளது ..நான் ..தருகிறேன் வா’
என மாமா சொன்னார்.
டாக்சி பொன்னேரி , கவரைப்பேட்டை வழியாக சென்று
வீட்டுக்கு போனோம்.. நான் வேட்டி கட்டிக் கொண்டுதான் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
என்னிடம் அப்போ ஒரே ஒரு வெள்ளைப் பேண்ட் மட்டுமே இருந்தது.,அதை
எப்பவாவது கல்லூரி விசேஷ நாட்களில் அணிந்து செல்வது வழக்கம். அன்று வேட்டி கட்டி
இருந்தேன்.என்னைப் பார்த்த அம்மா,
‘ஏன்
கண்ணு,பட்ணம் வர்ர ..பேண்ட் போட்டுகினு வர்ரதானே ?
‘சரிம்மா
..இனிமே போட்டுகினு வர்ரேன்’
மேலும் அம்மா, ‘நான்...
செத்ருவேண்டா.. கண்ணா,
என்னை போட்டா
புடிச்சி வச்சிக்கோ’
இதைக் கேட்டு நான் அழுவதைத் தவிற வேறு வழியில்லை, ‘நான்
வணங்கும் முருகனும் கை விட்டுருவான் போல..’
என எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.அன்று செவ்வாய் கிழமை மாலை அடுத்த நாள்
புதன்.காலை நான் எழுந்தவுடன் ஆரணிக்கு சென்றேன்.
அங்கே எங்கள் பள்ளி தெலுகு ஆசிரியர் ஒரு professional photographer .அவரை வீட்டில் பார்த்து,
‘சார்,எங்க
அம்மா சாகும் தருவாயில் உள்ளார்கள் அவர்களை போட்டோ எடுக்க வேண்டும்’ என்றேன்.
‘சரி, தம்பி நான் வருகிறேன்’ மேலும் அவர்
‘நான்
என் சைக்கிள்ள வர்ரேன் தம்பி..நீங்க போங்க..’ நான்
வீடு வந்து சேர்ந்த உடன் அந்த ஆசிரியர் வந்துவிட்டார்.அவர், ‘கூடவே
உங்க அப்பாவையும் சேர்த்து எடுத்துக்கோ தம்பி..நல்லது..’
‘சரிங்க
சார்’அப்படிஅவருக்கு ரூ 20 கொடுத்ததாக நினைவு.இதற்கு முன்
எங்க அப்பா –அம்மா புகைப்படம் எடுத்ததே இல்லை.
அம்மா, ‘அக்காவுங்களுக்கு
எல்லாம் சொல்லி விடுடா..’
‘சரிம்மா’
புதன் இரவு 11 மணி இருக்கும்,
எங்க சின்ன அக்கா மடியில் அம்மா, தலை வைத்து
படுத்திருந்தார்கள்.
மணி 12 ஐ நெருங்கும் நேரத்தில், ‘எங்கே சுகர்தா?’ (இது
எங்க பெரிய அண்ணியின் பெயர்)
‘அத்தை...,இங்கத்தான்
இருக்கேன்’
‘ஏண்டி, பள்ளி
கொடுத்தானுக்கு(எனக்கு) சாப்பாடு பண்ணு,,பொழு
விடிந்து விட்டாப்போல.. அடுப்பை பத்தவை..’
‘இல்ல..
அத்தை.. இன்னும் நேரம் இருக்கு ..
நான் சமைக்கிறேன் ஆகட்டும்’
அதன் பிறகு எங்க அம்மா பேசவே இல்லை.கோமாவிற்கு சென்று
விட்டார்கள்.
எல்லாரும் சுற்றி அமர்ந்துள்ளோம், எங்க
அண்ணா, ‘அம்மா கனகவல்லி வந்திருக்கு,தம்பிக்கு
எதாவது சொல்றியாம்மா?
மனித இனத்தில் மரண வாக்குமூலம் என்பது மிக முக்கிய பங்கு
வகிக்கின்றது.ஆனால்,அம்மா வாய் திறக்க வில்லை. எனக்கென்ன ஒரு அச்சம் என்றால், இத்தருணத்தில்
அம்மாவின் வாய் வார்த்தை மிக முக்கியமானது,
‘எங்கே...
அக்கா பெண்ணை கட்டிக்கோடா என சொல்லி விடுவார்களோ’
என்பது தான்,அதற்காகத்தான் என் அண்ணா திட்டமிட்டு அம்மாவின் கடைசீ வார்த்தைக்கு
காத்திருந்தார்.
No comments:
Post a Comment