Wednesday, November 27, 2019

இ.பி-16


                61-பெங்களூர்

1976-ஏப்ரல் 10 தேதிக்குப்பின் அலுவலக வேலையில்லாமல் சும்மாதான் இருந்தேன்.ஒரு நாள், நண்பர், ஆனந்த் அவருடைய நெருங்கிய உறவினர் பெங்களூரில் இருப்பதாகவும்,நாம் போய் இரண்டு நாள் தங்கிவிட்டு வரலாம் வா..!,என்றார்.நானும் சரி என்றேன்.ஆண்டுதோரும் தமிழ் வருடப்பிறப்பு அன்று, (ஏப்ரல் 14)பெங்களூர் மல்லேசுரம் பகுதியில், ‘பச்சைகிரி அம்மன்’ தேர்த் திருவிழா விசேஷம். அதைக் காணலாம் என்று என்னை அழைத்தார்.

‘எனக்கு பொது வழிபாட்டுத் தலங்களை காணுவதில் ஆர்வம் இல்லை,இருப்பினும் எனக்கு பெங்களூர் புதிய இடம்,அதைக் காண நானும் வருகிறேன்’ என இருவரும் புறப்பட்டோம்.
பெங்களூர் எனக்கு புதிய இடம், சாலையெங்கும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகைக் கண்டதும் மனதை மயக்கியது.ஆனந்தின் உறவினர்களின் உபசரிப்பு மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.
ஆனந்து உறவினர் வீட்டில் இருந்த அழகிய பெண் எங்கள் இருவரையும் வரவேற்றாள்.அப்பொழுது நண்பர்,‘இந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறீயாடா?’ என என்னைப் பார்த்து வினவினான்.
பெண்ணின் அம்மாவிற்கும் இதில் உடன்பாடு என நினைக்கின்றேன்’,என்றான்.

இல்லை நண்பா,எனக்கு என் இனத்தில் படித்த பெண்ணைப் பார்த்து மணம் செய்து கொள்ளத்தான்  ஆசை,மேலும் அந்த பெண் மரியாதை இல்லாமல் அழைக்கிறாள்.’ என்றேன்.
நண்பர், ‘கன்னடத்தில் அழைக்கும் போது தமிழில் மரியாதை குறைவாகத்தான் தோன்றும்,அந்த பெண் மரியாதை தெரிந்தவள்.
மேலும் நான் சொன்னேன்

காதல் திருமணமோ அல்லது சாதிவிட்டு வேற்று சாதி பெண்ணைப் பார்த்து மணம் புரிவதை என் மனம் ஏற்க மறுக்கின்றது,அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை என்றேன்.நாங்கள் தங்கியிருந்த இரண்டு இரவுகளிலும் அந்த பெண்ணின் தாய்தந்தையர் பயன் படுத்தும் படுக்கை அறையை தந்தார்கள்.அந்த படுக்கை அறையின் விதானத்தில் ஒரு பெரிய கண்ணாடி பதித்து இருந்தார்கள். நாம் மல்லாந்து படுக்கும் போது இருவரின் உருவங்களும் தெரியும்.நண்பரும் மணமாகாதவர் அவர் சொன்னார், ‘படுக்கை அறை அமைப்பது என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என சொன்னார்.
நானும் வீடு கட்டும் போது இது போன்று படுக்கை அறை அமைக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.ஆனால் ஏனோ அது நிறைவேறாமல் போய்விட்டது.
சரி, பெங்களூர் வந்ததிற்கு அடையாளமாக இந்திய அரசின் தயாரிப்பான ஒரு அழகான ‘hmt’ watch ரூ.800.00 விலை கொடுத்து வாங்கிக் கொண்டேன் .
இரண்டு நாள் கழித்து பள்ளிப்பட்டிற்கு வந்ததும்,நான் வாங்கி அடுக்கி வைத்த மீதமுள்ள நெல் மூட்டைகளை திருத்தணி கிடங்கிற்கு அனுப்ப உத்தரவு கிடைக்கப் பெற்றேன். லாரிகளைப் பிடித்து அத்துணை மூட்டைகளையும் ஒப்படைத்துவிட்டு மே 20 ந்தேதி காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அலுவலகம் சென்றேன்.
                
                62-பணி நீக்கம் செய்யப்பட்டேன்

ஏப்ரல் மாத சம்பளம் வாங்க போனேன்,அப்பொழுது அங்கே உள்ள உதவியாளர்,
உங்களை ஏப்ரல் 30ந் தேதியே oust செய்து விட்டார்கள் என்றனர். எனக்கு கோவம் உச்சத்திற்கு போய்விட்டது.
 ‘எனக்கு ஏன் அப்போதே தெரிவிக்க வில்லை?’
என்னை பணி நீக்கம் செய்த உத்தரவினை எனக்கு ஏன் வழங்க வில்லை?
என்னை எதற்காக பணி நீக்கம் செய்தீர்கள்?
பணி நீக்கம் செய்துவிட்டு 20 நட்கள் வேலை வாங்கியுள்ளீர்கள்,இது எப்படி நியாயம்? அந்த 20 நாட்களுக்கும் சம்பளம் கொடுங்கள்! என்றேன்.

என் கோரிக்கையை யாரும் செவி சாய்க்க வில்லை,அப்பொழுது மண்டல மேலாளரும் இருக்கையில் இல்லை.ஏப்ரல் மாத சம்பளத்தை வாங்கிக்கொண்டு,நான் விருட்டென்று நான் தங்கியுள்ள காஞ்சிபுரம் பல்லவன் லாட்ஜிற்கு சென்று விட்டேன்.ஆசிரியர் வேலையைத்தான் தேட வேண்டும் என என் மனம் அங்கலாயித்தது. அடுத்த நாள் காலை மண்டல மேலாளர், தன் அலுவலகம் வந்ததும்,நான் சத்தம் போட்டதை அலுவலர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.அப்பொழுது ம.மே,
அவனை oust செஞ்சதை ஏன்யா அவனிடம் சொன்னீங்க? இப்ப வேலை செய்யறதுக்கே ஆளில்லையே? அவன் எங்கிருந்தாலும் தேடி அழைத்துக் கொண்டு வாருங்கள்என துணை நிலை அதிகாரிகளிடம் சத்தம் போட்டுள்ளார். என்னைத் தேடிவந்த துணை மண்டல மேலாளர் இதை தெரிவித்தார்.

து.ம.மேலாளர், ‘சார்,வாங்க... அய்யா,உங்களை கையோடு அழைத்து வரச் சொன்னார்.
நான் வரமாட்டேன் சார்,இரவு பகலாக வேலை வாங்கிவிட்டு,நன்றி கெட்ட மாதிரி என்னை பணி நீக்கம் செய்து விட்டீர்கள் (கையில் B.Ed பட்டம் உள்ளதால் ஒரு தன்னம்பிக்கை)
து.ம மேலாளர், ‘சார்,அவர் ஒரு டெபுட்டி கலக்டர் அவர் நினைச்சா உங்களுக்கு அந்த இடைப்பட்ட காலத்தை பணிக்காலமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கலாம்..... அரசாங்கத்தின் உத்தரவின் படி செயல் பட்டுள்ளார்,அவர் மாற்று ஏற்பாடு செய்து உங்களுக்கு தொடர்ந்து வேலை அளிக்க நினைக்கிறார், வாங்க சார்,பெரிய அலுவலரையெல்லாம் நாம் விரோதித்துக் கொள்வது நால்லா இருக்காது சார்,வாங்க,பிளீஸ்..,ஜீப்பில் ஏறுங்க,உங்களை இப்பவே அழைத்துவர எனக்கு அவர் இட்ட கட்டளை,வாங்க போகலாம்,எல்லாத்தையும் நான் சரி பண்ணித் தரேன்.
என் மனம் இறங்கியது.ஜீப்பில் ஏறிக் கொண்டேன்.காலை 10 மணி இருக்கும்.ஜீப், நேரா காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றது.அங்கே மண்டல மேலாளர் நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும்,

வாங்க,நீங்கெல்லாம்...,உங்களுக்கு துரை என்று நினைப்பு,ஏய்யா..? ஊஸ்ட் பண்ணிட்டா அதோடு வேலை இல்லன்னு போய்ட்றதா? மீண்டும் வேலை வேணும் என்று கேட்க கூடாதா? வேலையில்லா பட்டதாரிகள் என்று சொல்லி உங்களுக் கெல்லாம் வேலை போட்டுக் கொடுத்தா,நீங்க இப்படித்தான் நடந்துக்குவீங்களா?’
                   
                63-மீண்டும் பணி
நான், ‘சார்,என்னை oust செய்து விட்டு 15 நாட்கள் வேலை வாங்கியுள்ளீர்கள்,அதற்கு சம்பளம் தர முடியாது என அலுவலகத்தில் சொல்லி விட்டார்கள்,நான் என்ன செய்ய முடியும்?’
சரி,எல்லாத்தையும் சரி பண்ணித்தரேன்,நீ போய் இங்கு வேலையைப் பார்மேலும் அருகில் உள்ள அதிகாரிகளைப் பார்த்து,
இங்க யாருய்யா,இந்த மையத்துக்கு அதிகாரி,இவனிடம் பில் புக்,வேண்டிய பணமெல்லாம் கொடுங்க, இங்கு கூடியிருக்கும் விவசாயிகளை இவன்,clear பண்ணட்டும்
சொல்லிவிட்டு என்னைப் பார்த்த மண்டல மேலாளர். ‘சாயங்காலம் என்னை வந்து பார்என சொல்லிவிட்டு அவர் காரில் அவர்  போய்விட்டார்.
என்னுடைய பணியை முடித்துவிட்டு,மாலை 6 மணி அளவில் மண்டல மேலாளரை அவருடைய அறையில் சந்தித்தேன்.

எல்லாவற்றையும் கிளியர் பண்ணிட்டியா?’
முடித்துவிட்டேன், சார்
உன்னைப்பத்தி சொன்னாங்யா,நமது நிறுவனத்திற்கு 64 மூட்டைகளை அதிகப்படியா கொடுத்தியாமே !சொல்லிவிட்டு, அவர் மேலும் சொன்னார்,
உன்னைப் போன்றவர்கள் சேவை நமது நிறுவனத்துக்கு தேவைய்யா! அரசாங்கம் உங்களை மட்டுமல்ல உங்களுக்கு பின் பணிக்கு சேர்ந்த அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.இப்ப இருக்கிற வேலையை யார் செய்வாங்க? அதற்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன்.’ 

 மேலும் அவர்,
நீ, சொன்னதை எல்லாம் செஞ்சிட்டேன்,இரண்டு நாள் பிரேக் கொடுத் திருக்கிறேன்,நீ தொடர்ந்து வேலை செய்யலாம், பின்னாளில்  அதை regularise செய்துக்கலாம்என்று சொன்னார், மேலும் அவர், ‘லோக்கல்ல கொஞ்ச நாளைக்கு வேலை செய்என்றார்.
இரண்டு நாள் காஞ்புரம் வட்டாட்சியர் வளாகத்தில் பணி செய்தபின் என்னை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 1000 கால் மண்டபத்தில் நெல் மூட்டைகளை வாங்கி அங்கேயே அடுக்க  வேண்டும் என்பது உத்தரவு.கோயிலின் முகப்பில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

ஒரு வாரம் தான் வேலை இருந்தது.மற்ற நாளில் அந்த மண்டபத்தின் திண்ணையில் மல்லாந்து படுத்துக் கொண்டு அங்கே செதுக்கப் பட்டிருக்கும் புடைப்புச் சித்திரங்களை ரசித்துக்  கொண்டிருப்பேன்.
அதில் நான் கண்ட ஒரு புடைப்புச் சித்திரத்தை பற்றி இங்கே சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன். ‘மண்டபத்தின் விதானத்தில் ஒரு பெண் நிர்வாணமாக உட்கார்ந்த நிலையில் ஒரு நாய், அவளின் இனப்பெருக்க உறுப்பை நக்குவது போல் இருக்கும். நான் கண்ட இந்த காட்சி எனக்கு அதிர்ச்சியை அளித்தது!’

கோயில் என்றால் புனிதம் அல்லவா?புனிதம் என்றால் பெண்ணின் நிர்வாண சித்ரமும் புனிதமா?புனிதம் என்றால் தெய்வீகம் தானே?பெண்ணின் நிர்வாணச்  சித்ரமும் தெய்வீகமா? அதுவும் அதை நாய் நக்க வேண்டுமா?
இன்று வரை இதற்கு எனக்கு விடை கிடைக்க வில்லை.!சரி, அது இருக்கட்டும்.
அன்று,எனக்கு ஒரு தகவல் தரப்பட்டது,அதாவது அன்றய தினம்,கோயிலுக்கு தமிழ் நாட்டின் உணவுத் துறை செயலாளர் வருவதாகவும்,அந்நேரம் நான் மய்யத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று.நான் எனது பணி நேரமான மாலை 6 வரை இருந்தேன்,அதன் பின் நான் தங்கியிருந்த லாட்ஜிற்கு சென்று விட்டேன்.
அடுத்த நாள் நான் வழக்கம் போல் கோயிலின் கொள்முதல் நிலையத்திற்கு சென்றேன்,மண்டல அலுவலகத்திலிருந்து ஒரு ஊழியரின் மூலமாக எனக்கு அழைப்பு வந்தது. நான் மண்டல மேலாளரை சந்தித்தேன்,
          
             64-பொதட்டூர் பேட்டைக்கு பணிமாற்றம்

கோலியாடற பசங்களுக்கெல்லாம் வேலை கொடுத்த இப்படித்தான் இருக்கும்,ஏய்யா,ஒரு பெரிய அதிகாரி மையத்தை பார்வையிட வர்ரார் என்றால் நேரம் கொஞ்சம் முன்னபின்னதான் ஆகும்,அசிங்கம் பண்ணிட்டியே யா!, சரி நீ,போ உன்னை பொதட்டூர் பேட்டை போட்டிருக்கேன், போய் வேலையைப் பார்அதிகாரிக்கு மட்டுமல்ல எனக்கும் தலை குனிவுதான். உத்தரவை பெற்றுக் கொண்டு,பொதட்டூர் பேட்டைக்கு சென்றேன்.
பொதட்டூர் பேட்டைக்கு சென்று மய்யத்தை பார்வை இட்டு விட்டு திருத்தணி திரும்பி விட்டேன்.அப்பொழுது திருத்தணி கிடங்கு ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது.அந்த கிடங்கின் மேல் தளத்தில் ஒரு அறை இருந்தது,அதில் நண்பர்களுடன் தங்கிக் கொண்டு தினமும் பொதட்டூர் பேட்டைக்கு பேருந்தில் சென்று வந்தேன். சில நாட்களில் அந்த மண்டல மேலாளர்,பணி மாறுதல் பெற்று போய் விட்டார்.இந்த சேதியை கேள்விப்பட்டேன்,என் மனம் வேதனை அடைந்தது,
          
              65-கனகம்மா சத்திரம் பணி மாற்றம்

என்னைப் புரிந்த ஒரு அதிகாரி போய் விட்டாரே! (அவர் பெயர் திரு. லட்சுமணன், வேலூர்காரர்), அங்கே இரண்டு மாதம் தான் வேலை அடுத்து என்னை கனகம்மாசத்திரம் மையத்தை பொறுப்பேற்கச் சொன்னார்கள்.
அங்கிருந்து கொண்டு திருவாலங்காடு மையத்தையும் கவனிக்க வேண்டும் என்பது உத்தரவு.அதுவரை திருத்தணியில் தங்கியிருந்தேன்.

திருத்தணியில் தங்கிருந்த காலத்தில்,சென்னையில் உள்ள ஆனந்த தியேட்டரில் உலகப் புகழ் பெற்ற புருஸ்லிநடித்த, ‘Enter the Dragan’ படம் ஓடிக் கொண்டிருந்தது.அதை பார்க்க வேண்டும் எனும் ஆவல் அதிகரித்து விட்டது.நானும் நண்பர் தசரதராமனும் பேருந்து பிடித்து இரவு நேர காட்சிக்கு வந்து விட்டோம்.அது 70mm திரை கொண்டது.
மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள  கஜேந்திர விலாஸ்(தர்கா  அருகே) ஓட்டலுக்கு நடந்தே வந்தோம்.அங்கே சுடசுட இட்லிக்கு எரால் தொக்கு சாப்பிட்டு ,நடந்தே பூக்கடை பேருந்து நிலையத்திற்கு இரவு 3 மணிக்கு வந்து சேர்ந்தோம்.அங்கே பேருந்து காலை 4 மணிக்கு அதுவரை பேருந்து நிலைய இருக்கையில் உட்கார்ந்த படியே தூங்கி விட்டு திருத்தணி பேருந்து பிடித்து மறுநாள் பணிக்கு சென்றோம்.கனகம்மாசத்திரம் திருத்தணி பேருந்து நிலையத்தில் மாலை 6 மணிக்கு என் அலுவலகத்தை மூடிவிட்டு வந்து பேருந்துக்காக நின்று கொண்டிருப்பேன்.என்னை வழி யனுப்ப 

‘தினமும்’ பேருந்து நிலையத்தின் எதிரே உரக்கடை வைத்திருக்கும் ஒரு செட்டியாரின் பெண் என்னை வழியனுப்ப வந்து நிர்ப்பாள்.
‘அவள் செக்கச் செவேலென்று மூக்கும் முழியுமாக,குண்டும் குழியுமாக வசீகரத் தோற்றத்துடன்’ என்னை வழியனுப்பிய காட்சி இன்றும் என் மனக் கண் முன் நிழலாடுகிறது.
கனகம்மாசத்திரம் மய்யத்திலிருந்து திருவாலங்காடு மய்யத்தை கூடுதல் பொறுப்பு வகிக்க உத்தரவிடப்பட்டது.இரண்டு மய்யத்திலிருந்த நெல் மூட்டைகளை திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு அனுப்பிவிட்டேன் கனகம்மாசத்திரம் மையத்தை மூடி விட்டார்கள்.
         
               66- குன்றத்தூர் பணி மாற்றம்

1976-நவம்பர் மற்றும் டிசம்பரில் குன்றத்தூர் மையத்திற்கு மாற்றினார்கள்.அந்த மையத்திற்கு எனக்கு உதவியளர் இல்லை.அப்பொழுதெல்லாம் உள்ளூரில் sslc படித்த இளைஞர்களை நாங்களே பணியில் அமர்த்திக் கொள்ளலாம்,அவர்களுக்கு நிர்வாகம், பணி நிரந்தரம் செய்து கொடுக்கும்.
இதை தெரிந்து வைத்துக் கொண்டிருந்த பக்கத்து கட்டிடத்து ஒரு விவசாய அலுவலர் ஒரு உதவியாளரை பணியில் அமர்த்துமாரு வேண்டினார்.நானும் சரி என்று அவர் சொன்ன நபருக்கு வேலை கொடுத்து,அதை பற்றிய விவரங்களை காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் ஒரு அறிக்கையாக அனுப்பினேன்.இரண்டு மாதம் சம்பளமும் வாங்கினான்,அவன் பணியில் நேர்மை இல்லை என உணர்ந்து அவனை பணி நீக்கம் செய்து மண்டல
அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பினேன்,அவனை நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.அந்த உதவியாளர் விவசாய அலுவலரிடம் முறையிட்டான். பக்கத்து கட்டிடத்தில் இருந்த விவசாய அலுவலருக்கு கோவம் வந்து விட்டது.

ஏங்க ஒருவனுக்கு அரசு வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்ட்டம்,தெரிந்திருந்தும் அவன் செய்த தப்பை மன்னித்து அல்லது எச்சரித்து பணியில் தொடர்ந்து அனுமதித்து இருக்கலாம். விளையட்டுத் தனமாக செய்து விட்டீர்களே? இது நியாயமா?

அது சரி, என் அலுவலகத்தில் என்னிடம் வேலை செய்யும் ஒரு உதவியாளர் பக்கத்து கட்டிட அலுவலர் சொல்வதை கேட்டு பணி செய்தால் நான் எப்படி அதை அனுமதிக்க முடியும்? என மனதுக்குள் நானே கேட்டுக் கொண்டேன்,அவர் கேட்டதற்கு நான் மவுனமானேன்.   
அந்த ஆண்டு இறுதியில் குன்றத்தூர் மையத்தில் இருந்த நெல் மூட்டைகளை திம்மாவரம் அனுப்பி விட்டேன். குன்றத்தூர் மையத்தை மூடிவிட்டார்கள்.காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் வரச்சொல்லி உத்தரவு இடப்பட்டது. 

No comments: