Tuesday, November 19, 2019

இ.பி 13


                    
              

                             50-பட்டம் பெற்றேன்

இந்நிலையில் நான் பட்டம் பெற பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வரவேண்டி அழைப்பு வந்தது.
பட்டம் வாங்க ஒரு வெள்ளை சட்டை இல்லை,அண்ணாவிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு அண்ணாசாலை, அங்கே அண்ணா சிலை எதிரே ஒரு ‘ஆயத்த ஆடை துணிக்கடை’  தயார் நிலையில் விற்கும் ஒரு வெள்ளை சட்டை 75 ரூபாய் சொன்னான்.அதை வாங்கி போட்டுக் கொண்டேன் திருவல்லிக்கேணியில் ஒரு தையல் கடையில் வாடகைக்கு பட்டமளிப்பு கவுனை வாங்கி மாட்டிக் கொண்டேன்,எல்லரும் அதைத்தான் செய்தார்கள். காலுக்கு  ஷூமாட்ட வேண்டும் என்றார்கள்.நான் எப்படி ஷூ வாங்க முடியும்?வழக்கமா போடும் ரப்பர் செருப்பையே மாட்டிக் கொண்டேன்
அப்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு நூருல் ஆசன் எங்களுக்கு பட்டம் வழங்கினார்.சென்னை பல்கலை கழகத்தின் கடைசி பட்டமளிப்பு விழாவும் அதுதான்.அதன் பிறகு அந்தந்த கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் பழக்கம் வந்தது.இன்று வரை இது தான் நிலைமை.
பட்டம் வாங்கியாச்சு ,வேலைதான் எங்கு இருக்கிறது என தெரியவில்லை.விளம்பரங்கள் மூலம் விண்ணப்பித்தது மூலம்,வேலை கேட்ட இடத்தில்,
நான் தமிழ் மீடியம் படித்து பட்டம் பெற்றேன்,எனக்கு  வேலை வாய்ப்பில் முன்னுரிமைத் தரவேண்டும்என்று கோரிக்கை வைப்பேன், ஆனால் அப்படி ஒன்றும் தமிழ் மீடியம் படித்ததாக பட்டயத்தில் குறிப்பிடப்பட வில்லையேஎன்றனர்
          
                       51-காவல் துறை உதவி ஆய்வாளர்                                  

1973-ல் காவல் துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என தினசரியில் படித்தேன். விண்ணப்பித்தேன். நேர்காணல் தேதி குறிப்பிட்டு, அன்றய தினம் என்னன்ன  தேர்வில் எத்தனை *’(star) கள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்கள்.
மொத்தம் 5 விதமான போட்டிகள்.
1-100 மீட்டர் ஓட்ட பந்தயம் 11 செகண்டில் ஓட வேண்டும்.முதலில் வருபவருக்கு 5 *
2-15 pull-ups 5 *
3- 800 மீட்டர் 5*
4-10,000 மீட்டர்5*
5- 30 அடி உயரத்தில் கயிறு கட்டி ஏறுதல்5*
மொத்தத்தில் குறைந்த  பட்சம் 15 *கள் எடுத்தால் போதும்.

நான் 100 மீட்டரில் 5* கள்,புல்லப்பில் 5*கள்,கயிறு ஏறுதலில் 5*கள் எடுத்தேன்.
இந்த கயிறு ஏறும் பயிற்சிக்கு நான் எங்கள் வீட்டு 60 அடி நாவல் மரத்தில்  30 அடி உயர கிளையில் தாம்பு கயிறு கட்டி தினமும் பழகினேன்.ஆனால் சென்ட்தாமசு விளையாட்டுத்  திடலில் கட்டப்பட்டதோ நைலான் கயிறு.கயிற்றை பிடித்தால் வழுக்குகிறது.
என் மனதில் வயிராக்கியம் கொண்டு மிகுந்த மன பலத்துடன் உடல் பலத்தை சேர்த்து,உச்சத்துக்கு ஏறினேன்,இறங்கும் போது கை விரல்கள் பலமிழந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.வலி பொறுத்துக் கொண்டு,இறங்கி  மறைவாக போய் அழுதுவிட்டேன்.
ஆனால்...... 5*கள்  கிடைத்த மகிழ்ச்சியில் வலி மறந்தேன்.
எனக்கு காவல் உதவி ஆய்வாளர் பதவி கிடைத்து விடும் எனும் நம்பிக்கை இருந்தது,ஆனால் எனக்கு காவல் துறையில் பணி புரிய விருப்பம் இல்லை,
காரணம் லஞ்சம் வாங்க வேண்டும்,லஞ்சம் கொடுக்க வேண்டும்-இது என் கொள்கைக்கு மாறானது.
எங்க மாமவுக்கு(பெரிய அக்கா கணவர்) உள்ளூர் அரசியல் தலைவர்களோடு நல்ல செல்வாக்கு உண்டு.என்னை அழைத்தார், ‘நாம் போய் திருவேற்காடு ஐயப்ப சாமிகளை போய் பார்க்கலாம் வா, அவருக்கும் ஐ.ஜி.அருளுக்கும் நல்ல நட்பு உண்டு,சாமி சொன்னால் உனக்கு காவல் உதவியாளர் வேலை உறுதி என்றார்.
பூந்தமல்லியில் ஒரு காங்கிரஸ் தலைவரின் உதவியோடு அந்த ஐயப்ப சாமியைப் போய்ப் பார்த்தோம்.என் மாமா, ‘சாமியார் உன்னை அழைப்பார்,அழைத்த உடன் அவர் எதிரில் போய் நிக்காதே,காலில் விழு,உன்னை ஆசிர்வதிப்பார்.’ என்றார் .எங்க மாமா சொன்னது போல் நான் செய்தேன்.

என்னிடம் விவரங்களை பெற்று,உடனே ஐ.ஜி.அருளிடம் சாமியார் பேசினார்.எங்களைப் பார்த்த சாமியார், ‘அடுத்த வாரம் ரூ.2 ஆயிரம் கொண்டு வாருங்கள்என்றார்.
ஆரம்பமே லஞ்சமா...? ,நான் வர வில்லை... போ..மாமா
எங்க மாமா கடவுள் மறுப்பாளர்,ஆனால் மாமா விடம் கேட்டேன், ‘இதெல்லாம் எப்படி மாமா?’
நமக்கு காரியம் ஆகணும்னா,கழுதையா இருந்தாலும் அதன் காலை பிடிக்கணுன்டா’ .........! ..?
அதன் பிறகு,ஸ்பென்சரில், ‘பார்க் டேவிஸ் பார்மா சூடிகல்சுக்காக எழுத்து தேர்வு,அதே கட்டிடத்தில், இன்னொரு நாள் எல்.ஐ.சி களப்பணியாளருக்கு நேர்முக தேர்வு, கிண்டியில் உள்ள தமிழ் நாடு விவசாய கழகத்தில் (தாய்) தர ஆய்வாளர் பதவி போன்ற இன்டர்வியுக்கு சென்றேன்.அப்போது நான்,

நான் தமிழ்மீடியம் படித்து பட்டம் பெற்றவன் அய்யா!        
‘நீங்கள் தமிழ் மீடியம் படித்தீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?’ என வினவினர்.நான் வாங்கிய பட்டத்தில் ,
இவர் தமிழ் மீடியம் படித்தவர்என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தமிழ் மீடியம் படித்தால் உடனே வேலை உண்டு என அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி அறிவித்தார். அதை ஏன் பட்டயத்தில் குறிப்பிடப்படவில்லை?, என நான் திரு கருணாநிதிக்கு மாதம் ஒரு பதிவு தபால் அனுப்பிக் கொண்டே இருப்பேன். கலைஞர் சொல்வார்,ஆனால் அதை நிஜப்படுத்த எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்,என்பதற்கு இது ஒரு ஆதாரம்.இதற்கிடையே B.Ed பற்றிய விளம்பரம் கண்டேன். புதுக்கோட்டை கல்வியல் கல்லூரிக்கு நேர்காணல் வந்தது.
                     
                          52- மெஸ்ட்டோனியன்

புதுக்கோட்டை சென்றேன்.நேர்காணலில் எனக்கு தோல்வி.சோர்ந்திருந்த வேளையில், சென்னை, ராயப்பேட்டை, ‘மெஸ்ட்டன் கல்வியியல் கல்லூரிக்கு விளம்பரம் கண்டு B.Ed விண்ணப்பித்தேன்.அந்நேரத்தில் எனது 6,7,8 வகுப்பு ஆசிரியர் திரு கோபால் என்பவரை ஆரணியில் சந்திக்க நேர்ந்தது.(இவர் ஒரு பார்ப்பனர்)
அவர் ஒரு உண்மையைச் சொன்னார், ‘இத பார்,திருவேங்கடம்,இந்த கல்லூரியில் சேரவேண்டும் எனில் நமது பள்ளி தலைமை ஆசிரியர், திரு.RS.ஜான். அவர்களை போய்ப் பார் அவர் சொன்னால் அந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றார்.

அந்த பள்ளியில் படித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.நான் பள்ளியின் முதல் நிலை மாணவன் என்றாலும் இப்பொழுது அவருக்கு என் நினைவு இருக்குமா சார்?’
இருக்காது, இருப்பினும் நீ உனது நண்பன் திரு கோபாலகிருஷ்ணனின் அப்பாவை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரைப் பார்என்றார்.

எனது நண்பனின் அப்பா,(திரு.கோவிந்தராஜ முதலியார்) எங்கள் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவர். பக்கத்து ஊர்க்காரர்.அவர் முதலியார் .எப்பொழுதும் எங்களை (நான் சார்ந்த இனத்தை) கிண்டல் பண்ணிக் கொண்டே இருப்பார்.
காரணம் நான் சார்ந்த இன மக்களில் யாரும் படித்தவர்களில்லை, படிக்கவும் மாட்டார்கள்,யாராவது படித்திருந்தாலும் அவர்களை மதிக்கவும் தெரியாது, பணத்திலும் முன்னேறினாலும்,
‘நேற்றுவரை நம்மோடு கழனியில் மண்ணை பிசைந்து கொண்டிருந்தான்,இப்பொழுது இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பணம் வந்தது?’என அய்யம் கொள்வார்கள், அவர்களை முன்னேற விடமாட்டார்கள்.அவர்களும் முன்னேற முயற்சிக்க மாட்டார்கள். பணத்தை அறிவு பூர்வமா செலவு செய்ய மாட்டார்கள்.

கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்வது, மொட்டை போடுவது,பொங்கல் வைத்து கடா வெட்டுவது என ஊர்கூட்டி உறவை கூட்டி மது அருந்தி,தான் மது அருந்தியிருப்பதை விகாரமான பேச்சாலும் செயலாலும் வெளிப் படுத்துவார்கள். சேர்த்த பணத்தை செலவழிக்காமல் தூக்கம் வராத இனம்.
நண்டு இனம்டா, உங்க இனம் என்பதை நாசுக்கா கிண்டல் செய்வார்,இருப்பினும் நாங்கள் அவரது கிண்டலை விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். இன்றளவும் அவர் சொன்னதை நினைத்துப் பார்ப்பேன் , ‘அவர் சொன்னது அவ்வளவும் நிஜம் ..தான்
நான் அவரை சந்திக்க சென்றேன், ‘வா.!,திருவேங்கடம்!, உன் மீது எனக்கு ஒரு பொறாமை மட்டுமல்லா என் பையனை விட நீ, நன்கு படிப்பதை நான் கேட்டறிந்தேன்.எனக்கு ரொம்ப சந்தோஷம்,நான் என்ன செய்யணும் சொல்லு!?மாமா,!

 (அப்படித்தான் அழைப்போம்,அது கிராமத்து வழக்கம்)
எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது
சொல்,என்ன செய்யணும்?’
நான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்குமா என்பது சந்தேகமே,
இருப்பினும் ஒரு ஆசிரியர் பயிற்சி பட்டம்  இருந்தால், தனியார் பள்ளியிலாவது ஆசிரியர் வேலை வாங்கலாம்,எனவே நான் B.Ed பயிற்சிக்கு சேர நீங்கள் தான் உதவி பண்ண வேண்டும்என்றேன்.
அதற்கு நான் என்ன செய்ய முடியும்?’
நமது பள்ளி தலைமை ஆசிரியர் தங்களுக்கு நல்ல பழக்கம் என்று கேள்வி பட்டேன்,நீங்கள் சொன்னால்,அவர் சிபாரிசின் பேரில் மெஸ்ட்டனில்எனக்கு ஒரு சீட் கிடைக்கும்
அப்படியா?’
ஆமாம்
இதை யார் சொன்னது உனக்கு?’ மேலும் அவர்,
அவரைப் பார்ப்பதில் எனக்கு ஒன்றும் கஷ்ட்டம் இல்லை யே, வா ,இப்பவே போலாம்என்னை அழைத்துக் கொண்டு போனார்.என்னை வெளியே நிற்க வைத்து விட்டு அவர் மட்டும் போனார்,
சிறிது நேரம் கழித்து என்னை அழைத்தார்.தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்ததும், ‘இவனைத் தெரியுமே,’என சொல்லிவிட்டு என் எதிரிலேயே ராயப்பேட்டையில் உள்ள,அவருடைய நண்பரான அந்த கல்லூரி துணை முதல்வரிடம்(திரு லையோனல்) தொலைப் பேசியில் பேசினார்.தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து, ‘நீ நாளைக்கே போ தம்பி,தேவையான ரெக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு போ,நான் சொல்லி யிருக்கிறேன்,நீ ‘திரு.லையோனல்’ அவர்களைப் பார்.என்றார்.

தலைமை ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு வந்து விட்டேம்.
சென்னை ராயப்பேட்டையில் இயங்கும்,மெஸ்ட்டன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன்.அது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது கிறித்துவர்களுக்காக,ஆசிரியர் தொழில் செய்து கொண்டு மதம் பரப்ப பயன்பாட்டுக்கு     உருவாக்கப்பட்ட கல்லூரி, அங்கே  படித்தவர்களுக்கு மெஸ்ட்டோனியன்என்று பெயர். இருப்பினும்,
கிறித்தவர்கள் அல்லாதவர்களுக்கு 20 சதவிகிதம் மாணவர்களை சேர்ப்பார்கள்(80+20+=100)
வீட்டில் அண்ணா விடம் தெரிவித்தேன், ‘சரி.. படி,பூக்கடையில் நாம் பூ போடும் அண்ணாச்சி கடையில் உனக்கு தேவையான பணத்தை வாங்கிக் கொள்,நான் அண்ணாச்சியிடம் சொல்கிறேன்என்றார்.
அப்பொழுது தினமும் ரூ.200 அல்லது,250 க்கு பூ வின் மூலம் வருவாய் கிடைக்கும்.அப்பொழுது ஒரு சவரனே ரூ250.00 தான் என்றால் பணத்தின் மதிப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
கல்லூரி விடுதியில் தங்கி படிப்பது என முடிவாகிவிட்டது.ஒரு அறைக்கு மூன்று நபர்.நானும் எனது அறை நண்பர் திரு.ரங்கபாஷ்யம் அவர்களும் இரவு உணவு உண்டபின், ராயபேட்டையிலிருந்து நடந்தே சாந்தி,தேவி தியேட்டர்களுக்கு செல்வோம்.படம் நல்லா இல்லை எனில் அங்கிருந்து நடந்து தேனாம்பேட்டை சபையர் தியேட்டர் காம்ப்லெக்சுக்கு நடந்தே செல்வோம்.அது அப்போது 70 mm தியேட்டர்.அதில்  உலகப்புகழ் பெற்ற கிளியோபட்ரா படத்தை பார்த்தோம் .
அன்றைய தினம் தன் சித்தியுடன் செல்வி ஜெயலலிதா படம் பார்க்க வந்திருந்தார்.நெருக்கமாக‍ அவரை  கண்டதில் எங்களுக்கு  சந்தோஷம்.இப்பொழுது அந்த தியேட்டர் இல்லை.

நான் ராயப்பேட்டை மெஸ்ட்டன் கல்வியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது,எனக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தது,வைதிலம்பேடு மாமா (சின்ன அக்காவின் கணவர்)இறந்து விட்டார்.அவரை சென்னை பொது மருத்துவ மனையில் பிணவரையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தகவல்.
எங்க மாமா ஒரு முழுநேர குடிகாரர்.அவர் தொல்லை தாங்க முடியாமல் எங்க அக்கா அழுது கொண்டே வீட்டுக்கு வருவார்.எங்க அம்மாவும் சேர்ந்து அழுவார்கள்.இதனால் எனக்கு குடிகாரர்களை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்.
இறந்து போன தன் கணவரைப் பார்த்து அழுது கொண்டிருந்த என் அக்காவைப் பார்த்து நான், ‘அந்த ஆள் ஒழிஞ்சான் விடுக்கா.எப்ப பார்த்தாலும் குடிச்சிப்பூட்டு உன்னை அடிச்சி துன்புருத்துவான் ,இனி அந்த தொல்லை இல்லைக்கா!

எங்க அக்கா, ‘டேய், அப்படி சொல்லாதடா,என்ன தான் வீட்டுக்காரன் கொடுமைக்காரனா ,இருந்தாலும் பூவுக்கும் பொட்டுக்கும் எங்கடா போவேன்?’என என்னைப் பார்த்து தேம்பி அழுவதைப் பார்த்து நானும் அழுவேன். தாம்பத்தியத்தின் தாக்கம் அறியாதவன் அல்லவா? எங்க மாமாவை நண்பர்களே திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக பின்னாளில் அறிந்து கொண்டேன்.
போஸ்ட்மார்ட்டம்அறிக்கை கேட்டு மருத்துவ கல்லாரி டீனுக்கு கடிதம் போட்டேன் பதிலே இல்லை. சரி,இறந்தவன் இறந்தான் அறிக்கை வாங்கி என்ன செய்யப்போறோம்? என எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
எங்கள் ஊரில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை ஒழிக்க போலீசுக்கு தகவல் கொடுத்து ஒழிப்பதில் நான்தான் காரணமாக இருந்தேன்.குடிப்பவர்களும் என் முன்னே வர மாட்டார்கள்.என்னைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள்.
53-வருமானத்தை நிறுத்தலாம், குடியை நிறுத்த முடியாது
ஆசிரியர் பயிற்சி (1974-75) முடித்து வீட்டுக்கு வந்தேன்.நானும் என் தம்பியும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்.

 நிறைய காசு வருவதால்தானே அண்ணா குடிக்கிறார். வருவாய்க்கு காரணமாக இருக்கும் பூந் தோட்டத்தை வெட்டிப் போட்டால் என்ன?’
அடுத்த நாள் அந்த முட்டாள் தனமான காரியத்தை செய்தோம். 1½ ஏக்கர் பூஞ் செடிகளை வெட்டி சாய்த்தோம். வருவாய் நின்று விட்டது.எங்கள் அண்ணன் குடிப்பதை நிறுத்தவே இல்லை.
எப்படி பணம் வருகிறது?’ என கேட்டோம்,  யாரவது வாங்கித்தரான்,நான் குடிக்கிறேன்.என்பார்.
மீண்டும் குடும்பத்தில் வறுமை!நான் சென்னையை சுற்றி இருக்கும் தனியார் பள்ளிகளில் வேலை கேட்டு அலைந்தேன்.எல்லாரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள், ‘வேலை காலி இல்லை!  எனக்கு சாப்பாட்டிற்கே வழியில்லை!.
என் தம்பி மேனாம்பேட்டில் இருக்கும் என் பங்காளி அக்காவீட்டிற்கு சென்று விட்டான்.அங்கே வேலை தேடி பிழைத்துக் கொள்ளலாம் என போய்விட்டான்.
நான் வீட்டில் இருப்பதே , ‘நான், ஒரு தேவையற்ற பொருள்எனும் நினைப்பு  எனக்குள் வந்து விட்டது!

எங்கள் வீட்டின் எதிரே உள்ள எங்கள் பெரியப்பா மகன் இருந்தார்(இவர் எங்களுக்கெல்லாம் பெரியவர்-இவரும் வறுமையில் வாழ்பவர்தான்) அவர் ஒரு நாள்,
டேய்,நான் சொல்லவதை கேட்பாயா?’ என்றார்.
சரி ,சொல்லண்ணா..!
நம்ம வீட்டின் எதிராகவும் சுற்றியும் 4 பெரிய நாவல் மரங்கள் இருக்கிறது,அதை விற்று விடு,ஒரு கணிசமான தொகை கிடைக்கும் அதை வைத்து எங்கேயாவது போய் பொழைச்சுக்கோ, போ! என்றார்
எனக்கு எப்பொழுதும் ஒரு சிந்தனை ஒன்று வரும், ‘எங்கேயாவது போய் நல்ல இடத்தில் ஒரு டீ க்கடை போட்டுக் கொள்ளலாம்’,சுயமாக பொழைக்க இதைவிட எனக்கு வேறு சிந்தனை எனக்கு இல்லை.
அந்த நாவல் மரங்கள் விற்றதில் ரூ.800.00 கி்டைத்தது. அதை ஆரணியில் இருக்கும் ஐஓபி வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கை உருவாக்கி அதில் போட்டேன்.அந்நாளில் அது மிகப் பெரிய தொகை.
தன்னம்பிக்கை வளர்த்த அந்த பணம் எண்ணங்களையும், கற்பனைகளையும்  நிஜமாக்கியது.  1975-நவம்பரில் எங்கம்மா நினைவுநாள் வந்தது.    

No comments: