Sunday, November 10, 2019

இ.பி-7


               26 -பள்ளி இறுதி படிப்பில் 3-பரிசுகள்

அந்த ஆண்டு பள்ளிக்கூட அளவில் 11-ம் வகுப்பில் மூன்று பாடப்பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றதற்கு அப்போதைய பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. நாகலிங்கம் அவர்கள் எனக்கு பரிசளித்தார்.பரிசுப்பெற்ற பொருளின் விவரம்-
1 சத்ய சோதனை (காந்தியின் சுய சரிதம்,)
2-ஒரு pilot pen,
3- ‘அண்ணாவின் சிறுகதை’ தொகுப்பு புத்தகம்.

என் வாழ் நாளில் நான் பெற்ற முதல் பரிசும் கடைசீ பரிசும் அது மட்டுமே, கல்வியில் முதன்மை பெற்றிருந்தும்,பாடம்  தொடர்பாக பின்னாளில் என்னால் எந்த பரிசும் பெற முடியாமல் போனதற்கு காரணம்,நான் எழுதுவதை நானே படிக்க முடியாதே!

பள்ளி இறுதி வகுப்பு முடிந்து விட்டது.நான் பரிசு பெற்ற விவரம் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்கும் தெரியாது,அப்படி அதைச்  சொன்னால் என்னவென்றே புரியாதே!அன்றிரவு வீட்டில் அனைவரும் அமர்ந்து ஆலோசிக்கின்றனர்.

எங்கள் அப்பா, ‘என்னால் இவனை தொடர்ந்து படிக்கவைக்க இயலாது.எனக்கு அந்த அளவுக்கு வருமானம் இல்லை,இவனை எதாவது வேலைக்கு சேர்த்து விடலாம்என்றார்.
எங்க அம்மா, ‘இவனால வெய்யில்ல(கழனியில்) வேலை செய்ய முடியாது, கம்பனி வேலைக்கு அனுப்பறதோ, அல்லது மேலும் படிக்கிறதோ எதாவது செய்யுங்கள்என்றார்.
என் பெரிய அண்ணா, ‘SSLC படித்தவர்களுக்கு இந்த காலத்தில் என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது?,நமக்கு நம் சொந்தங்களில் படித்தவர்கள் யார் இருக்கின்றார்கள்? அல்லது அரசாங்க அதிகாரிகளாக யார் உள்ளனர்? இப்போதைக்கு இவனை மேல் படிப்புக்கு அனுப்புவது தான் நல்லது’ என்றார்.
என் பெரிய அண்ணா,சின்ன அண்ணாவைப் பார்த்து கேட்கின்றார்,

‘நீ ,என்னடா சொல்ற?’
‘ஆங்..படிக்கட்டும்! நம் கழனி வேலையை நாம் மூன்று பேர் பார்த்துக் கொண்டால் போதும்,இவன் ஒருத்தனாவது நம் குடும்பத்தில் படிக்கட்டும்,என்ன செலவானாலும் பார்த்துக்கலாம்’ என்றார்.மேலும், 

நான் படிப்பது என முடிவாகிவிட்டது.
எங்கே போய் சேர்வது?
அருகில்  கல்லூரி, பொன்னேரியில் உள்ளது,20 கிமீ சென்று படிக்க வேண்டும்.பேருந்தில் செல்ல வேண்டுமானால் 5 கிமீ நடந்து சென்று ஆரணியில் பேருந்து பிடித்து பொன்னேரி செல்ல வேண்டும்.தினமும் போய்வர இரண்டு ரூபாய் வேண்டும்.(75 பைசா+75 பைசா +கைசெலவு 50 பைசா=2 ரூ) அப்போதைய குடும்ப சூழலில் தினமும் இரண்டு ரூபாய் தேட முடியாது.(இப்பொழுது ஆரணியிலிருந்து பொன்னேரி போய்வர 30 ரூபாய் ஆகும்-அப்போதைய 1.50ரூ.என்பது இப்போது 30ரூ.க்கு சமம்)

‘அது முடியாது! நீ சைக்கிளில் தான் செல்ல வேண்டும்’ என்று என் பெரிய அண்ணா தீர்மானித்து விட்டார்.விவசாயத்திற்கு பணத்தை திரட்டுவது போன்ற வேலைகளை என் பெரிய அண்ணா தான் கவனித்து வந்தார்.

ஒரு புதிய சைக்கிளை வாங்க அப்போது முடியாது,பழைய சைக்கிள் வாங்க குறைந்த பட்சம் ரூ 200.00 வேண்டும்.என் பெரிய அண்ணா யாரிடமோ சென்று 60 ரூபாய்க்கு ஒரு சைக்கிளை அடமானம் போட்டு வந்தார்.அந்த சைக்கிளுக்கு பல் சக்கரத்தை இணைக்கும் bottom shell ஓட்டை, அதை பத்தவைத்தாலும் ஒட்டாது.புதியதாக வாங்கி இணைக்கவும் முடியாது. காரணம் இது அடமானம் போடப்பட்து,உரியவர் வந்து கேட்டால் தந்துவிட வேண்டும். 

அந்நாளில்  கலைக் கல்லூரிகளில் ,ONE YEAR P.U.C,+3 YEAR DEGREE COURSE நடைமுறையில் இருந்தது.முதல் நாள் பென்னேரி கல்லூரிக்கு  பேருந்தில் சென்று p.u.c-ல் சேர மனு போட்டேன். திரும்பி பேருந்து பிடித்து ஆரணி பேருந்து நிலையத்தில் இறங்கினேன்.அப்போது ஜிஜி அய்யர்(ஜி.கோபாலகிருஷ்ண அய்யர்) என்பவர்

எனக்கு வரலாற்று ஆசிரியராக இருந்தவர்.என்னைப் பார்த்தார்.நான் வணக்கம் வைத்தேன்.(இவர் அந்நாளில் BABL படித்தவர்.வக்கில் வேலை தொடர மனமில்லாமல் ஆசிரியர் தொழிலுக்கு வந்தவர்.மாணவர்களுக்கு சுற்றுச் சூழலை புரியவைக்க சிறு சிறு கதைகளை சொல்லி புரியவைப்பார்.மனித நேயமிக்கவர். எந்த மாணவனையும் பிரம்பால் அடிக்க மாட்டார்.
கேள்விக்கு சரியா பதிலளிக்காத மாணவனை திட்டி தீர்த்துவிடுவார்,

சனியனே எங்கையாவது மாடு மேய்க்க போக வேண்டியதுதானே என் உயிரை ஏண்டா எடுக்க வர்ரீங்க?’ (அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் பயிலும் மாணவர்கள் உண்மையில் மாடு மேய்க்கும் வெய்யிலாளி இனத்தைச் சார்ந்தவர்களே) என்பார்.
மேலும் பக்கத்தில் ஒரு மாணவன்,இன்னொரு மாணவனுக்கு உட்கார இடம் தராத மாணவனைப் பார்த்து, 

‘ஏண்டா..?.உன் வீட்டுக்கு வந்தா உட்கார திண்ணை இருக்காடா?....இங்க வந்தா மட்டும் அடுத்தவனுக்கு உட்கார இடம் தர மாட்டேங்கிற...?’ என்பார்.
என்னை உற்று நோக்கிய அய்யர், அவரைப் பார்த்து வணக்கம் வைத்தேன்.

எங்க போயிட்டு வர்ர?’
பொன்னேரி காலேஜ்ல அப்ளிகேஷன் போட்டுட்டு வர்ரேன்,சார்
எந்த குரூப் எடுத்த?’ நான் படித்தது எலக்கடிவ் ஹிஸ்ட்ரி,அதனால பி.ஏ வில் சேரலாம் என்று மனு போட்டேன்
உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?,போயும் போயும் பி.ஏ படிக்கப் போறேன்கிற?’ மேலும் அவர்,
ஏண்டா, நான்தான் பிஏ.பிஎல். படிச்சிட்டு சீரழியறேன். அந்த காலத்துல எனக்கு யாரும் வழிகாட்ல,உனக்கென்ன நல்லா படிக்கிற பையன்,நல்லா மார்க்  எடுத்திருக்கிற, சைன்ஸ் குருப் படிச்சா உன் எதிர்காலம் நல்லா இருக்கும்டா, சைன்சுக்கு மாத்திக்க

சார்,! எனக்கு எப்படி சைன்சு கொடுப்பாங்க,?நான் படிச்சது வரலாறு பாடமாச்சே?வரலாறு குருப்புக்கு அப்பளிகேஷன் போட்டுட்டேனே
போட்டா என்ன ? மாத்திக்க முடியாதா? நான் மாத்தி தர்ரேன் வாமேலும் அவர்,‘நீ, என்னோடு வா, நான் பட்ணம்(சென்னை) போறேன்,உங்க காலேஜிக்கு வந்து மாத்திக் கொடுத்திட்டு அப்புறம் பட்ணம் போறேன்,வா.. ஏறு..
 சரி சார்!என நானும் அவரோடு புறப்பட்டேன். எனக்கும் சேர்த்து அவரே டிக்கெட் வாங்கினார்.
கல்லூரி எழுத்தரிடம் முறையிட்டு, ‘அய்யா இவன் நல்லா படிக்கிற பையன்,தெரியாத்தனமா வரலாறு குருப் போட்டுட்டான்,தயவு செய்து அந்த மனுவை கொடுத்திங்கன்ன சைன்சு குருப்புக்கு மாத்தி கொடுத்திடுகிறோம்
எழுத்தர், ‘அதற்கென்ன?,தாராளாமா!எனச் சொல்லி மனுவைத் தேடிக் கொடுத்தார்.மாற்றிக் கொடுத்தேன். கெமிஸ்ட்ரி,இயற்பியல் மற்றும் உயிரியல் குரூப் போட்டேன்.
அய்யர்,என்னை தட்டிக் கொடுத்து

உன் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்,நான் வருகிறேன் எனச்சொல்லி புறப்பட்டார்.அய்யருக்கு நன்றி சொல்லிவிட்டு,எதிர்கால கனவுகளோடு வீடு வந்து சேர்ந்தேன்.
இப்படி மாணவன் மீது அக்கறை கொண்ட ஒரு ஆசிரியர் இக்காலத்தில் இருப்பாரா என தெரியவில்லை! என் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் என்ன படிக்கப் போறேன் என தெரியாது,சொன்னாலும் புரியாது!.
அடுத்த சில நாட்களில் ,கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து கடிதம் வந்தது.
                   
                   27-மிதி வண்டியில் 40 கிமி

கல்லூரியில் சேர சொன்ன நாளில் கல்லூரிக்கு என்    சைக்கிளில் கிளம்பினேன்.நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டு நீண்டதூரம் பயணிப்பது அதுதான்    முதல்முறை.கல்லூரியில் சேர்ந்துவிட்டு மாலை வீடு திரும்பினேன்.
என்னால் முடியவில்லை.அதிக களைப்பு, படுத்துவிட்டேன்.  களைப்புத் தீர வெகுநேரம் ஆகிவிட்டது. என் அம்மா அருகில் வந்து, ‘என்ன கண்ணு,சைக்கிள்ள போரது ரொம்ப கஷ்ட்டமா இருக்குதா,?..என்ன பண்றது? படிக்கணும்ண்ணா கஷ்ட்டப்பட்டுத்தான் ஆகணும்...,நமக்கு இருக்கிற வசதியில தினமும் பஸ்சுக்கு காசு தேட முடியாதுப்பா!
பசிக்குதும்மா
ஆள்(மர) வல்லிக் கிழங்கு சுட்டு வச்சிருக்கேன்,சாப்பிடுஅதை உரித்து சாப்பிட்டு பசியை போக்கிக் கொண்டேன். என் பெரிய அண்ணாவும் அம்மா சொல்வது போல் சென்னார்கள்

சைக்கிள்ள போக முடியலண்ண, நின்னுபோடா,எங்களோடு கழணிக்கு வந்துடு
ரொம்பத் தொலைவா இருக்குண்ணா,அவ்வளவு தூரம் மிதிக்க முடியலை
என்ன டா..! மொத்தமே 10 மைல்தானடா ! அதைகூட சைக்கிள்ள போக முடியலண்ணா எப்படி? எத்தனையோ பேர் சைக்கிள்ள போறாங்களே,போ கண்ணு! போகபோக பழகிவிடும்
என் அண்ணன் சொன்னது போல் 4 ஆண்டுகள் சைக்கிளில் சென்று படிப்பது என முடிவு பண்ணிவிட்டேன்.

(நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சில ஆண்டுகள் கழித்து,அரசுப்பணியில் சேர்ந்து, அந்த வழியே இருசக்ர மோட்டார் வண்டியில் பயணித்தேன்,அப்பத்தான் எங்க ஊருக்கும் பொன்னேரிக்கும் 21 கிலோ மீட்டர் என்று ஒரு நாளைக்கு 42 கிலோமிட்டர் சைக்கிளில் சென்று படித்ததை நினைத்து இன்றுகூட நான் மலைத்துப் போகிறேன்.! )

அந்த சைக்கிளுக்கு மாற்றுப் பொருள்(spares) வேண்டி என் அண்ணாவிடம் சொன்னால்,உடனே பழுது பார்க்கும் கடைக்குப் போய் ,யாராவது கழட்டிப் போட்ட பொருளை பொருத்திக் கொண்டு வந்துவிடுவார்.புதியதாக ஒரு டயரையோ,ட்யூபையோ போட்டு நான் ஓட்டியதே கிடையாது.
அடிக்கடி  பஞ்சர் ஆகிவிடும் பொன்னேரி பஸ் நிலையம், கவரைப்பேட்டை,மற்றும் ஆரணியில் உள்ள அதற்கு பழுது பார்ப்பவரிடம் கடன் சொல்லிவிட்டு போட்டுக் கொண்டு வந்துவிடுவேன்,அடுத்த நாள் அந்த கடனை அடைப்பேன்,அந்த நாணயம் ஒன்று தான் இன்று வரை நான் கடைபிடிப்பது. கல்லூரியிலிருந்து மாலை வீடு திரும்பியதும் எங்க அம்மா,
எனக்கு அவித்த அல்லது சுட்ட மரவள்ளிக் கிழங்கு, அவித்த வேர்க்கடலை, பனம்பழம் அல்லது யாராவது வீட்டு விசேஷங்களுக்கு கொடுக்கும் பலகாரங்கள் இவற்றில் ஏதாவது ஒறு சிறு தீனியை பருவகாலத்திற்கு ஏற்றாற் போல் என் அம்மா,எனக்காக முந்தாணியில் முடிச்சி போட்டு  வைத்துக் கொண்டு காத்திருப்பார்.
கிராமத்தில் நடக்கும் மஞ்சள் நீராட்டு, காதுகுத்தல், சீமந்தம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு எங்கம்மா சென்றால் அங்கே இலையில் வைக்கப்படும் லட்டு,மைசூர் பாகு மற்றும் ஜாங்கிரி போன்ற இனிப்புகளை முதலில் அவைகளை தன் மடியில் வைத்து கட்டிவிடுவார்,மாலையில் நான் பள்ளிக்கூடம் விட்டு, வீடு வந்தவுடன் அந்த இனிப்புகளை எனக்கு கொடுத்துவிடுவார்,
எங்கள் அண்ணா, அக்கா,அண்ணி மற்றும் தம்பி அனைவரும் கேட்பார்கள்,
அதென்ன அவனுக்கு மட்டும் மறைத்து வைத்திருந்து பலகாரம் தர்ரம்மா? நாங்களெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?’

அவன் படிக்கிற பையன்,கூழ் குடிக்க மாட்டான், பசியோடு குழந்தை வர்ரான்,நீங்கள் எல்லாம் வீட்டுக்குள் இருந்து கொண்டு எதையாவது சாப்பிடுவீங்க,குழந்தை தின்னட்டும் போங்க..!
எல்லாரும் என்னிடம் வந்து அந்த இனிப்புகளை பகிர்ந்துண்ண நாள் ....நினைத்தால்.....என் கண்களில்,நீர் வருகின்றது!
                   

                  28-என்னை வளர்த்த தென்னை  

எங்கள் வீட்டுக்கு எதிரே, யாரோ கொடுத்த இரண்டு தென்னங் கன்றுகளை நட்டுவைத்தனர்,
அவை வளர்ந்து மூன்று வருடத்தில் நிறைய காய்களை கொடுக்க துவங்கியது.ஊரில் உள்ளவர்களுக்கு ஆச்சர்யம்.காரணம் கிராமத்தில் ஒரு தென்னையை நட்டால் அது பலன் தர பல ஆண்டுகள் ஆகும்.ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேல் அது பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும்.மூன்றே ஆண்டில் அந்த செடிகள் பலன் தர துவங்கியது உண்மையில்  ஆச்சர்யம் தான்.
அதன் இளநீரும் தேங்காய்களும் என் பசி போக்க உதவும் என  எங்க அம்மா அவைகளை யாரும் தொட அனுமதிக்க மாட்டார்கள்.ஏனோ தெரியவில்லை அதில் ஒன்று இறந்து விட்டது.யாரோ ஒரு வழிபோக்கன் அந்த ஒரு மரத்தைப் பார்த்து,

மனுஷனுடைய கண்ணு பொல்லாதது,பொறாமை உள்ளவன் கண்ணு பட்டா அழிஞ்சி போயிடும்,கண்ணுக்கு மறவா செடியை வைக்கணும்என்று சொல்லிவிட்டு போயிட்டான்.

(உயிருள்ள மனுஷனுடைய கண்களுக்கு அவ்வளவு அழிக்கும் சக்தியா? அப்ப உயிரற்ற(கல்லின்) கடவுளின் கண்களுக்கு  மட்டும் ஆக்கும் சக்தியா? இதை யாரும் சிந்திப்பதே இல்லை..,! இன்று வரை இதே நிலைதான்!)

அடுத்த நாள் மீதமிருக்கும் ஒரு மரக்கன்றை பூவும் பிஞ்சுமாக பத்துபேர் தூக்கி கொண்டு வீட்டுக்கு பின்புறம் யாரும் வெளி நபர்கள் பார்க்கா வண்ணம் மாற்றி வைத்து நட்டு விட்டார்கள்.அந்த இள நீரையும்,தேங்காயும் யாரும் தொடா வண்ணம் எங்க அம்மா பார்த்துக் கொள்வார். பள்ளிகூடம் போற குழந்தை பசியோடு வந்தா ஒரு இளநீரோ அல்லது தேங்காயோ பறிச்சி சாப்புடுவான்என்பார்கள்.
எனை வளர்த்த அந்த தென்னை மரம் சமிபத்தில் என் தம்பி மண் வாரி எந்திரம் கொண்டு பிடுங்கி எரிந்து விட்டான்.அதைப் பார்த்து நான் அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

970-ல் என் கடைசீ அக்காவிற்கு திருமணம் நடந்துவிட்டது.நிம்மதிப் பெறுமூச்சி விட்ட எங்கள் 
அம்மாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

1956 ல் பெரிய அக்கா கல்யாணம்
1958-ல் சின்ன அக்கா கல்யாணம்
1961-ல் பெரிய அண்ணா கல்யாணம்
1964-ல் நடு அக்கா கல்யாணம்
1965-ல் சின்ன அண்ணா கல்யாணம்
1970-ல் கடைசி அக்கா கல்யாணம்
(இதற்கிடையே ஆதரவு இல்லாத எங்கள் பங்காளி அக்காக்களான சாரதா மற்றும் அலமேலு அவர்களின் திருமணங்களை(1962&1963) எங்க அம்மா தான் நடத்திவைத்தார்.சாரதா அக்காவின் இளவயதில்  அவர் மரணமடைந்து விட்டதால் ஆதரவற்ற எங்கள் மாமாவிற்கு,நடு அக்காவை திருமணம் செய்து வைத்தனர்.
அந்த குடும்பமே விருத்திக்கு வரவில்லை,ஆனால் அலமேலு அக்கா மட்டும் பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.)                          

No comments: