67-விதவை எதிர்ப் பட்டால் ..?
கிராமத்தில் மார்கழியில் பணப்பயிரான(cash crop) சேம்பு மற்றும் வேர்க்கடலை வித்திடுவார்கள்.இந்த இரண்டு
பயிர்களும் அறுவடைக்கு வரும்போது ஒவ்வொரு முதிர்ந்த பயிரையும் மண் வெட்டியால்
வெட்டி வெளியில் எடுத்து ஆய்ந்து மூட்டையில் சேகரித்து கொத்தவால் சாவடிக்கு (அந்நாளைய
சென்னை காய்கறி சந்தை) மாட்டு வண்டியில் எடுத்து செல்வது வழக்கம்.
எங்கள் ஊரிலிருந்து கொத்தவால் சாவடி 40 கி.மிக்கு மேல்
இருக்கும்.
1976 டிசம்பரில் நான் என் அண்ணாவிடம், ‘இந்த
ஆண்டு சேம்பு போடலாம்,
வா,அண்ணா, சென்னைக்கு
போய் விதை சேம்பு வாங்கி வரலாம் என்றேன்.என் அண்ணனும், ‘சரி,
வா போகலாம்’ என்றார்.
சென்னைக்கு நானும் அண்ணாவும் வீட்டை விட்டு 500 மீட்டர்
தொலைவு வந்து விட்டோம்.எதிரே ஒரு விதவை வந்தார்கள்.விதவையை கண்ட உடனே என் அண்ணன், ‘டேய்
தம்பி, வா திரும்பி வீட்டுக்கே போகலாம்,நாளைக்கு
சென்னைக்கு போகலாம்’ என்றார்
‘என்னண்ணா,? என்ன
ஆச்சு?’
‘முண்டச்சி
எதிர வந்தா போகிற காரியம் நல்லா நடக்காதுடா’
‘முண்டச்சிக்கு
அவ்வளவு சக்தியா,அண்ணா?’எதிரே வந்த
விதவையும், ‘வீட்டுக்கு போய் தண்ணி சாப்பிட்டு போங்கோ,ஏதோ
நல்ல காரியத்துக்கு போறீங்க போல’என்றார்
‘வாடா
திரும்பி போகலாம்’
‘அட
வா..ண்ணா, என்ன தான்
நடக்குது பார்க்கலாமே! அப்படி மீறி போய் நாம் கிழங்கை வாங்கி வந்து போட்டா,விளையுதா,?இல்லையா? என்று
பரிட்சித்துப் பார்த்துடலாமே’ (கையில் காசு
இருந்தால் மூட நம்பிக்கைகளை பரிட்சித்து பார்க்கும் தைரியம் மனிதனுக்கு வந்து
விடுகிறது) மேலும் நான்,
‘நாம் போகிற
இடத்துல கிழங்கு கிடைக்கலண்ணா,இந்த முண்டச்சி
வந்ததாலத்தான் என நினைச்சிக்கலாம் ,வா
போகலாம்’
‘சரி
,வா போகலாம்’
அந்த ஆண்டு ‘சேம்பு’
அமோக விளைச்சல்,பழைய கடனெல்லாம் அடைந்து விட்டது. அப்பத்தான் எங்க
அண்ணனிடம் சொன்னேன்,
‘எல்லாத்துக்கும்
நம்முடைய மனந்தான் காரணம் அண்ணா!?’ மேலும் நான்,
‘விதவைகளை
அடக்குவதற்காகா,சமுதாயத்தில் ஒதுக்குவதற்காக இது போன்ற தாலி அறுக்கப் பட்டவளை
பல வகையில் அசிங்கப்படுத்த வில்லை எனில் சமுக கட்டுப்பாடு சீர் குலையும் என்கிற
எண்ணத்தில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மூடப்பழக்கம்,அண்ணா’
அதன் பிறகு விதவைகள் எதிரே வந்தாலும் எங்கள் வீட்டில் யாரும்
சகுணம் பார்ப்பதில்லை. பூனை குறுக்கே வந்தாலும் எங்கள் நடைபயணம் தடை பட்டதில்லை,ராகுகாலம்,எம
கண்டம் பார்ப்பதில்லை,
வாரசூலை பார்ப்பதில்லை.
எங்கப்பா இதெல்லாம் பார்ப்பார்,அவரை
கேட்டால் இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது ,நம்ம
முன்னோர்கள் செய்தார்கள்,அப்படியே பழக்கம் ஆயிடுத்து,என்பார். நாங்கள் எந்த சகுணமும் பார்ப்பதில்லை
நல்லாத்தான் இருக்கின்றோம்.
****
68- காஞ்சிபுரம் பணி மாற்றம்
1977 ஜனவரியில் காஞ்சிபும் மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு
வரச்சொல்லி உத்தரவு. என்னை ,ஜனவரி 30ந்தேதி பணி நீக்கம் செய்து பின் எனக்கு 1977
பிப்ரவரி 1ந் தேதி மறு பணி நியமன ஆணை வழங்கினார்கள்.
எனக்குப் பின் பணிக்குச் சேர்ந்த எல்லா பணியாளர்களையும்
பணி நீக்கம் செய்துவிட்டார்கள்.
69-இரட்டை பூட்டு அதிகாரி
‘என்னை
என்ன செய்வது? இவனுக்கு (என்னை) தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என்ன
செய்லாம்?’ என சென்னைத் தலைமை அலுலகம் தொடர்பு கொண்டு மண்டல
மேலாளர் கலந்தாலோசித்தார்.என்னை காஞ்சிபுரம் அரிசி ஆலை முகவர்களுக்கு DLO(double lock officer) ஆக பணி நியமனம் செய்தார்கள்.
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் சன்னதி தெருவில் ஒரு
வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பர்கள் தங்கியிருந்தனர்.நானும் அவர்களோடு தங்கிக்
கொண்டேன்.
என் சக ஊழிய நண்பர்களான
1-திரு.ராமச்சந்திரன்,(தஞ்சாவூர்),காஞ்சிபுரம்
கிடங்கு பொறுப்பாளர்.
2-திரு சுந்தர் ஜெயக்குமார், (திருவள்ளூர்)
மண்டல அலுவலக பகுப்பாய்வாளர்,(பின்னாளில் SBI
க்கு தேர்வாகி திருவள்ளூருக்கே வந்து விட்டார்.இவர் கிறித்துவர்.காஞ்சிபுரம்,பக்கத்து
வீட்டு செட்டிப் பெண் மீது காதல் கொண்டு அவளை பெண் கேட்க போனார், ஆனால் பெற்றோர் மறுத்துவிட்டனர்)
3-திரு கனகராஜ்(உத்ரமேரூர் அருகே சாலவாக்கம் சொந்த ஊர்) காஞ்சிபுரம்
வேர் அவுசிங் கிடங்கு பொறுப்பாளர்.தற்போது சென்னை ஆலந்தூரில் குடும்பத்தோடு
வசிக்கின்றார்.
எங்கள் நால்வருக்கும் திரு ராமச்சந்திரன் சமைப்பார்.தற்போது
இவர் மதுராந்தகத்தில் குடும்பத்தோடு வசிக்கின்றார்.
நான் இரட்டை பூட்டு அதிகாரி என்பதால் எனக்கு வேலை பளு
குறைச்சல்.மாலை 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன்.
நான் தங்கியிருந்த வீட்டின் பக்கத்தில் நண்பர் சுந்தர் ஜெயகுமார்
விரும்பிய செட்டிப் பெண் இருந்தாள்.அவளுடைய அப்பா கடைத் தெருவில் ஸ்டேஷனரி கடை
வைத்திருந்தார்.அந்த பெண்ணை மணம் செய்துகொள்ள திரு சுந்தர் ஜெயகுமார் விரும்பினார்,நண்பர்
ராமச்சந்திரனோடு பெண் கேட்க போனார்,பெண்ணின்
பெற்றோர் காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை,பெண்
தரமுடியாது என மறுதலித்தனர்.
நான் உள்ளூரில் வேலை செய்வதால் மாலை நேரம் நான்
தங்கியிருந்த இடத்திற்கு பொழுதோடு வந்துவிடுவேன், கோயிலுக்கு
வரும் வெளி நாட்டவர்களை கவனிப்பது என் பொழுது போக்கு.இவளுக்கு என்னை கவனிப்பது
பொழுது போக்கு. இது எனக்கு தெரியாது.
70- பழி ஓரிடம்,பாவம் வேரிடம்
ஒரு நாள்,இரவு
மாடியில் நான் காயப் போட்டிருந்த என்னுடைய உள்ளாடை காற்றில் அடித்துக் கொண்டு அவள்
வீட்டு மாடியில் விழுந்து விட்டது.நான் அந்த கைப்பிடி சுவற்றை தாண்டி குதித்து என்
துணிகளை எடுத்து வந்தேன்.அப்படி நான் அவள் வீட்டிலிருந்து தாவி என் வீட்டிக்கு
குதிக்கும் போது,அந்த தெருவின் , ‘மன்னார்&கம்பனி’ ஆட்கள் (வேலையில்லா இளைஞர்களை அப்படித்தான் அழைப்போம்)
இதை கவனித்து விட்டார்கள்.ஆனால் அவர்கள் என்னை கவனிப்பதை
நான் கவனிக்க வில்லை.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் ஒரு பத்து இளைஞர்கள்
கூடி விட்டார்கள்.நான் உள்ளே குளித்துக் கொண்டிருந்தேன்.என் நண்பன்
(திரு.ராமச்சந்திரன்) வெளியே நின்று கொண்டு அந்த இளைஞர் குழுவுடன் விவாதம் செய்து
கொண்டிருந்தான்.
என்ன கூச்சல் என நான் வெளியே வேடிக்கைப் பார்க்க
வந்தேன்.அந்த கூட்டத்தில் ஒருத்தன்,
‘இவன்
தான்’ என என்னை சுட்டிக்காட்டி ‘நான்
என் கண்ணால் பார்த்தேன்’
என்றான். எனக்கு
ஒன்றுமே புரியவில்லை.நான் என் நண்பனைப் பார்த்து, ‘என்னடா
என்ன பிரச்சினை?’
என்றேன்.
‘நீ,தாண்டா
பிரச்சினையே..!’
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது.அதில் ஒருவர் எனக்கு
தெரிந்த அரவை முகவர்.ஊரில் பெரிய மனிதர் அந்தஸ்த்தில் இருப்பவர்.அவர் என்னை
விசாரித்தார்.
‘சார்,நான் அந்த பொண்ணை
கண்ணால்கூட கண்டதில்லை,இரவு பக்கத்தில் விழுந்து விட்ட துணியை எடுக்க கட்டைச் சுவரை
தாண்டினேன் அவ்வளவுதான்,
அங்கே யாருமே
அப்போ இல்லேயே...!’
அந்த அரவை முகவர் அங்கே கூடியிருந்த இளைஞர்களிடம்,
‘அவங்களை
எனக்கு நன்கு தெரியும்,
ஊரை விட்டு
ஊர்வந்து பிழைக்க வந்துள்ளார்கள். தப்பான காரியம் செய்ய மாட்டார்கள்.
நீங்கள் கலைந்து போங்கள்’என்றார்.அவர்
பேச்சை கேட்டு கூட்டம் கலைந்து போனது.
71-செங்கல்பட்டு பணி மாற்றம்
எனக்கு அடுத்த சில நாட்களில் எனக்கு பணி மாற்றலாகிவிட்டது.
1977-ஜூலை யில் என்னை செங்கல்பட்டு கிடங்கிற்கு பணி நியமனம் செய்தார்கள்.தமிழகம்
முழுவதும் உள்ள வட்ட வழங்கல் கிடங்குகளில் அலுவலகத்தோடு இணைத்து உதவி தர ஆய்வாளர்
பதவி உருவாக்கப்பட்டது.
இதற்காக அரசு தனி அரசாணை வழங்கியது.BSc பட்டதாரிகளுக்கு
தொடர்ந்து வேலை கொடுப்பது என அரசு தீர்மானித்தது.
செங்கல்பட்டு கிடங்கு பொறுப்பாளராக ஒரு B.Sc
பட்டதாரி உள்ளார்,நானும் அறிவியல் பட்டதாரி அங்கே அதிகாரப் போட்டி
நிலவியது.இது குறித்து மண்டல மேலாளருக்கு விரிவான ஒரு அறிக்கை சமர்பித்தேன். அதாவது, ‘எனக்கு
என்ன வேலை?,நான் அன்றாடம் என்ன செய்ய வேண்டும் என வரையறுத்து
கூறப்பட்டுள்ளது,ஆனால் இங்கே இருக்கும் கிடங்கு பொறுப்பாளர் அது மாதிரியான
வேலைகளை பார்க்க கிடங்கை திறக்க மறுக்கின்றார்.நான் என்ன செய்வது?’
பிரச்சினை மீண்டும் தலைமை அலுவலகம் சென்றது. சில
நாட்களில், தமிழகம் முழுவதும் அறிவியல் பட்டதாரிகளை,
‘தன்னாட்சிப்
பெற்ற கிடங்குப் பொறுப்பாளர்களாக’ நியமித்து
உத்தரவு வந்தது. நான் செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு அறை
எடுத்து தங்கி பணிக்குச் செல்வது வழக்கம்.
அந்த வீட்டு முதலாளி சினிமா தொடர்புடையவர் என்று எனக்கு
தெரியவந்தது.சினிமா நடிகர்,நடிகைகளை வைத்து ஒரு நாடகம் செங்கல்பட்டில் அரங்கேற்றம்
செய்யப்பட்டது.அதில் கதாநாயகி நடிகை சத்யபிரியா, நடிகர்
சி.எல். ஆனந்தன்.மற்றும் சில துணை நடிகர்கள் அன்று நான் தங்கியிருந்த வீட்டின் ஒரு
அறையில் ஓய்வு எடுத்து வந்தார்கள். அந்த
நடிகை என்னிடம் பேச்சு கொடுத்தாள். சிலமணி நேரம் பேசியிருப்பேன்.அவள் தன் திரையுலக
அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டாள்.
‘கண்டவன்
கிட்ட எல்லாம் நான் தொட்டு நடிப்பது கூட பெரிய விஷயமில்லைங்க, அவன்
கண்டபடி தொடும்போது தான் எனக்கு அருவருப்பா இருக்குங்க,இப்பவே
இரவு மணி 9 ஆகுது,எப்ப ஆரம்பிச்சி எப்ப முடிப்பாங்க என தெரியாது.
பேசினத்தொகையை ஒழுங்கா கொடுக்க மாட்டானுங்க’ என
தன் கவலை தோய்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டாள்.
அந்த வீட்டில் ஒரு வயது வந்த பெண்.அவள் ஒரு நாள் மாலை
அவள் முற்றத்தில் இருக்கும் நித்ய மல்லி கொடியில் மலர்களை பறித்து தரச்
சொன்னாள்.ஏதும் அறியாமல் நானும் பறித்து கொடுத்தேன்.
72-நான், அவரை, ‘காதலிக்கிறேண்டி’
அடுத்த நாள் காலை நான் வழக்கம் போல் பணிக்குச் சென்று
விட்டேன்.மாலை விடு வந்த உடன்,என் அறைக்கு
எதிரே வாடகைக்கு குடியிருந்த ஒரு தஞ்சாவூர் இணையர்,அவர்கள்
என்னிடம் நட்புடன் பழகுவார்கள்,அப்போது ,
‘சார்
என்ன நடந்தது தெரியுமா?
என்றனர்.
‘என்ன
சார் ,சொல்லுங்க..’
‘இந்த
வீட்டு பெண்ணுக்கும் எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கும் குடுமி பிடிச்சண்டை
நடந்து ஊரே சிரிப்பா சிரிச்சி போச்சு’
‘என்ன,சார்
சொல்றீங்க?’
‘நேத்து
நீங்க என்ன பண்ணீங்க?’
‘ஒன்றும்
பண்ணலையே’
‘சார்,நீங்க
இந்த பொண்ணுக்கு பூ பறிச்சி கொடுத்தீங்களா?’
‘ஆமா,கொடுத்தேன்’ மேலும்
அவர்கள்,
‘அதுதான்
பிரச்சினையே’
‘எதிர்த்த
வீட்டு பொண்ணை உங்களுக்கு தெரியுமாமே!’
‘அது,யாருண்ணே
தெரியாதே சார்’
‘அது
,எங்களுக்கும் தெரியும் சார்’
‘நீங்க
பாட்டுக்கு வர்ரிங்க ,மாலை அறைக்குள்
வந்தா வெளியே வர்ரதில்லை, இது எங்களுக்கும்
தெரியும். ஆனால் நீங்க காலையில் புழக்கடை கிணற்றில் நீர் சேந்தி குளிப்பதை எதிர்
வீட்டு பெண் பார்ப்பாளாம்.’
மேலும் அவர் சொன்னார், அவர்
வாயிலாக அந்த உரையாடலை இங்கே பதிவிடுகிறேன்.நீங்க ,வேலைக்கு
போனதும் அந்த பெண் ,இந்த பெண்ணை கூப்பிட்டு,
‘நீ
என்ன? ஆளு அழகா இருக்கான் சொல்லி,வளைச்சி
போடப் பார்க்றியா?’என கேட்டுள்ளாள்.
இந்த பெண், ‘நாக்கை
அடக்கிப்பேசு,நீ யார்ரி என்னை கேட்க?
‘நான்
அவரை காதலிக்கறேண்டி’
‘அதுக்கு
என்ன இப்போ?’
‘நீ, எப்படி..டீ,
அவரை பூப்பறிக்கச் சொல்லலாம்?’
‘செருப்பு
பிஞ்சிடும்,போடி நாயே’
‘யாரைடி
நீ நாயேன்னு சொல்ற?’
என்று சொல்லி
இந்த பெண்ணின் தலை மயிரை,
அவள் பிடித்து
இழுத்து அடித்து,உதைத்து விட்டாள். தெருவே கூடிவிட்டது. அசிங்கமாகிவிட்டது,நாங்கள்
தான் சமாதானம் செய்து அனுப்பினோம்.சொல்லிவிட்டு அவருடைய மனைவி என்னைப் பார்த்து,
‘தம்பி,நீங்க
இந்த வீட்டை விட்டு காலி பண்ணி போய்டுங்க, நீங்கல்லாம் உத்தமி வயிற்றில் பிறந்திருக்கீங்க, போய்டுங்க
தம்பி!’
சுருக்கமாக தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டு
போய்விட்டார்கள்.அடுத்த நாள் அலுவலகம் சென்றேன்.
73- மதுராந்தகம் பணி மாற்றம்
அதற்குள் மதுராந்தகம் பணிமாற்றல் உத்தரவு வந்து விட்டது.செங்கல்பட்டில்
2 மாதம் மட்டுமே அந்த பணியில் இருந்தேன்.பின் மதுராந்தகம் மையத்திற்கு போய்விட்டேன்.
1977 அக்டோபரில் மதுராந்தகம் கிடங்கிற்கு மண்டல மேலாளர்
ஆய்விற்கு வந்தார். (திரு சி.பி. கிருஷ்ணன்,கன்னடத்து
பார்ப்பனர்)
அங்கே இரண்டு உதவி தர ஆய்வாளர் பணியிலிருப்பதை
கண்டார்.என்னைப் பார்த்து,
‘இங்கே
எதற்கு இரண்டு உதவி தர ஆய்வாளர்கள்?,நீ
எந்த ஊர்,உன் ஊர்பக்கம் உன்னை பணியில் அமர்த்துகிறேன் போறியா?’ என்றார்
‘சரி,சார்’
‘நீ,வந்து நாளை என்னை
என் அலுவலகம் வந்து பார்’ என
சொல்லிவிட்டு போய்விட்டார்.
அடுத்த நாள் மண்டல மேலாளரை அவருடைய அலுவலகத்தில்
பார்த்தேன். ‘உன்னை பொன்னேரியில் போடலாம் என யோசித்தேன்,ஆனால்
அங்கு பணியில் இருப்பவர் சமிபத்தில்தான் மாற்றாலாகி போயுள்ளார். திருவள்ளூருக்கு
போறியா?’
‘சரி,சார்’