நானும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அடுத்த ஆண்டு 1974 ல் வரும் கார்த்திகை மாதம் வளர்பிறையில் தசமி திதி அன்று காத்திருந்தேன். அய்யர் வரவே இல்லை.. நாங்களே நடுவீட்டில் இலைபோட்டு உறவினர்களுக்கு உணவளித்து விரதத்தை முடித்தோம். ஆனால் அய்யர் கார்த்திகை திதி தேய்பிறை தசமி திதியன்று வந்தார்.
‘சென்ற ஆண்டு வளர்பிறை தசமி என்றீர்கள்,இந்த ஆண்டு தேய்பிறை தசமி அன்று வந்துள்ளீர்கள் ஏன்?’
அதற்கு அவர், ‘பரவாயில்லை தேய்பிறையில் கூட திதி தரலாம்’ உடனே நான் ‘இந்த குழப்பமெல்லாம் வேண்டாம், நாங்களே தமிழ் மாதத்தில் வரும் இறந்த நாளை அனுசரித்துக் கொள்கிறோம்,அடுத்த ஆண்டு முதல் நீங்கள் வரவேண்டாம்’ என சொல்லி அய்யரை தடுத்து நிறுத்தினேன்
அதுமுதல் நாங்கள் அக்கம் பக்கம் உள்ள உறவினர்களுக்கு உணவளித்து விரதத்தை முடிப்போம்.1990 கார்த்திகை 20 நாள் வியாழன் அன்று எங்கள் தந்தை வயோதிகத்தின் காரணமாக இறந்து போனார்,
அவருக்கு அப்போது 93 வயதிருக்கும்,இது என் தோராய கணக்கு. எங்கள் அப்பா இறந்த போது எனக்கு 39 வயது. 39 வருடங்களுக்கு முன் நான் பிறந்த போது எங்கள் அப்பாவுக்கு 55 வயதிருக்கும். எங்க அம்மாவுக்கு 40 வயதிருக்கும்.பொதுவாக பெண்களுக்கு பிள்ளை பெரும் வயது அதிக பட்சம் 45 அல்லது 46 வயது தான்.எனக்குப் பின்னால் என் தம்பி 5 ஆண்டுகள் கழித்து பிறந்துள்ளான்,என்பதை என் தாய் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.45க்கு மேல் தாய் பிள்ளை பெறுவது என்பது இயலாது
என் தந்தைக்கும் தாய்க்கும் 15 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கும் என்பது என் யூகம். எனவே என் தந்தையின் இறந்த வயதை 90 அல்லது 93 இருக்கும் என கணக்கிட்டேன்.
எழுத படிக்கத்தெரியாத மக்கள், விவசாயத்திற்கு படிப்பு அவசியமில்லை என முடிவு பண்ணி தங்கள் இஷ்ட்டத்திற்கு அதிக பட்சம் 12 பிள்ளைகள் பெற்றவர்கெளல்லாம் வாழ்ந்தனர்.எனக்கு தெரிந்து ஒரு முதலியார் இணையர் 17 பெண்களும் கடைசியாக ஒரு ஆண் பிள்ளையும் ஆக 18 பிள்ளைகளை பெற்றனர்.இவர்கள் எங்கள் கிராமத்து அருகே உள்ள ஆரணி நகரத்தில் வாழ்ந்தனர்.
எங்க தந்தை இறந்த அடுத்த ஆண்டு(1991) கார்த்திகை 20 தேதியில் அம்மாவின் நினைவு நாளையும் இணைத்து இருவருக்கும் ஒரே நினைவு நாளை அனுசரிக்கத் தொடங்கினோம்.
நினைவு நாளை அக்கம் பக்கம் உறவினர்களுக்கு உணவளித்து முடிப்பதை விட அன்று வரும் மாற்று புடவை இல்லா பெண்களுக்கு புடவை ரவிக்கை வழங்க முடிவு செய்தேன்.என் மாத சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பேங்கில் போட்டு வைத்து கார்த்திகை மாதம் 20 புடவை ரவிக்கை எடுத்து உறவினர்களுக்கும் பக்கத்து வீடுகளை சார்ந்த பெண்மணிகளுக்கும் உணவளித்து வழங்குவதை வழக்கமாக கொண்டேன்.
அதன் பின் என் பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.எனக்கும் சம்பளத்தில் மிச்சம் செய்து அதிக சேமிப்பு வைத்தேன்.
பணத்தை சேர்த்து வைத்து என்ன சாதிக்கப் போகிறோம்?
நாம் ஏன் என் சேரிவாழ் குடும்ப பெண்களுக்கும் புடவை ரவிக்கை வழங்க கூடாது என யோசித்தேன்.1995 லிருந்து ஆண்டு தோறும் 70 புடவைகள் எடுக்க ஆரம்பித்தேன்
ஒரு புடவை ரவிக்கையின் விலை 200 ரூபாய்க்குள் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.அப்போது தான் துணி தரமாக இருக்கும் என்பது என் கணிப்பு. சில நேரங்களில் ரூ.200 அல்லது 220 கூட தாண்டும்.
சென்னை சரவணா ஸ்ட்டோர்சில் நானும் என் மனைவியும் சென்று எடுத்து வருவோம். இப்பொழுதெல்லாம் 90 அல்லது 100 புடவைகளுக்கு செலவாகிறது.மொத்த சேரிவாழ் பெண் குடும்பங்கள் 60 எண்ணிக்கை தான். உறவுகள் ஒரு 15 அல்லது 20 பேர் கூடுவர்.
இளமையில் பசியும் பட்டினியுமாக வாழ்ந்த நான் அரசாங்க வேலை கிடைத்தவுடன், மூன்று வேளை சோற்றுக்கு பஞ்சமில்லை.
இன்று சீறும் சிறப்போடு வாழும் நான்,என் கிராமத்துப் பெண்கள் மாற்றிக் கட்டிக் கொள்ள புடவை யில்லாமல் இருக்க கூடாது எனும் எண்ணத்தில் ஆண்டு தோறும் தரமானபுடவையை அவர்களுக்கு எடுத்து கொடுப்பதில் என் மனம் நிறைவடைகிறது.வாழும்போது பிறருக்கு பயனுள்ள மனிதனாக வாழ்வது தானே சிறப்பு?
எனவே யாருக்கும் பயன் படாமல் பணம் சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கில்லை.அல்லது என் பேரன் பேத்திகளுக்கு சொத்துசேர்க்கும் எண்ணமும் இல்லை.
அதிகம் படித்தவர்களெல்லாம் தமிழ் இலக்கியங்களை மேற் கோள் காட்டி பேசுவதில் பெருமை அடைவர்.என்னைப் பொருத்தவரை படித்ததில் உண்மை எது என தேடிப்போக ஆசைப்படுகிறது. எனவே இல்லாத கடவுளை ஏற்றிப்பாடிய புலவர்களை நான் வெறுக்கின்றேன். புலவர்கள் இறைவனை புகழ்ந்து பாடிவிடுவதால்தான் அவர்களுக்கு உணவு கிடைக்குமா? தினக்கூலிகளுக்கு உழைக்காமல் கஞ்சி கிடைக்குமா?
பிறந்த அத்துணை குழந்தைகளுக்கும்,உணவு உடை,கல்வி, உறைவிடம் கிடைக்க இந்த அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கின்றதா?
கல்வியை இலவசமாக கட்டாயமாக குழந்தைகளுக்கு வழங்கினால் மட்டுமே தன்மானத்தோடு அவர்கள் உணவைதேட முடியும்.பொது வழிப்பாட்டுத் தலங்கள் இருப்பதாலேயே பெரும்பாலான மக்கள் உழைக்க போகவேண்டும் எனும் எண்ணத்தையே வளர்த்துக் கொள்வதில்லை. எனவே கோயில்களை, சர்ச்சுகளை, மசூதிகளை மூடி விட்டால் அவரவர் வீட்டிலேயே கடவுகளை வணங்கிக் கொள்வர்.சமுகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து போகும். இதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும்`!
அடுத்து, நான் கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருப்பதில் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போக வாய்ப்புண்டு. என் வழித் தோன்றல்கள் மனதில் வாழ்க்கைப் பற்றிய அர்த்தம் இல்லாமல் போகும். அதாவது அவரவர்கள் மனம் போன போக்கில் வாழ நினைப்பர்.
எனவே குடும்ப நிகழ்ச்சிகளில், பெரியவர்களை வணங்க வேண்டும், என்பேன். இது கடவுள் மறுப்பாளருக்கு ஒவ்வாது, ஆனால் வாழ்க்கை முறைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுகின்றோம்.என் வாழ் நாளில் நான்,கடவுள் மறுப்பு சிந்தனைகளில் வளர்ந்த குடும்பங்களை மகிழ்ச்சியற்ற குடும்பமாக இருந்துள்ளதை நான் கண்டிருக்கின்றேன்.காரணம் கடவுள் மறுப்பாளர்கள் குடும்பங்களில் பெரும்பாலும் சடங்கு சம்பரதாயம் நிகழ்ச்சிகளை ஒதுக்கி விடுவர். இதனாலேயே அந்த குடும்பங்களில் மகிழ்ச்சியற்று காணப்படும். குழந்தைகளின் குதுகலம் என்பது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் பண்டிகைக்கால விழாக்களே!
இதனை உணர்ந்த, நான் அக்கம் பக்கத்தினர் தீபாவளி போன்ற விழாக்கள் கொண்டாடும்போது நம் பிள்ளைகளுக்கு உற்சாகம் குறையக்கூடாது எனும் நோக்கில் மற்றவர்களைப் போல் பலகாரங்கள் செய்து கொடுக்கச் சொல்லி என் மனைவியிடம் சொல்வேன். அவளும் மனம் கோணாமல் குழந்தைகளுக்கு பலகாரங்களை செய்து கொடுப்பாள்.
அந்நாளில் கிராமத்து மக்களுக்கு தினசரி உணவென்பது கூழும் களியும் தான்.
தீபாவளி என்பது கோழி அல்லது ஆட்டு இறைச்சியுடன்,இட்லி,தோசை மற்றும் வடை பாயாசம் போன்ற உணவு வகைகளை இரவு பகல் கண்விழித்து செய்து பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இப்பொழுதெல்லாம் இட்லி தோசை தினசரி காலை உணவாகி விட்டதால் தீபாவளியின் மவுசு குறைந்து விட்டது.
பொங்கல் என்பது உழவர் திருநாள் என்பதால் அன்று குழந்தைகளுக்கு புத்தாடையும் எடுத்து கொடுத்து குழந்தைகளின் முகத்தில் தோன்றும் சிரிப்பை கண்டு களிப்போம். கிராமங்களில் தெருக்களில் பொங்கல் வைப்பதால், எல்லா வீடுகளிலும் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க ஓடியாடி விளையாடுவர்.
நகரத்தில் அதுபோன்று ஒரு குதூகலம் காண முடியாது.இப்போதெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் ஒரு சடங்காகவே முடிந்து விடுகிறது,ஆம்,காலையில் தெருவில் வீட்டு வாசல் எதிரே செங்கற்களை அடுக்கி வெண்கலப் பானையை வைத்து கடையில் விற்கும் பச்சரிசியை போட்டு பொங்கி வரும்போது இரக்கி வைத்துவிடுவோம். அதற்குள் பகல் 12 மணியை கடந்துவிடும். குழந்தைகள் முன்னிலையில் சூரியனுக்கு உணவுப் பொருளை காட்டி குழந்தைகளை வணங்கச் சொல்வோம்.குழந்தைகள் வளர வளர அவர்களுக்கும் இது ஒரு சம்பரதாயம், என தோன்றும், நம் முன்னோர்கள் போல் நாமும் பின்பற்றுவோம் எனும் எண்ணம் அவர்கள் மனதில் தோன்றும்,இதுவே பொங்கல் கொண்டாட்டம்.
குழந்தைப் பருவத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தரும் பழக்க வழக்கம் என்பது அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் மனதில் கொள்ளும் நிகழ்ச்சிகளாக பதிந்து விடும்
எனக்கு என் அம்மா சொல்லி தந்த குழந்தைப் பருவ பழக்கங்கள் என்பது எந்திரத்தனமானது,ஆம் காலை எழுந்த உடன் படிக்க வேண்டும், பின் குளிக்க வேண்டும்,குளித்த பின் பூஜை அறைக்கு செல்ல வேண்டும், பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் கடவுளர் படங்களுக்கு மலர் தூவி பின் கற்பூரம் கொளுத்தி படங்களுக்கு காட்ட வேண்டு்ம்,பின் ஊதுவத்தி கொளுத்தி வைக்க வேண்டும்,முடிந்த உடன் தயாராக வைக்கப்பட்டிருக்கும் ஒரு டம்ளரில் உள்ள நீரை ஆராதனை செய்ய வேண்டும்.பின் கடவுளிடம் பாடல்கள் மூலம் தேவைகளை பட்டியிலிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அப்படித்தான் நான் ராமலிங்க அடிகளார் முருகனைப் பாடி தொழுத பாடலான, ’ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.......’பாடலை முழுமையாக பாடி தினமும் பூசையை முடிப்பேன்.
பின் பள்ளி கல்லூரிக்கு செல்ல வேண்டும்.....இது எங்க அம்மாவின் ஆசை,உத்தரவு.
ஆண்டொன்று போக வயதொன்று கூட அறிவியல் சிந்தனை வளரும்,வளர வேண்டும். இதுவே முழுமையடை முயற்சிக்கும் மனிதனின் செயல். மனிதர்களுக்கு குழந்தை பருவம் முடிந்ததும்(18 வயது வரை} சுய சார்புத்தன்மை வளரும். கூடவே சுற்று சூழல் பாதிப்புகளையும் உணரத்தெரிய வேண்டும்.
நாளடைவில் இந்த எந்திரத்தனமான செயல் பாடுகளிலிருந்து வேறுபட மனம் விரும்பியது. நான் நல்லா இருக்கணும்,நல்லா படிக்கணும்,என்று நினைக்கும் வேளையில் என் கடவுளிடம் விடுக்கும் விண்ணப்பங்களை மெய்மை படுத்த ஆசைப்பட்டது.
என் அம்மா உடல் நிலை திடீரென்று மோசமாகவில்லை,மூன்று வேளை சாப்பாட்டிற்கே உணவில்லை எனும் போது,
சனிக்கிழமை தோறும் உண்ணா விரதம் வேறு,இதனால் வயிற்றுப்போக்கு வந்து நிரந்தரமாகிவிட்டது.உடனே சென்னைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்திருந்தால் என் அம்மாவின் ஆயுள் நீடித்திருக்கும்,அந்த வசதி அப்போது இல்லை,எனவே கடவுளை நம்புவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.‘எங்கள் அம்மாவை காப்பாற்று முருகா! நான் தான் தினமும் உன்னை பூஜிக்கின்றேனே......
கடவுள்-பூஜித்தால் உன்னை காப்பாற்றுவதா என் வேலை?
பின் வேறு எதற்கு கடவுள் வழிபாடு?
கடவுள்-உன்னை செய்யச் சொன்ன மனிதனைப் போய் கேள்.
என் சுய சிந்தனைகள் என் மண்டையில் உரைத்தது போல் இருந்தது.
வீட்டில் தானுண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்த மக்களை வீதியில் கோயில் கட்டவைத்து அதில் கற் சிலைகளை வடித்து ,
பிதிஷ்ட்டை என்கிற பெயரில் கும்பபிஷேகம் செய்ய வேண்டும் என ஊர் கூட்டி உண்டியலில் பணம் பார்க்கும் வேலையை பார்ப்பனர்கள் இது நாள் வரை செய்து வந்தனர், இனியும் செய்வார்கள்.,மக்கள் விழிப்படையவில்லை என்றால்........1972,நவம்பர்16(கார்திகை1) முன்னிரவு நேரம் 1 மணியளவில் என் அம்மா இறந்து போன பிறகு கடவுள் வழிபாடு பூஜை அறை செல்வதை நிறுத்தி விட்டேன்.இன்றளவும் இதே நிலைதான்.
மூன்று ஆண்டுகள் ஆய்வுக்குப்பின் 1975ல் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வந்தேன்.
45 வருடங்களாகிறது. கோயில் சென்றதில்லை, கடவுளை வழிபட்டது இல்லை.
எனக்கு சில பிரச்சினைகள் வந்தது,கடவுளை வணங்காததால் தான் எனக்கு பிரச்சினைகள் வருகிறது என நான் நம்புவதில்லை. பிரச்சினைகள் வரும், தானாக கடந்து போகும்.அல்லது நான் பிரச்சினைகளை கடந்து விடுவேன்.
1972 நவம்பரிலிருந்து 1975ம் ஆண்டு வரை பகுத்தறிவு வளர்க்கும் நூல்களை நூலகங்களில் தேடிப்பிடித்து படிப்பேன். அதே கால கட்டத்தில் ஆனந்தவிகடன் வாரப்பத்ரிக்கையில் பகுத்தறிவு வளர்கும் தொடர்கள் வரும்,என் மனதை தொட்ட வார்தைகள் இதோ.
ஆசைகள் ,எண்ணங்கள் யாவும் மனதில் உள்ளவரை அந்த எண்ணங்களுக்கு வசீகரம் இருக்கும்,அது வாய்விட்டு வரும்போது அதன் வசீகரம் போய்விடும்.எண்ணங்கள் ஈடேறாது.
God was created by rogue-இதன் பொருள், ‘ கடவுள் ஒரு அய்யோக்கியனால் உருவாக்கப்பட்டது’ இதில் எவ்வளவு பெரிய சிந்தனை உள்ளது? என்னை சிந்திக்கவைத்த பெரிய வார்த்தைகளே இவைதான். ரூசோ எனும் ஜெர்மனி தத்துவ ஞானி சொன்ன வார்த்தைகள் என படித்திருந்தேன்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? மனிதனை கடவுள் படைக்க வில்லை,மனிதன் தான் கடவுளை படைத்தான்,அவனுடைய சுய வளர்ச்சிக்காக, உழைக்கும் மக்களை ஏய்த்து பிழைக்க மட்டுமே கடவுள் படைக்கப்பட்டது.
1975லிருந்து என் மனதில் வாழ்ந்து வந்த கடவுள் உருவத்தை துடைத் தெறிந்தேன்,
அப்பத்தான் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சொன்ன ‘தன்னம்பிக்கை’ என் மனதில் நுழைந்தது. அறச்சிந்தனைகள் மனதில் வளர்ந்தது. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு அறச்சிந்தனைகளே முக்கியம் என்பதை உணர்ந்தேன். அதற்கு வலிமையான உடல் அவசியம் என்பதையும் உணர்ந்தேன்.(sound mind lies in sound body)
நான் தினமும் ஆரணி நூலகம் சென்று தினசரிகளை பார்த்து வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பணி வேண்டி விண்ணப்பிப்பேன். அப்படி வி்ணப்பித்த போது தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
அந்த வேலையும் போய்விட்டது, 20 நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். பின்னர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வேலைகிடைத்து சில அனுபவங்கள் கிடைத்தது.
பணியில் பயிற்சி (in service training) யின் போது 1984 (june &july) டெல்லி அருகே உள்ள ஹாப்பூர் எனும் நகரத்தில் 2 மாத பயிற்சி,பயிற்சி காலத்தில் உத்தர பிரதேசம் முழுவதும் 10 நாள் சுற்றுலாவில் பெற்ற அனுபவங்கள்
1989 ல் பம்பாய் சென்று 15 நாட்கள் தங்கி தமிழக அரசு சார்பாக பருப்பு கொள்முதல்,அப்போது ஜலகோவன்(பம்பாயில் இருந்து 400 கி.மி) எனும் ஊரில் 10 நாட்கள் வியாபாரி வீட்டில் தங்கியபோது கிடைத்த அனுபவம்,
1992ல் ஆந்திராவில் உள்ள விஜயவாடா எனும் நகரத்தில் 2 மாதங்கள் தங்கி காகிநாடா,
ராஜமந்திரி, மிரியால் குடா, ஐதராபாத் அருகே நலகொண்டா சூரியாபெட் நகரங்களில் தங்கி ரயில் வேகன் மற்றும் லாரிகளில் அரிசி அனுப்பிய அனுபவங்கள், 1993ல் உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் 2 மாதங்கள் தங்கி வேகனில் பருப்பு அனுப்பிய அனுபவம், 1995-96ல் பம்பாய், கான்பூர், கல்கட்டா போன்ற நகரங்களில் தங்கி பருப்பு அனுப்பிய அனுபவங்கள் எல்லாம் ஒன்று திரட்டிஓய்வு பெற்ற 2007 ம் ஆண்டில் என் பகுத்தறிவு சிந்தனைகளை கொண்டு 2008ல் ‘ஏழாம் அறிவு இயக்கம்’ சமூக இணைய தளத்தில் வலைதளத்தை ஆரம்பித்தேன். www.thiru-rationalism.blogspot.in
இன்று வரை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பார்வைக்கு இந்த வலைதளம் உள்ளது.
அதென்ன ஏழாம் அறிவு? மனிதர்களுக்கு ஆறு அறிவுதானே?
ஆறு அறிவு என்பது சுயமா சிந்தித்து செயல்படுவது.காட்டு வாசி மனிதர்களை நாகரிகப்படுத்த அய்யோக்கியர்களால் உருவாக்கப்பட்டது தான் கடவுள் கொள்கை. இந்த சிந்தனையை என் 22 வயது முதல் 25 வயது வரை, நான் ஆய்வு செய்த நூல்கள் மூலம் தெரிந்து கொண்டது.
அப்படி என்றால் கடவுள் இருந்தார்,இருக்கின்றார் இனி இருப்பார் என்பதெல்லாம் கற்பனையே, என்பது உண்மையாகிவிட்டது அல்லவா? இப்பொழுது நாம் தான் நாகரிகம் அடைந்து விட்டோமே இனி எதுக்கு கடவுள் வழிபாடு?
நாகரிகம் என்றால் என்ன? சக மனிதர்களை மதித்து வாழ்வது.சக மனிதர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்வது. இங்கே கடவுள் எங்கே வருகிறார்? இல்லாத கடவுளுக்கு இங்கே என்ன வேலை?
எனக்கு என்ன நடக்கின்றது? நாம் நினைப்பது ஏன் நடக்காமல் போகிறது?
தாானாக நடப்பதை கடவுளால் நடக்கின்றது என நான் ஏன் எண்ணிக் கொள்ள வேண்டும்?
நமக்கு மரணம் இல்லா வாழ்வு கிடையாது.ஆனால் மரணம் வரும்வரை நாம் வாழ வேண்டும். வாழுங்காலத்தில் நாம் வாழ்ந்த அடையாளமாக நம்முடைய பிள்ளைகளை இவ்வுலகில் விட்டுச் செல்ல வேண்டும்.
என் கிராமம் தான் எனக்கு தலை நகரம். என்னை சுற்றி உள்ள மக்கள் என்னிலும் வேறுபட்டவர்கள் என்பதை விட என் மக்களை விட நான் மாறு பட்டவன் என்பதே சரி.
நாம் உயிர் வாழ ‘இல்லாத’ கடவுளை ஏன் முன் நிறுத்த வேண்டும்?
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாக பொழுது கழிய வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்.உடல் பலம் கொண்டால் மட்டுமே உழைக்க முடியும். என் உடல் ஆரோக்கியம் கொண்டதாக இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டச் சத்து கிடைக்க வில்லை
நான் சுயமா சம்பாதிக்க ஆரம்பித்த வயசலிருந்து (1976) நான் தினமும் அசைவ உணவை விரும்பி உண்பேன்.ஆனால் என் உடல் ஏற்றுக்கொள்ள வில்லை. காரணம் அறிய மருத்துவர்களை நாடினேன்.
1980 ஜனவரியில் தான் எனக்கு TB தொற்று வந்துள்ளதை ஒரு மருத்துவர் கண்டறிந்தார். மூன்று மாதங்கள் தினமும் ஊசி போட்டால் 6 மாதங்களில் குணமாகிவிடும் என கூறினார். மருத்துவர் சொன்னது போல் 6 மாதங்களில் குணமாகி விட்டதை உணர்ந்தேன்.என் உடலில் ஒரு புது ரத்தம் பாய்வதை உணர்ந்தேன்.
எனக்கு கல்யாணம் செய்து கொள்ள ஆசை வந்தது.1980 அக்டோபர் 13ம் நாள் கல்யாணம் நடந்தது.எனக்கு பெண் கொடுத்தவர்களுக்கும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என தெரிந்தே பெண் கொடுத்தனர். மனைவிக்கும் மணமான அன்று மாலையே தெரிவித்து விட்டேன்.
என் மனைவி சொன்னாள், ‘கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் என்ன,எல்லாரும் உங்களை நல்லவர் என்று சொன்னார்கள்’ என்றாள்.
இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும், கெட்டவனாக இருப்பதற்கும் கடவுள் காரணமில்லை. அவன் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர்கள்,சுற்றத்தார், கற்ற கல்வி, பழக்க வழக்கங்கள்,ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே.
எதற்குமே காரணமில்லா கடவுளுக்கு கோயில் எதற்கு? அதை ஏன் நாம் வணங்க வேண்டும்? அப்படி கடவளை வணங்க வேண்டும் எனும் கட்டாயத்தில் இருப்பவர்கள் வீட்டிலே வணங்கலாமே?
கடவுளை பொது வழி பாட்டுத்தலங்களில் வணங்குவதால் தான் சாதி மதங்கள் உருவாக காரணமாகிறது. ‘என் மத கடவுள் உயர்ந்தவர்,உன் மதக்கடவுள் தாழ்ந்தவர்’ எனும் சச்சரவுகள் தோன்றுகிறது. இவையெல்லாம் மனித நாகரிகம் வளர்ச்சியடையா காலத்தில் இருந்தது,இன்று மனித நாகரிகம் தோன்றி 100 ஆண்டுகளாகிறது, இன்னமும் பொது வழிபாட்டுத்தலங்கள் இருப்பது என்பது மேலும் சமுக ஒற்றுமையை குலைக்கும் செயலாகும்.பொது வழிபாட்டுத் தலங்கள் வேண்டாமென்பதில் ஒரு சிக்கல் உள்ளதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.உலக மக்கள் தொகையில் 70 சதவிகித பேர்தான் கல்வி அறிவு பெற்றவர்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடுகளில் கடவுளை பூஜிக்க அறைகள் இருக்கும். ஆனால் சிறு குடிசை வாசிகளுக்கு கடவுள் படங்களையோ சிலைகளையோ வைத்து வழிபட இடமிருக்காது,
இவர்களுக்காகவே பொது வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன, காலப் போக்கில் வசதி படைத்தவர்களும் பொது வழிபாட்டுத் தலங்களுக்கு வருவது ஒரு சடங்காகிப்போனது. கோயிலுக்கு முன் உண்டியல் கட்டிவைப்பதும் கர்ப கிரகத்தை இருட்டாக்கி அங்கே சிலைகளை நிறுவி அதற்கு வெளிச்சம் போட்டுக்காட்ட கற்பூர தீபாரதனை செய்வதற்கு பணத்தை புரோகிதர் தட்டில் போடுவதும் ஒரு சடங்காகிப் போனது. நாளடைவில் அர்ச்சகர் தட்டில் காசு போடுவது கட்டாயமாகிவிட்டது.கிறித்துவ சர்ச்சுகளில் கூட பாவ மன்னிப்புக்கு காசு போடும் பழக்கம் இந்தியர்களிடையே வந்துவிட்டது. உண்டியல் வைப்பதும் பணம் வசூல் செய்வதும் இஸ்லாமியரிடையே காண முடிவதில்லை. மத வழிபாடுகளில் ஒழுக்க கட்டுப்பாடுகள் அதிகம் காணப்படுவது இஸ்லாம் மதத்தில் தான். சுய சிந்தனையற்ற மனிதர்களுக்கு மத ஒழுக்கமே சிறந்த தாக தெரிகிறது.
ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு சுய சிந்தனை அவசியம். ஆனால் அப்படி சிந்திக்காமல், காலம் காலமாக பெரியோர்கள், முன்னோர்கள் காட்டியே வழியே வாழப் பழகிக் கொண்டால் பிரச்சினை இருக்காது எனும் நம்பிக்கையில் இளைஞர்கள் பழகிக் கொள்கின்றனர். இதனால் மனிதர்களிடையே ஒட்டுண்ணிகள் வளர ஆம்பித்து விட்டனர். இதன் விளைவாக கடவுளை வணங்க கூட பொது வழி பாட்டுத்தலங்களில் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத்தரகர்கள் உருவாகி விட்டனர்.
கடவுளை வணங்க பொது வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்களை விட, அங்கே இருக்கும் இடைத்தரகர்கள் வாழும் வாழ்க்கை வசதியாக உள்ளன. இதற்காகவே பொது வழிபாட்டுத்தலங்களை மூட வேண்டும் என ஏழாம் அறிவு இயக்கம் வலியுறுத்துகிறது. கம்யூனிச நாடுகளில் பொது வழி பாட்டுத்தலங்களை காண முடியாது.
இப்பொழுது நான் வாழும் வாழ்க்கை என் 25 வயதில் மேற்கொண்டது. அப்பொழுது எனக்கு வேலை கிடைக்க வில்லை,வேலை கிடைத்து 5 ஆண்டுகள் கழித்து 1980 ல் கல்யாணம் ஆனது.
மனைவிக்கு கடவுள் வழிபாடு பழக்கம் இருந்தும்,என் மனம் மாறவில்லை, மனைவியின் கடவுள் வழிபாட்டில் நான் தலையிடவில்லை,பிள்ளைகள் தோன்றி வளர்ந்து படித்து தெளிவு ஏற்பட்ட பின் என்னை கேள்வி கேட்டார்கள்,
‘அப்பா, நீங்கள் கோயிலுக்குப் போவதில்லை, ஆனால் அம்மா எங்களை கோயிலுக்கு அழைக்கின்றாரே, நாங்கள் என்ன செய்வது?’
‘இந்த வயதில் தாய் சொல்லைக்கேட்டு நடப்பது தான் உங்களுக்கு நல்லது,நான், என் தாய் உள்ளவரை நான் பூஜை செய்தேன்,என் தாய் இறந்து போனதற்கு கடவுளால் தடுக்க முடியவில்லை, முடியாத கடவுளை வணங்கி பிரயோஜனம் இல்லை என உணர்ந்தேன்,
எனவே நான் சுயமாக கடவுளை வணங்குவதில்லை என முடிவெடுத்தேன்.’இப்பொழுதெல்லாம் பிள்ளைகளை என் மனைவி கோயிலுக்கு அழைப்பதில்லை, அவளும் கோயிலுக்கு செல்வதில்லை. வீட்டிலும் பூஜைகள் செய்வதில்லை. வீட்டுக்கு வந்த மருமகள்களும் அப்படியே பழகிக் கொண்டார்கள்.
சரி,பேரன் பேத்திகளை எப்படி வளர்ப்பது? கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு பூஜைசெய்வது மூலம் கடவுள் நம்மை காப்பாற்றுவார் எனும் எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்,இது பகுத்தறிவாளர் சிந்தனை.கடவுள் மறுப்பாளர் மனதில் இது போன்று சிந்தனை எழாது.
குழந்தைகளுக்கு வயசு ஏற ஏற அறிவு மாற்றம் வரும்,18 வயசுக்கு பிறகு குழந்தைகள் மனதில் சுய சிந்தனை வளரும்,20 அல்லது 25 வயதில் கடவுள் இல்லை எனும் நிலையை பேரன் பேத்திகள் உணர்வார்கள்.
நாகரிக சிந்தனைகள் வளரத் தொடங்கும். இந்நிலை தொடர்ந்தால் பொது உடைமை நாடுகள் போல் பொது வழிபாட்டுத் தலங்கள் இருக்காது, எல்லாரும் உழைத்து உண்ண வேண்டும் எனும் எண்ணம் வரும்,மாற்றம் வரும்.இப்பொழுதே பேரன் பேத்திகளுக்கு பிறந்த நாள் விழாக்கள் நடத்தி அவ்விழாவில் பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்து பெறவேண்டும் என நான் சொல்லி அவ்வாறே குழந்தைகள் செய்வதை நான் கண்குளிரக் காண்கின்றேன். அதே போல் வீட்டில் இறந்தவர்களின் படங்களை வைத்து குழந்தைகளை வணங்கச் சொல்வேன். இந்த பயிற்சி குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு பெரியவர்கள் மீது பற்று ஏற்பட்டு பாசம் வளரும்.
இப்படி ஒவ்வொருவர் வீட்டிலும் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தால் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சி ஏற்படும். சமுதாயத்திலும் சமத்துவம் ஏற்படும்.
என்னுடைய கல்லூரி படிப்புக்குப்பின் எங்கே வேலை,என்ன செய்வது என யோசித்த காலத்தில் ஆசிரியர் பயிற்சி எடுத்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவிட்டு காத்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தில் வேலை கிடைத்தது. நெல் அரிசி ஆகிய உணவுப்பொருளை பகுப்பாய்வு செய்து அதன் ஈரத்தன்மை மற்றும் கல் நொய் அளவீடுகளை ஆய்வு கூடத்தில் கண்டறியும் தரக்கட்டுப்பாடு ஆய்வக வேலை. இந்த பணியில் நேர்மை வேண்டும் என்பது அரசு மற்றும் துறை அதிகாரிகளின் ஆணை. என்னைப் போன்று வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியில் சேர்ந்த ஊழியருக்கு நேர்மையாக பணியாற்றுவதில் சில சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்.தரமற்ற நெல்லை கொண்டுவரும் நேர்மையான விவசாயிகளிடம் அறிவுரை கூறி பெற்றுக் கொள்ளலாம்,
ஆனால் தரமற்ற அரிசி கொண்டுவரும் வியாபாரிகளை எதிர் கொள்வதில் சிக்கல்தான்.
உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தலையீடு இருக்கும், எனக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள்,1985க்குப்பின் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள். இவர்கள் பணி நேர்மையாக இருக்காது. விவசாயிகளுக்கும் பிரச்சினை இருக்காது.
ஆனால் நேர்மையான அதிகாரிகளுக்கு அடிக்கடி மாற்றல் உத்தரவு வந்துவிடும். இதனால் அவர்களின் குடும்பத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும். குழந்தைகளின் படிப்பு கெட்டுப்போய்விடும்.எனக்கு பணியில் சேர்ந்த 5 ஆண்டுகள் அடிக்கடி மாற்றல் வரும்.கல்யாணம் ஆகி 5 ஆண்டுகள் அதாவது குழந்தைகள் பள்ளி செல்லும் வயது வரை என்னால் நேர்மையாக இருக்க முடிந்தது,அதன் பின் நேர்மையற்ற ஊழியர்களின் நேர்மையற்ற செயல்பாடுகளை கண்டும் காணாமல் போய்விடுவது,இது ஒன்றே தீர்வானது.
அப்போதைய செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக கஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது,இதற்கு மையப் பகுதியாக திருவள்ளூரில் குடும்பம் அமைப்பதில் எனக்கு ஒத்துப்போனது,1986-87ல் காஞ்சிபுரம் கிடங்கிலிருந்து நசரத் பேட்டை கிடங்கிற்கு பணி மாற்றம் செய்தார்கள்,இதனால் ஏற்கனவே திருவள்ளூரில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் குடும்பத்தை வைத்துவிட்டு குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு நான் தினமும் நசரத்பேட்டை கிடங்கிற்கு சென்று வந்தேன்,ஒரு வருடம் அங்கே பணி முடித்து பின் என்னை பொன்னேரிக்கு மாற்றினார்கள், பொன்னேரி பின் திம்மாவரம் என 1996 வரை திருவள்ளூரிலிருந்து பேருந்து மற்றும் தொடர்வண்டி என பயணித்து பணி புரிந்தேன்.
சொந்த வீடு என்பதால் குடும்பத்தை நடத்த மாத ஊதியம் ஓரளவுக்கு போதுமானதாக இருந்தது. இந்த கால கட்டத்தில் நான் தமிழ் நாடு அரசு சார்பாக அரிசி மற்றும் பருப்பு
கொள்முதல் செய்ய மும்பாய், ஜலகோவன், கான்பூர், கல்கட்டா மற்றும் ஆந்திர பகுதிகளான விஜயவாடா, ராஜ மந்திரி, மிரியால்குடா, நலகொண்டா,சூரியாபேட் போன்ற பகுதிகளில் பணி புரிந்துள்ளேன். இதனால் பல தரப்பட்ட மக்களோடு பழக நேர்ந்தது.
No comments:
Post a Comment