Wednesday, October 15, 2014

அன்றாட சுய சிந்தனை

இனி என்னுடைய அன்றாட 'சுய சிந்தனைக் கடிதங்களை' என்னுடைய முகநூல் வலை தளத்தில் படிக்கலாம்.தயவு செய்து படிக்க,face book.com/padaiveedu thiruvengadam.நன்றி,வணக்கம்.வலைதள நண்பர்கள் முக நூலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்

Wednesday, July 30, 2014

94-பள்ளிக் குழந்தைகள் தீக்கிரை,யார் பொறுப்பு?



94 பள்ளிக் குழந்தைகள் தீக்கிரை,யார் பொறுப்பு?

கும்பகோணத்தில் சூலை 16 2004 அன்று ஒரு தனியார் (கிருட்னா பள்ளி) பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 ஆரம்ப பள்ளி குழந்தைகள் கருகி விட்டன.பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் என நினைத்த பெற்றோர்களுக்கு சொல்லொணாத்துயரம்.

தான் பெற்ற பிள்ளைக்கு தனக்கு முன்னே மரணம் நேர்ந்தால்,பிள்ளையை பெற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது?

இவ்வளவு பெரிய மரணத்திற்கு எது காரணம்? அந்த காரணத்தை நீதி மன்றம் ஏன் குறிப்பிடவில்லை? பொறுப்பாளர்கள் 10 பேர் என சிறைதண்டனை வழங்கி தஞ்சை நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று அருகில் உள்ள கோயிலில் கடவுளுக்கு பூசை.அன்று அமாவாசை.குழந்தைகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் கோயிலுக்கு சென்று விட்டார்கள்.நாமெல்லாம் நல்லா இருக்கணும் என்றுதானே கடவுளை வணங்குகிறோம்.ஒரு பாவமும் அறியா அந்த பிஞ்சு உள்ளங்கள் (உடல்கள்) தீயில் கருக யார் காரணம்? கடவுள் தான் காரணம் என நீதி மன்றம் ஏன் தீர்ப்பு சொல்ல வில்லை?அல்லது குழந்தைகளை காப்பாற்ற வக்கில்லாத கடவுளை ஏன் வணங்கப்போனீர்கள்?அதனால் தான் உங்களுக்கு இந்த சிறை தண்டனை என நீதி மன்றம் ஏன் தீர்ப்புச் சொல்லவில்லை?

அது சரி தூங்கி எழுந்த உடன் கடவுளை வணங்குகிறோம்,குளிச்சி சாப்பிட்டு பள்ளி/அலுவலகம் புறப்படும் முன் கடவுளை வணங்குகிறோம்.பள்ளி அல்லது அலுவலகம் சென்று பணி துவங்குமுன் கடவுளை வணங்குகிறோம்.மாலை வீடு திரும்பியவுடன் கடவுளை வணங்குகிறோம்.பின் படுக்கப் போகுமுன் கடவுளை வணங்குகிறோம் இவ்வளவு ஏன் ? பாக்கெட்லியே கடவுள் படத்தை பத்திரமா வச்சிருக்கிறோம். நம்மவர்களை மட்டும் கடவுள் பத்திரமா ஏன் வச்சிக்கிறது இல்லை?
நமக்கு உதவி செய்பவர்களை மறந்துவிட்டு கடவுளால் தான் உதவி கிட்டியது என கல்லை நேசிக்கிறோம்.எங்கே மனித நேயம்?  

இதை ஏன் யாரும் சிந்திக்கிறது இல்லை? பள்ளிக்கூடத்தில் தீப்பொறியை பாதுகாக்க தெரியாதவர்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பார்கள்?கடவுள் பார்த்துப்பார் என கோயிலுக்கு சென்று விட்டார்களா?

மரணம் மனிதனுக்கு வயது முதிர்ச்சியால் வரட்டும்.அறிவீனத்தால் வரக்கூடாது.

                                         புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                            படைவீடு திருவேங்கடம்              

Tuesday, July 15, 2014

வேஷ்ட்டி தமிழரின் உடையா?



              வேஷ்ட்டி தமிழரின் உடையா?            16.07.14                

சென்னையில் சென்ற வாரம் ஒரு கிரிகட் சங்க கட்டிடத்தில் ஒரு விழா.அந்த விழாவில் கலந்துகொள்ள ஒரு நீநிபதி வேஷ்டி சட்டையணிந்து (இது தமிழரின் பாரம்பரிய உடையாம்!) சென்றுள்ளார்.அந்த கட்டிடத்தின் காவலாளி நீதிபதியை உள்ளே விடவில்லை.காவலாளிக்கு இடப்பட்ட உத்தரவு அது.அவர் வேலையை அவர் சரியாக செய்தார்.

ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போது மனிதர்கள் எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பது மனிதன், மனிதனுக்கு வகுத்துக்கொண்ட ஒரு நாகரிக பண்பாடு அல்லது வெளிப்பாடு.

தமிழன் பாரம்பரியமாகவே ஒரு வெய்யில் தொழிலாளி.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.அவனுடைய அடிப்படை இயல்புகளே வயலில் உழைப்பது,விளைபொருளை தனக்குப்போக நிழலாளிக்கு விற்று விடுவது.இனப்பெருக்கம்(காதல்) செய்வது.வீரத்தை காட்ட போரிடுவது.(மூர்கத்தனத்தை காட்டுவது)தன் இனத்தை காக்க அல்ல மற்ற இனத்தை காக்க.

உலகில் இதுபோன்று அறம் காக்கும் செயல் செய்வது தமிழ் இனம் மட்டுமே.அதனால் தான் தமிழனை அடிமை இனம் என்று கூறப்படுகிறது.இவர்களுக்கு வழிகாட்டியே பிராமணர்கள்தான். இவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு கருமாதியே (தோஷ பரிகாரம்) வீட்டில் செய்யமாட்டார்கள்.தீட்டு! அதனால் வீட்டுக்கு வெளியே குளக்கறையோ அல்லது ஆற்றங்கரையோ,அல்லது கடற்கரையோ தோர்ந்தெடுப்பார்கள்.சாவு வீட்டுக்குள்ள தானே  நடக்குது?.தோஷபரிகாரம் குளக்கரையில் செய்தால் எப்படி நிவர்த்தியாகும்?தமிழன் எதை சிந்தித்தான் இதை சிந்திப்பதற்கு?

வேஷ்ட்டி தமிழ் வார்தையே இல்லை.அப்படி இருக்க தமிழனுக்கு அது எப்படி உடையாகும்?
மர உரி தரித்த தமிழனுக்கு பின்னாளில் அரைக்கோவணமும் சித்தாடையும் வழங்கியதே நிழாலாளிகள் தான்.100-ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தில் பரவலாக இந்த ஆடைதான் இருந்தது.அதன் நினைவாக இப்பொழுதும் கிராமங்களில் வீட்டில் இறந்த வர்களுக்கு வைத்துப் படைப்பது அரைத்துண்டும் சித்தாடையும் தான்.(சித்தாடை என்பது 2*1/2 அடி அளவில்  கிடைக்கும் சிவப்புத் துண்டு) சென்ற நூற்றாண்டு வரை கிராம புற பெண்களின் பிரத்யோகமான ஆடையே இதுதான்.

எல்லாம் சரி.நமக்கு ஏன் காலம் மாறிப்போய் கூட பேன்ட் சட்டை அணியச் சொல்ல? பெரியவங்க முன்னாடி மரியாதை காட்ட முடியாது இல்ல? பெரியவங்க என்று சொன்னால் அவங்க(தமிழன்) வீட்டு பெரியவங்க அல்ல,கிராமத்தில் வசிக்கும் மற்ற இன மக்களான பிராமணர்கள்,பிள்ளைமார்,பணக்கார முதலாளிகள் போன்றோர் முன் நிற்கும் போது வேட்டியை மடித்துக்கட்டக்கூடாது.அதுதான் மரியாதை.அந்த மரியாதையை பேன்ட் போட்டவனிடம் பெற முடியுமா? முடியாதே .அதனால் தான் தமிழனுக்கு என்றைக்கும் வேட்டிதான்!

புது முறைச் சிந்தனைச் சிற்பி
படைவீடு திருவேங்கடம்         

Tuesday, July 1, 2014

நெற்றியில் குறிகள் எதற்கு?

                நெற்றியில் குறிகள் எதற்கு?
ஆன்மிக சிந்தனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சுய சிந்தனையற்ற, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைக் கொண்ட இந்திய மற்றும் தெற்காசிய மக்களுக்கு, கடந்த 100-ஆண்டுகளாக அறிவியலின் அற்புத கண்டு பிடிப்புகளான போக்குவரத்து,தொலைத்தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் பிரமிப்பூட்டுவதாக உள்ளன.
அப்பொழுது கூட நம்மக்களை சரியான அறிவியல் சிந்தனைக்கு செல்லும் கல்விப் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் படவில்லை.முன்னோர்கள் கடைபிடித்த சம்பரதாயம் மற்றும் சடங்குகள் பின்பற்றுவதில் தான் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதனாக வாழமுடியும், என
மத-ஆன்மிக குருக்கள்,
மனைவியை வெறுத்த வாழா வெட்டிகள்(முற்றும் துறந்த முனிவர்கள்?)
தம்மை வாழ்த்த மாட்டார்களா? என தாய் தந்தையரையும் உதாசினப்படுத்தி.உடன் பிறந்தவர்களையும் விரட்டிவிட்டு மடாலயங்களில் சரணடையும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.
இவர்கள் போடும் வேடங்கள் இருக்கிறதே அது கொஞ்ச நஞ்சமல்ல,
காவி உடை அணிதல்,
தாடி வைத்தல்,
மொட்டை போடல்,
விரதம் இருத்தல்,
எந்நேரமும் மந்திரம் செபித்தல் ( தாய் மொழி தவிர பிறமொழியில்)
அதுவும் தனக்கே புரியாத அர்த்தமற்ற மந்திரம் கற்றுக்கொண்டோம் எனும் மமதையில் பெரிய பெரிய ஆடம்பர மாளிகைப் போன்ற மடாலயம் அமைத்துக்கொண்டு அரசியல் தலைவர்களையும் தம் காலில் மண்டியிட வைத்தல் போன்ற கலாச்சாரம் பெருகிவிட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஆதாரம் அற்ற-யூகத்தின் அடிப்படையில்,அறிவியலை துணைக்கு இழுத்து பாமர மக்களையும்,வெய்யிலாளிகளையும் மூடநம்பிக்கையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களான பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சி பெட்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு அறிவியல் சிந்தனையே வேண்டாம் என முடி வெடுத்து இயங்குகின்றன.

உதாரணமாக இன்று தினமணி(27.06.2014) யில் ‘திருநீற்றின் மகத்துவம்’ என அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்திகளை நெற்றியில் இடும் சாம்பலைம்,குங்குமத்தையும் (இது எந்த மதப்பிரிவினர் வேறுபடுத்தி காண உதவும் நெற்றியில் இடும் ஒரு குறியீடு-இது பற்றி விரிவாக எனது வெளியீடான, ‘அறம் காத்த வர்மாக்கள்’எனும் நூலில் காணலாம்) அறிவியலாக்கும் முயற்சி, ஒரு அறிவீனர்களின் கற்பனா சக்தியின் வெளிப்பாடு.தினமணி போன்ற அறிவியல் தொடர்புடைய தினசரியில் இதுபோன்ற கட்டுரைகளை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
                                                புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                                படைவீடு திருவேங்கடம்
                                                நிறுவனர்:ஏழாம் அறிவு இயக்கம்

                                          Visit:www.thiru-rationalism.blogspot.in                   

Sunday, June 8, 2014

கடவுளிடம் மழை வேண்டி 10008 தேங்காய் உடைப்பு,மழை பொழிந்ததா?


   கடவுளிடம் மழை வேன்டி 10008 தேங்காய் உடைப்பு,மழை பொழிந்ததா?

 

உலகில் உள்ள எல்லா மதங்களின் கடவுளையும் எப்படி வணங்க வேண்டும் என அந்தந்த வேத நூல்களில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.எந்தக் கடவுளும் தனக்கு உணவுப் பொருளை வீணாக்கி அல்லது உணவுப்பொருளை அழித்து கோரிக்கை வைக்கவேண்டும் என எழுதப்படவில்லை அல்லது சொல்லப்படவில்லை.   இந்து மதத்தில்மட்டும் கடவுளை எப்படி பூசிக்க வேண்டும் என உப நிடதங்களில் விளக்கப்பட்டுள்ளது.உலகில் கடவுள் வழிபடு கொள்கை ஆரியர்களால் தான் வகுக்கப்பட்டது.ஆரம்பக்கட்டத்தில் கடவுளை அருவமான (உருவமற்ற நிலை) நிலையில் தான் வழிப்பட்டார்கள்.இந்நிலையில் உழைப்பாளிகளை ஈடு படுத்தமுடியவில்லை.உழைப்பாளிகளை கடவுள் வழிபடு கொள்கைக்கு(உருவ வழிபாடு) உட்படுத்தினால் தான் கடவுள் வழி படு கொள்கையை உருவாக்கியவர்கள் அதாவது நிழலாளிகள் சுக மாக வாழ முடியும் எனும் சூட்சமத்தை உழைப்பாளிகள் உணர முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் வகுக்கப்பட்டன.

 

வேதங்களையும் உப நிடதங்களையும் உழைப்பாளிகள் படிப்பது பாவம் என அறிவுறுத்தப்பட்டது.அதனால் உழைப்பாளிகளுக்கு படிக்கும் எண்ணமே வரவில்லை.அந்நாளில் வயிற்று உணவுக்கே அல்லல் பட்ட பிராமணர்கள் காடுகளில் கிடைக்கும் பழங்களையும் காய் களையுமே உண்டு வாழ்ந்தனர்.இத்தகைய உணவு பழக்கத்தால் உழைப்பாளிகள் போல் இனப்பெறுக்க விளையாட்டுகளில் ஈடு பட முடியாதது ஒரு பெரிய குற்ற உணர்வாகவே பிராமணர்கள் உணர்ந்தார்கள்.

 

பசுவின் பாலை அருந்தி மாட்டிறச்சியை உண்டு வந்த ஆரியர்கள் பசுவின் நெய்யை உணவுப்பொருளோடு உண்டால் உடலில் மிருக பலம் கிடைக்கும் என கணக்கிட்டனர்.கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தால் கண்ணனின் அருள் கிடைக்கும் என ஆயர் குல மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.எனவே மிகச்சிறந்த ஊட்டச்சத்தான பசுவின் நெய் பிராமணர்கள் இல்லந்தேடி வர ஆரம்பித்தது.இன்றும் வருகிறது.    

 

காலப்போக்கில் ஆயர் குல மக்களுக்கும் வர்மாக்களுக்கும் நாம் கொடுக்கும் உணவுப்பொருள் கடவுள் எப்படி உண்கிறார்  என்பதை கண்ணால் காண வேண்டும் என ஆவல் மேலிட்டது. இந்த சந்தேகத்தை எப்படி போக்குவது என பிராமணர்கள் ஆய்ந்தனர். அப்படிசிந்தனையில் உருவானதுதான் கடவுள் உருவ வழிபாடு. இனி பிரச்சினைகளை வெகு சுலபமாக சமாளித்து விடலாம் என கணக்குப்போட்டனர் . நெய்,காய் கனிகளை கடவுள் சிலைமுன் படைத்தால் அவர் பசி அடங்கி விடும் எனும் கதையை வெய்யிலாளிகளை நம்ப வைத்தனர் ,அது இன்றும் தொடர்கிறது உழைக்காமலேயே பிராமணர்கள் வயிற்றை நிரப்ப இதுதானே சிறந்த வழி!

 

மேலும் பிராமணர்களை கேட்காமலே உழைப்பாளிகளே தங்கள் விளைவிக்கும் உணவு பொருளை தாங்களே சிலையை செய்து அதற்கு தேங்காய் உடைத்தல் பலகாரம் படைத்தல் பாலபிசேகம் செய்தல் போன்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட,உணவை சீரழிக்கும்,சட்டத்துக்கு புறம்பான தண்டனைக்குறிய செயல்களை செய்கின்றனர் .உணவுப்பாதுகாப்பு தடைச்சட்டத்தின் மூலம் இத்தகைய செயல்களை தடுக்கலாம்.ஆனால் செய்யப்படுவது இல்லை ஏன்?

 

இன்றய செய்தியில் (தினமனி,08.06.2014)காரைக்கால் அருகே ஒருவர்(பக்தர்?) 10,008 தேங்காய்களை மழை வேண்டி பிரார்த்தனை செய்து உடைத்துள்ளார் ,எவ்வளவு பெரிய உணவுப்பொருளை வீணாக்கிய அந்த நபரை உணவுப்பாதுகாப்புச் சடேடத்தின் மூலம் கைது செய்தால் என்னவாம்?      

 

Tuesday, May 13, 2014

முரட்டுத் தமிழர்களுக்கு முன்னேற்றமே கிடையாதா?




            முரட்டுத் தமிழர்களுக்கு முன்னேற்றமே கிடையாதா?

சமிபத்தில் இந்திய உச்ச நீதி மன்றம், தமிழ் நாட்டில் வெகுநாட்களாக நடைபெற்றுவரும் சல்லிக்கட்டுக் காளை அடக்கும் போட்டியை தடை செய்துள்ளது.
தமிழர்கள் வீர விளையாட்டு என்று சொல்லி முரட்டுத்தனத்திற்கு வீரம் என்று புகழுரை கொடுத்து காலமெல்லாம் சுயமாக சிந்தனை செய்யவிடாமல்  தமிழர்களை முட்டாட்களாக்கி வந்த அரசியல் வாதிகளுக்கு ஒரு பெரிய மண்டையடி கொடுத்துள்ளது. 

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் தாயைப்பார்த்து மிரண்டு ஓடும். தாய்மீது வெறுப்புக் கொள்ளும். அந்த குழந்தைகளின் மன நிலையில்த்தான் இன்று தமிழர்கள் இருக்கின்றனர்.இவர்களை வழி நடத்திச்செல்ல இதுவரை ஒரு தலைவன் கூட அமையவில்லை.
உலகத்தில் தோன்றிய எத்தனையோ மனித இனங்கள் தோன்றி அழிந்துவிட்டது.தமிழைப் பேசுவதால் மட்டுமே தமிழ் இனம் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள், மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த வெள்ளையின மக்களிடம் அடிமைப்பட்டு 3000-ம் ஆண்டுகளாகிவிட்டது.அன்றாட வாழ்க்கையில் அறிவியியலைப் பயன்படுத்தாத இனம் தமிழினம்.அதனல்தான் தன் முரட்டு குணங்களால் மற்ற இனங்களிடம் அடிமைப்பட்டு இருக்கின்றது.

முரட்டு மனிதர்களை அடிமைப்படுத்த பயன் படுத்தப்பட்ட வார்த்தைதான் வீரம் .வீரன் எனும் புகழ் வார்த்தையில் மயங்கி அதை அடைவதற்காக வாழ்க்கையை வீணாக்கிக் கொண்ட உலகத்தின் முரட்டு மனிதர்களில் தமிழர்கள் முந்தி நிற்கின்றனர்.இதற்கு ராமயண கதா பாத்திரங்கள் முதல் எடுத்துக்காட்டு.

மனிதனுக்கு உடல் பலம் முக்கியம்தான்,அதைவிட மூளை பலம் முக்கியம் என்பதை தமிழர்களுக்கு உணர்த்த இங்கு தலைவர்கள் இல்லை.அப்படி அவ்வளவு சீக்கிரம் தமிழர்களை விவேகமுள்ள மனிதர்களாக மாற்றிவிடுவோமா என்ன? என்று அனைத்து அரசியல் தலைவர்களும் தடை செய்யப்பட்ட சல்லிக்கட்டை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்.

வாழும் கலையை சொல்லித்தருகிறேன் என சொல்லி உழைப்பாளிகளின் பணத்தை சுரண்டும் இயக்கங்கள் தான் இருக்கின்றன.தமிழர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த இயக்கமும் இல்லை.ஏழாம் அறிவு இயக்கம் மட்டுமே அதற்காக இலவசமாக இயங்குகிறது .இலவச பொருட்களை அடைய நினைக்கும் உழைப்பாளி சமுதாயம் ,பணத்தை எவ்வாறு மிச்சப்படுத்தி எவ்வாறு சேமிப்பு செய்வது என இலவசமாக சொல்லித்தரும் ஏழாம் அறிவு இயக்கத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் வீரவிளையாட்டுக்களை தடை செய்யப் படவேண்டும்.அவர்களுக்கு பரிசளிக்கிறேன் என மயக்கும் இயக்கங்களை தடை செய்யப் படவேண்டும்.பள்ளி கல்லூரிகளில் அறிவார்ந்த பயிற்சிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்.இதற்கு அரசியல் தலைவர்கள் பாடுபடவேண்டும்.அப்பொழுதுதான் அமைதியான,அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை நாம் காணமுடியும். 

இதுவரை பரிசு பெற்ற விளையாட்டு வீரர்கள் தன் பிள்ளைகளை பெரிய படிப்பாளியாக்கி இருக்கின்றனரா? விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் எத்தனைபேர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என பட்டியலிடமுடியுமா?  சல்லிக்கட்டில் மாட்டை அடக்கி விட்டால் மனிதன் அறிவியல் சிந்தனையை எட்ட முடியுமா? எங்கே போகிறது தமிழகம். ஏன் இந்த அடம்?தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் நவீன சிநதனைக்கு மாறுவது எப்போது?

மனிதனை மனிதன் ஏன் சுமக்க வேண்டும்?



                    ஏழாம் அறிவு இயக்கம்
           (Visit: www.thiru-rationalism,blogspot.in)
  (இது ஒரு பகுத்தறிவாத இயக்கம்-கடவுள் மறுப்பு இயக்கமல்ல)
               நிறுவனர்:  படைவீடு திருவேங்கடம்
தலைமையகம்,4-பெரியார் தெரு,கண்ணதாசன் நகர்,திருவள்ளூர்-602001

         உலகைப் படைத்தது கடவுளாகவே இருக்கட்டும்
அதைப்பூட்டி வைத்து பூஜை செய்தால் உன் பேச்சைக் கேட்குமா?

பெறுநர்                                                                     11.05.2014
                பொது தகவல் அலுவலர் ,கோயில் நிர்வாகம்
               வைத்திய வீர ராகவா கோயில்
               தேவஸ்த்தானம்-திருவள்ளூர்-602001.

(தகவல் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரி விண்ணப்பம்)

அய்யா,      பொருள்: வீர ராகவர் வீதி உலா-பல்லக்கில் சுவாமியோடு
                           4-5பிராமணர்களை சுமக்கும் மனிதர்கள்.சுமக்க
                           முடியாமல் திணரல்-மனித உரிமை மீறல் குறித்து

திருவள்ளூரில் இப்பொழுது வீர ராகவர் கோயில் பிரம்மோற்சவம் நடக்கும் காலம்.சுவாமி ,பல்லக்கில் வீதி உலா வரும் நேரம். மனிதர்கள் சுவாமியை பல்லக்கில் சுமந்து வந்தனர். அதே  பல்லக்கில் சுவாமி சிலை சுற்றி 4 அல்லது 5 பிராமணர்கள் அமர்ந்து ஒருவர் சாமிக்கு சாமரம் வீசுவதும் மற்ற நான்கு பிராமணர்களும் உறங்கிக்கொண்டு வருவதை நான் பார்த்தேன்(நாள்-08.05.14,காலை 8.30 மணி,வடக்கு ராசவீதி)

சுவாமியை மனிதன் பல்லக்கில் சுமக்கட்டும் தவறில்லை,ஆனால் மனிதர்கள் தூக்கமுடியாமல் சுமந்து வரும் அதே பல்லக்கில் நான்கைந்து பிராமணர்கள் சுகமாக அமர்ந்து வருவது எந்த வகையில் நியாயம்? அப்படி சுமக்க    வேண்டும் என கோயில் நிர்வாகத்தின் உத்தரவா? அல்லது தமிழ் நாடு அரசின் அறநிலையத் துறையின் உத்தரவா? அல்லது அகோபில மடத்தின் உத்தரவா? அப்படி இருந்தால் ஆணையின் நகலை எனக்கு அனுப்பும் படி வேண்டுகிறேன்.

மனிதன் மலத்தை மனிதன் சுமப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது குற்றம் என உத்தரவிடப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல அது மனித உரிமை மீறல் ஆகும்.                                              
அப்படி இருக்க, மலத்துடன் இருக்கும் மனிதர்களை, மனிதர்கள் சுமக்கலாமா? இது மனித உரிமை மீறல் ஆகாதா?

இது குறித்து மேற்கண்ட முகவரிக்கு தகுந்த தகவல் அளிக்கும்படி தகவல் உரிமைச்சட்டம்,2005 ன் கீழ் தங்களை வேண்டுகிறேன்.    
வணக்கம்
                                                           இவண்
                                                 புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                                படைவீடு திருவேங்கடம்
                           இது குறித்து உதவி   அறநிலையத்துறை ஆணையருக்கு(வேலூர்) மேல் முறையீடு செய்தேன்,அவர் அனுப்பிய பதில் கீழ் கண்டவாறு,"திரு பாதம் தாங்கிகள் (பல்லக்கு தூக்குவார்கள்)அவர்கள் மனமுவந்து செய்யும் கைங்கர்யாம் அதில் கோயில் நிர்வாகம் தலையிடாது"
             

Wednesday, April 30, 2014

மழை வேண்டி வருண ஜபம்-கடவுளை ஏமாத்தவா?



                வான் மழை வேண்டி வருண ஜபம்


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

தானம் தவம் இரண்டும் தாங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானம் பொய்ப்பது வழக்கமாகிவிட்டது. இது ஏன் இப்படி நடக்கிறது என்பது அறிவியலுக்கு உட்படாத விசயமாகவே உள்ளது. வான்மழை தவரா இடத்தில் வளம் கொழிக்கும்.வளம் கொழிக்கும் பூமியில் நாம் வணங்குவதால் தான் வான் மழை பொழிகிறது என  உலகத்தில் எல்லா மதங்களும் சொல்கிறது. காடுகளிலும் கடலிலும் மழைபொழிகிறதே  அங்கே யார் கடவுளை வணங்குகிறார்கள் ?

சரி கடவுளை வணங்கினால்தான் மழை பொழியும் எனில் வணங்காவிட்டால் மழைபொழியக்கூடாது ,அல்லது மழையினால் சேதம் உண்டாகக்கூடாது.இதற்கு கடவுளை வணங்கினால் பரிகாரம் உண்டா?

29.04.2014 தேதியிட்ட (தினமணி) செய்தித்தாளில் தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்களெல்லாம் கூடி வருண ஜபம் செய்தனர், என செய்தி வெளியிட்டிருந்தனர். இது அரசு உத்தரவாம்.அரசு உத்தரவிட்டு மழை பொழியட்டும்.அதே நேரத்தில் மழையினால் ஏற்படும் சேதத்திற்கு அரசு ஆணையிட்டு மழையை நிறுத்தலாமே?
மழை பொய்த்துவிட்டால் பூசை செல்லாது என முதுபெரும் தமிழ்ப்புலவரின் வாக்கு.அவர்வாக்கு என்றும் பொய்த்ததில்லை. ஆனால் மழை பொய்த்துவிடுகிறது.

இந்த வருண ஜபம் செய்கிறார்களே யாரை சமாதானப்படுத்துவதற்கு?அல்லது யாரை நம்ப வைக்கப் பார்கிறார்கள்?
மழை பொழியவில்லை.பயிர்கள் வாடுகின்றன அல்லது முற்றிலும் அழிந்துவிட்டன.இதற்கு யார்பொருப்பு? இதற்குமட்டும் மனிதன் பொருப்பு.மழைப் பொழிந்து பயிர் செழித்தால் மட்டும் கடவுள் பொருப்பா?
அர்ச்சகர்களுக்கு ஏன் இந்த பசப்பு நாடகம்?    

Tuesday, April 1, 2014

சுயமாக சிந்திப்பது எப்போது?




உணவுப்பொருட்கள் என்பது விலங்குகளும் ,மனிதர்களும் உயிர்வாழ இயற்கையாகவே இம்மண்ணுலகில் விளைகிறது. விலங்குகள் பச்சையாகவே உண்ணுகின்றன.மனிதர்கள் சிலவற்றை பச்சையாகவும் பல வற்றை வேகவைத்து வாய் ருசிக்கு ஏற்றவாறு சமைத்து உண்கின்றனர்.

உலகில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகித நில வாழ் மக்களுக்கு உண்ண உணவு கிடைப்பதில்லை.இவர்கள் யாவரும் வெய்யில் உழைப்பாளிகளே.இவர்களுக்கு உழைக்க தெரியும் திருடத் தெரியாது. இருப்பவரிடம் இருந்து கொள்ளையடிக்கத்தெரியாது.உடல் பலம் அற்றவர்கள்.இவர்கள் உழைப்பை சுரண்டும் நிழலாளிகள், ஒரு நாளுக்கு மூணுவேளை உணவருந்த போதிய ஊதியம் தரமாட்டார்கள்.

சமிபத்தில் ஒரு செய்தி,சென்னை அருகே ஒரு அம்மன் சிலைக்கு 1008 இளநீர் அபிசேகம்  செய்து தங்கள் நேர்திக்கடனை முடித்துக்கொண்டார்கள் என படித்தேன்.           
இளநீர் என்பது மனிதனுக்கு இயற்கை அளித்திட்ட அருமையான ஒரு பாதுகாக்கப்பட்ட மினரல்(தாது) நீர்.மனிதனின் உடல் உருப்புகள் நன்கு இயங்கும் அளவுக்கு தேவைப்படும் சாதாரண குடிநீரைவிட அருமருத்து.தற்பொழுது ஒரு இளநீரின் விலை குறைந்த பட்சம் ரூ20.00 ஆகிறது.அம்மை போன்று தாக்கப்பட்டுள்ள ஏழை நோயாளிகளுக்கு ஒரு இளநீர் வாங்கி தர முடியவில்லை. அம்மனுக்கு (கற்சிலைக்கு) இளநீர் ஊற்றுவதால் யாருக்கு பயன்?
அழும் குழந்தைக்கு பால் கிடைக்காதபோது அதை கற்சிலைக்கு ஊற்றினால் யாருக்கு என்ன பயன் விளையப்போகிறது?

வெய்யிலாளிகளின் வியர்வையில் உழைத்து நிழாலாளிகள் குண்டி கொழுக்கட்டும்.தவறில்லை. ஆனால் கடவுள் மனம் குளிரட்டும் என இளநீர் அபிசேகம் செய்யும் நிழலாளிகள் அம்மனிடம் வாங்கிக்கொண்டது நீரிழிவு நோயைத்தானே?
சுயமாக இவன் சிந்திப்பது எப்போது?   


Thursday, February 20, 2014

tamil magan reception text

23.02.2014 அன்று திருவள்ளூரில் பெரியார் விருது பெற்ற எழுத்தாளர் தமிழ் மகனுக்கு, ஏழாம் அறிவு இயக்க நிறுவனர் படைவீடு திருவேங்கடம் வாசித்து அளித்த
வரவேற்புரை
நமது தமிழ் சமுதாயம் இரு பெரும் பிரிவுகளை கொண்டது.பண்பட்ட இலக்கிய சமுதாயம்.இன்னொன்று கரடுமுரடான சமுதாயம். இதனை வேறு வகையில் கூட கூறலாம் ;ஒன்று நாகரிக சமுதாயம் மற்றொன்று காட்டு மிராண்டி(அநாகரிக) சமுதாயம்.

நாகரிக சமுதாயம் இலக்கியங்கள் படைத்தது,மொழி சிறப்பை பாதுகாத்து மற்ற இணை மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஒரியா போன்ற மொழிகள்,சமத்கிருதத்தோடு இணைந்து உருவாக தமிழ் மூல மொழியாக விளங்கியது.இன்றும் விளங்குகிறது.

உண்மை இலக்கியங்கள் படைத்த தமிழ் சமுதாயம்,சமத்கிருதம் வந்தபின் இறைவனை படைத்து இல்லாததையும் இருப்பது போல் பாவித்து சமய இலக்கியங்கள் ஏராளமாக இயற்றப்பட்டன.அவை சைவ இலக்கியங்கள் எனவும் வைணவ இலக்கியங்கள் எனவும் பெயர் பெற்றன.சைவக் கடவுளுக்கு ஆதி சிவம் என்றும் ஒரு பெயருண்டு; ஆனால் ஆதி வைணவம் என்று ஒன்று இல்லை. காரணம் தமிழ் கண்டது சைவம் மதம் மட்டுமே ஆரியர்கள்,தமிழர்களிடையே சமத்கிருதம் திணித்தது தமிழில் வைணவ மதத்தை பரப்பினர்.

இன்றளவும் பண்பட்ட தமிழ் இலக்கிய சமுதாயம் பிளவு படவே இல்லை.ஆனால் முரண்பட்ட முரட்டு தமிழ் சமுதாயம் பிளவு பட்டு பல மத மற்றும் சாதிகளுக்கு வித்திட்டது.அந்த முரண்பட்ட சமுதாயத்துக்கு வீர பரம்பரை எனவும் கங்கை கொண்டான் கடாரம் வென்றான் எனவும் புகழ் பாடி இலக்கியங்கள் தோன்றின.முரட்டு மன்னர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.அன்று மயங்கிய முரட்டு தமிழ் சமுதாயம் இன்னும் தெளியவில்லை.

மனிதர்களை ஆளவேண்டும் என ஆசைப்பட்டவர்கள்,இவர்களுக்கு கல்வி அறிவே இல்லாமல் பார்துக்கொண்டார்கள். இதன் காரணமாக வெய்யில் தமிழ் சமுதாயம் எனவும்,மற்றொன்று நிழல் தமிழ் சமுதாயம் எனவும் உருவாயிற்று. இதைத்தான் நாகரிக மற்றும் அநாகரிக தமிழ் சமுதாயம் என ஆரம்பத்தில் கூறினேன்.

நிழல் தமிழ் சமுதாயம் மானம் காக்கும் தொழிலான ஆடைத்தயாரிப்பு மற்றும் மொழி மானம் காக்கும் இலக்கண இலக்கியத் தயாரிப்பு தொழிலை பார்துக்கொண்டது.
வெய்யில் தமிழ் சமுதாயம் உயிர்காக்கும் விவசாயக்கூலிகளாக,வீடுகட்டும் கூலிகளாக,வாழ்ந்தனர்; இன்றளவும் வாழ்கின்றனர்.
அந்த இரண்டு வகையான சமுதாயத்தை சார்ந்தவர்களும் இங்கே கூடியிருக்கின்றனர்.நான் சாதியம் பேசவில்லை. தமிழில் இறைவழிபாட்டு இலக்கியங்கள் தோன்றியபின்தான் சாதியம் தோன்ற காரணமாயிற்று.

கம்பனுக்குப்பின் ஒரு இலக்கிய காவியம் தோன்றவில்லை என தமிழ் சமுதாயம் ஏங்கிய நேரத்தில் இன்று நம்காலத்து கம்பன் என வருணிக்கப்படும் இங்கே இந்த விழாவுக்கு தலைமை ஏற்க இசைவு தந்திருக்கும் முத்தமிழ் புலவர்,
இளய பல்லவன் கருணாகரத் தொண்டைமான் எனும் காபியத்தை இயற்றியவருமான திரு செம்மங்குடி துரையரசன் முரட்டு தமிழ் சமுதாயத்தின் வழித்தோன்றல்.பரணி பாடப்பட்ட கருணாகரனின் வாரிசு.
பண்பட்ட தமிழ் சமுதாயத்தின் 19-ம் நூற்றாண்டின் தன்னிகரற்ற புலவரும் மனோன்மணியம் இயற்றிய சுந்தரம் பிள்ளை மற்றும் 20-ம் நூற்றாண்டின் பகுத்தறிவு சிந்தனைக் கவியின் வழித்தோன்றல்கள்,ஏகலைவன் வம்சா வழியினராக வந்துள்ள தமிழ்மகனைப் பாராட்ட இங்கே வீற்றிருப்பது இந்த விழாவுக்கு இன்னொரு சிறப்பு.
அப்படி அந்த முரட்டு சமுதாயத்துக்கு சொந்தக்காரரான திரு தமிழ் மகன் எம் சொந்தம் என்பதில் எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் .பண்பட்ட தமிழ் இலக்கியத்தின் குஞ்சுகாளன சிறுகதை மற்றும் நெடுங்கதைகளை இயற்றி வருகிறார்.சிறு மற்றும் நெடுங்கதைகளை பாமர இலக்கியம் என்றே கூறலாம்.
எழுத்தாளர் தமிழ் மகன் வெய்யில் தமிழ் சமுதாயத்தின் வெளிப்பாடு,சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் புகழ்பெற்ற தமிழ் வார இதழில் எழுதி வருகின்றார்.
சிறந்த பொழுது போக்கு தன்மைகளை கொண்ட சுவை மிக்க கதைகளை படைத்துள்ளார்.இவர் மண்ணின் மைந்தர்களின் மாண்புகளை வெளிப்படுத்துகிறார். அவற்றுள் சிறப்பானது வெட்டுப்புலி,மற்றும் தற்போது ஆனந்த விகடனில் வெளி வரும் ஆபரேசன் நோவா .
இது ஒரு சிறந்த அறிவியலைச் சார்ந்த கற்பனைத்தொடர்-ஒரு நெடுந்தொடர். புகழ் பெற்ற அறிவியலாளரும் அறிவியல் தொடர் கதைக்கு முன்னோடியுமான எழுத்தாளர் சுஜாதாவின் சாயல் இவர் கதையில் காணமுடிகிறது.எழுதுவது இவர் குலத்தொழிலல்ல.இக்கால மாற்றம் இவரை கதை எழுத தூண்டியது.
இங்கே வீற்றிருக்கும் இருவேறு தமிழ் சமுக சான்றோர்கள் இவருக்கு வழி காட்ட வேண்டும் வாழ்த்த வேண்டும். தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல அனைத்து சமுக மக்களுக்கும் பயன் படும் வகையில் இவர் எழுதும் கதைகளில் அறிவியல் சார்ந்த மற்றும் பகுத்தறிவாத சிந்தனைகளை வெளிப்படுத்தவேண்டும் என இத்தருணத்தில் இவருக்கு விண்ணப்பிக்கிறேன்.இவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து அதுவும் நோயில்லாமல் வாழ்ந்து பல சிறந்த பகுத்தறிவு சிந்தனை வளர்க்கும் கதைகளை வெளியிடவேண்டும் என வாழ்த்துகிறேன்.

Saturday, January 11, 2014

சடங்குகள் அறிவியல் பூர்வமானதா?




               சடங்குகள் அறிவியல் பூர்வமானதா?

சடங்குகள் காட்டுமிராண்டித்தனமானது. உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் வாழ்நாளை மகிழ்ச்சிகரமாக மாற்றி வாழ ஆசைப்படுபவர்கள்தான். இதற்கு மூலதனங்கள் இரண்டு மட்டுமே, ஒன்று உழைப்பு மற்றொன்று உடல்

உழைப்பு உடலைச் சார்ந்தது;
உடல் மனதைச் சார்ந்தது.
மனிதனின் உடலும் மனதும் உலகில் பெரும்பங்கு வகிக்கின்றது.
உடல் பருப்பொருள்.
மனம் அருவமானது,ஆனால் பலம் வாய்ந்தது.
இந்த உண்மையை பல மதங்கள் தங்கள் வேத நூல்கள் மூலம் விளக்கியுள்ளன.
அறிவியல் வேறு,ஆன்மீகம் வேறு. இருவேறு கோட்பாடுகளும் என்றுமே இணையாது.
அறிவியல் பருப் பொருளைக் கொண்டது. சந்தேகங்களை களையக்கூடியது.
பிரபஞ்ச கோட்பாட்டுக்கு(பேரண்ட கொள்கைக்கு) அப்பாற்பட்டது.
இங்குதான் ஆன்மீகம் நுழைகிறது.எப்பொழுதோ நுழைந்து விட்டது.மனிதனோடு- மனதோடு இழைந்து,இயங்குகிறது.இதனால் மனிதன் வாழ்வில் சடங்குகள் அதிகமாகிவிட்டது.

சூரியக்குடும்பத்தில் கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு  சூரியனைச் சுற்றுகிறது.

அறிவியல் கோட்பாட்டின் படி ஒரு பொருள்(கோள்) இயங்க ஒரு விசை தேவைப்படுகிறது.இந்த கோள்கள்(பூமி,சுக்ரன்,புதன்,செவ்வாய்,வியாழன்,சனி போன்ற கிரகம்)  இயக்கம் தான் கடவுளால் நடக்கிறது என்பது ஆன்மீக வாதிகளின் கொள்கை.

கோள்கள் நிரந்தரமானது. கோள்கள் மீது இயங்கும் உயிர்ப்பொருள் நிரந்தரமற்றது. அழியக்கூடியது.ஆனால் மீண்டும் வளரக்கூடியது. கோள்கள் இயங்குவதும்,பூமி மீது உயினங்கள் தோன்றுவதும்  அழிவதும் புரியாத புதிராக உள்ளது.

உயிரினங்களில் மனித இனம் அபூர்வமானது,அதிசயமானது. மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்றாலும் அதில் மிருக குணங்களிலிருந்து வேறுபடும் பேச்சு,சிந்தனை,சிரிப்பு,அழுகை போன்ற உணர்வுகள் மனிதனாக்குகிறது.

பூமியில், மனிதன் வாழ்நாளை அர்த்தமுள்ளதாக்குகிறது.மனித மனம் வாழ்வில் அர்த்தம் தேடுகிறது.

மனிதனுக்கு ஏழுபிறவிகள்,ஏழு உலகங்கள் வாழ்க்கை உள்ளது  என காணமுடியாத உணரமுடியாத கற்பனைகளுக்கு மனதை ஈடுபடுத்தி மனம் போன போக்கில் கதைகளை புனையவிட்டனர்.

மனித பிறவியின் மூலத்தையும் உலகின் - பிறப்பின் மூலத்தையும் மனித மனம் அறிய முற்படுகிறது,பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உலா வரலாம் என நினைத்து  ஆய்வுகள் நடத்தப்படுகிறது.பிரம்மாண்டமான தொலைநோக்கு கருவிகள் மூலம் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய ஆய்வுகள் யாவும் மெய்ப்பொருளானது.மனிதன் வாழ சடங்குகள் போதாதா? அறிவியல் எதற்கு ? என கோட்கும் இன்றளவும் படித்த பாமர மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

பூமியில் கிடைக்கும் பொருட்களை வைத்து மனிதன் புதுமைகளை படைத்தான்.படைக்கின்றான்.மிருகங்களைப்போல் மனிதன் வாழ விரும்புவதில்லை.மிருகங்களுக்கு அறிவியல் தேவையில்லை.சிந்தனை தேவையில்லை,சுய சிந்தனை தேவையில்லை.
ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இப்படியே வாழ்ந்து முடிக்கின்றனர்.ஏமாற்றி பிழைக்கும் மனிதர்களுக்கு இது போன்ற மனிதர்கள் தேவை.

ஒரு மனிதன் தன்னோடு பழகும்போது எதற்காக நம்மோடு நட்புகொள்ள விரும்புகிறான் என்பதை தெரிந்துகொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதைப்போன்ற சிந்தனைகள் நம்மில் பொரும்பாலோருக்கு இருப்பதில்லை.

அன்புப் பரிமாற்றம்
பணப்பரிமாற்றம்
பொருள்ப் பரிமாற்றம்
உணவுப் பரிமாற்றம்
உடைப்பரிமாற்றம்
இருப்பிடப் பரிமாற்றம்
கருத்துப் பரிமாற்றம்
இப்படி பல பரிமாற்றங்கள் சமுதாயத்தில் உலா வருகின்றன. பரிமாற்றங்கள் என்பது இருதரப்பினருக்கும் இணையாக, சமமாக இருக்க நம்மை தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்.

சமதர்ம-சமச்சீர் கல்வி உள்ள சமுதாயத்தில் மட்டுமே இவை சாத்தியம்.ஏற்றத்தாழ்வற்ற பகுத்தறிவாத கல்வி அமைப்பைப் பெற்றிட்ட அல்லது அளிக்க முன்வரும் ஆட்சியாளர்கள் இருந்தால் ஒழிய இத்தகைய சமுதாயம் அமையாது.

மக்கள் கல்வி அமைப்பை பெற அரசாங்கம் மட்டும் பொருப்பல்ல.ஊடகத்துறைக்கும் முக்கிய பங்கு உண்டு.மக்களின் மத்தியில் காட்டுமிராண்டித்தனமான மூட பழக்கவழக்கங்களுக்கு அறிவியல் பூர்வமான சாயம் பூசும் வேலைகளை ஊடகத்துறைகளான தொலைக்காட்சி,திரைப்படம் மற்றும் பத்திரிக்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

மக்களின் பொதுக் குடிநீர்த் தொட்டியில் சில சமுக விரோதிகள் விடம் கலப்பதுபோல, கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களில் உடலை கெடுக்கும் அதே நேரத்தில் கொள்ளை லாபம் பார்க்க நினைக்கும் மன சாட்சி அற்ற வியாபாரிகளைப்போல மூட நம்பிக்கைக்கு அறிவியல் சாயம்பூசி பணம் பார்க்கும் பத்திரிக்கைகளை நல்வழிப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.

அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் பேரழிவுகளுக்கும் கற்பனையான அதியசங்களுக்கும் பத்திரிக்கைகள் விளக்க செய்திகளை வெளியிடுகின்றன.

20 ஆண்டுகளுக்கு முன் (மத்திய பிரதேசம்) போபாலில் நள்ளிரவு நேரத்தில் ஒரு அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து சைனைட் என்கிற கொடிய விடவாயு காற்றிலே பரவி, உறங்கிக்கொண்டிருந்த  சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டுவிட்டனர்.இது ஒரு விரும்பதாகாத மாபெரும் துயர சம்பவம்.

தினம் ஒரு தகவல் தரும் ஒரு மாபெரும் தமிழ்ப் பத்திரிக்கை(தினத்தந்தி) சமீபத்தில் இத்தகவலை வெளியிட்டது. அந்த நள்ளிரவு நேரத்தில் அங்கே அருகில் உள்ள கிராமத்தில்-இரண்டு குடும்பத்தில் கணபதி ஓமம் செய்து கொண்டிருந்தார்களாம்.

(கணபதி ஓமம் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகள். அதாவது காடுகளில் கிடைக்கும் வித விதமான விறகு கட்டைகளை கொளுத்தி அதில் அத்தியாவிசிய உணவுப்பொருளான அரிசி மற்றும் பசு நெய் ஊற்றி தீயிட்டு எரிப்பது.- ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றும் பொய்களை நம்ப வைக்கும் செயல்கள் எல்லாமே காட்டு மிராண்டித் தனமானதுதான்)

அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம். மனிதன் சடங்குகள் செய்துகொள்ளட்டும். அது அவன் மனதை திருப்தி செய்யட்டும்.இதில் உணவு பொருளை வீணாக்குவதும்,தீயிட்டு கொளுத்துவதும் மன நிலை பாதிப்பின் உச்சகட்டும். இதனை எந்த அரசும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதில்லை.இது மக்களை ஏமாற்றும் செயல் என்பது படித்தவர்களும் புரிந்து கொள்வதில்லை என்பது தான் வேதனையானது.

மனிதர்களை விடவாயு தாக்குவது அடிக்கடி நிகழும் சம்பவங்கள்.அதற்காக உலகெங்கும் அடிக்கடி கணபதி ஒமம்  செய்வது சாத்தியமா?
அதே தினத்தந்தி செய்திப் பத்திரிக்கையில் (09.01.14) தினம் ஒரு தகவலில் சொல்லப்பட்டது மூட நம்பிக்கையின் உச்ச கட்டம்.

உலகில் பல நாடுகள் விண்ணில் செயற்கை கோள்களை ஆய்விற்காக அனுப்புகின்றன.அந்த செயற்கை கோள்கள் யாவும் திருநள்ளாறு மேலே செல்லும் போது மூன்று நொடிப்பொழுது நிலைப்பட்டு போகுமாம். இது திருநள்ளாறு சனியனுக்கு உள்ள பராக்கிரம செயல்பாடுதான் என்பதை கட்டுரையாளர் சொல்ல வருகின்றார்.கடவுளை வணங்குபவன் கடவுளை நெருங்கிவிட்டான் என்று சொல்லப்படுகிறது எனில்,சனியனை வணங்குபவர்களை, சனி பிடித்துக்கொண்டது என்று தானே பொருள்.

தினத்தந்தி பத்திரிக்கை சி.பா. ஆதித்தனார் எனும் பகுத்தறிவாத தமிழரால் ஆரம்பிக்கப்பட்டு பல காலம் அதே கருத்தை வலியுறுத்தும் விதமாக தமிழ் மக்களிடையே உலா வந்தது. அனால் அவர் வாரிசுகள் ஆன்மீக சிந்தனையை மக்களிடையே பதிய வைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட அறிவியல் அறிவே இல்லாத கட்டுரையாளரை வேலைக்கு அமர்த்தி இப்படி ஒரு பொய்த் தகவலை பரப்ப வேண்டுமா?