இறந்து போன என் தாய் தந்தையருக்கு அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நெடு நாட்களாக என் மனதில் ஒரு எண்ணம் உலா வந்தது.அதற்கான காலம் கனிந்து வந்தது,2013ம் ஆண்டு கிராமத்தில் உள்ள என் பழைய வீட்டை ஒருபகுதியை இடித்து விட்டு நவீனக் கழிப்பறையுடன் பழைய வீட்டின் ஒரு பகுதியையும் புதியதாக இரண்டு சதுரத்தில் ஒரு ஓய்வு இல்லம் அமைத்துள்ளேன்.
வீட்டின் முகப்பில் கருங்கல் பலகை கொண்டு என் எண்ணங்களை எழுத்துக்களாக வடிவமைத்தேன். அதற்கு தாய் தந்தையர் கோயில் என பெயரிட்டேன்.
கோயில் என்றால் சிலை இருக்க வேண்டுமே,யோசித்தேன்.....மகாபலிபுரம் சென்று சிற்பியைச் சந்தித்து தாய் தந்தையரின் உருவ படங்களை காட்டி மார்பளவு சிலை வடிக்கச் சொன்னேன்.
சிலை திறப்பு நிகழ்ச்சி எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டுமென நினைத்தேன்.எனது பள்ளி நாட்களில் எனக்கு அறிவு கண் திறந்த 10 மற்றும் 11 வகுப்புகளுக்கு (1968&69) ஆங்கிலம் மற்றும் கணக்குக்கு ஆசிரியராக இருந்தவர், ஆசிரியர் திரு வீரராகவன் அவர்களை அழைக்க வேண்டும் என நினைத்தேன்.இதற்காக அவர் ஆரணியில் வாழ்ந்த விட்டை அணுகினேன்,ஒரு வயோதிக அம்மையார் அந்த வீட்டில் குடியிருந்தார்.
அவர் தெறிவித்த முகவரியில் தொலைபேசி எண்ணை பெற்று ஆசிரியருடன் நேரடி தொடர்பு கொண்டேன். அப்போது அவர்,
‘நான் ஆரணியில் இல்லை, படப்பையில் குடியேறிவிட்டேன்’
‘அய்யா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்’
‘ஏன், எதற்கு?’
‘அய்யா நீங்கள் என் அறிவுக் கண்களை திறந்த ஆசான், நான் என் தாய் தந்தையருக்கு என் கிராமத்தில் சிலை வைத்துள்ளேன்,அதனை தங்கள் கையால் திறந்து வைக்க வேண்டும்’ என்றேன்.
‘அப்படியா மிக்க மகிழ்ச்சி, இதற்கு ஏன் என்னை தேடி வரப்போற, முகவரியை சொல் நானே வந்துவிடுகிறேன்’ என்றார்
2017ம் ஆண்டு கார்த்திகை மாதம் 20 நாள் நினைவு நாளன்று எனது நண்பரும், ‘இளைய பல்லவன் கருணாகரத் தொண்டைமான்’ எனும் காப்பிய நூலாசிரியருமான திரு செம்மங்குடி துரையரசன் அவர்களிடம் எனது பள்ளிக்கால ஆசிரியரை சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதை தெரிவித்தேன்.