Thursday, October 24, 2019

இறந்தேன் பிறந்தேன்- நூல் 5

                 



                        இறந்தேன், பிறந்தேன் !

இறந்து எப்படி பிறக்க முடியும்? அப்படியானால் மறுபிறவி, முற்பிறவி- இதில் நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? என கேட்பது எனக்கு புரிகிறது.

இறந்தவர்கள் பிறந்ததே இல்லை, புராணங்களையும், கட்டுக் கதைகளையும் நம்பி மன நிலை பாதிக்கப் பட்டவர்கள், முற்பிறவியில் இன்னாருக்கு மகனாக/மகளாக பிறந்தேன் என்பார்கள்.

மேலும் இகலோக வாழ்க்கையை நாம் முடித்துக் கொள்ள வேண்டும்,இன்னொரு பிறவி நமக்கு வேண்டாம்,அதற்கு இப்பிறவியில் இறைவழி பாட்டை முழுமையாக,முறையாக செய்தால் நாம் இறைவனடி சேர்ந்து விடலாம் என உழைப்பாளிகளை மூளைச் சலவை செய்து, பார்ப்பனர்களும், பார்ப்பனர்களோடு பழகிய தமிழ் புலவர்களும் மந்திரங்களையும், செய்யுள்களையும் உருவாக்கினர்.
பழமைப் பெற்ற மந்திரங்களும்,செய்யுளும் புனிதமாகி இன்று நிழலாளிகள் பிழைக்க வழி வகுத்துள்ளன. கோயில்களில் எந்நேரமும் வரிசையில் நிற்கும்(வெய்யிலாளி) உழைப்பாளிகளை,  தீண்டத் தகாதவர்களாக நிழலாளிகள் காண்கின்றனர்.நாம் வாழும் வாழ்நாட்களில் மறுபிறவி நினைவுகளையும்,முற்பிறவி எண்ணங்களையும் நம் மனக் கண் முன்னே கொண்டுவர மனித மனம் விரும்பும்.


காரணம்,  மனிதர்களில் இரண்டுவகை குணம்/எண்ணம் கொண்டவர்கள் உலக முழுவதும் உண்டு   ஒன்று, உழைத்து  வாழவேண்டும் (விவசாயம்) எண்ணம்
கொண்ட மனிதர்கள், 

மற்றொன்று, உழைப்பாளிகள் சேர்த்துவைத்த பொருளை உழைப்பாளிகள் இசைவுடன், ஏமாற்றி பிழைக்கும் (Exploitation-இல்லாத கடவுளை இருப்பதாக நம்ப வைத்து பிழைப்பை நடத்தும் தந்திர) மனிதர்கள்.
பிறந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் நமக்கு அறிவுக் கண்களை திறக்கும் நாட்கள்தான்,அனுபவங்களுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் வித்திடுகின்றன!
நாம் காணும் காட்சிகளும் நம் மனதில் பதிந்துவிடுகின்றன,பின் மறந்து போகின்றன.ஒரு சிலருக்கு மறப்பதே இல்லை.மறந்து போன மனசுதான் மகிழ்ச்சிக்கு உள்ளாகின்றன. எனக்கும் அப்படித்தான்!
                    
                         1-என்னுடைய நான்கு வயதில்

நான் பிறந்து 4 ஆண்டுகள் கழித்து(1955) என் தாய்க்கு என் தம்பி 9ம் மகனாகப் பிறந்தான். .எனக்கு நன்கு நினைவில் உள்ளது.தம்பி பிறந்த ஒரு மாதத்தில்- எங்க அம்மாவை பசுமாடு முட்டிவிட்டது. இடுப்பில் அடிபட்டு சென்னை கஞ்சி தொட்டி ஆஸ்பத்ரிக்கு (ஸ்டேன்லி) அழைத்துப் போனார்கள்.அங்கே 15 நாட்கள் சிகிச்சையில் இருந்தார்கள்.சிகிச்சை முடிந்து நேரா வீட்டுக்கு அழைத்து வரவில்லை.
கிராமத்து பழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப் படுவதை நான் இங்கு எழுத வேண்டும்.அதாவது, யாராவது ஊர் பயணம் சென்றாலோ அல்லது ஊரில் இருந்து வந்தாலோ அல்லது மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தாலோ உள்ளூர் கோயிலில் தங்க வைப்பார்கள். எங்க அம்மாவை அப்படி தங்க வைத்தபோது,எங்கம்மா மார்பில் பால் கட்டிக் கொண்டது.ஒரு மாத குழந்தையான என் தம்பியை எங்க
அக்கா தூக்கிக் கொண்டுபோய் ,என் தாயின் மடியில் பால் குடிக்க வைத்தது எனக்கு நினைவில் உள்ளது.அங்கே கற்பூரம் தேங்காய் உடைத்து கடவுளை வணங்கி விட்டு, வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
அப்படி கோயிலில் தங்கி இருப்பதை அறிந்து எங்களைப்போல் உள்ள குழந்தைகளை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். 

கோயிலிலிருந்து வீட்டுக்கு வருமுன் ஆலம்’ 
(ஆலம் என்பது மஞ்சளும்,சுண்ணாம்பு மற்றும் நீர்  கலந்த கலவை)   
கலந்து ஆரத்தி எடுத்த பின்னே சூரத்தேங்காய் உடைத்து

(தேங்காயை எரியும் கற்பூரத்தில் காட்டி தெருவில் உடைப்பது,உடைந்த சில்லுகளை சிறுவர்களாகிய நாங்கள் ஓடி பொறிக்கி தின்றது நினைவில் உள்ளது)   

உள்ளே அழைத்து வருவார்கள்.இன்றளவும் கிராமங்களில் நடைபெரும் பழக்கம் இது..புதுப் பெண்ணை வீட்டுக்கு,அழைத்து வரும்போது கூட இதுபோன்று சம்பரதாயங்கள் உண்டு.

எனக்கு 5 வயதிருக்கும் போது எங்க தாய்மாமா உடல்நிலை பதிக்கப்பட்டு எங்கம்மாவைத் தேடி வந்தார்.அவருக்கு மகோதரம் எனும் வியாதி, குணப்படுத்த முடியாது என்று சொல்லி விட்டார்கள். என்னை எங்க மாமா அழைத்து அவர் கால்களை அழுத்தி விடச் சொல்வார்,கால் விரல்களை நெட்டை உடைக்க சொல்வார்.எங்க அம்மாவும் மாமாவுக்கு நெட்டை உடைடா கண்ணுஎன்பார்.நானும் செய்வேன்.அவர் இரண்டு மாங்கன்றுகளை எங்கள் வீட்டருகே நட்டு வைத்தார்.பின்னாளில் அந்த மரங்கள், ஒன்று குண்டு ரகம்,மற்றொன்று பெரியமுட்டை வடிவில் இருக்கும். இரண்டுமே பழம் இனிப்பு சுவை மிகுந்திருக்கும்.
என்னைப் போன்ற கிராமத்து சிறுவர்கள் மாங்காயை தின்றது போக முற்றிய காய்களை பறித்து பழுக்க வைப்பார்கள்.ஓரிரு நாட்களில் பழுத்து விடும்.
நாங்கள் தின்றது போக எங்க அம்மா அந்த பழங்களை ஒரு கூடையில் வைத்து தலைமேல் தூக்கிக் கொண்டு ஆரணி(5 கிமி) கடைத் தெருவில் நாளெல்லாம் வெய்யிலில் நின்று கொண்டு விற்றுவிட்டு வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வாங்கிவருவார்கள்.
                 
                         2- 5வயதில் ஆலமரப் பள்ளிக் கூடம்

எனக்கு 5 வயது முடிந்து விட்டது(1957) என்பது என் நினைவுக்கு எப்படி வந்தது?
நான், வீட்டு வாசப்படியில் இட்டிருந்த குங்குமத்தை என் உடலில் உரசிக் கொண்டிருந்தேன். வழக்கமாக தலையில் கூடைவைத்து வியாபாரம் செய்யும் எங்கள் வீட்டுக்கு வரும் எண்ணெய்கார செட்டிக் கிழவி அன்று வந்தாள்.
 ஏண்டி கண்ணம்மா, இந்த பையனுக்கு என்ன வயசு? மாடு மாதிரி வளந்துருக்கான்!,வாசப்படி குங்கத்தை உடம்பில தேய்க்கறான்,இவனுக்கு ஒரு கோவணம் கட்டக் கூடாதா? படிக்க அனுப்ப கூடாதா?’
5-வயசு ஆவுதுக்கா!

பள்ளிக்கூடம் சேக்க வேண்டியது தானே?’

சேக்கணுங்கா.. எந்த புள்ளகளையும் நான் படிக்க வைக்கல, இவன் 8-ம் போரு  (8-ம் மகன்) நல்லது  நாளைக்கே சேத்துட்றேன் , ஜோசியக்காரன் இவன் நாக்குல சரஸ்வதி தாண்டவம் ஆடுகிறாள் என சொல்லிட்டு போறான், நான் படிக்க வைக்கிறேன்கா

நாளைக்கு எல்லாம் சேக்காதே,அடுத்த மாசம் சரசுவதி பூஜை வருது அப்ப கொண்டு போய் சேரு,நல்லா படிப்பு வரும்!எண்ணெய்கார செட்டிக்கிழவி சொன்னாள்.

அந்த நாளும் வந்தது,ஒரு தட்டில் பச்சரிசி எடுத்துக் கொண்டார்கள்,தட்டுக்கு குங்குமம் மஞ்சள் வைத்து,
நடுவீட்டில் (ஒரு அறையில் கடவுளர்கள் படம் வைத்து வணங்கப்படும் இடம்) . சாமி படங்களின் முன் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்தார்கள்,உடைத்த தேங்காய் நீரை பச்சரிசியில் ஊற்றினார்கள்,பின் தேங்காயை துறுவி சிறு பற்களாக அரிசியில் கலந்தார்கள்,வெல்லமும் கலக்கப்பட்டது, இன்று நாம் சர்க்கரைப்பாகு கடலை மாவில் செய்ததை ஸ்வீட்என்கிறோமே, அன்று அது தான், ‘ஸ்வீட்’. எனக்கு சட்டை,அறைக்கால் சட்டை மாட்டப்பட்டது.
வா..போகலாம்
எங்கம்மா?’
பள்ளிக்கூடம்!
நான் வரலை
டேய் வாடா,என் கோபத்தை கிளராதே
நான் வரமாட்டேன் போ
டேய் வாடா, கண்ணு,பட்டு ,செல்லம்.. இல்லை..?’
 நான் வரமாட்டேன்னா வரமாட்டேன்......!

எங்கம்மா,கையில் ஒரு சவுக்கு மலாரை எடுத்துக் கொண்டார்கள்.அடி பின்னி எடுத்தார்கள்.! துடிக்கிறேன்!, துவண்டேன்!!, அம்மா அடிக்காதம்மா!!!...
அம்மா, என்னைப் பிடித்துக் இழுத்துக் கொண்டு சென்றார்கள். என் அழுகை நிற்கவில்லை! திண்ணை பள்ளிக்கு சென்றும் நிற்கவில்லை ஒரு கையில் அரிசி பலகாரத்தட்டும்,மறுகையில் சவுக்கு மலாருடன் அவ்வப்போது அடி வாங்கிக்கொண்டு அழுதுகொண்ட
நானும் அம்மாவும் ஆலமரத்து பள்ளிக் கூடத்திற்கு சென்றோம்.

அந்நாளில்,(1950 களில்) எங்கள் ஊரில் அரசாங்கம் நடத்தும் பள்ளிக்கூடம் கிடையாது. திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள்,திண்ணைகள் கட்டப்பட்ட வீடுகள் இருந்தாலும் யாரும், ஊர் பிள்ளைகள் அமர்ந்து படிக்க திண்ணைகளைத் தர மாட்டார்கள்.
எங்கள் குடியிருப்புகள் உள்ள இடம், மண் சுவரின் மீது  கட்டப்பட்ட  ஓலை வீடுகளும் காடும் ஒன்றாக இருக்கும் இடமாகும்,அதில் ஒரு ஆலமரத்து நிழலில் சுமார் 15 அல்லது 20 மாணவர்கள் படித்தனர்.அதற்கு ஆசிரியர் ஒரு பறையர் இனத்தைச் சார்ந்தவர், ‘பறமணி வாத்தியார் என அந்நாளில் அழைப்பார்கள்.பறையர் என்பது தடைசெய்யப்பட்ட வார்த்தை என்பதால் பின்னாளில் அந்த வார்த்தை மறைந்து விட்டது.
சேரி வாழ் பிள்ளைகளும் இரண்டு அல்லது மூன்று பேர் படிக்க வருவார்கள்.அவர்களை தனியே அமர 
வைப்பார்கள். எங்களோடு அமர வைக்க மாட்டார்கள்.பெண்களை படிக்க அனுப்ப மாட்டார்கள். சட்டாம் பிள்ளை வசம் என்னை ஒப்படைக்கப் பட்டது.
(சட்டாம் பிள்ளை என்பவர் பள்ளிக்கூட மாணவர்களுக்கு தலைவன்) மணலை நீக்கி கட்டாந்தரையில் என் ஆள் காட்டி விரலைப் பிடித்து  போடவைத்தார், சட்டாம் பிள்ளை.(1956-57)
அழுது கொண்டே போட்டது நினைவில் உள்ளது! போட்டு அந்த விரல் முழுவதும் தடத்தில் பதிந்து விடும், மாலை வீடு திரும்பும் முன் அந்த தடத்தை மணல் போட்டு மூடிவிடவேண்டும். அடுத்த நாள் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு அந்த , ‘தடத்தில்
விரல்வைத்து சுழற்ற வேண்டும்.  12 மணி வரை ஆலமர நிழலிலும்,இடைவேளைக்குப் பிறகு (இரண்டு மணிக்குப்பிறகு) ஊரில் உள்ள ‘அன்னம்பேட்டார்’ மாமரத்து நிழலில் வகுப்புகள் நடக்கும்..
அது போன்று முதல் வரை மணலில் எழுதியபின்,பலப்பம் கொண்டு சிலேட் பலகையில் எழுத வேண்டும்.தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் எழுதி முடிக்க அந்த கல்வி ஆண்டு முடிந்து விட்டது.
                 
                           3-அரசாங்க பள்ளிக்கூடம்

ஒரு நாள் என்னைவிட மூத்த நண்பர்களுடன் நானும் மாடு மேய்க்கப் போனேன்.(அப்பொழுது எங்கள் வீட்டில்  பசு மாடுகள், கன்று குட்டிகள் என 25 மாடுகள் இருக்கும்) இரண்டு நண்பர்கள், ‘டேய்,நீ படிக்கும் தெரு பள்ளிக்கூடத்தில் படித்தால் அரசாங்க வேலை கிடைக்காது,நாங்கள் படிக்கும் அரசாங்க பள்ளியில் சேர்ந்து விடுஎன்றனர்.
மாலை வீடு வந்தவுடன், என் அம்மாவிடம் இந்த சேதியைச் சொன்னேன், ‘சரி,சேர்ந்துக்கோஎன்றார்கள். 
அடுத்த நாள் நண்பர்களுடன் அருகில் உள்ள ‘ராமநாயகன் கண்டிகை’ எனும் ஊரில் இயங்கும் ஆரம்ப பள்ளியில் சேர்ந்துவிட்டேன்.
அந்நாளில் பள்ளிக் கூடத்தில்  மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் வீடு  வீடாக  நேரில் சென்று ஐந்து வயது பூர்தியடைந்த பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுவார்கள்.
தெரு பள்ளிக்கூடத்தில் படித்த என் ஓராண்டு படிப்பை  அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஏற்க மறுத்து விட்டனர், 
என் ஏழு வயதில்(1958-59) முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்,
எனக்கு வாய்ப்பாடு மனதில் பதியவில்லை,எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற 10 மாணவர்களுக்கும் வாய்ப்பாடு வராது.
பிற்பகல் இரண்டு மணி முதல் மூன்று மணிவரை பள்ளிகூடத்தின் வெளியே எங்கள் 10 பேரையும் ஆசிரியர் குனியவைத்து விடுவார்,முதுகின் மீது 6 அடி நீள இரண்டு மரப்பலகைகளை வைத்து அதன்மீது வரிசையாக நாங்கள் தாங்கும் அளவுக்கு செங்கற்களை அடுக்கிவிடுவார்.அழுது கொண்டே வாய்ப்பாடு படிப்போம்,அப்பொழுதும் மனதில் பதியாது, காரணம் எங்கள் கவனம் எல்லாம் முதுகின் மீது சுமந்து கொண்டிருக்கும் பலகையும் செங்கற்களும் தான்.

தெருவில் போவோர் வருவோர் எல்லாம் எங்களைப் பார்த்து, ‘இப்படித்தான் சொல்லித்தரணும் வாத்தியாரேஎன்பார்கள்
அந்த பள்ளிக்கூடம் 10க்கு 30 அடி உள்ள மண் சுவரின் மேல் இரண்டு தூலம் வைத்து பனை ஓலைகளால் வேயப்பட்ட பஜனைக் கோயில்,ஊர் மக்கள் ஒன்று கூடி கோயிலாக இருப்பதை விட பிள்ளைகளுக்கு கல்வி கண் திறக்கும் பாடசாலையாக இருக்கட்டும் என அரசுக்கு ஒத்துழைத்தனர். 
தவறு செய்யும் மாணவர்களை தூலத்தில் உள்ள ஒரு கொம்பை  பிடித்து   தொங்கும்படி செய்வார்.கீழே சப்பாத்தி கள்ளிகளை அடுக்கி விடுவார்.மிக கொடுமையான தண்டணை அது! மாணவன்,   திருந்திவிட்டேன் அய்யா! இனி அதுபோன்ற தவறுகளை செய்யமாட்டேன்! என சொன்னால்தான் காலுக்கு கீழே படர்த்தி வைக்கப்பட்ட சப்பாத்தி கள்ளிகளை நீக்குவார்.அப்படி ஒரு 4 ம் வகுப்பு படிக்கும் மாணவன் (சந்திரன்), எங்கள் வகுப்பாசிரியைப் பார்த்து
(அவர்கள் அழகாக தோற்றமளிப்பார்கள்) தன் சக மாணவனிடம் அந்த ஆசிரியையின் அழகை வர்ணித்துள்ளான்,
இதை கேட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவன் (வேணுகோபால்) தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டான்.உடனே அந்த மாணவனுக்கு மேலே விவரித்த தண்டணை வழங்கப்பட்டது.இந்த மாணவர்களில் சந்திரன் மட்டும் இறந்து விட்டான். வேணுகோபால் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
                  
                           4- காமராஜரின் மதிய உணவு

அப்பபோதெல்லாம் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு போடுவார்கள் (காமராஜர் மதிய உணவு திட்டம் என்று அதற்கு பெயர்)மதியம் 12 மணிக்கு எல்லாம் பருப்பு காய்கறிகள் போட்டு வேகவைத்து ‘கதம்ப சோறு’ என அதற்கு பெயர்.எங்களுக்கு உண்டான தட்டில் அல்லது ஆல இலைகளால் தைக்கப்பட்ட தையல் இலை’.அருகில் உள்ள ஆலமரத்திற்கு சென்று இலைகளை பறித்து தைத்துக்கொள்வோம்.சுடசுட ஒரு கிண்ணம் நிரம்பிய அளவு சாதத்தை தருவார்கள்,கம கம வென்று வாசனை மூக்கு துளைக்கும்,அதை உடனே சாப்பிட முடியாது,சாப்பிட கூடாது!

எல்லா மாணவர்களும் எழுந்து நின்று கடவுள் வாழ்த்தாக 10 திருக்குறட்களை  ஆசிரியர் சொல்ல அதை நாங்கள் திருப்பி  பாட வேண்டும்.பசி வயிற்றை கிள்ளும்,சாம்பார் சாதம் வாசம் தூக்கும்,பாடவே மனசு வராது,எப்பொழுது இந்த பாடல் முடியும் என என் மனசு அங்கலாய்க்கும்.கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் கை பத்திக்க வாய்ப் பத்திக்க தின்று முடித்துவிடுவேன்,தட்டை மீண்டும் கழுவ வேண்டிய
அவசியமே இருக்காது! அந்த அளவுக்கு அந்த தட்டை நக்கி சுத்த படுத்தி விடுவேன்.
பெரும்பாலான மாணவர்கள் என்னைப் போலத்தான். காரணம் எங்களுக்கு எல்லாம் இரவோடு இரவுதான் அரிசி சாதம் சாப்பிட கிடைக்கும்.எங்கள் வீடுபோல ஒரு சில வீடுகளில் வருடத்தில் 6 மாதங்கள் தான் அரிசி சோறு கிடைக்கும்.பெரும்பாலான வீடுகளில் இரவில் கேழ்வரகு களிதான்.
காலையில் மற்றும் மதியம் கேழ்வரகில் தயாரிக்கப்படும் கூழ் அல்லது களி மட்டுமே.எனக்கு மட்டும்  கூழ் வாசனை பிடிக்காது,வாந்தி வந்து விடும்.மூன்று வேளையும் கேழ்வரகு உணவு உண்ணும் வீடுகளும் உண்டு,எங்கள் வீடும் 6 மாதங்கள் அப்படித்தான்!
எங்கள் கிராம மக்கள் வானம் பார்த்த பயிரான கம்பு,திணை,கொள்ளு வரகு,மற்றும் கேழ்வரகு பயிர் செய்வார்கள் ,சில நேரங்களில் வானம் பொய்த்துவிடும், போன வருடம் பெய்த மழையை நம்பி இந்த வருடமும் அதுபோல் பெய்யும் என நினைத்து அல்லது பஞ்சாங்கத்தை பார்த்து ஆடிமாதம் விதை விதைப்பார்கள்.
பெரும்பாலான குடும்பங்களில் விளையும் நெல் ஆறு மாத த்தில் தீர்ந்து விடும்,மற்ற நாட்களில் கேழ்வரகுதான்.தமிழ் நாட்டில் காவிரி மற்றும் தாமிரபரணி ஆறு டெல்ட்டா மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் வாழும்  விவசாய குடும்பங்களுக்கு இதே நிலைதான்.
                  
                            5-ஆளுக்கு ஆழாக்கு அரிசி

எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும்.அப்பொழுதெல்லாம் நியாய விலைக் கடைகளில் தலைக்கு ஆழாக்கு (தோராயமாக 150 கிராம்) அரிசி தருவார்கள்,
அவர்கள் குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அந்த பூச்சிநாற்றம் அடிக்கும் அரிசி வாங்க எங்களை விடியற்காலை 4 மணிக்கு எழுப்பி விடுவார்கள், தூக்கத்தில் அழுது கொண்டே கண்களை துடைத்துக் கொண்டு நான், என் தம்பி,அக்கா இரண்டுபோர், அண்ணன்கள் இரண்டு பேர்  மொத்தம் ஆறு பேர் .
எங்கள் கிராமத்தை விட்டு 3 கல் தொலைவில் உள்ள ‘அன்னப்பநாயக்கன் குப்பம்’ எனும் கிராமத்திற்கு செல்ல வேண்டும்,அங்கே நியாய விலைக் கடை முன் ஒரு பெரிய மனித வரிசை இருக்கும்.
அங்கே பணிபுரியும் ஊழியர்கள் 8 மணிக்குத்தான் வருவார்கள்,அந்த அரிசியை வாங்கி வீடு திரும்ப பகல் 11 அல்லது 12 ஆகிவிடும்.பசியின் தாக்கம் வயிற்றைக் கிள்ளும்.நான் அழுவதைப் பார்த்து எங்க அம்மா அழுவார்கள்,காரணம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வயிற்றை நிரப்ப கூழ் இருக்கும்,எனக்கு மட்டும் கூழின் வாடை பிடிக்காது, அந்த புளிப்பு வாசனை வயிற்றை குமட்டி வாந்தி வந்து விடும்,எவ்வளவோ முயன்றும் என்னால் கூழை உணவாக பயன் படுத்த முடியவில்லை,இதுநாள் வரை இதுதான் நிலைமை!

என்னை சமாளிப்பது, ஒரு பெரிய சவாலாகவே என் அம்மாவுக்கு ஆகிவிட்டது. இரவு நேரத்தில் அனைவரும் உணவு உண்டபின் ,அந்த சோற்றுப்பானையில் சோறுவடித்த கஞ்சியுடன் தண்ணீரை ஊற்றி வைப்பார்கள்,காலையில் இதற்கு, ‘நிசி தண்ணி என்பார்கள்,நிசி என்றால் இரவு என்று பொருள்.அதில் ஊறும் சாதத்திற்கு , ‘பழையதுஎன்பார்கள்.
தினமும் எனது காலை உணவு , ‘பழையதுதான்.இதற்கு பச்சை மிளாகாய் அல்லது மிளகா வத்தல் தோதாக இருக்கும்.வீட்டில் உள்ள நாட்களில் மதிய வேளையில் கேழ்வரகு களி தான்.இரவு நேர உணவும் ஆறு மாதங்களுக்கு களி தான் உணவு.
இதற்கு துணை உணவாக தொட்டுக் கொள்ள பகலில் சிறு பசலைக் கீரை, , காசிலிக்கீரை
 (இதில் இரண்டுவகையுண்டு,கொம்பு காசிலி,மிதமான புளிப்பு, அதிகப்புளிச் சுவைக் கொண்ட சீமைக்காசிலி) முருங்கை கீரை,இரவு நேரங்களில் சொரக்காய் கூட்டு,காரக் கொழம்பு,சில நாட்களில் மீன் குழம்பு மற்றும் கருவாட்டுக் குழம்பு (பதின்ம பருவத்தில் கருவாட்டுக் குழம்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன், ஏனோ பிடிக்கவில்லை)

கிராமபுற மக்களின் பஞ்சம் போக்கி உணவு ‘மரவல்லிக் கிழங்குதான்’(ஆள் வல்லிக் கிழங்கு எனவும் அழைப்பர்) வருடம் முழுவதும் கிடைக்கும்,மார்கழி மாதங்களில் கிடைக்காது.கார்த்திகையில் பெய்யும் மழையில் கிழங்கு அழுகிவிடும்.மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில் சர்க்கரை வல்லிக் கிழங்கு மற்றும் சேமைக்கிழங்கு விளையும்., இவையும் பசிபோக்கும் உணவுதான்.

சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் புளி அதிகம் விளையும். அதன் கொட்டைகளை சேகரித்து வைப்பார்கள். மழைக்காலங்களில் அந்த கொட்டைகளை வறுத்து,தோலை நீக்கி நீரில் ஊரவைப்பார்கள்,மிதமான உப்பு போட்டு வேகவைத்து அடைமழை பெய்யும் காலங்களில் ஆளுக்கு ஒரு கிண்ணத்தில் எங்க அம்மா போட்டுத் தருவார்கள்.பசியைப்போக்கும் பஞ்ச கால உணவுகள்.
இதே போன்று வேர்க்கடலை(மூன்று கொட்டை கடலை) விற்றது போக இரண்டு மூட்டை கடலையை வெய்யிலில் காய வைப்பார்கள்,அதை பானைகளில் போட்டு பதப்படுத்தி வைப்பார்கள் மழைக் காலங்களில் வறுத்து சிற்றுண்டி உணவுவாக அளிப்பார்கள்.

மாலை நேரத்தில் கேழ்வரகு தட்டுக்களை(கேழ்வரகு தட்டு என்பது,கேழ்வரகின் கதிரை வெய்யிலில் காயவைத்து அதை பனை மட்டைகளால் அடித்து கேழ்வரகை சேகரித்தப் பின் அதன் அடித் தண்டுகளைத் (தட்டுகள்) தோலை உரித்து அதை குச்சிகுச்சியாக வெட்டி கையில் அடுக்கிக் கொள்வோம்,ஆசைத்தீர மென்று சாரை விழுங்கி சக்கையை துப்பி விடுவோம்.
இது கரும்பு சாரைப் போன்ற சுவையைத் தரும், அற்புதமான சக்கரைப் பானம்.
                         ********
         


No comments: