Thursday, October 31, 2019

இ.பி-3


                    7-ஆடி மாரி
ஆடிமாதம் என்றாலே எங்களுக் கெல்லாம் கொண்டாட்டம்தான். பக்கத்தில் (10 கி.மீ தொலைவு) பழம் பெரும் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.பெரியபாளையத்து அம்மன் என்று அதற்கு பெயர். ஆடிமாதம் மட்டுமல்ல அதற்கு பிறகு வரும் ஞாயிற்றுக் கிழமைகளும் விசேஷ நாட்கள் தான்.எங்க அம்மாவுக்கு ஆடிமாதம் வரும் ஓரு ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் சம்பவம் நடந்த வுடன்,4-ம் வாரம் குடும்பத்துடன் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு பிரார்த்தனைகளான குழந்தைகளுக்கு மொட்டை போடுதல் ,கண் வலி வந்தால் கண்ணைப் போன்ற உரு செலுத்துதல் ,அது போன்று பிற உறுப்புகளுக்கு கட்டி போன்ற பாதிப்புகள் வந்தால் அது
போன்ற வெல்ல உருக்களை காணிக்கையாக செலுத்துவது வாடிக்கை.

எங்களில் யாருக்காவது அம்மை தொற்று நோய் வந்தால்,அம்மன் சன்னதிக்கு வந்து, ‘வேப்பஞ்சேலை’ அணிந்து காணிக்கை செலுத்துகிறேன் என எங்கள் அம்மா பிரார்த்தனை செய்து கொள்வார்கள்(மாரியம்மன் பற்றிய புராண வரலாறு பின்வரும் பக்கங்களில் எழுதுகிறேன்.)
ஒரு சில ஆண்டுகள் எங்க அம்மா என் அக்கா,தம்பி,நான் ஆக நால்வரும் நடந்தே செல்வோம் (குறுக்கு வழியாக நடந்து வந்தால் 7 கி.மி இருக்கும்அந்த கோயிலின் விசேஷமே,சுற்று வட்டார மக்கள் குடும்பம் குடும்பமாக வண்டி,ட்ரக் போன்ற போக்குவரத்தை பயன்படுத்தி முதல் நாள் இரவே (சனிக்கிழமை) வந்து தங்கி விடுவார்கள்.வரும்போதே கோழி ஆடு போன்ற வற்றை கொண்டு வந்து பொங்கலிட்டு பலி கொடுப்பார்கள்.
                     
                           8-கிராமத்து கார்

அந்நாளில் கிராமங்களில் பெரும்பாலான விவசாய குடும்பங்களில் கட்டை வண்டி என ஒன்று இருக்கும்.இன்று கார் இருப்பது போல.
இன்று அதன் பயன்பாடு மாறி சிறியவகை டயர்வண்டி காணப்படுகின்றன.அந்த கட்டை வண்டி என்பது பெரிய வட்டவடிவ 6 அடி விட்டம் கொண்ட  மரச்சக்கரங்கள் இரண்டு கொண்டது.
இந்த மரச்சக்கரங்கள் என்பது ஒரு சக்கரத்திற்கு 6 வட்டைகள் கொண்டது,அதை வட்டத்திற்கு(குடம்) இரண்டு ஆரம் கொண்ட12 மரத்துண்டுகளை மத்திய குடத்தோடு இணைக்கப் பட்டிருக்கும். அதன் வட்டையை சுற்றி வலிமையான இரும்பு பட்டைகளை சுற்றிஇருப்பார்கள், இதற்கு வட்டு எனப்பெயர்.
மொத்த வண்டியையும் எதிர்கால் காலோடு நுகத்தடி கொண்டு இரண்டு காளைகளை பூட்டி மக்கள் அதில்
அமர்ந்து பயணிப்பர், இதை அந்த கால விவசாயிகளின் கார்என்றால் மிகையாகாது. பெண்கள் பேறு காலங்களில் மருத்துவமனை எடுத்துச்செல்ல இது ஒரு ஆம்புலன்சு போன்றது. விவசாய விளை பொருளை கடைத்தெருவுக்கு எடுத்துச் செல்லும் வேன் இதுதான்.

இப்பொழுது கோயம்பேட்டுக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்ல லாரிகளை பயன் படுத்துவது போல்,அந்நாளில் மாட்டு வண்டிகள் தான் கொத்தவால் சாவடிக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் ‘லாரி’.
ஒரு இரவு முழுவதும் பயணித்து விடியற்காலை கொத்தவால் சாவடிக்கு செல்வோம்.காலை 4 மணிக்கெல்லாம் கொண்டுபோன காய்கறிகளை விற்று விட்டு மதியம் அல்லது மாலை வீடுவந்து சேருவோம்.கிட்டத்தட்ட 24 மணிநேர பயணம் ஆகிவிடும்.ஒரு விவசாயிக்கு வண்டியையும் காளை மாடுகளையும் பராமரிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
வண்டியைப் பொறுத்த வரை அடிக்கடி இருசு(அச்சு) கடையாணி, குடம் ஆகியவற்றை கவனித்து வைக்க வேண்டும்.

ஊருக்கு பொதுவா கருமான்,தச்சன் ஆகிய கிராம தொழிலாளிகள், இந்த வண்டிகளை பராமரிப்பர், இவர்களுக்கு ஆண்டு தோரும் ‘மேறை’ எனப்படும் நெல் கதிர் கொண்ட நெற் கட்டுகளை வழங்குவர்.
100 அல்லது 200 குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமத்தில் இவர்களுக்கு ஆண்டுதோரும் 25 மூட்டை நெல்லாவது கிடைக்கும்,அதுதான் அவர்களின் வாழ்வாதாரம்.
இது தவிர அம்மட்டன்,வண்ணான்,வெட்டியான் போன்றோர் இரவு நேரத்தில் உணவுக்காக வருவார்கள்.இவர்களுக்கும் மேறை உண்டு,ஆனால் இவர்களெல்லாம் நாங்கள் இரவு உணவை உண்ட பின்தான் வரவேண்டும்,அதற்கு முன் வந்தால் திட்டுவார்கள்.அந்த திட்டுக்களையும் பொருத்துக் கொண்டு இரவு நேர சாப்பாட்டை வாங்கிச் செல்வார்கள், இன்றய நாளில் அது போன்ற பணிவான கிராம பணியாளர்களை காணமுடியாது.
அமட்டன் என்பவர் வீட்டில் உள்ள ஆண்களுக்கு மாதம் ஒரு முறை தலை மயிரை திருத்தம் செய்ய வேண்டும்.அது மட்டுமல்ல வீட்டில் விசேஷ காரியங்களுக்கு மேளம்,நாதெஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க வேண்டும்,அமட்டன் மனைவியான அமட்டச்சியை மருத்துவச்சி என அழைப்பர் காரணம்,வீட்டு பெண்கள் கர்பம் ஆனால் அவர்களுக்கு பிரசவம் பார்ப்பது இவர்களுடைய வேலைதான்.

வண்ணார் என்வர் வீட்டில் விழும் அழுக்குத்துணிகளை வெள்ளாவியில் வேகவைத்து வெளுத்து தருவார்கள். இவர்களுக்கும் ஆண்டு ஒரு முறை மேறைதான்.

வீட்டில் இறந்து போனவர்களை தாரை தப்பட்டைகளுடன் அடக்கம் செய்வது வெட்டியான் வேலை,அது மட்டுமல்ல இறந்து போன தகவலை எங்ஙெல்லாம் உறவினர் உள்ளனரோ அங்கு போய் சொல்லிவிட்டு வீடு வந்து சொல்லிவிட்டேன், ஆண்டைஎன வந்து தகவல் கொடுத்தால் மட்டுமே பிணத்தை அடக்கம் செய்வர்.

காளை மாடுகள் கழுத்தில் புண் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.காளை மாடுகளின் நான்கு கால்களுக்கும் குளம்புகளில் முறையாக ‘லாடம்’ தைக்க வேண்டும்.இதற்கு வேறு தொழிலாளி உண்டு.மாடுகளை வலிமையான மாடாக இருக்க அதன் உணவுகாளான,  வைக்கோல் (போர்),தவிடு மற்றும் புண்ணாக்கு எப்பொழுதும் வீட்டில் தயாராக இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் இந்த வண்டி மாடுகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அந்த கலாச்சாரம் அழிந்து விட்டது.

குடும்பத்தோடு பெரியபாளையம் செல்வதாக பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.அங்கே பழைமையான அம்மன் கோயில் உள்ளது!
அப்போது வண்டியை முந்தைய நாளே பழுது பார்த்து கூண்டு வண்டி அமைப்பார்கள்.ஆடி மாதம் என்பதால் மழை மற்றும் வெய்யிலிருந்து குழந்தைகளை பாதுக்காக்கும். மொத்தத்தில் இப்போதைய கார் போலத்தான்!. உறவினர் வீட்டுக்கு காது குத்தல்,சீமந்தம்,பூப்பெய்தல் விழா போன்றவற்றிற்கு குடும்பத்தில் உள்ள குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள்,சுமார் 50 கிமி தூரத்தில் பெண்ணை கட்டிக்கொடுக்க இருந்தாலும் மாட்டு வண்டிதான்.

எங்கள் உறவு முறைகள் எல்லாம் அதிக பட்சம்,50 கிமி தொலைவு தான்.பேருந்து அல்லது ரயில் வண்டி பிடித்து வெகு தூரம் சென்று சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்நாளில் பெரியபாளையம் கோயிலைச் சுற்றி பெரிய தூங்குமூஞ்சி காட்டுவாகை மரங்கள் இருக்கும் எங்கு பார்த்தாலும் நிழலாக இருக்கும்.அந்த மர நிழலில் தற்காலிக அடுப்புகளை அமைத்து, கட்டைகளை போட்டு கொளுத்தி கோழிக் கறிகளையும் ஆட்டுக்கறிகளையும் சமைத்து சுற்றுலா செல்பவர்கள் போல் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகளைப் பார்க்கும் போது கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

ஆண்டுதோறும் கூடும் மக்கள் வெய்யிலாளி இனத்தை சார்ந்த ஒரே உறவின் முறை கொண்டவர்கள்.குடும்பம் குடும்பமாக தனித்தனி வட்டம் அமைத்துக் கொண்டு தத்தமது உறவுகளோடு சமைத்த உணவை உண்டு விட்டு பிரிந்து சென்று விடுவார்கள்.இவர்கள் கூடும் இடத்தில் கொடுக்கல் வாங்கல் உறவு முறைகளை பேசிக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் பேசினால் எதாவது ஒரு வகையில் தூரத்து உறவினர்களாகவே இருப்பர்கள்.
எல்லாம் மர நிழலில்தான் நடக்கும்.  ஒரு நேரத்தில் அதிக காற்று வீசியதால்,மரக் கிளைகள் முறிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டது.அதனால் மொத்த மரங்களையும் வெட்டி சாய்த்து விட்டார்கள்.
இப்பொழுது பெரியபாளையம் கோயில் ஒரு பொட்டல் காடாக காட்சி அளிக்கின்றது.
ஆடி மாதம் தொடர்ந்து 10 வாரங்கள்(சனி,ஞாயிறு) பெரிய கூட்டம் அலைமோதும்,கோயிலை அடையும் முன்பே எனக்கும் தம்பிக்கும் சுட சுட பாயாசம் வாங்கித் தருவார்கள்.அரிசி, கடலைப்பருப்பு,வெல்லம், ஏலக்காய் போட்ட அல்வா வாங்கித் தருவார்கள்,  பின் ஆளுக்கொரு பிகில்(விசில்), புல்லாங்குழல் ,கண்களில் மாட்டிக்கொள்ள கருப்பு மைக்கா ஒட்டிய கண்ணாடி வாங்கி அணிந்து கொள்வோம்.
இது போதும் எங்களுக்கு!.எங்கள் அக்காவுக்கு மண்ணால் ஆன சொப்புகள்(kitchen set) வாங்கி கொடுப்பார்கள்.
கோயிலை சுற்றி ஆரணி ஆறு மணல் காடாக காட்சி அளிக்கும்.குழந்தைகள் கண்டு களிக்க விதவிதமான ரங்க ராட்டினம்,மிருக காட்சி சாலை,கன்னிப்பெண் தலைகொண்ட பாம்பு ,கடல் வாழ் உயிரினங்களான,கடல் நாய்,கடல் சிங்கம்,ஒரு மிகப்பெரிய டம்ளர் வடிவத்தில் பெரிய மரச்சுவரை அமைத்து அதனுள்ளே மோட்டார் சைக்கிள் படுவேகமாக உருண்டு மேலே வருவதை காணம்போது மெய் சிலிர்க்க வைக்கும்.
நடந்து வருவதென்றால் எங்க அம்மா கட்டு சோறு மூட்டை கட்டிக் கொண்டு மர நிழலில் எங்களை சுற்றி உட்காரவைத்து விட்டு கையில் சாதத்தை உருண்டை பண்ணி கொடுப்பார்கள். மாலை வீடு திரும்பும்போது, காகித பைகளில் அரிசிப் பொறி,வெல்லம்                                         உடைத்த(பொட்டு) கடலை ,பேரீசம் பழம் கலந்த கலவையை வாங்கிக் கொடுப்பார்கள்.
வீடு வந்து சேரும் வரை அதைத் தின்று கொண்டும், விசிலடித்துக் கொண்டும்,புல்லாங்குழல் ஊதிக்கொண்டும் ஆடிக் கொண்டும், கத்திக்கொண்டும் வீடு வந்து சேருவோம்.

Wednesday, October 30, 2019

இ.பி-2


                 6-மாட்டுவண்டியில் திருப்பதி யாத்திரை

முன்னதாக எங்கள் குடும்பத்தில் முதல் கல்யாணம் என் மூத்த அக்கா திருமணம். 1956-ல் நடந்தது.ஒரே மகனான எங்க அத்தை மகனுக்கு மணமுடித்து வைத்தனர், 
இன்னொரு அக்காவை 1958-ல் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வைதிலம்பேடு எனும் கிராமத்தில் கொடுத்தார்கள். இரண்டு பெண்களை கட்டிக் கொடுத்ததில் எங்க அப்பா,அம்மாவுக்கு ஒரு பெரிய விடுதலை அடைந்த மகிழ்ச்சி.பெரிய அக்காவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.இதனால் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து எல்லாருக்கும் மொட்டை போட்டு வருவதாக பிரார்த்தனை.

1958-ல் மாட்டு வண்டிக்கு  கூண்டுகட்டி,அதில் அரிசி பருப்பு,அடுப்பெரிக்கும் கட்டைகள் போன்ற தட்டுமுட்டு சாமான்கள் ஏற்றப்பட்டது.அம்மா,அக்கா 4பேர், அக்காவின் கைக் குழந்தை ,நான்,என் தம்பி வண்டியில் ஏற்றப்பட்டோம். என் அப்பா,அண்ணா 2 பேர் நடந்தே வந்தார்கள்.வண்டி ஓட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் உடன் பிறவா அண்ணன் கணேச நாயகரின் தம்பி ஆறுமுக அண்ணாவை அழைத்துக் கொண்டோம். அந்நாளில் ‘டைட்டானிக்’ கப்பல் லண்டனை விட்டு அமெரிக்கா சென்றது போல புறப்பட்டோம்.
வழியில் ஆரணி தெருக்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கையில் உண்டியல் ஏந்தி,மேள தாளத்தோடு கோவிந்தா, கோவிந்தா என கோஷம் போட்டுக்கொண்டு ஊர் வலம் வந்தோம்.எங்க அப்பா ஆரணியில் சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்ததில் நிறைய மனிதர்கள் பழக்கம். அதனால் ஒரு கணிசமான தொகை உண்டியலில் கிடைத்தது.தூக்க முடியாத பாரம்.உண்டியலில் எவ்வளவு பணம் வந்துள்ளது என எண்ண வேண்டும் என்றனர்.ஒரு சிலர், ‘அப்படி எண்ணக்கூடாது.எவ்வளவு சேர்ந்ததோ அது கடவுளின் பணம்,நாம் எண்ணி நாம் என்ன செய்ய போகிறோம்?,அதிலிருந்து ஒரு சல்லிக்காசை நாம எடுக்க முடியுமா?’ என்றனர்.

எடுத்தா என்ன ஆகும்?,

சும்மா கெடடா,உண்டியல் துட்டை எடுத்தா சாமி கண்ண குத்திடும்அதற்கு அப்புறம் நான் ஏன் பேசினேன்?

அப்போ எனக்கு 7 வயசு இருக்கும்,எங்க அக்கா குழந்தையை நான் ஆசையோடு தூக்குவேன். குழந்தை பிறந்த இடம் காடுகள் சூழ்ந்த இடம் என்பதால் குழந்தைக்கு, ‘வனராணிஎன பெயர் சூட்டுவதாக எங்க மாமா தெரிவித்தார்.
குழந்தையை நான் வாரி அணைப்பதைப் பார்த்து, எங்கள் அக்காக்கள் எல்லாம், ‘பார் கட்டிக்கப்போற பொண்டாட்டியை எப்படி கொஞ்சராம் பார், ஆசையைப்பார்’ என சொல்லி கிண்டல் செய்வார்கள். நான் நாணிக் கோணிக் கொண்டு,
‘போ, இனிமே நான் இவளை தூக்க மாட்டேன்’ என குழந்தையை அக்காவிடம் கொடுத்துவிடுவேன்.
வண்டி ஆரணியைக் கடந்து பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை நாகலாபுரம் நகரி, புத்தூர், ரேணிகுண்டா என திருப்பதி சென்றடைய இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. வழி நெடுக நானும் தம்பியும் காசு கேட்டால் எங்க அப்பா எதுவும் சொல்லாமல் கொடுத்து விடுவார்கள்,மிட்டாய் வாங்கி சாப்பிடத்தான்.
எங்க அம்மாவும் கொடுத்துவிடுவார்கள். எங்களுக்கு ஆச்சரியம்.காசு கேட்டால் உதை விழும் என பயந்து,பயந்து அப்பா அம்மாவை காசு கேட்காத காலமெல்லாம் போய் திருப்பதி செல்லும் வழியில் நாங்க செல்லப் பிள்ளைகளாகி விட்டோம்.

கீழ் திருப்பதியில் எங்கள் ஆறுமுக அண்ணாவை வண்டியையும் மாடுகளையும் பாராமரிக்க சொல்லி விட்டு நாங்கள் அனைவரும் நடந்தே ஏழுமலையை கடந்தோம்.வாழ்க்கையில் நான் முதன் முதலா பார்த்த பிரமாண்டமான மலைகளும் பள்ளத்தாக்குகளும் என்னை மலைக்க வைத்தன.
அதுவரை சமவெளிப் பிரதேசங்களில் ஓடி ஆடித்திரிந்த எனக்கு வானம் நோக்கி(மலையேற்றம்) பிரவேசிக்கும் அனுபவம் புதுமையானது.ஆம்,திருப்பதி கீழ் வாரத்தில்(மலையடி வாரம்)நின்று நான் பார்த்த மலை உச்சி காளி கோபுரம் என்னை மலைக்க வைத்தன.அது எத்தனை படிகள் என நான் எண்ண வில்லை.ஆனால் நான் நடக்க நடக்க மேலே போய்க்கொண்டே இருந்தேன்.கோபுரவாசலில் நின்று கீழ் நோக்கிப் பார்த்தேன்,ஓடும் பேருந்துகள் எறும்புகள் ஊருவது போல் தெரிகிறது,அது இன்றும் என் மனதில் பதிந்த ஒரு வடு!

இன்று மீண்டும் அந்த இடம் போக ஆசைப்படுகிறேன், அது முற்பிறவி சம்பவமாகிவிட்டது. 

மேலே போய், கடவுளை காண் என்றார்கள்.கடவுள் யாரிடமும் பேசுவது இல்லையாமே? பேசாத கடவுளிடம் பின் ஏன் இந்த பாசம்?,பேசாத உறவினர்களை நாம் மதிப்பதே இல்லையே, இந்த ஆபரணங்கள் அடர்ந்த கல்லை மட்டும் நாம் ஏன் நேசிக்க வேண்டும்? ஆபரணங்களை அடையவா?அபர்ன்னமான(நிர்வாண கல்) கல்லை நாம் மதிப்பதே இல்லை, ஆனால் ஆபரணங்கள் அணிவிக்கபட்ட கல்லை ஆண்டவன் என்கிறோம்.! எப்படி?

எல்லாரும் மெட்டை போட்டுக்கொண்டோம்,ஏழுமலையான் சிலை காண வரிசையில் நின்றோம்,நெடுநேரம் கடந்து அந்த அலங்கரிக்கட்ட சிலையை கண்டேன்,எல்லாரும் கோவிந்தா...கோவிந்தா... என கோஷமிட்டனர்...சில நொடிகள் கூட காணமுடியாத அளவுக்கு அங்கே இருக்கும் ஊழியர்கள் தள்ளி விட்டுக்கொண்டே இருந்தனர்.
பின் சென்ற வழியே திரும்பி மீண்டும் கீழே வந்தோம்.கீழ் திருப்பதியில் எங்கள் வாகனம் இருக்கும் இடத்தை அடைந்து ,வீடு திரும்ப பயணித்தோம்,

ஏழாம் நாள் வீடு வந்தோம்.வீடு திரும்பு முன் 100 ரூபாய் மிச்சம் இருந்தது. அப்போதைய 100 ரூபாய் இப்போதைய 20 ஆயிரத்திற்கு சமம். ஆம் அப்போதைய ஒரு சவரன் விலை,80 அல்லது 90 ரூபாய்தான்.
யாரோ சொன்னார்கள் என்பதற்காக அந்த மிச்ச 100 ரூபாயை எப்படியாவது செலவு செய்து விடவேண்டும் என்பதற்காக,வரும் வழியில் உள்ள கோயில் உண்டியலில் போட்டுவிட்டார் எங்கள் அப்பா.
அந்நாளில் திருப்பதி சென்று வருவது என்பது இந்நாளில் கைலாசம் சென்று வருவதற்கு சமம்.கிராமத்தில் பார்ப்பவர்கள் எல்லாம்,எங்கள் அம்மாவிடம், ‘இதற்கொல்லாம் கொடுப்பனை வேண்டும் கண்ணம்மா!,எல்லாருக்கும் திருப்பதி போகும் பாக்கியம் கிட்டுமா?’ என சொல்லும் போது எங்க அம்மா முகத்தில் அப்படி ஒரு பரவசம் பார்க்கலாம்.

அதோடு விட்டார்களா, ‘கண்ணம்மா,ஒரு முறை திருப்பதி போய் வந்து நிறுத்தக்கூடாது.மூன்று முறை போய் வரவேண்டும்,அதற்காக இப்போதே ஆண்டவனை நினைச்சி ஒரு உண்டியலை கட்டு.’இன்னொரு உண்டியல் கட்டி விட்டார்கள்.

1966 ல் எங்கம்மா, அந்த உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு, நான் என் தம்பி,மற்றும் கல்யாணமாகாத எங்கள் கடைசீ அக்கா நால்வரும் பேருந்தில் பயணமானோம்.
மூன்றாவது முறை ஊர் நண்பர்களோடு எங்கம்மா திருப்பதி போனாதாக எனக்கு நினைவு. சுய சிந்தனை அற்ற வெய்யிலாளிகளை கடவுள் பெயரை சொல்லி எத்தனை முறை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், வெய்யிலாளிகளும் ஏமாற தயாரக இருப்பார்கள்.!

திருப்பதி போய் வந்து விட்டதினாலே ஒரு மனிதன் மாடமாளிகை கட்டி வாழ்ந்திட முடியாது என்பதற்கு எங்கள் திருப்பதி விஜயம் ஒரு பாடம்.

1961 வரை கள்ளூர் நினைவலைகள் நீடித்தது! எங்க பெரிய அண்ணா கல்யாணம் முடியும் வரைதான் நான் கிராமத்தில் இருந்தேன்,பின் 4 (1961-62)மற்றும் 5-ம் 1962-63)வகுப்பு படிக்க நான் பூந்தமல்லி அருகே உள்ள எங்க பெரிய அக்கா வசிக்கும் பாரிவாக்கம் எனும் கிராமத்திற்கு வந்து விட்டேன்.