Sunday, December 8, 2019

இ.பி-22


            93-நண்பரின் அகால மரணம்

அதற்கு முன் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு தொலைபேசி செய்தி வந்ததாக எனக்கு தெரிவித்தனர். அதாவது, ‘உங்கள் கல்லூரி நண்பர் ஒருவர் ,அவர் பெயர் ‘சார்லஸ் ராஜ்குமார்’ என்றார்கள்.அவர் இறந்து விட்டதாக தகவல் வந்து இரண்டு மூன்று நாளாகி விட்டது,உங்களுக்கு தகவல் தெரிவிக்க மறந்து விட்டேன்,மன்னிக்க வேண்டும்’ என்றனர்.
தகவல் கேட்ட எனக்கு பேரதிர்ச்சி. நண்பர் சார்லஸ் ராஜ்குமார் என்னுடைய B.Ed கல்லூரி வகுப்புத் தோழர்.ஒரே அறையில் திரு ரங்கபாஷ்யம்(இவர் வந்தாவாசி சன்னதி மேனிலைப்பள்ளி தாளாளர்) நான் மூவரும் தங்கியிருந்தோம்.ஒரு நாள் கல்லூரி விடுதியில், மாட்டு மாமிசம் போடவேண்டும் என தென் மாவட்டத்தைச் சார்ந்த சக தோழர்கள்(கிறித்துவ மாணவர்கள்) வார்டனை வலியுறுத்தினார்கள்.நான் மாணவர் குழுவில் ஒரு நிர்வாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால்,இந்து மாணவர்கள்(20%) சார்பில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
அதில் ஒரு சக மாணவன், நான் விடுதி புழக்கடையில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது என்னை நோக்கி வந்தான், 

‘உனக்கு என்ன திமிர் இருந்த பீஃப் போட வேண்டாம் என்று சொல்லுவே,தெவிடியா பையா!’ என என்னை என் நெற்றிக்கு நேரே காலால் எட்டி உதைத்தான்.என்னை யாரும் என் அம்மாவை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசினால் எனக்கு கோவம் கோவமாக வரும்.பொறுத்துக் கொள்ளவே மாட்டேன்,அல்லது அப்படி சொல்பவனிடம் இருந்து நட்பை துண்டித்துக் கொள்வேன்.
நான் பின்புறம் சாய்ந்து மல்லாக்காக விழுந்தேன்,விழுந்து உடனே எழுந்து என் பலம் கொண்ட மட்டும் அவனை,அவன்  மூக்கின் மேல் ஒரு குத்து விட்டேன்.உடனே ரத்தம் பீறிட்டது.எனக்கு பயம் வந்து விட்டது.உடனே நான் என் அறைக்கு சென்று விட்டேன்.
இந்த தகவலை நண்பர் சார்லசுக்கு தெரிவித்தேன். உடனே அவர், ‘நான் இருக்கிறேன் பிரண்ட்,நீ பயப்படாதே அவன் வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்,நீ வெளியே வராதே’ என சொல்லி விட்டு அறைக் கதவைப் பூட்டி விட்டு வெளியே நின்று மத்தியஸ்த்தம் செய்தார்.
என் நண்பர் கிறித்துவராக இருந்தாலும் மாட்டு கறியை விடுதியில் போடுவதை விரும்ப வில்லை.அந்த வகையில் என்னை உதைத்தவனும் எனது நண்பரும் ஒரே மதம் என்பதால் என் நண்பரை எதிர்க்க யாருக்கும்  துணிவில்லை.

 மாலை 7 மணி இருக்கும் .என்னை ஆள் வைத்து அடிக்க பிற கல்லூரி மாணவ நண்பர்கள் மூலம் அந்த மூக்கு உடைப்பட்ட சக மாணவர் ஏற்பாடு செய்வதை நண்பர் அறிந்தார்.எனது நண்பர் உடனே ஒரு சைக்கிள் சைனை வாங்கிக் கொண்டார்.என்னிடம் இரவு 8 மணிக்கு வந்தார்.என்னிடம் இந்த தகவலை சொல்லிவிட்டு,
‘நண்பா!.தனியே நீ வெளியே போகாதே,அப்படி போவதென்றால் தற்காப்புக்கு இந்த சைக்கிள் சைனை இடுப்பில் கட்டி மறைத்து கொண்டு போ.’என என்னிடம் அந்த சைனைத் தந்தார். தந்து விட்டு முழங்காலிட்டு ஜபம் படிக்க ஆரம்பித்தார்.
சில நிமிடங்கள் கழித்து என்னிடம், ‘நண்பா,உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்பது எனக்குத் தெரியும்,இருந்தாலும் என் வழியில் நான் சென்று உங்களுக்கு பிரார்த்தனை செய்வது என் கடமை,நண்பா,உங்களுக்கு ஒன்றும் வராது நண்பா’ என்றார்.
அவர் செயல் எனது மனதை நெகிழச் செய்துவிட்டது.இருப்பினும் தவம்,பிரார்த்தனை, போன்ற செயல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை,இன்றளவும் இல்லை என்பதே உண்மை
            
                  A friend in deed is friend in need

கல்லூரி படிப்பு முடிந்து பிரியும் நேரம் வந்துவிட்டது அப்போது அவர், ‘நண்பா !, B.Ed முடிச்சிட்டோம்,அரசு வேலை கிடைக்கும் என்பது நம்ப முடியாத விசயம்,இருப்பினும் எங்கள் ‘டையோசிஸ்’ அமைப்பில் சொல்லி உங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வேன்,நீங்கள் வேலையில் சேர்ந்த பிறகே நான் வேலையில் சேருவேன் ,  பிரண்ட்!’ என சொன்னார்.
இது ஏதோ மரியாதை நிமித்தமான வார்த்தைகள் என நினைத்து நாங்கள் பிரிந்து சென்றோம்.
1975 டிசம்பரில் நான் பாரிவாக்கம் கிராமத்தில் என் அக்கா வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டு என்னை காணவந்தார் நண்பர்,சார்லஸ்.என்னைக் கண்டதும்,

‘பிரண்டு,! ‘சென்ட் தாமசு பிரைமரி பள்ளி’யில் ஒரு வேலை காலியாக உள்ளது.நீங்கள் அந்த வேலையில் தற்காலிகமாக சேர்ந்து கொள்ளுங்கள்,பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம்’நான் அப்போது நண்பனிடம், ‘தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ,காஞ்சிபுரம்,உதவி தர ஆய்வாளர் பதவிக்கு இன்டர்வ்யு முடித்துவிட்டு வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் உள்ளேன்,அது மட்டுமல்ல, ‘ஓரியன் கெமிகல்ஸ்’ ல் “chemist” பணி புரிகிறேன்.’
இந்த சேதியை நண்பருக்கு சொல்லிவிட்டு, ‘அந்த வேலையில் நீங்கள் சேர்ந்து விடுங்கள்,நண்பா.எனக்காக இந்த அளவுக்கு முயன்றது மட்டுமல்ல,சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் எனும் உங்களின் நேர்மை எனக்கு பிடித்துள்ளது நண்பா,மிக்க நன்றி!’
அதன் பிறகு அவருடைய மரணச் செய்தி கேட்டு நான் மனம் உடைந்து போனேன், நண்பர் எப்படி இறந்தார் என தெரிந்து கொள்ள அவர் வீடு தேடி போனேன்.நான் முதன் முதலா வந்துள்ளேன் என சொல்லிக்கொண்டு ஒரு தட்டில் இனிப்பு பலகாரங்களை வைத்தனர்.எனக்கு பிடிக்க வில்லை.எப்படி இறந்தார் என தெரிந்து கொள்ள வந்தேன் என சொன்னவுடன் நண்பரின் அம்மா ,அப்பா,அவர் தங்கை அனைவரும் அழுது விட்டனர்.

சில நிமிடங்கள் கழித்து பேச ஆரம்பித்தனர்.....இறந்த நாளன்று பகலில் கோழி பிரியாணி சாப்பிட்டான்....இரவு படுக்கப்போகும் போது மீண்டும் கோழி பிரியணி உண்டு விட்டு இரவு 9 மணி அளவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தான்.......படுத்த 10 வது நிமிடத்தில் வாந்தி... பேதி என இரண்டு மூன்று தடவை போனதும் சோர்வானான்....மருத்துவரிடம் கொண்டு சென்றோம் ....உண்ட உணவு விஷமாகி உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்’ இவ்வாறு சொல்லிவிட்டு அழுகையை அடக்க முடியாமல் அழுதனர்.இன்றளவும் என் மனதில் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த நண்பர், ‘சார்லஸ் ராஜ்குமார்’  என்றும் என் மனதில் நிலை கொண்டுள்ளார்.!
                     
                  94-மீண்டும் திருவள்ளூர்

மண்டல மேலாளர் சொல்லியனுப்பியது போல், திருவள்ளூருக்கு மாற்றம் செய்து ஒரு வாரத்தில் உத்தரவு வந்து விட்டது.திருவள்ளூரில் தங்கி கிராமத்து விவசாயிகளிடம் வீடு வீடாக சென்று நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.அதற்கு mobile direct purchase centre என்று பெயர்
ஒன்பது மாதங்களுக்கு பிறகு நான் அதே கவரைத்தெருவில் அதே மாடி அறையில் வந்து தங்கினேன்.எல்லம் மாறி விட்டிருக்கும் அல்லது மறந்து போயிருக்கும் எனும் நினைப்பில் இருந்தேன்.ஆனால் வரா மட்டும் கடித தொடர்பில் இருந்தாள்.
அதே கீதா,என்னை இரவு சாப்பிடப் போகும் போது பின் தொடர்ந்தாள்,பச்சை தாவணி அணிந்திருந்தாள். பருவமடைந்து விட்டாள் என நினைக்கிறேன்.நான் இரவு சாப்பிட்டு விட்டு திரும்பி வரும்போது அதே இருட்டு தாழ்வாரத்திலிருந்து என்னோடு சேர்ந்து கொண்டாள்,
அவள், 

‘நீங்க உத்ரமேரூர் போயிட்டதாக அக்கா சொன்னாங்க...இப்போ இங்கேயே வந்துட்டீங்களா?
 ‘ஆமா’ இப்பொழுது அவள் தோற்றத்தில் மாற்றம் கண்டேன்,பேச்சிலும் மாற்றம் கண்டேன். ..அந்த தெருவில் எப்போதும் ஒரு 50 அடி தூரத்திற்கு இருள் இருக்கும்.நான் அவளை தொட்டேன்..... கிள்ளினேன்!
‘யாராவது பார்க்கப் போறாங்க,!’ என்றாள்.
ஒன்பது மாததிற்கு முன் நான் தொட்டபோது, ‘நான் சின்னப்பெண்’ என்றாள்,இப்போது அவள் வயசுக்கு வந்த பின் அவள் பேச்சில் மாற்றம் கண்டேன்.அதாவது, ‘யாராவது பார்திரப்போறாங்கோ’ என்கிறாள்!

நான் உத்ரமேரூரில் இருந்த போது வரா எனக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் கடிதம் போடுவேன்.அந்த கடிதங்களில் எல்லாம் அவளுக்கு அறிவுரை கூறியே எழுதி இருப்பேன்.
ஒரு நாள் அந்த கடிதங்களை வராவின் அத்தை மகளான செல்வி ‘ஜெயராணி’ படித்து விடுகிறாள். அதை உடனே தன் அம்மாவிடம் சொல்லி விடுகிறாள்.
‘அந்த ஆபிசரை, இவள் காதலிக்கறாப்போல ..மா, ஆனால்,அவன் எழுதிய இந்த கடிதங்களில் ஒன்றில் கூட இவளை காதலிக்கிற மாதிரி,விரும்பற மாதிரி எதுவுமே இல்லம்மா!’
அவளுடைய அத்தை அவளைக் கூப்பிட்டு விசாரித்தாள்.அதற்கு அவள், ‘ஆமா அத்தை, நான் அவரைத்தான் கட்டிக்கப் போறேன்’
 ‘அவன் அப்படி சொல்லவே இல்லையேடி’ மேலும் அவளுடைய அத்தை,
‘அப்படியானா,நீ இங்கு இருக்க வேணா,நீ போய் வண்ணாரப்பேட்டையில் இருக்கும் உங்க அத்தை வீட்டுக்கு போய்டு’ 

‘அத்தை,அப்படியெல்லாம் செஞ்சிடாதிங்க அத்தை, நான் அவரை காதலிக்கல போதுமா?’
 ‘அப்படியானா,இங்கேயே,இரு’
திருவள்ளூரில் அப்போது கடும் குடிநீர் பஞ்சம்.நகராட்சி குழாய்களில் நீர் வராது.கீதா வீட்டில் தண்ணி வராது.ஆனால் வரா வீட்டில் தண்ணி வரும்.கீதா, வரா வீட்டில் தண்ணி எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு என்னை கடந்து செல்ல வேண்டும்.அவள் குடத்தில் தண்ணியை இடுப்பில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தவாறு செல்வாள்.
அப்பொது நான், ‘ஏய்,இங்க வாடி,ஒரு குடம் தண்ணியை என் பக்கட்டில் ஊத்துடி, நான் குளிக்கணும்!’

அவள் தண்ணிர் குடத்தை எடுத்துக்கொண்டு நான் குளிக்கும் அறைக்கு வந்தாள்.தண்ணியை பக்கட்டில் ஊற்றி விட்டு நின்றாள்.
எனக்கு அவளை கட்டி அணைக்க வேண்டும் போல் இருந்தது.ஆனால் செய்ய மனம் வரவில்லை.தண்ணியை ஊற்றிவிட்டு போனாள்,அவள் வெளியில் தெருவில் நின்று கொண்டு  என்னையே பார்த்துக் கொண்டு  இருந்தாள், அப்போது அவள் அம்மா பார்த்து விடுகிறாள்,
‘அங்கே என்னடி வேடிக்கை?’
‘குளிக்க தண்ணி கேட்டாங்கம்மா’
‘தண்ணி கேட்டா... குடுத்துட்டு வரவேண்டியதுதானே, அங்க ஏன் நிக்கற?’ கீதாவின் அம்மா,அப்பா நிதானமானவர்கள்,அவர்களுக்கு கீதாவோடு சேர்த்து 5 பெண்கள்,கீதா 3-ம் பெண்,மூன்று அண்ணன் தம்பிகள்.
வாழ்க்கையில் வறுமையை சந்தித்தாலும் பின்னாளில் வளமாக வாழ்ந்தவர்கள். நாகரிகம் தெரிந்தவர்கள்.

ஒரு நாள்,வரா, என்னிடம் வந்தாள்,என்னிடம் ரூ.300. கொடுத்து, ‘எனக்கு ஒரு வாட்ச் வாங்கித்தர்ரீங்களா?’
‘சரி’ என்றேன்,அந்த பணத்தை வாங்கிக் கொண்டேன். சென்னைக்கு சென்று hmt கடையில் ஒரு அழகிய வாட்ச் வாங்கினேன்.அடுத்த நாள்,அதை சேர்க்க அவள் வீட்டிற்கு சென்று கொடுத்தேன்.
இதை வீட்டிலிருந்தே கவனித்து விட்ட அவளுடைய அத்தை, நான் சென்ற பிறகு அவளிடம்,
‘அவனிடம் பேச மாட்டேன் என சொல்லிட்டு,இப்ப ஏண்டி அவன் வீட்டுக்கு வர்ரான்?,நீ உருப்படவே மாட்டே,நீ போ,எதுக்கும் ரெடியா இரு நான் உன்னை உன் அத்தை வீட்டில் சேர்த்துட்டு வர்ரேன்’
நான் அப்போது செங்குன்றம் அலுவலகத்தில் பணியில் இருந்தேன்.யாரையோ கேட்டு என் அலுவலக முகவரி தெரிந்து கொண்டு என்னிடம் மதியம் ஒரு மணி அளவில் வந்தாள்,அப்போது,

‘ஏங்க, நீங்க அந்த வாட்ச்சை எடுத்துக்கிட்டு,  எதுக்கு எங்க வீட்டுக்கு  வந்தீங்க?,நீங்களே வச்சிருந்தா, நானே வந்து வாங்கிக்க மாட்டேனா?..என்னை எங்க அத்தை அடிச்சி ஒதைச்சாங்க, சாயங்காலம் என்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அத்தை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய்டுவாங்க, என்னை வந்து பார்க்கணும்ணா அங்க வந்து பாருங்க!’
மேலும் அவள் சொன்னாள், ‘நான் வித்யா மந்திர் பள்ளியில் வேலை செய்யிறேங்க,200.ரூபாய் சம்பாதிக்கிறேன். என்னோடு நீங்க வாழ வேண்டாங்க,என் கழுத்தில தாலி மட்டும் கட்டி  விட்ருங்க,நான் தனியே பொழைச்சிக்கிறேன்.’
‘சரி, போ’
செங்குன்றத்தில் வேலை என்றாலும் நான் தினமும் திருவள்ளூர் கிடங்கு அலுவலக மாடியில் உள்ள அறையில் தான் தங்குவேன்.
இதற்கிடையே என் அண்ணன் என்னைத் தேடி வந்தார்.வந்தவர், ‘நீ கேட்ட மாதிரி,சென்னையில் படித்த பெண் இருப்பதாக நம்ம பார்வதி அக்கா சொன்னார்,வா போகலாம்’
அன்று ஞாயிற்றுக்கிழமை.சென்னை குசப்பேட்டையில் என் தாய்வழி உறவில் வாழும் எனக்கு அக்கா முறையில் இருப்பவர்,பார்வதி,அவர் அந்த பெண்ணை காட்டினார்.
அந்த பெண் puc வரை படித்தவள்.என்னை அவளுடைய அப்பா அம்மாவுக்கு பிடித்து விட்டது.பெண் பார்க்கும் படலம்,பிள்ளைப் பார்க்கும் படலம் எல்லாம் முடிந்து விட்டது. நிச்சயதார்த்தம் நாள் குறித்து விட்டார்கள்.

ஒரு நாள்  அவர்கள் என்னை தனியா வரச்சொல்லி என் அண்ணனிடம் தெரிவித்தார்கள்.என் அண்ணனும் அவர்களின் உள் நோக்கம் என்ன வென்று தெரிந்து கொண்டார்.அவர் என்னிடம்,
‘வீட்டோடு மாப்பிள்ளையா கேக்கிறாங்கடா,நீ ,என்ன சொல்ற? மேலும் அவர், ‘அப்படித்தான் போடா,நீயாவது நல்லா இருடா’ என்றார்.‘அதெப்படிண்ணா?,எனக்கு இதில் உடன் பாடு இல்லை,உங்களை மதிக்காத சம்பந்தம் நமக்கு வேண்டாம்ணா’ 1980-ஆகஸ்ட்டு மாதம்,29 வயது நடக்கிறது,எனக்குள் ஒரு மனப் போராட்டம் தொடர்கிறது. ‘30 வயதுக்குள் மணம் செய்து கொண்டால்தானே, நல்லது,எதிர்காலத்தில், வயதான காலத்தில் நமக்கு ஒரு பிள்ளையோ,குட்டியோ காப்பாற்றும் வகையில் சம்பாதிக்கும்.’

அதே ஆகஸ்ட்டு மாதம் 22ந்தேதி ஒரு முடிவு எடுத்தேன், ‘இனிமே நம் இனத்தில் நமக்கு,ஒரு படித்த பெண் கிடைப்பது கடினம்,தேடி போறதை விட, தேடி வர்ரவளையே கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்’ என் நினைப்பில் அவள் இருக்கும் வண்ணாரப்பேட்டைக்கு தேடிச் சென்றேன்.
அப்போது அவள், ‘ஏங்க, என்னை கல்யாணம் பண்ணிக்குங்க, உங்கள் மனம் போல் நீங்க வாழுங்க,எனக்கும் ஒரு வாழ்க்கை கொடுங்க’ என என் காலில் விழுந்தாள்.
இதை கவனித்துக் கொண்டிருந்த அவளுடைய அத்தையும்,மாமாவும்,
‘ஆமாங்க,அவளுக்கு தாய் தந்தை என சொல்லிக் கொள்ள யாருமில்லை,நீங்க நினைச்சா அவளை வாழ வைக்லாங்க’
அவளை நான் ஏமாற்றி விட நினைக்க வில்லை,எனக்கு அதில் உடன் பாடும் இல்லை.அவர்களைப் பார்த்து நான், ‘சரிங்க’ என்றேன்அவளுடைய மாமா என்னிடம், ‘இன்று மாலை திருவெற்றியூர்,வடிவுடையம்மன் கோயிலில் நீங்கள் இருவரும் எளிமையான முறையில் மாலை மாற்றிக் கொள்ளுங்கள்,...என்ன சொல்றீங்க..?’ என சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தார், நான், ‘சரிங்க!’ என்றேன்.

அன்று மாலை,6 மணி இருக்கும் ,நான் ,அவளுடைய அத்தை மாமா,அவர்களுடைய பெண்கள்,பிள்ளைகள் என கோயிலில் உள்ள உள் பிரகாரத்தில்  கூடினோம், அவளுடைய மாமா,இரண்டு மாலைகளையும் ஒரு மஞ்சள் கயிறும் வாங்கி வந்தார்,எங்களிடம் மாலையை கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னார்,
‘கூடவே, இந்த மஞ்சள் கயிறையும் அவள் கழுத்தில் கட்டுங்கள்’ என்றார்.அவர்கள் சொல்வது போல் செய்தேன்,
அன்று இரவு ரயிலைப்பிடித்து திருவள்ளூருக்கு இரவு 9 மணிக்கு வந்தோம்.ஒரு லாட்ஜில் அன்று இரவு தங்கிவிட்டு,மறுநாள் அவள் வேலைக்கு போறேன் என சொல்லிவிட்டு ,
‘நான் ஈக்காட்டில் உள்ள என் சநேகிதி வீட்டில் தங்கிக் கொள்கிறேன்,நீங்கள் உங்கள் அறையில் தங்கிக் கொள்ளுங்கள்’ என்றாள்.
நானும், ‘ சரி’ என்றேன்.நான் வழக்கம்போல் செங்குன்றம் அலுவலகத்திற்கு சென்று வந்தேன்.
             
         95-மூன்று பெண்களை பார்த்தோம்

ஒரு நாள் என் அண்ணன் திருவள்ளூருக்கு வந்தார்.(30.08.80) ‘கொப்பூரில் உன் பேர்கொண்ட ஒருவர்,நமக்கு மாமா முறையாகிறது.சென்னையில் அவருக்கு தெரியாத நம் இன மக்களே கிடையாது,நான் அவரை சென்ற வாரம் சந்தித்தேன்,அவர் இப்போது இங்கே வருகிறேன் என்று சொல்லியிருக்கின்றார், அவரோடு சேர்ந்து நாம் சென்னைக்கு செல்வோம்.இன்று அவர் காட்டும் பெண்களில் உனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து கொள்,’ என்றார்.
சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரும் வந்து விட்டார்.எனக்கும் வராவுக்கும் நடந்த கல்யாண நிகழ்வை  என் அண்ணாவிடம் சொல்ல மனம் வரவில்லை.
மூவரும் சென்னைக்கு சென்றோம். முதலில் தேனாம்பேட்டைக்கு சென்றோம்,என் மனம் சலனப்பட்டுக் கொண்டே இருந்தது.

அங்கே பார்க்க வேண்டிய பெண் பெரியபாளையம் சென்று விட்டதாக தகவல் சொன்னார்கள்.சரி என்று நேராக மைலாபூர் சென்றோம்,மைலாபூரில் அமட்ட வாராவதி எனும் இடம், அந்த இடத்தில்  அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தாள், ‘தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்க்க கூடாது ,வா, போகலாம்,’ என்றார்.
அடுத்து மைலாபூர் தண்ணித்துறை மார்க்கெட் சென்றோம்.அங்கே ஒரு பூ வியாபாரியிடம் இங்கே ‘கோவிந்தசாமி நாயக்கர்’ வீடு எங்குள்ளது ? என வினவினார்.
அவர் சொன்ன முகவரிக்கு சென்றோம்.எங்களை அமரவைத்த அந்த பெரியவர் (எனக்கு மாமனாராக வரப்போகிறவர்), ‘என் பொண்ணு BSc படித்துள்ளாள்,முண்டகண்ணியம்மன் திருவிழாவுக்கு சென்று அங்கே நடந்த மசான கொள்ளை விழாவைப் பார்த்து அவளுக்கு fits வந்து விட்டது,அதைத் தொடர்ந்து மருத்துவம் பார்த்தபோது ஒரு மந்திரவாதி கருப்புகயிறு கட்டியுள்ளார்,மற்றபடி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை,நீங்கள் பாருங்கள்’
பெண் அழைத்து வரப்பட்டாள்.ஒல்லியான உருவம் கொண்டவள்.திருத்தமா இருந்தாள்.என் எதிரே உட்கார வைக்கப்பட்டாள். நான், ‘உன் பேரென்ன?’

‘ராஜாத்தி’ -தலை குனிந்துகொண்டே சொன்னாள்.
‘என்ன படிச்சிருக்கே?’
“BSc”
‘எந்த காலேஜ்?’
‘குயின் மேரிஸ்’
‘எந்த வருஷம்?’
‘1973’
என்னோடு படித்த ஆண்டுதான், இருப்பினும் என்னை விட 3 வயது இளையவள்.
‘என்ன மேஜர்?’
‘கெமிஸ்ட்டரி’
நான் அண்ணனைப் பார்த்து. ‘சரிண்ணா’ என்றேன்.
‘மேற்கொண்டு பேசலாமா?’ என்றார்.
 நான் ‘சரி’ எனும்படி  தலையாட்டினேன்.
பெண்ணோட அப்பா சொன்னார்,

 ‘கல்யாணம் உங்கள் செலவாக இருக்கட்டும்,நான் பெண்ணுக்கு சீர் செய்துவிட்டு 10 சவரன் நகை போடுகிறோம்’ என்றார்.
‘சரி.நீங்க உங்க பெண்ணுக்கு எதையாவது போடுங்க, நாங்க கல்யாணம் செய்து கொள்கிறோம்.’என்று அண்ணா சொன்னார்.,
அன்று ஆகஸ்ட் 30,வரும் செப்டம்பர் 10.நிச்சய தாம்புலம் வைத்துக் கொள்ளலாம் என பெண்ணின் அப்பா சொன்னார். என் அண்ணனும், ‘சரிங்க’ என சொல்லிவிட்டார். என் மாமா,அப்படியே கொப்பூர் சென்று விட்டார்.நாங்கள் இருவரும் கள்ளூருக்கு சென்றோம்.போகும் வழியில்,அப்போது என் அண்ணாவிடம்,
‘என்னண்ணா, கையில சேமிப்பு இல்லை,இருந்த பணத்தையெல்லாம் செலவழிச்சி வீடு கட்டிட்டோம்.இப்ப என்ன பண்றது?
‘சரி பார்த்துக்கலாம்,ஒரு ஏக்கர் நிலத்தை வித்துக்கலாம்,பிறகு பார்த்துக்கலாம்’ என்றார்.
எனக்கு முன் இரண்டு பேருக்கும் (அண்ணாக்களுக்கும்) நிலத்தை வித்துதான் கல்யாணம் பண்ணாங்க,
‘சம்பாதிக்கிற நான், எனக்கு நிலத்தை வித்தா ஊரில் நம்மை ஒரு மாதிரியா பார்க்க மாட்டாங்களா?’
‘சரி அதுக்கு என்ன பண்றது?,நீயும் சம்பாதிச்சி கடனை அடைச்ச,நிலத்தை மீட்டின,வீடு கட்டின,இன்னும் கல்யாணத்துக்கு பணம் வேணும்ன்னா,என்ன பண்றது நிலத்தை வித்தாதானே முடியும்?’
நான் மவுனமானேன்.நாங்கள் இருவரும் ஆரணியில் இறங்கி கள்ளூருக்கு அமைதியாக சென்று கொண்டிருக்கின்றோம்.
          
             96-உனக்கு கல்யாணம் ஆயிடிச்சாமே?

வழியில் மாலை 7 மணி இருக்கும் அப்போது என் அண்ணா, ‘தம்பி,நான் ஒன்று கேள்விப்பட்டேன், உண்மையா?’
‘என்ன அண்ணா?’
‘நீ இருக்கிற இடத்துக்கு பக்கத்துல யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே?’
எனக்கு அதிர்ச்சி,யாருக்குமே தெரியாது என நினைத்திருந்தோம், இதெப்படி......?
நான் அமைதி காத்தேன், ‘என்னப்பா,நான் கேட்கிறேன் பதிலே சொல்ல மாட்டேங்கிற.?’
‘அண்ணா !,அவளுக்கு அப்பா அம்மா இல்லை ,அத்தை வீட்டில் வளரும் போது,அவள் என்னோடு பேசினாள் என்பதற்காக வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள். என்னை நாடி வந்து விட்டாள்,அவளை தனியே தங்க வைத்துள்ளேன்.’
‘சரி,ஆபிஸ்ல வேலை செஞ்சா,இப்படி, அப்படித்தான் இருக்கும்,நாளைக்கு இந்த பெண்ணை கல்யாணம் பண்ணியபிறகு எதாவது அந்த பெண்ணை கண்கலங்க வைத்தால் நல்லா இருக்காது,ஊரே காரி துப்பும்,நீ படிச்சவன்,உனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. கவனமா நடந்துக்கோ’ மேலும் அவர் தெரடர்ந்தார்,
‘நம்ம இனத்துல பெண்ணை கட்டினா நாளைக்கு நம்முடைய கொண்டான்  கொடுத்தான் மதிப்பான்,அந்த பொண்ணு நம்ம சாதியா இருந்தாக் கூட பரவாயில்லை அந்த பொண்ணு,செட்டியாமே!..?’

‘இதெல்லாம் யார்ணா உனக்கு சொன்னது?’
போனவாரம் நான் உன்னை தேடி வந்தேன் நீ இல்லை,அப்போ பக்கத்து வீட்டு பையனை கேட்டேன்.அப்ப அவன் சொன்னான், ‘அவருக்கு கல்யாணம் ஆயிடிச்சி,வேறு எங்கேயோ போய்ட்டாரு,எனக்கு ,எங்கு உள்ளார் எனத் தெரியாது என்றான்’ என சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்,
‘எனக்கு ஒரே அதிர்ச்சி,சரி உனக்கு கல்யாணம் பண்ணும் காரியத்தை செய்ய வேண்டாம் என நினைத்தேன்,ஆனால்,  ‘அப்படியெல்லாம் விடக்கூடாது, யாரோ ஒருத்தி, நாம் வளர்த்து படிக்க வச்சி,ஆளாக்கி,சம்பாதிக்கிற வயசுல ஒருத்தி வந்து தட்டிக்கொண்டு போக நாம் விடக்கூடாது,என உன் அண்ணி விடாப்பிடியாக பேசி,இப்ப கல்யாணத்தை பண்ணியாகணும் என சொல்லிவிட்டார்கள்’ மேலும் அவர்,

‘சரி, போகட்டும், நடந்தது, நடந்த படி இருக்கட்டும், அந்தப் பொண்ணும் கண்கலங்க வேண்டாம்,இந்த பெண்ணும் கண்கலங்க வேண்டாம்,நீ எப்படியோ கெட்ட பேர் வராம பார்த்துக்கோ’

No comments: