Friday, April 1, 2022

ஏ.அ-13

 

சாதிகள் கூடாதென்றும், சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பாக தமிழ் நாட்டில் அதிகம் பேசப்படுகிறது. தமிழ் நாட்டில் யாரும் தங்கள் பெயருக்கப் பின்னால் சாதிப்பேர்களை சேர்ப்பதில்லை, ஆனால் இங்குதான் சாதி ஒழிக என அதிகம்  கூச்சலிடப்படுகிறது. இந்திய பிரதமர்களே தங்கள் பேருக்குப் பின்னால் சாதிப்பேர்களை தவிர்க்க முன் வருவதில்லை.மற்ற மாநில முதல்வர்களும் அப்படியே.

உலகில் முதன் முதலா மனிதர்களிடையே சாதிகளை வரையறுத்தது தமிழ் இனமே.2000 ம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் (குறள்) சிற்றினம் சேராமை பற்றி 10 பாடல்கள் உள்ளன,நாமெல்லாம் படிக்கும் போது சிற்றினம் என்பது குணத்தில் தாழ்ந்த குணம் கொண்ட மனிதர்களைப் பற்றி ஆசிரியர் விளக்குவார், ஆனால் சாதிகளைப் பற்றி குறிப்பிடமாட்டார்.

தமிழ் இலக்கணங்களில் ஐந்திணை ஒழுக்கம் எனும் பாடம் நடத்துவர்,யாரும் ஐந்து சாதிகளைப் பற்றிய ஒழுக்கம் என குறிப்பிடமாட்டார்,காரணம் சாதிகள் பற்றிபேசக்கூடாதென்பது அரசு விதி முறை.

குறிஞ்சி காடும் காட்டை சார்ந்து வாழும் மனிதர்கள், ஆடுமாடு மேய்த்தல் தொழில், இடையர்கள்(யாதவா,கோனார் போன்றோர்)இப்படி தொழில் செய்து வாழும் மக்களில் சாதி ஒழிய வேண்டும் என்றால் எப்படி ஒழியும்?உழைத்து சாப்பிட விரும்புபவர்களுக்கு (வெய்யிலாளி இனம்) சாதி தேவை இல்லை. பார்ப்பனர்களுக்கும் சாதி தேவை இல்லை,அவர்கள் சாதி பார்த்தால் புரோகிதம் செய்து பிழைக்க முடியாது.

சாதி பார்க்க வேண்டியவர்களே ஒடுக்கப்பட்ட மக்களான பறையர், அம்பட்டர், வண்ணார், சக்கிலி போன்றோர். இவர்களுக்கு தெரிந்த தொழில்களை பயன் படுத்தும் சாதிகளை அண்டி வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது.

பறையருக்கு காவல் காக்கும் தொழில் மட்டுமே தெரியும்.

அம்பட்டருக்கு எல்லா இன மக்களும் தேவை, அவர்களின் தொழில் உடம்பில் தேவையற்று இருக்கும்/வளரும் மயிர்களை அகற்றும் பணி.

வண்ணார் என்பவர் ஆடைகளை துவைத்து அழகுப்படுத்தும் பணி.

சக்கிலிக்கு செருப்பு தைக்கும் பணி.எல்லா சாதி மக்களுக்கும் இவர்கள் பணி தேவை.

இங்கு என்ன பிரச்சினை என்றால்,அந்தந்த இனத்தில் பிறக்கும் ஆண் பெண் குழந்தைகள் வளரும் வரை ஒன்றாக வாழ பிரச்சினை இல்லை.ஆனால் பெற்றோர்கள் பார்த்து தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் முடிக்கும் போதுதான் பிரச்சினை.இங்கு பெற்றோர்களின் மன நிலை மாற வேண்டும். அல்லது எல்லா பெற்றோர்களின் மனதில் இடம் பிடிக்க பிள்ளைகளின் நடத்தையில் மாற்றம் வேண்டும்.

சாதிய தலைவர்களே சாதிகளை வளர்க்கின்றனர்.  சாதியத் தலைவர்களே உயர்சாதி மக்கள் எங்களை தாழ்த்தப்பட்ட மக்களாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் விதம் பிரித்து பார்க்கின்றனர்என மேடைப்போட்டு பேசுகின்றனர்.

             நான் கடந்து வந்த பாதை 

பள்ளிப்படிப்பு,கல்லூரி படிப்பு, அரசு பணிக்கால சாதிய பாகுபாடுகள். பள்ளிப்படிப்பில்,கல்லூரி  படிப்பில் எனக்கு சாதிகள் பற்றி தெரியாது.நான் தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களோ மாணவ நண்பர்களோ என்னிடம் நடந்து கொள்ள வில்லை.

1967-68 ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.அப்போது எனது தமிழ் பாடத்தில் துணை நூலாக வள்ளலார் கண்ட ஒறுமைப்பாடுஎனும் மா.பொ.சி எழுதிய நூல் பாடமாக வைக்கப்பட்டது.

வள்ளலார் எப்படி பாடல் பாடி முருகனை வணங்கினார் என்பதை நான் படித்தேன்.அதே போல் நானும் தினமும் முருகனை வழி பட வேண்டும் எனும் மன உறுதி கொண்டேன்.அந்தப் பாடல் இதோ......

ஒறுமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்,உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்......மதி வேண்டும்,நின் கருணை நிதி வேண்டும்,நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்.......

அதற்கு முன் நான் ஆறாம் வகுப்பு செல்லும் போது எனக்கு எங்கள் அம்மா,எங்கள் வீட்டில் தனி பூஜையறை அமைத்து,கடவுள் படங்களை எல்லாம் வைத்து, குளித்து விட்டு, கற்பூர, தீபாராதனை செய்து,

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்,துங்க கருமுகத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தாஎன்று தினமும் நாள் தவறாமல் பூஜை செய்த பிறகே பள்ளிக்கூடம் செல்வேன்.

இந்த பூஜை 1972 நவம்பர் வரை நன்றாக நடந்து கொண்டிருந்தது. அக்டோபர் 15 தேதியில் எங்ஙள் அம்மாவிற்கு இருமல் சளி என ஓயாமல் தொல்லை தந்தது.படுத்த படுக்கையாகி விட்டார்கள்......நான் பூஜை செய்யும் போது, ‘முருகா ,என் அம்மாவிற்கு உடல் நலமாகி விட வேண்டும்,எங்கம்மா சாக கூடாது,செத்தால் உங்களை வணங்குவதை நிறுத்தி விடுவேன் ....நிபந்தனை விதித்தேன்,ஆம் வள்ளலார் முருகனை பூஜித்தது போல...

அரசு பணியில் சேர்ந்த பிறகு எனக்கு இந்த அரசு பணியில் சேர்ந்திருக்க கூடாது என எண்ணும் அளவுக்கு என மன நிலை பாதித்தது.என் குடும்பத்திலோ அல்லது என் பரம்பரையிலோ யாரும் படித்ததும் இல்லை அரசு பணியாற்றியதும் இல்லை. எங்கள் கிராமத்திலிருந்து ஆரணி உயர்நிலைப்பள்ளி 5 கிமி தொலைவு.நடந்து தான் செல்ல வேண்டும்.. சுயமாக படித்து பள்ளியில் முதல் நிலை மாணவனாக திகழ்ந்தேன்.

பள்ளிஇறுதி வகுப்பில் முதல் பரிசாக காந்தியின் சுய சரிதையான, ‘சத்திய சோதனைஎனும் நூல் வழங்கப்பட்டது,

அந்த நூலைப்படித்த நான் காந்தியைப்போல் பொய் சொல்லக்கூடாது எனும் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

தொடர்ந்து பட்டப்படிப்பை படிக்க ஆசைப்பட்டேன், அருகில் உள்ள பொன்னேரிக்கு  (20+20கிமி) சைக்கிளில் சென்று  அரசு கலைக் கல்லூரியில் BSc முடித்தேன். வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கை இல்லை,கையில் ஒரு ஆசிரியர் பட்டப்படிப்பு இருந்தால் வாழ்க்கையை ஓட்டி விடலாம் எனும் எண்ணத்தில் முயன்றேன்.

ராயப்பேட்டையில் உள்ள மெஸ்ட்டன் ஆசிரியப் பயிற்சி கல்லூரியில் சேர்ந்நு BEd முடித்தேன்.தனியார் நடத்தும் உயர் நிலை பள்ளிக்கூடங்களில் வேலை தேடினேன்.சுமார் 10 பள்ளிக்கூடங்களில் ஏறி இறங்கியிருப்பேன்.

1975 கடைசி மாதங்களில் 12 நேர்முகத்தேர்வுகளை கண்டேன்.ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 400 ரூபாய் சம்பளம். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சி 20 நாட்களில் கலைந்து விட்டது.

ஒரு கம்பனிமுதலாளி வருகிறார் என்றால் வணக்கம் தெரிவித்து அவர் போகும் வரை அவரோடு இருக்க வேண்டும் எனும் இங்கிதம் எனக்குத் தெரியவில்லை.எல்லா ஊழியர்களும் முதலாளியை சுற்றி நின்றிருந்தனர்,நான் எனக்கு ஒதுக்கப்பட்ட  இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை பார்த்தேன்,

 என்னைப் பார்த்த முதலாளி யார்?’ என மேலாளரிடம் வினவியிருக்கின்றார்,

அவர் புதியதாக பணிக்கு அமர்த்தியுள்ளேன் என்றார்.அவரை எடுத்து விடு நான் வேறு ஒருவரை நியமிக்கிறேன்என கூறிவிட்டு சென்று விட்டார்.

அவர் சென்ற வுடன், ‘நீங்கள் 20 நாட்கள் பணிபுரிந்து உள்ளீர்கள்,அதுவரை உங்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு நின்று விடுங்கள்என்றார்.

எனக்கு அழுகையாக வந்து விட்டது. அழுது கொண்டே என் அக்கா வீட்டுக்கு வந்து விட்டேன், என் அக்கா, ’‘இதுக்கெல்லாம் ஏண்டாஅழற...இந்த கம்பனி இருக்குண்ண நீ பொறந்த?,இது இல்லண்ணா இன்னொரு கம்பனி, கண்ணை துடைச்சிட்டு வந்து சாப்பிடுஎன்றார். சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் தம்பி கிராமத்திலிருந்து ஒரு நேர்முக கடிதம் கொண்டுவந்தான்.அந்த கடிதம் சேர வேண்டிய தேதிக்கு முன் வராமல் பயிற்சி நாள் கடந்து கிடைத்தது. காஞ்சிபுரம் சென்று அதிகாரியிடம் நிலமையை எடுத்துரைத்தேன். அவர்,  பரவாயிலை பணியில் சேர்ந்து கொள்என்றார். 

என் இன மக்கள் விவசாய கூலிகள் அல்லது சிறு விவசாயிகள். அரசு பணி என்றல் அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனும் இங்கிதம் தெரியாது, இங்கிதம் என்றால் அர்த்தமே தெரியாது. நாசுக்கு எனும் வார்த்தையும் கேள்விப்பட்டதில்லை. இவையெல்லாம் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.அரசு பணி என்பது லஞ்சம் ஊழல் நிறைந்தது என்பதும் அதை எப்படி சமாளிப்பது எனும் லாவகமும் தெரியாது.

அதே ஆண்டு என்னை சத்துணவு பருப்பு வாங்க மும்பை அனுப்பினார்கள்.அங்கிருந்து 400 கிமி தொலைவில் உள்ள ஜலகோவன் நகரத்தில் அங்குள்ள உள்ள பருப்பு ஆலைகளில் 20 நாட்கள் தங்கி தமிழ் நாட்டு கிடங்குகளுக்கு  ரயில்வேகன்கள் மூலம் பருப்பு அனுப்பினேன். நான் பருப்பு வாங்கும் முதலாளி வீட்டில் என்னை தங்க வைத்தார்கள். அங்கு அவர்கள் நடவடிக்கைகளை கவனித்தேன்.

அந்த குடும்பத்தின் மூத்த மகன் தரையில் பஞ்சணை அமைத்து அமர்ந்துள்ளார்,அவர் தன் தம்பியை அழைத்து ஒரு வேலையை பணிக்கிறார்.அதை உள் வாக்கிக்கொண்ட தம்பி,அமர்ந்திருக்கும் அண்ணன் பாதங்களை தொட்டு வணங்கி விடை பெறுகிறார்,அருகே அவர்களுடைய அம்மா சோபாவில் வந்து அமர்ந்தார்,சில நிமிடங்களில் அந்த அம்மாவின் மருமகள் தரையில் அவர் மாமியார் பாதங்களை தொட்டு அமர்கிறார்,உடனே மாமியாரின் கால்களை பிடித்து விடுகிறார்,மாமியார் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்குகிறார். இது அவர்களுடைய அன்றாட வாழ்வியலை காட்டுகிறது.

.2007 ஜூலை 31ல் எனக்கு பணி ஓய்வு ஆணை வழங்கினார்கள். அன்று மாலை அலுவலகத்து நண்பர்கள் வழங்கிய பணி ஓய்வு வாழ்த்தினை பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். எனக்கு பணி ஓய்வு என்று வீட்டில் உள்ளவர்களுக்கு கூட சொல்ல வில்லை,எங்கள் சங்கத் தலைவருக்கும் தெரிவிக்க வில்லை.

எனது பணி ஓய்வுக்குப்பின் நான் எப்படி வாழ வேண்டும் என நண்பர்கள் பேசுவார்கள்,எனவே நண்பர்களை அழைக்கவில்லை. எனது பணி ஓய்வுக்குப்பின் நான் வாழும் வாழ்க்கை எனக்கு பிடித்துள்ளது. நான் ஆரம்பித்த ஏழாம் அறிவு இயக்கம்,அதனை இணையவழியில் இயக்கும் பாங்கு எனக்கு பிடித்துள்ளது.என் ஆய்வில் நான் உருவாக்கிய நூல்களான,அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கை,அறம் காத்த வர்மாக்கள்-தமிழர் ஒரு பன்னாட்டு இனம்.,பகுத்தறிவாளர் பார்வையில் (திருக்) குறள் ,இறந்தேன் பிறந்தேன்,ஏழாம் அறிவியல். போன்றவை எனக்கு மிகவும் பிடித்த நூல்கள்.

2014 ல் ஒரு நாள் தமிழக அரசின் விளம்பரம் நாளேட்டில் வெளி வந்தது,அகவை முதிர்ந்த தமிழறிஞருக்கான விருது பற்றி தகவல் அனுப்பச் சொல்லி இருந்தனர். இதற்கு தகுதியானவர் நண்பரும் புலவருமான திரு செம்மங்குடி துரையரசான் அவர்களை அவர் வீட்டில் சந்திதேன். அவர் உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க,நீங்களும் போடுங்கஎன என்னை பார்த்து சொன்னார். எனக்கு என்ன தகுதியுள்ளது? நான் எப்படி அய்யா விண்ணப்பிப்பது?

நீங்கள் புத்தகம் எழுதியுள்ளீர்கள்,உங்கள் நூலை தமிழக அரசு நூலகங்களுக்கு வாங்கியுள்ளது, உங்களது சுய சிந்தனையூட்டும் நூல்கள் இந்த விருதை உங்களுக்கு வாங்கித்தரும்,நீங்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க போகலாம் என என்னையும் சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

நான் எழுதிய ,அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியடன் வாழும் வழிகள்.எனும் நூலை சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநரை சந்தித்தோம். நான்,அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாமா? என அலுவலரை வினவினோம்,என் நூலை வாங்கி படித்துப்பார்த்தார், நூல் நன்றாக உள்ளது ஆனால் நமது முதல்வர் ஒரு ஆன்மிக வாதி இந்நூலை ஏற்பாரா என தெரிய வில்லை,எதற்கும் அப்ளை செய்யுங்கள் என்றார்.

2014ல் அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருதுக்கு நானும் புலவர் செம்மங்குடி துரையரசனும் மனு செய்தோம்,நான் மனு செய்த தோடு சரி நான் அதை மறந்து விட்டேன்.2015ல் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த ஊரான எட்டையபுரம் சென்றோம்,அங்கே பாரதி வாழ்ந்த வீட்டை பார்வை யிட்டோம்,பின் ஊர்வலமாக சென்று பாரதி மணிமண்டபம் சென்று அவர் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினோம் பின் எனக்கு பாரதி பணிச் செல்வன்  எனும் விருதினை வழங்கினர்.

பின்னர் அவங்கிருந்து புறப்பட்டு குற்றாலம் குளிக்கச் சென்றோம்,அப்பொழுது எனக்கு சென்னை தலைமை செயலகத்திலிருந்து போன் வந்த தாக எனக்கு தகவல் வந்தது. 2016 திருவள்ளுவர் பிறந்த நாள் விழா பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது

அவ்வமயம் எனக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது வழங்கப்படும் எனும் தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சில நிமிடங்கள் கழித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அதே தகவலை சொன்னார்கள்.

2015 ல் என் இளைய மகன் வசந்துக்கு கல்யாணம் நடத்த முடிவு செய்தேன். பல இடங்களில் பெண் பார்த்தோம்,கடைசியாக இப்பொழுது வாழும் மருமகளை புரட்சிகரமான முறையில் திருமணத்தை முடித்தோம்.

2016 தை மாட்டுப்பொங்கல் அன்று பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் முதல்வர் பொறுப்பு

அமைச்சர் திரு ஓ.பன்னிர் செல்வம் தலைமையில் எனக்கு அகவை  முதிர்ந்த தமிழறிஞர் விருது வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டது,

தமிழ் நாடு முழுவதும் பேருந்தில் பயணிக்க உரிமைச்சீட்டு வழங்கப்பட்டது. மேலும் அப்போதைய நிலையில் எனக்கு மாதம் 2000.ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட்டது,இப்போது அது ரூ.4000. என வழங்கப்படுகிறது.

2017ல் எனக்கு,என் தாய் தந்தையருக்கு சிலை வைக்க தோன்றியது.அதற்காக தாய் தந்தையருக்கு கோயில் கட்டினேன்.2018ல் தாய் தந்தையரின் நிலைகளை நிறுவினேன். மகாபலிபுரம் சென்று சிற்பியைப்பார்த்து சிலை வடிக்கச் சொன்னேன். அச்சிலைகளை எங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துள்ளேன்

2019 ல் எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் ஊர் இடுகாட்டில் கல்லறை வைக்க தோன்றியது. கல்லறைக்குத் தேவையான சிலாப்புகள் இங்கு கிடைக்க வில்லை,சித்தூரில் கிடைக்கும் என்றனர்.நான் சித்தூருக்கு சென்று அங்கே சில கடைகளை விசாரித்து 3 அங்குல கனமுள்ள 6 அடி நீள 3 அடி அகலமுள்ள 6 சிலாப்புகள் மற்றும் 2க்கு 2 நான்கு சிலாப்புகளும் மொத்தம்

10 சிலாப்புகள் செய்து அவைகளை திருவள்ளூருக்கு என் வீட்டில் வைத்து செப்பனிட்டேன்.

பின் அவைகளை எங்கள் ஊர் இடுகாட்டில் வைத்து உள்ளேன்.

எங்கள் கிராமத்தில் சாதாரண கூலி விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு தமிழக அரசு ஒரு மதிப்புறு நிலை வழங்கியதை எண்ணி இன்றும் இறும்பூதெய்துகிறேன்.எங்கள் கிராமத்து இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும்,என் வாரிசுகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எங்கள் கிராமத்து வீட்டின் அருகே என் ஆளுயர கருங்கல் சிலை வடிமைத்து 6 அடி பீடம் அமைத்து அதன் மீது சிலையை நிறுவி உள்ளேன்.

 

  

 

 

No comments: